கருப்பை நார்த்திசு கட்டிகளால் குழந்தையின்மை ஏற்படுமா? 10 கேள்வி - பதில்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டாக்டர் ஹிமானி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டுகள் (நார்த்திசுக் கட்டிகள்) பெண்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்னைகளில் ஒன்றாகும்.
மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, அடிவயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை இவை ஏற்படுத்தலாம்.
சில பெண்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின்போது இத்தகைய நார்த்திசுக் கட்டிகள் இருப்பது கண்டறியப்படலாம்.
இக்கட்டிகள் உள்ள எல்லாப் பெண்களுக்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை. அவற்றின் அளவு, கருப்பையில் அவை அமைந்துள்ள இடம், அறிகுறிகளின் தீவிரம், பெண்ணின் வயது, எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.
முக்கியமாக, கருப்பையில் இத்தகைய கட்டிகள் இருப்பதால் அவை புற்றுநோய் என்று அர்த்தமல்ல.
கருப்பை நார்த்திசுக் கட்டிகள் என்றால் என்ன?
கருப்பை நார்த்திசுக் கட்டிகள் அல்லது லியோமையோமாக்கள் என்பவை கருப்பையின் தசைத் திசுக்களில் உருவாகும், பொதுவாக இவை புற்றுநோயல்லாத கட்டிகளாகும். இவை ஒன்று அல்லது பல கட்டிகளாக உருவாகலாம்.
சில கட்டிகள் சிறியதாக இருக்கும். அவற்றால் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்கலாம். மற்ற சில கட்டிகள் பெரிதாக வளர்ந்து கருப்பையின் வடிவத்தையே மாற்றக்கூடும்.
இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களிடையே இக்கட்டிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மாதவிடாய் முற்றிலும் நிற்கும் (மெனோபாஸ்) காலத்துக்குப் பிறகு, ஹார்மோன்களின் செயல்பாடு குறைவதால் பெரும்பாலான நார்த்திசுக் கட்டிகள் சுருங்கக்கூடும்.
இருப்பினும், மாதவிடாய் நின்ற பிறகு புதிதாகக் கட்டி தோன்றினாலோ, ஏற்கெனவே உள்ள கட்டி பெரிதாக வளர்வதாகத் தெரிந்தாலோ மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் 50 வயதுக்குள் 70–80 சதவிகிதப் பெண்களுக்கு ஃபைப்ராய்டுகள் உருவாகக்கூடும் என்று சில ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. அதாவது, ஒவ்வொரு 10 பெண்களில் 2 முதல் 4 பெண்களுக்கு இந்தக் கட்டிகள் இருக்கலாம். எனினும், அவர்கள் அனைவருக்கும் அறிகுறிகள் ஏற்படுவதில்லை.
பொதுவாக, 30 முதல் 40 வயதுக்குள் இக்கட்டிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இளம் வயதிலும் இவை உருவாகலாம்.

பட மூலாதாரம், Getty Images
கருப்பை நார்த்திசுக் கட்டிகள் ஏன் உருவாகின்றன?
ஃபைப்ராய்டுகள் உருவாவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மரபணுக் காரணிகள், ஹார்மோன்கள், வயது, வாழ்க்கை முறை ஆகியவை இதில் பங்கு வகிக்கக்கூடும்.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள்
இந்த இரண்டு ஹார்மோன்களும் கருப்பைத் திசுக்களின் வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றன. இதனால் அக்கட்டிகளின் வளர்ச்சியும் தூண்டப்படலாம்.
குடும்பப் பின்னணி
தாய், சகோதரி அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இக்கட்டிகள் இருந்திருந்தால், மற்றவர்களுக்கும் அவை உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம்.
வயது
இனப்பெருக்க வயதில் கருப்பை நார்த்திசுக் கட்டிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மாதவிடாய் நின்ற பிறகு அவற்றின் வளர்ச்சி பொதுவாகக் குறைகிறது.
அதிக உடல் எடை, வாழ்க்கை முறை
அதிக உடல் எடை மற்றும் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணிகள் இத்தகைய கட்டிகள் உருவாவதுடன் தொடர்புடையவை என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், இவற்றை கருப்பை நார்த்திசுக் கட்டிகளுக்கான நேரடிக் காரணங்கள் என்று உறுதியாகக் கூற முடியாது.
மரபணு மாற்றங்கள்
கருப்பையின் தசைச் செல்களில் ஏற்படும் சில மரபணு மாற்றங்களாலும் இக்கட்டிகள் உருவாகலாம்.
கருப்பை நார்த்திசுக் கட்டிகள் உருவாவதால் பெண்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டதாகக் கருத வேண்டியதில்லை. இவை தொற்றுநோய் அல்ல. உடலுறவால் இவை ஏற்படுவதில்லை.
கருப்பை நார்த்திசுக் கட்டிகளில் எத்தனை வகைகள் உள்ளன?
கருப்பையில் நார்த்திசுக் கட்டிகள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து அவற்றின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும் மாறுபடும்.
1. கருப்பையின் உட்புறச் சவ்வுக்குக் கீழே உருவாகும் நார்த்திசுக் கட்டிகள்
இவை கருப்பையின் உட்புறச் சவ்வுக்குக் கீழே உருவாகின்றன. சிறிய அளவில் இருந்தாலும் அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு மற்றும் கர்ப்பம் தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
2. கருப்பையின் தசைச் சுவரில் உருவாகும் நார்த்திசுக் கட்டிகள்
இவை கருப்பையின் தசைச் சுவருக்குள் உருவாகின்றன. இது மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும். இவை பெரிதாக வளரும்போது மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளையும் அடிவயிற்றில் அழுத்தம் அல்லது வலியையும் ஏற்படுத்தலாம்.
3. கருப்பையின் வெளிப்புறத்தில் உருவாகும் நார்த்திசுக் கட்டிகள்
இவை கருப்பையின் வெளிப்புறத்தில் வளர்கின்றன. பெரிதாக வளரும்போது சிறுநீர்ப்பை மற்றும் குடல்களில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
4. திசு இணைப்புக் காம்புடன் காணப்படும் நார்த்திசுக் கட்டிகள்
இவை மெல்லிய திசுக் காம்பின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் அந்தக் காம்பு முறுக்கிக்கொள்வதால் திடீரெனக் கடுமையான வலி ஏற்படலாம்.
நார்த்திசுக் கட்டிகளின் அறிகுறிகள் என்ன?
நார்த்திசுக் கட்டிகள் உள்ள எல்லாப் பெண்களுக்கும் அறிகுறிகள் ஏற்படுவதில்லை. கட்டியின் அளவு மற்றும் கருப்பையில் அது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.
- மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு
- வழக்கத்தைவிட நீண்ட நாள்களுக்கு ரத்தப்போக்கு நீடித்தல்
- மாதவிடாயின்போது கடுமையான வயிற்றுவலி மற்றும் தசைப்பிடிப்பு
- மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தில் ரத்தப்போக்கு
- அடிவயிற்றில் கனமாக இருப்பது போன்ற உணர்வு அல்லது வயிறு உப்புசம்
- முதுகுவலி, இடுப்புப் பகுதியில் அழுத்தம்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சிறுநீர்ப் பாதைத் தொற்றுகள்
- பெரிய கட்டிகளால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது மலச்சிக்கல்
- உடலுறவின்போது வலி
- ரத்தசோகையால் சோர்வு, உடல் தளர்ச்சி, தலைச்சுற்றல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம்
மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது பொதுவானது என்றாலும், பல பெண்கள் இதை இயல்பான பிரச்னை என்று கருதி அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால், அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிய நிலை, பெரிய ரத்தத் திட்டுக்கள் வெளியேறுதல் அல்லது ரத்தப்போக்கின் காரணமாக அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் போதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
நார்த்திசுக் கட்டிகளால் ஏற்படும் பாதிப்புகள்
ரத்தசோகை
அதிக ரத்தப்போக்கால் உடலில் இரும்புச்சத்து குறைந்து ரத்தசோகை ஏற்படலாம். இதனால் சோர்வு, உடல் தளர்ச்சி, இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் ரத்தம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
குழந்தையின்மை
எல்லா கட்டிகளும் குழந்தையின்மையை ஏற்படுத்துவதில்லை. எனினும், கருப்பையின் உட்புற அமைப்பை மாற்றும் நார்த்திசுக் கட்டிகள் ஃபைப்ராய்டுகள் கருத்தரிப்பதையோ, கர்ப்பம் நீடிப்பதையோ பாதிக்கலாம். குழந்தையின்மைக்கு இக்கட்டிகள்தான் காரணம் என்று முடிவெடுப்பதற்கு முன்பு, வேறு காரணங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.
கர்ப்பகாலச் சிக்கல்கள்
சில கட்டிகள் கருச்சிதைவு, குழந்தை தலைகீழாக இல்லாமல் வேறு நிலையில் இருப்பது, குறைப்பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்வதற்கான தேவை அதிகரித்தல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம். இருப்பினும், நார்த்திசுக் கட்டிகள் உள்ள பெரும்பாலான பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தையும் பிரசவத்தையும் எதிர்கொள்கின்றனர்.
சிறுநீர்ப்பை மற்றும் குடல்களில் அழுத்தம்
பெரிய நார்த்திசுக் கட்டிகள் சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கலாம். குடல்களில் அழுத்தம் ஏற்படுவதால் மலச்சிக்கலும் உண்டாகலாம்.
கடுமையான வலி
சில நேரங்களில் நார்த்திசுக் கட்டிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது அவற்றின் இணைப்புக் காம்பு முறுக்கிக்கொள்வது போன்ற காரணங்களால் கடுமையான வலி ஏற்படலாம். திடீரெனக் கடுமையான வயிற்றுவலி, காய்ச்சல் அல்லது வாந்தி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
உளவியல் மற்றும் சமூகப் பாதிப்புகள்
அதிக ரத்தப்போக்கு, வலி, கர்ப்பம் தொடர்பான கவலை ஆகியவற்றால் சில பெண்களுக்கு தூக்கமின்மை, பதற்றம் மற்றும் அன்றாடப் பணிகளைச் செய்வதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
நார்த்திசுக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா?
பொதுவாகக் காணப்படும் கருப்பை நார்த்திசுக் கட்டிகள் புற்றுநோயல்லாத கட்டிகளாகும். இவை வழக்கமாகப் புற்றுநோயாக மாறுவதில்லை.
கருப்பையில் உருவாகும் அரிதான புற்றுநோயான லியோமையோசார்கோமா என்பது வேறுபட்ட நோயாகும். இது நார்த்திசுக் கட்டிகளில் இருந்து உருவாவதில்லை.
ஒரு கட்டி வேகமாக வளர்வதால் மட்டும் அது புற்றுநோய் என்று அர்த்தமல்ல. இருப்பினும், மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, புதிதாகக் கட்டி தோன்றினாலோ அல்லது ஏற்கெனவே உள்ள கட்டி வளர்ந்தாலோ மருத்துவப் பரிசோதனை அவசியம்.
நார்த்திசுக் கட்டிகள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன?
நார்த்திசுக் கட்டிகளைக் கண்டறிய மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிகுறிகள், மாதவிடாய் அவருக்கு முன்பு எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்கள் மற்றும் குடும்ப மருத்துவ பின்னணி ஆகியவற்றை ஆய்வு செய்வார். தேவைக்கேற்ப சில பரிசோதனைகளையும் பரிந்துரைக்கலாம்.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனை
கருப்பையில் உள்ள நார்த்திசுக் கட்டிகளின் அளவு, எண்ணிக்கை மற்றும் அவை அமைந்துள்ள இடத்தைக் கண்டறிய இந்தப் பரிசோதனை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றின் வழியாகவோ அல்லது பிறப்புறுப்பின் வழியாகவோ இந்தப் பரிசோதனையைச் செய்யலாம்.
ரத்தப் பரிசோதனைகள்
அதிக ரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவும், தேவைப்பட்டால் உடலில் உள்ள இரும்புச்சத்தின் இருப்பும் பரிசோதிக்கப்படும்.
எம்.ஆர்.ஐ. பரிசோதனை
பெரிய கட்டிகள், சிக்கலான நிலைகள் அல்லது குறிப்பிட்ட சிகிச்சை தேவைப்படும் சூழல்களில் இந்தப் பரிசோதனை உதவியாக இருக்கும்.
ஹிஸ்டெரோஸ்கோபி
கருப்பையின் உட்புறத்தை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்ய இந்தச் செயல்முறை பயன்படுகிறது. கருப்பையின் உட்புறத்தில் அமைந்துள்ள சில நார்த்திசுக் கட்டிகளை இதன் மூலம் அகற்றவும் முடியும்.
எல்லாப் பெண்களுக்கும் இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் தேவையில்லை. அறிகுறிகள் மற்றும் ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் எந்தப் பரிசோதனைகள் தேவை என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

பட மூலாதாரம், Getty Images
நார்த்திசுக் கட்டிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
நார்த்திசுக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டவுடன் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிகுறிகள் இல்லாத சிறிய கட்டிகளுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து கண்காணிப்பது மட்டுமே போதுமானதாக இருக்கலாம்.
அறிகுறிகள், கட்டியின் அளவு, அது அமைந்துள்ள இடம், பெண்ணின் வயது மற்றும் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சை தேர்வு செய்யப்படுகிறது.
1. மருந்துகள் மூலம் சிகிச்சை
அதிக ரத்தப்போக்கைக் குறைக்கும் மருந்துகள் மாதவிடாய் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும். சில வலி நிவாரண மருந்துகள் மாதவிடாயின்போது ஏற்படும் வலியைக் குறைக்கலாம்.
சில ஹார்மோன் மருந்துகள் அல்லது புரோஜெஸ்டிரோன் ஹார்மோனை வெளியிடும் கருப்பைக்குள் பொருத்தப்படும் சாதனம் அதிக ரத்தப்போக்கைக் குறைக்க உதவலாம். ஆனால், கருப்பையின் உட்புற வடிவத்தை மாற்றும் நார்த்திசுக் கட்டிகள் உள்ள எல்லாப் பெண்களுக்கும் இந்தச் சாதனம் பொருத்தமானதாக இருக்காது.
சில குறிப்பிட்ட ஹார்மோன் மருந்துகள் நார்த்திசுக் கட்டிகளின் அளவைத் தற்காலிகமாகக் குறைக்கக்கூடும். குறிப்பாக, அறுவை சிகிச்சைக்கு முன்பு சில சூழல்களில் இவை மருத்துவரின் கண்காணிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.
மருந்துகள் மூலம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும். எனினும், எல்லா மருந்துகளும் அக்கட்டிகளை முற்றிலும் அகற்றிவிடுவதில்லை.
2. மயோமெக்டமி
இந்த அறுவை சிகிச்சையில் கருப்பையை அகற்றாமல், கட்டிகள் மட்டும் அகற்றப்படுகின்றன. எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு, பொருத்தமான சூழல்களில் இது முக்கியமான சிகிச்சை முறையாகும்.
கருப்பையின் உட்புறத்தில் வளர்ந்துள்ள சில கட்டிகளை ஹிஸ்டெரோஸ்கோபி மூலம் அகற்றலாம். சில கட்டிகளை லேப்ராஸ்கோபி எனப்படும் சிறு துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியும்.
பெரிய அளவிலான அல்லது பல கட்டிகள் இருந்தால் வயிற்றுப் பகுதியைத் திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்.
இந்தச் சிகிச்சைக்குப் பிறகும் புதிதாக கட்டிகள் உருவாகலாம். கருப்பையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் வகையைப் பொறுத்து, எதிர்காலக் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பாகச் சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும் வழிமுறைகளும் தேவைப்படலாம்.
3. ஹிஸ்டெரெக்டமி
இந்த அறுவை சிகிச்சையில் கருப்பை அகற்றப்படுகிறது. அறிகுறிகள் கடுமையாக இருக்கும்போது, மற்ற சிகிச்சைகள் பலனளிக்காதபோது அல்லது வேறு பொருத்தமான சிகிச்சை வாய்ப்புகள் இல்லாதபோது இந்த முறையைப் பரிசீலிக்கலாம்.
கருப்பை அகற்றப்பட்ட பிறகு கர்ப்பம் தரிக்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் மற்றும் பிற சிகிச்சை முறைகளின் நன்மைகள், அபாயங்கள் ஆகியவற்றை மருத்துவருடன் விரிவாகக் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவை எடுக்க வேண்டும்.
கருப்பையை அகற்றும்போது சினைப்பைகளையும் கட்டாயமாக அகற்ற வேண்டியதில்லை.
4. கருப்பைத் தமனி அடைப்பு சிகிச்சை
இந்தச் செயல்முறையில் கருப்பைக்கும் கட்டிகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் சில ரத்த நாளங்கள் சிறப்பு முறையில் அடைக்கப்படுகின்றன. இதனால் கட்டிகள் படிப்படியாகச் சுருங்குகின்றன. சில பெண்களுக்கு இதன் மூலம் ரத்தப்போக்கு மற்றும் வலி போன்ற அறிகுறிகளைக் குறைக்க முடியும்.
எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு இந்தச் சிகிச்சையின் விளைவுகள் மற்றும் அபாயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் ஆலோசிக்க வேண்டும். இந்தச் சிகிச்சை அனைவருக்கும் பொருத்தமானதல்ல.
5. பிற நவீன சிகிச்சை முறைகள்
ரேடியோஃபிரீக்வென்சி அப்லேஷன் போன்ற சிகிச்சை முறைகளில் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி நார்த்திசுக் கட்டிகள் சேதப்படுத்தப்படுகின்றன.
நார்த்திசுக் கட்டிகள் இருந்தால் கர்ப்பம் தரிக்க முடியுமா?
இக்கட்டிகள் இருந்தாலும் பல பெண்கள் இயற்கையாகவே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். எனவே, இக்கட்டிகள் இருப்பதற்காகக் கவலைப்படவோ நம்பிக்கையை இழக்கவோ தேவையில்லை.
இருப்பினும், கருப்பையின் உட்புற அமைப்பை மாற்றும் கட்டிகள் கர்ப்பம் தரிப்பதைப் பாதிக்கலாம். கருத்தரிப்பதில் சிரமம் இருந்தால், அதற்கான பிற காரணங்களும் ஆராயப்பட வேண்டும். தேவைப்பட்டால் மகளிர் நல மருத்துவரும் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணரும் இணைந்து சிகிச்சையைத் தீர்மானிப்பார்கள்.
கர்ப்பத்துக்கு முன்பு அக்கட்டிகளை அகற்ற வேண்டுமா என்பதை அவற்றின் அளவை மட்டும் வைத்து முடிவு செய்வதில்லை. அவை கருப்பையில் அமைந்துள்ள இடம், அறிகுறிகள், முந்தைய கர்ப்ப அனுபவங்கள் மற்றும் கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள் போன்ற விவரங்களும் முக்கியமானவை.
எப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்?
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்:
- ஒரு மணிநேரத்துக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாப்கின்கள் முழுமையாக நனையும் அளவுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்படுதல்; குறிப்பாக, இதனுடன் தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வுகள் இருந்தால்.
- திடீரெனக் கடுமையான வயிற்றுவலி ஏற்படுதல்.
- மயக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது கடுமையான உடல் தளர்ச்சியுடன் அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல்.
- கர்ப்பகாலத்தில் வயிற்றுவலி அல்லது ரத்தப்போக்கு ஏற்படுதல்.
- மாதவிடாய் நின்ற பிறகு பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்படுதல்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இக்கட்டிகள் உருவாவதை முற்றிலும் தடுக்கக்கூடிய நிரூபிக்கப்பட்ட வழிமுறை தற்போது இல்லை. இருப்பினும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல், சமச்சீரான உணவை உட்கொள்ளுதல் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் ஆகியவை ஒட்டுமொத்த உடல்நலத்துக்கு உதவும்.
அதிக ரத்தப்போக்கு இருந்தால், உடலில் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி ஹார்மோன் மருந்துகளையோ வீட்டு வைத்திய முறைகளையோ நம்பிச் செயல்படக் கூடாது.
கருப்பை நார்த்திசுக் கட்டிகள் பொதுவான பிரச்னையாக இருந்தாலும், அவற்றின் அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. எல்லா கட்டிகளுக்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை. அதே நேரத்தில், அதிக ரத்தப்போக்கு, ரத்தசோகை, கடுமையான வலி அல்லது கருத்தரிப்பதில் சிக்கல் போன்றவை இருந்தால் சிகிச்சையைத் தாமதப்படுத்தக் கூடாது.
நவீன மருத்துவத்தில் இத்தகைய கட்டிகளுக்குப் பல்வேறு சிகிச்சை வாய்ப்புகள் உள்ளன. சரியான நேரத்தில் மகளிர் நல மருத்துவரை அணுகி, தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
குறிப்பு: கட்டுரையை எழுதியவர் மருத்துவர். மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். உடல்நலம் தொடர்பான எந்தவொரு முடிவையும் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்க வேண்டும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































