'நெற்றியில் முத்தம்', 'பார்ட்டிக்குப் பிந்தைய கொண்டாட்டம்' என சலுகைகள்: வாடகைக்கு கர்பா நடன பார்ட்னரை தேடுவதன் பின்னணி

சமூக ஊடகங்களில் கர்பா நடனக் கூட்டாளியைத் தேடும் பதிவுகள்
படக்குறிப்பு, 'வாடகைக்கு கர்பா நடன துணை' எனும் பெயரில் சமூக ஊடகத்தில் ஒரு பதிவு வைரலானது. உண்மையில் இவ்வாறு கர்பா நடனக் கூட்டாளிகள் வாடகைக்கு அமர்த்தப்படுகிறார்களா என்பதைக் கண்டறிய பிபிசி ஆய்வு நடத்தியது. (சித்தரிப்புப் படம்)
    • எழுதியவர், ஷியாம் பக்ஷி
    • பதவி, பிபிசி நியூஸ் குஜராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

நவராத்திரிக்கு சுமார் 25 நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் தொடங்கிய 'கர்பா துணையை (partner) வாடகைக்கு எடுங்கள்' என்ற டிரெண்ட் பெரும் விவாதப் பொருளானது. இதில் அதிக விலையுள்ள திட்டத்தில் நெற்றியில் முத்தமிடுவது, 'விருந்துக்குப் பிந்தைய கொண்டாட்டத்தில்' பங்கேற்பது போன்ற சலுகைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த டிரெண்ட் உங்கள் சமூக ஊடகப் பக்கத்திலும் தோன்றியிருக்கலாம்..

கடந்த சில நாட்களாக, நவராத்திரியின்போது கர்பா நடனம் ஆடுவதற்காக 'துணைகளை' வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்புகள் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் வெவ்வேறு கணக்குகள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தப் பதிவுகளில் 'கோல்டு', 'சில்வர்', 'பிளாட்டினம்' எனப் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு திட்டத்துக்கும் ஏற்ப வெவ்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிக விலையுள்ள திட்டத்தில் 'நெற்றியில் முத்தம்', 'விருந்துக்குப் பிந்தைய கொண்டாட்டம்' போன்ற சலுகைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்தக் கணக்குகள் உண்மையிலேயே 'கர்பா நடன துணைகளை வாடகைக்கு வழங்குகின்றனவா என்பதைக் கண்டறிய, பிபிசி குஜராத்தி செய்தியாளர் இதுபோன்ற சில சமூக ஊடகக் கணக்குகளுக்கு மெசேஜ் செய்தி அனுப்பினார்.

இந்த ஆய்வில் இதுபோன்ற 'கணக்குகளை இயக்குபவர்கள்' சிலருடன் பேசினோம். பணம் கொடுத்துக் கர்பா நடன துணையைப் பெறலாம் என்று கூறிய சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் விளம்பரங்களை ஆய்வு செய்தபோது, சில ஆச்சரியமூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

வெவ்வேறு கட்டணங்களில் சேவைகளை வழங்குவதாகக் கூறி இதுபோன்ற பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
படக்குறிப்பு, வெவ்வேறு கட்டணங்களில் சேவைகளை வழங்குவதாகக் கூறி இதுபோன்ற பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்கவும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், இங்கு பயனர்களின் பெயர்களும், தளங்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.

இதுபோன்ற பதிவுகளைப் பார்த்த பிபிசி குஜராத்தி செய்தியாளர், இன்ஸ்டாகிராமில் 'வாடகைக்கு கர்பா நடன துணை' என விளம்பரம் செய்த பதிவுகளைத் தேடத் தொடங்கினார். இத்தகைய பதிவுகளை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்குத் தனிப்பட்ட மெசேஜ்களை அனுப்பி, அவற்றின் சலுகைகள் உண்மையானவையா என்பதையும் அறிய முயன்றார்.

'வாடகைக்கு கர்பா நடன துணை' என்று பதிவிட்டவர்களில் சில சமூக ஊடகப் பிரபலங்களும் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் சிலருக்கு ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருந்தனர். அதேநேரத்தில், சில பக்கங்களைப் பார்த்தபோது அவற்றின் நிர்வாகிகள் அனுபவமற்றவர்களாக இருக்கலாம் என்றும் தோன்றியது.

கர்பா இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமானது. பல செயலிகள் இந்தப் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றுள்ளன. (சித்தரிப்புப் படம்)
படக்குறிப்பு, கர்பா இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமானது. பல செயலிகள் இந்தப் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றுள்ளன. (சித்தரிப்புப் படம்)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சில திருமண மற்றும் டேட்டிங் செயலிகளும் இந்தப் போக்கைப் பயன்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களைக் கவர இதுபோன்ற பதிவுகளை வெளியிட முயன்றது தெரியவந்தது.

இதுபோன்ற திருமண இணையதளங்களைச் செய்தியாளர் தொடர்புகொண்டபோது, தங்கள் தளம் திருமணம் தொடர்பானது என்றும், 'கர்பா நடன துணை' குறித்த பதிவு திருமணத்தை மையமாகக் கொண்டே வெளியிடப்பட்டது என்றும் அவை தெளிவுபடுத்தின.

அதேநேரத்தில், டேட்டிங் செயலி தளங்களிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

ஒரு கணக்கு, 'கர்பா நடன துணை' சேவைக்காகத் தனியாக ஒரு 'நிழல் கணக்கை' உருவாக்கியிருந்தது. அந்தக் கணக்கைத் தொடர்புகொண்டபோது, முதன்மைக் கணக்கின் இணைப்பை வழங்கி அதைப் பின்தொடருமாறு கேட்டுக்கொண்டனர்.

பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் சமூக ஊடகச் சென்றடையும் வட்டத்தையும் அதிகரிப்பதற்கு இது ஒரு தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதுதான் இதன் பொருள்.

அதே கணக்கு, குஜராத்தில் 'கர்பா நடன துணை' சேவையை வழங்க மறுத்ததுடன், மத்தியப் பிரதேசத்தின் ஒரு நகரத்தில் சேவை வழங்குவதாகக் கூறியது.

மற்றபடி, பெரும்பாலான இன்ஸ்டாகிராம் கணக்குகளிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், 'கர்பா நடன துணைகளை' வாடகைக்கு வழங்குவதாகப் பதிவிட்ட பெரும்பாலான இன்ஸ்டாகிராம் கணக்குகள் 2026ஆம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டிருந்தன.

அதாவது, அவை முற்றிலும் புதிய கணக்குகள். இந்தக் கணக்குகளை நிர்வகிப்பவர்கள் குறிப்பிட்ட இந்த நோக்கத்துக்காகவே அவற்றை உருவாக்கியிருக்கலாம் என்பதையும், இதுபோன்ற பிற போலிக் கணக்குகளும் இருக்கக்கூடும் என்பதையும் இது உணர்த்துகிறது.

எனினும், இந்தச் சேவைகளை விளம்பரப்படுத்திய சமூக ஊடகப் பிரபலங்களின் கணக்குகள் சராசரியாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருந்தன.

பெண்களுக்குப் பதிவுக் கட்டணம் இல்லை

சமூக ஊடகப் பதிவுகளில் பெண்களுக்கு இலவசப் பதிவுச் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
படக்குறிப்பு, சமூக ஊடகப் பதிவுகளில் பெண்களுக்கு இலவசப் பதிவுச் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இறுதியாக, 'கர்பா நடனக் துணைகளை' வழங்கும் சேவையுடன் தொடர்புடையதாகக் கூறிய ஒரு கணக்கைக் கண்டறிந்தோம்.

செய்தியாளர் தொடர்புகொண்ட அந்தக் கணக்கு, 'கர்பா நடன துணைகளை' வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது.

'கர்பா நடன துணையை' தேடும் இளைஞர் ஒருவரைப் போலச் செயல்பட்டு, இத்தகைய சேவையை வழங்குவதாகக் கூறிய கணக்குடன் செய்தியாளர் உரையாடினார். இந்தக் கணக்கும் இந்தாண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டிருந்தது.

அந்தக் கணக்கில் நவராத்திரியைக் குறிக்கும் கவர்ச்சிகரமான படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.

அதனுடன், "உங்கள் துணையைக் கண்டறியுங்கள், புதிய நண்பர்களை உருவாக்குங்கள், ஒன்றாக நடனமாடுங்கள், பெண்களுக்கு இலவசப் பதிவு..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆண்களுக்கு இந்தச் சேவையை வழங்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை அறிய விரும்பினோம்.

மேலும், அந்தக் கணக்கின் பக்கத்தில் ஓர் இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையிலான நெருக்கத்தைக் காட்டும் பதிவுகள் கர்பா பாடல்களுடன் பகிரப்பட்டிருந்தன. அவற்றில், சுயவிவரத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

‘கர்பா நடனக் கூட்டாளி’ சேவையை வழங்குவதாகக் கூறிய கணக்குடன் வாடிக்கையாளர் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி
படக்குறிப்பு, 'கர்பா நடன துணையை' வழங்கும் சேவையை வழங்குவதாகக் கூறிய கணக்குடன் வாடிக்கையாளர் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி

அந்தக் கணக்குக்கு செய்தி அனுப்பிய செய்தியாளர், "எந்தெந்த நகரங்களில் கர்பா நடன துணையை வழங்குகிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு, "முக்கியமாக டெல்லி, நொய்டா மற்றும் பிற மாநிலங்களில்" என்று பதில் கிடைத்தது.

கர்பா முக்கியமாக குஜராத்துடன் தொடர்புடையது என்பதால், "குஜராத்தில் ஏன் சேவை வழங்கவில்லை?" என்று கேட்டோம். அதற்கு, "குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சில பெண்களும் பதிவுசெய்துள்ளனர்" என்று பதிலளிக்கப்பட்டது.

டெல்லியைச் சேர்ந்த பெண்களை குஜராத்தில் 'கர்பா நடன துணையாக' எவ்வாறு வழங்குவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றோம்.

மறுமுனையில் பதிலளித்த நபர், "பெண்களும் 'கர்பா நடன துணைகளைத்' தேடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் இங்கே பதிவுசெய்கிறார்கள். நாங்கள் அவர்களைப் பதிவுசெய்துள்ள ஆண்களுடன் அனுப்பிவைக்கிறோம். டெல்லி, உத்தரப் பிரதேசம், நொய்டா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் எங்களிடம் பதிவுசெய்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த சில பெண்களும் இருக்கிறார்கள்" என கூறினார்.

"ஆண்கள் பதிவுசெய்ய 99 ரூபாய் செலுத்த வேண்டும். பெண்களுக்கு இலவசம். பதிவுசெய்தால், 'கர்பா நடன துணையாக' ஒரு பெண் எப்படிக் கிடைப்பார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்" என அவர் மேலும் கூறினார்.

"ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இந்தப் பாகுபாடு ஏன்?" என்று கேட்டோம்.

அதற்கு அவர், "நான் இதை இலவசமாக வைத்திருக்காவிட்டால், பெண்கள் பதிவுசெய்ய மாட்டார்கள்" என்று பதிலளித்தார்.

'முழுமையான தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம்'

குஜராத்தில் கர்பா மிகவும் பிரபலமானது. (சித்தரிப்புப் படம்)
படக்குறிப்பு, குஜராத்தில் கர்பா மிகவும் பிரபலமானது. (சித்தரிப்புப் படம்)

'கர்பா நடன துணையைத்' தேடும்போது தனியுரிமை குறித்த கவலையை நாங்கள் தெரிவித்தோம். அதற்கு அந்த நபர், "உங்களுடைய தகவல்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் தெரிவிக்கும் பெயர், வயது மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை மட்டுமே நாங்கள் பெறுகிறோம்" என்று கூறினார்.

உரையாடலின்போது, பதிவுசெய்யுமாறு அந்த நபர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும், கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டோம்.

"இந்த 99 ரூபாய் நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்குமா அல்லது ஒரு நாளுக்கு மட்டுமா? ஒவ்வொரு நாளும் ஒரே துணை கிடைப்பாரா அல்லது மாறிக்கொண்டே இருப்பாரா? எனக்குக் கிடைக்கும் துணையைப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?" போன்ற கேள்விகளை கேட்டோம்.

அதற்கு அந்த நபர், "நாங்கள் பெண்ணின் தொடர்பு எண்ணை மட்டுமே வழங்குவோம். நாங்கள் இடைத்தரகர்கள். நீங்கள் அவருடன் பேசிக்கொள்ளலாம். உங்களுக்கும் வழங்கப்படும் 'கர்பா நடன துணைக்கும்' ஒருவரையொருவர் பிடிக்கவில்லை என்றால், வேறொரு பெண்ணின் எண்ணைத் தருவோம்" என்று பதிலளித்தார்.

கணக்கின் சுயவிவரத்தில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பில் என்ன இருந்தது?

ஆமதாபாத் இணையக் குற்றப்பிரிவின் உதவி காவல் ஆணையர் ஹார்திக் மகாடியா, அந்த இணைப்பைத் திறந்து அதில் என்னென்ன தகவல்கள் கேட்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தார்.
படக்குறிப்பு, ஆமதாபாத் இணையக் குற்றப்பிரிவின் உதவி காவல் ஆணையர் ஹார்திக் மகாடியா, அந்த இணைப்பைத் திறந்து அதில் என்னென்ன தகவல்கள் கேட்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தார்.

அந்தக் கணக்குகளின் விவரங்களுடனும் அவற்றின் சுயவிவரங்களில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்புடனும் ஆமதாபாத் இணையக் குற்றப்பிரிவைத் தொடர்புகொண்டோம்.

உதவி காவல் ஆணையர் ஹார்திக் மகாடியா அந்தக் கணக்குகள் குறித்த தகவல்களைப் பெற்று, தனது கணினியில் அந்த இணைப்பை ஆய்வு செய்தார். அதில் ஒரு கூகுள் படிவம் இருந்தது. அதில் பெயர், மின்னஞ்சல் முகவரி, இன்ஸ்டாகிராம் கணக்கு, ஆண் துணை வேண்டுமா அல்லது பெண் துணை வேண்டுமா, எப்படிப்பட்ட 'கர்பா நடனக் துணை' தேவை போன்ற தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன.

அந்தப் படிவத்தைச் சமர்ப்பித்ததும் ஒரு கியூஆர் குறியீடு திறக்கும். அதை ஸ்கேன் செய்து 99 ரூபாய் செலுத்துமாறு கேட்கப்படும்.

"நம்பகமான பணிகளுக்காக கூகுள் படிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் யார் வேண்டுமானாலும் கருத்துக் கணிப்பு நடத்தலாம். மதிப்பாய்வுகளையும் சமர்ப்பிக்கலாம். ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகுதான் உண்மையான விளையாட்டு தொடங்குகிறது," என உதவி காவல் ஆணையர் ஹார்திக் மகாடியா கூறினார்.

"உங்களிடம் 99 ரூபாய் கட்டணம் கேட்கப்படுகிறது. பணம் செலுத்திய பிறகு, பணம் செலுத்தியதற்கான ஸ்கிரீன்ஷாட்டை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மக்களிடம் 99 ரூபாய் பெற்று மோசடி செய்கிறார்கள். இந்த கணக்கையும் கண்டுபிடித்துள்ளோம். இவர்கள் பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்; ஆனால் எந்த 'கர்பா நடன துணையையும்' வழங்குவதில்லை."

கணக்கின் சுயவிவரத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்தால், பெயர், அடையாள விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் இதுபோன்ற கூகுள் படிவம் திறக்கிறது.
படக்குறிப்பு, கணக்கின் சுயவிவரத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கினால், பெயர், அடையாள விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் இதுபோன்ற கூகுள் படிவம் உள்ளது.

உதவி காவல் ஆணையர் ஹார்திக் மகாடியா மேலும் கூறுகையில், "இவர்கள் சேகரிக்கும் தகவல்கள் தவறாகவும் பயன்படுத்தப்படலாம். திருமணம் ஆகாதவர்களையும் வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களையும் இவர்கள் குறிவைக்கிறார்கள். உங்களை கவர்ந்து அவர்களின் வலையில் (honeytrap) சிக்கவைக்கலாம். உங்களுடன் உரையாடிய பிறகு, நவராத்திரிக்கான இலவச நுழைவுச் சீட்டு என்ற பெயரில் ஓர் ஏபிகே கோப்பை அனுப்பலாம். இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம். உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணமும் காலி செய்யப்படலாம்." என்றார்.

'கர்பா நடனக் கூட்டாளியைத்' தேடுவது குறித்து சட்டம் என்ன கூறுகிறது?

துர்கா பூஜை இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் காலகட்டத்தில் வெவ்வேறு வண்ணங்களைக் காண முடியும். (கோப்புப் படம்)
படக்குறிப்பு, துர்கா பூஜை இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் காலகட்டத்தில் வெவ்வேறு வண்ணங்களைக் காண முடியும். (கோப்புப் படம்)

'கர்பா நடனக் துணையைத்' தேடுவது குறித்து சட்டம் என்ன கூறுகிறது? இதுபற்றி வழக்கறிஞர் அமித் கச்வேவிடம் பேசினோம்.

"இரண்டு வயது வந்தவர்கள் தங்களது சம்மதத்துடன் கர்பா நடனமாடச் செல்கிறார்கள்; அதில் பணப் பரிமாற்றமும் இடம்பெறுகிறது என்றால், அது அவர்களுக்கு இடையிலான ஓர் ஒப்பந்தமாகும். சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இவ்வாறு நடன துணைகளைத் தேடுவது பொதுவான நடைமுறையாக உள்ளது," என வழக்கறிஞர் அமித் கச்வே கூறினார்.

"ஆனால், இந்தியாவில் இதுவரை இத்தகைய நடைமுறை இருந்ததில்லை. எனவே, இதுபோன்ற விளம்பரங்களைப் பார்க்கும்போது வியப்பாக இருப்பது இயல்புதான்" என்றார். இருப்பினும், அவர் மேலும் கூறுகையில், "அறிமுகமில்லாத ஒருவருடன் வெளியே செல்வது ஆபத்தானதாக இருக்கலாம்" என்றார்.

காவல்துறையில் ஏன் புகார் அளிக்கப்படுவதில்லை?

'ஃபோரென்சிக் டேலண்ட் இந்தியா' குஜராத்தைச் சேர்ந்த தனியார் இணையப் பாதுகாப்பு நிறுவனம். (சித்தரிப்புப் படம்)
படக்குறிப்பு, 'ஃபோரென்சிக் டேலண்ட் இந்தியா' குஜராத்தைச் சேர்ந்த தனியார் இணையப் பாதுகாப்பு நிறுவனம். (சித்தரிப்புப் படம்)

"புகார் கிடைத்தால்தான் போலீஸார் எந்த இடத்திலும் நடவடிக்கை எடுக்க முடியும். இதுபோன்ற வழக்குகளில் பணப் பரிவர்த்தனைத் தொகை பெரும்பாலும் குறைவாக இருக்கும். இவ்வளவு சிறிய தொகைக்காக ஏன் காவல்துறையிடம் செல்ல வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதனால் காவல்துறையினருக்குச் சரியான தகவல்கள் கிடைப்பதில்லை." என இணையப் பாதுகாப்பு நிபுணர் அருண் குமார் பிபிசியிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "சிறிய தொகை தொடர்பான புகார் காவல்துறையினருக்குக் கிடைத்தாலும், பெரிய தொகை மோசடி தொடர்பான பல வழக்குகள் அவர்களிடம் நிலுவையில் இருப்பதால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போகலாம். சிறிய தொகை மோசடிக்கு ஆளான நூறு பேர் கூட போலீஸிடம் புகார் அளித்தால், அவர்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள்." என்றார்.

குஜராத்தில் இணையக் குற்ற வழக்குகள் எத்தனை பதிவாகியுள்ளன?

குஜராத்தைத் தாண்டி பல மாநிலங்களிலும் கர்பா பிரபலமடைந்து வருகிறது. ஜெய்ப்பூரில் கர்பா நடன நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட படம். (கோப்புப் படம்)
படக்குறிப்பு, குஜராத்தைத் தாண்டி பல மாநிலங்களிலும் கர்பா பிரபலமடைந்து வருகிறது. ஜெய்ப்பூரில் கர்பா நடன நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட படம். (கோப்புப் படம்)

இந்திய பத்திரிகை தகவல் பணியகம் 2026ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை இணையக் குற்றங்கள் தொடர்பாக 65,89,201-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் ரூ.55,050 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் 1,95,760-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரை இணையக் குற்றங்கள் தொடர்பாக 7,923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுபோன்ற வழக்குகளில் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.8,189 கோடிக்கும் அதிகமான தொகை முடக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி தொடங்கியதும் கர்பா நடன துணைகளை வழங்குவதாகக் கூறிய கணக்கு முடக்கப்பட்டது.

இந்தப் பக்கத்தின் மூலம் எத்தனை பேர் 99 ரூபாய் செலுத்தியுள்ளனர் என்பதற்கான துல்லியமான தகவல் இல்லை. இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், தற்போது அந்த இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறக்க முடியவில்லை. பணம் செலுத்தியவர்கள் நவராத்திரி தொடங்கிய பின் தங்களுக்கான நடன துணை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கலாம் என்பது ஒரு சாத்தியம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு