கண்ணதாசனின் வார்த்தை விளையாட்டில் பாரதியாரின் எள்ளுப் பேரனுக்கு பிடித்த 5 பாடல்கள்

பட மூலாதாரம், GANDHI KANNADHASAN/FB
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் காதல், சோகம், மகிழ்ச்சி, தத்துவம், ஆன்மிகம் என மனித வாழ்வின் பல்வேறு உணர்வுகளையும் தனது வரிகளால் வெளிப்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன். அவரது 45வது நினைவுநாள் அக்டோபர் 17-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த கண்ணதாசன், 4,000க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5,000க்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
கவிதைத் தொகுப்புகள், காவியங்கள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், வாழ்வியல் நூல்கள், நாவல்கள், சுயசரிதை என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அவர், சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராக இருந்த கண்ணதாசன், தனது 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். திரைப்படப் பாடலாசிரியராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி எனப் பல தளங்களிலும் இயங்கிய அவர், தொடக்கத்தில் நாத்திகக் கருத்துகளைக் கொண்டிருந்தார். பின்னாளில் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற நூலையும் எழுதினார்.

பட மூலாதாரம், GANDHI KANNADHASAN/FB
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில், 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தமிழ்ச் சங்க விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணதாசன், சிகிச்சைப் பலனின்றி அக்டோபர் 17-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
கண்ணதாசனின் பாடல்கள் வெளியாகிப் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அவற்றில் இடம் பெற்றுள்ள சொற்களும், அவற்றின் வழியாக அவர் வெளிப்படுத்திய உணர்வுகளும் தொடர்ந்து பேசப்படுகின்றன.
கண்ணதாசனின் பாடல்களில் தாங்கள் மிகவும் ரசித்தவை என்ன, அவரது சொல் விளையாட்டுகளையும் இலக்கிய நயங்களையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடமும் திரையுலகைச் சேர்ந்தவர்களிடமும் பிபிசி தமிழ் பேசியது.
'குற்றால அருவிகள் சீசனில்தான் கொட்டும், ஆனால்... '
கண்ணதாசனுடன் நெருங்கிப் பழகிய அனுபவங்கள் குறித்துப் பேசிய மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், திரையுலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே அவருடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
"கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் இருந்ததே பெருமை என்று பலரும் சொல்வார்கள். அவருடன் பேசியது, பழகியது எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள் என்பார்கள். ஆனால், அதைவிடப் பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சினிமாவில் சேர ஆசைப்பட்டேன். என் அப்பா என்னை நேராக கண்ணதாசனிடம் அழைத்துச் சென்று விவரத்தைச் சொன்னார். என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.
அப்போது என்னைப் பார்த்த கண்ணதாசன், 'முத்துராமன் இன்னும் சிறுவனாக இருக்கிறான். சினிமா என்பது பெரிய கடல். அதற்குள் செல்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் போகட்டும். அதுவரை என்னுடைய தென்றல் பத்திரிகையில் பணியாற்றட்டும். என் வீட்டிலேயே தங்கியிருந்து சினிமா உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளட்டும்' என்றார்'' எனக் கூறுகிறார் எஸ்.பி. முத்துராமன்.

"அப்படித்தான் இரண்டு ஆண்டுகள் அவரது தென்றல் பத்திரிகையில் பணியாற்றினேன். அந்தக் காலத்தில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டேன்" என்று எஸ்.பி. முத்துராமன் தெரிவித்தார்.
பின்னாளில் உதவி இயக்குநராகவும் இயக்குநராகவும் பணியாற்றியபோது கண்ணதாசனுடன் பல திரைப்படப் பாடல் ஒலிப்பதிவுகளில் கலந்துகொண்டதாகவும், புகழ்பெற்ற பல பாடல்கள் உருவானதை நேரில் பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
"கதையைக் கேட்டு, அந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வரிகளை எழுதுவார். கடினமான தமிழ் இலக்கியத்தைக்கூட அதன் சாரம் குறையாமல் சினிமா பாடல்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கண்ணதாசன். நான் இயக்கிய 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தில் இடம்பெற்ற 'சம்சாரம் என்பது வீணை' பாடலை அதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். அந்தப் பாடல் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. பாடலின் வரிகளுக்கு உள்ளேயே கதையைச் சொல்லியிருப்பார்" என்று சிலாகித்தார் எஸ்.பி. முத்துராமன்.
பாடலை எழுதி முடித்த பிறகு தன்னைப் பார்த்து, 'இது போதுமா? திருப்தியாக இருக்கிறதா? இன்னும் வேறு மாதிரி வரிகள் வேண்டுமா?' என்று அவர் கேட்டதாகவும், சிறு வயதில் இருந்தே தன்னைத் தெரிந்திருந்தாலும், ஓர் இயக்குநராகத் தன்னை மதித்து, தன்னிடம் அப்படிக் கேட்டது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுவதாகக் கூறினார் முத்துராமன்.
அப்போது, 'குற்றால அருவிகள்கூட சீசனில்தான் கொட்டும். ஆனால், கவிஞரின் தமிழ் எப்போதும் கொட்டிக்கொண்டே இருக்கும்' என்று தான் கூறியதாகவும், அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவர் புறப்பட்டதாகவும் தனது அனுபவத்தை நினைவுகூர்ந்தார் எஸ்.பி. முத்துராமன்.

'சங்க இலக்கியத்தை திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தியவர்'
கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை, தனது தந்தையின் பாடல்களில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயங்கள் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார்.
குறிப்பாக 'வானம்பாடி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிதைப் போட்டிப் பாடலை எடுத்துக்காட்டிய அவர், அதில் "கண்ணதாசன் பயன்படுத்தியுள்ள தமிழ் மொழிநடையைப் பாராட்டாமல் இருக்க முடியாது" என்றார்.
"கோவையில் உள்ள கண்ணதாசன் மன்றத்தில்கூட அந்தப் பாடலின் வரிகளை இன்றும் பயன்படுத்துகிறார்கள். அதில் தமிழின் தொன்மையை, பெருமையைப் பேசும் விதம் அவ்வளவு சிறப்பாக இருக்கும். அதே பாடலில் காளமேகப் புலவரின் 'தாது தூது' தொடர்பான கவிதை நயத்தையும் பயன்படுத்தியிருப்பார். அதை வெறுமனே பாடலில் சேர்த்துவிடாமல், அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருப்பார்" என்று விளக்கினார் அண்ணாதுரை.
''கம்பராமாயணத்தில் இடம்பெறும் தோளைக் கண்டவர்கள் தோளையே பார்த்து நின்றதாகச் சொல்லும் வரிகளின் இலக்கிய நயத்தை, 'இதயகமலம்' படத்தின் பாடல் ஒன்றிலும் தனது பாணியில் பயன்படுத்தியிருப்பார்" என்று அண்ணாதுரை கூறினார்.
சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளை திரைப்படப் பாடல்களில் கண்ணதாசன் பயன்படுத்திய விதம் குறித்தும் அவர் பேசினார்.
"கலித்தொகையில் ஒருவரின் தவறுக்கு மற்றொருவரைப் பொறுப்பாக்க முடியாது' என்ற பொருளில் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தக் கருத்தின் தாக்கத்துடன் 'குலமகள் ராதை' படத்தில் 'உன்னைச் சொல்லி குற்றமில்லை' பாடலை எழுதியிருப்பார்."என்கிறார்

பட மூலாதாரம், VIDHYA MOVIES
"அதேபோல, 'திருவிளையாடல்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள் போதுமா' பாடலை எடுத்துக் கொள்ளலாம். அதில் பல்வேறு ராகங்களைப் பயன்படுத்தியிருப்பார். அந்த ராகங்களுக்கு ஏற்றவாறு வரிகளை அமைப்பது சாதாரண விஷயமில்லை. ராகங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். அதே நேரத்தில் மெட்டுக்கும் வரிகள் பொருந்த வேண்டும். அதை அவர் மிக அழகாகச் செய்திருப்பார்" என்றார் அண்ணாதுரை.
கண்ணதாசன் ஒரே விதமான உணர்வுகளை மட்டுமின்றி, ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட மனநிலைகளையும் பாடல்களுக்குள் கொண்டு வந்த விதம் குறித்தும் அண்ணாதுரை விவரித்தார்.
"தரிசனம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'இது மாலை நேரத்து மயக்கம்' பாடலைப் பாருங்கள். அதில் விரகதாபத்தில் இருக்கும் பெண்ணின் மனநிலையும், விரக்தியில் இருக்கும் ஆணின் மனநிலையும் ஒரே பாடலில் வெளிப்படும். இருவரின் மனநிலைகளிலும் உள்ள வேறுபாட்டை வரிகளில் மிகவும் அழுத்தமாகக் காட்டியிருப்பார். இதேபோல, 'திருவருட்செல்வர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆத்து வெள்ளம் காத்திருக்கு' பாடலில் சிவதத்துவத்தைப் பயன்படுத்தியிருப்பார்" எனக் குறிப்பிட்ட அண்ணாதுரை, துணி துவைக்கும் அடியாரை இறைவன் சோதிக்கும் காட்சியில் இடம்பெறும் பாடலாக அது இருக்கும் என்றார்.
''அந்தப் பாடலில், துணியைத் துவைத்து அழுக்கை நீக்குவதை மனித வாழ்க்கையுடனும், சிவனின் அருளுடனும் கண்ணதாசன் தொடர்புபடுத்தியிருப்பார். நகைச்சுவை கலந்த பாடலாக இருந்தாலும், அதற்குள் ஆன்மிகத் தத்துவத்தை வைத்திருப்பார்" என்று அவர் விளக்கினார்.
தமிழ் உயிரெழுத்துகளைப் பயன்படுத்தி 'இரு துருவம்' படத்தில் 'அகரம் தமிழுக்கு சிகரம்' பாடலையும், 'சரஸ்வதி சபதம்' படத்தில் 'அகரம் முதல எழுத்தெல்லாம்' பாடலையும் கண்ணதாசன் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அண்ணாதுரை, "இதெல்லாம் எளிதில் வந்துவிடக்கூடிய விஷயங்கள் இல்லை. கண்ணதாசன் போன்ற மகா கலைஞரால்தான் இதைச் செய்ய முடியும்" என்றார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை.

பட மூலாதாரம், GANDHI KANNADHSAN
'தாலாட்டுப் பாடல்கள் எழுதுவதில் அப்பாவை மிஞ்சியவர்கள் இல்லை'
கண்ணதாசனின் மற்றொரு மகனான காந்தி கண்ணதாசன், தமிழ்த் திரைப்படங்களில் தனது தந்தை எழுதிய தாலாட்டுப் பாடல்களைப் பற்றிப் பேசினார்.
"தமிழ் சினிமாவில் தாலாட்டுப் பாடல்களை எழுதுவதில் கவியரசரை இதுவரை யாரும் மிஞ்சவில்லை என்றுதான் சொல்வேன். 'பாசமலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மலர்ந்தும் மலராத' பாடலின் வரிகளை யாராலும் மறக்க முடியாது," என்று கூறினார்.
அதேபோல, 'பாதகாணிக்கை' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஏன் பிறந்தாய் மகனே' பாடலும் ஒரு மாறுபட்ட தாலாட்டுப் பாடல். "குழந்தையைப் பற்றிய ஏக்கம், குடும்பத்தின் சூழ்நிலை என்று பல உணர்வுகளை அந்தப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
'சித்தி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காலமிது காலமிது' பாடலும் தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று எனக் குறிப்பிட்ட காந்தி கண்ணதாசன், 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் இடம் பெற்றுள்ள 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' பாடலையும் எடுத்துக் காட்டினார்.
"அந்தப் பாடலில் அப்பாவின் ரசனையையும் ஆளுமையையும் பார்க்க முடியும். 'மூன்று முடிச்சு' படத்தில் வரும் 'ஆடி வெள்ளி' பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்றார் அவர்.
அத்துடன், "எம்.எஸ். விஸ்வநாதனின் மெட்டுக்கு அந்தப் பாடலின் வரிகள் அவ்வளவு அழகாகப் பொருந்தியிருக்கும். பாடலின் சொற்களும் இசையும் இணைந்து கேட்பவர்களை ரசிக்க வைக்கும்" என்றார்.
கண்ணதாசனை பாடலாசிரியராக மட்டுமே பலரும் நினைவில் கொண்டுள்ளனர். ஆனால், திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் முக்கியமானது என காந்தி கண்ணதாசன் கூறினார்
"அப்பா பாடலாசிரியராக மட்டுமின்றி, வசனகர்த்தாவாகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஆறு படங்களுக்குக் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்." என்று அவர் தெரிவித்தார்.
'கண்ணதாசனை குருவாக நினைக்கிறேன்'

பாரதியாரின் எள்ளுப்பேரனும் பாடலாசிரியருமான நிரஞ்சன் பாரதி, கண்ணதாசனின் பாடல்கள் தனது கவிதை ரசனையிலும் எழுத்திலும் ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேசினார்.
"பாரதியார் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், என் கல்லூரிக் காலங்களில் கண்ணதாசனின் பாடல்களை அதிகமாக ரசித்திருக்கிறேன். அவருடைய பாடல்களில் இருந்தும் நிறைய கற்றுள்ளேன். அவரை என்னுடைய மானசீக குருவாகவும் கருதுகிறேன்" என்றார்.
கண்ணதாசனின் சொல் விளையாட்டுகளுக்கு உதாரணமாக 'வீர அபிமன்யூ' படத்தில் வரும் 'பார்த்தேன் சிரித்தேன்' பாடலை நிரஞ்சன் பாரதி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், GANDHI KANNADHASAN/FB
"அந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. தேன் என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு பற்பல விதமாக விளையாடியிருப்பார். ஒரே சொல்லைப் பல்வேறு பொருள்களிலும் உணர்வுகளிலும் பயன்படுத்தியிருப்பார். ஒவ்வொரு முறை கேட்கையிலும் அந்தச் சொல் விளையாட்டை ரசிக்க முடியும்" என்று நிரஞ்சன் பாரதி விளக்கினார்.
கண்ணதாசனின் தத்துவப் பாடல்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்த நிரஞ்சன் பாரதி, 'சட்டி சுட்டதடா' பாடலை அதற்குச் சான்றாகக் குறிப்பிட்டார்.
"அந்தப் பாடலில் அவ்வளவு வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும் அனுபவங்கள், ஏமாற்றங்கள், அவற்றுக்குப் பிறகு உருவாகும் தெளிவு, மன அமைதி எனப் பல விஷயங்களை எளிமையான வார்த்தைகளில் சொல்லியிருப்பார்" என்றார்.
'பாவ மன்னிப்பு' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடலில் கண்ணதாசன் கையாண்டுள்ள மத நல்லிணக்கக் கருத்துகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"அந்தப் பாடலில் இஸ்லாமிய பின்னணியில் வரும் கதாபாத்திரத்தின் உணர்வுகள் இடம்பெறும். ஆனால், பாடலுக்குள் வெவ்வேறு மதங்களுடன் தொடர்புடைய சொற்களையும் ஒலிகளையும் இணைத்திருப்பார். மத நல்லிணக்கத்தைப் பேசும் அந்தப் படத்தில் இதுபோன்ற விஷயங்களை கவனமாகக் கையாண்டிருப்பார் கண்ணதாசன்" என்றார் நிரஞ்சன் பாரதி.
'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அழகே வா அருகே வா' பாடலும் தனக்குப் பிடித்தமான பாடல்களில் ஒன்று என்று குறிப்பிட்ட நிரஞ்சன் பாரதி, அந்தப் பாடலில் காதலைப் பற்றிய மற்றொரு கோணத்தை கண்ணதாசன் வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.
"அந்தப் பாடலில் காதல் குற்றமில்லை என்ற உணர்வை வெளிப்படுத்தியிருப்பார். காதலைச் சொல்லத் தயங்குவதையும், அதில் இருக்கும் உணர்வுகளையும் வேறுவிதமாக அணுகியிருப்பார்." என்கிறார்.
அதேபோல, 'கம்பன் ஏமாந்தான்' பாடலில் பாரதியாரை குறிப்பிடும் விதம் தனக்கு மிகவும் பிடித்த ஒன்று எனச் சுட்டிக்காட்டிய நிரஞ்சன் பாரதி, பாரதியாரின் கவிதைகளில் உள்ள கருத்துகளையும் கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































