சௌதியிடம் 'நபிகள் மன்னித்ததை நினைவுபடுத்திப் பேச வேண்டும்' - சிவராசா அனோஜனை மீட்க இருக்கும் வழிகள்

செளதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்
படக்குறிப்பு, சிவராசா அனோஜன்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சமூக ஊடகத்தின் ஊடாக நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, சௌதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன் என்ற இலங்கையருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், அனோஜனின் விடுதலை தொடர்பில் இலங்கை அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், அனோஜனின் விடுதலையைக் கோரி, போராட்டங்கள், கையெழுத்துகளைத் திரட்டும் நடவடிக்கைகள், வழிபாடுகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பின்னணியில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை, தண்டனை நிறைவேற்றும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது சகோதரன், பிபிசி தமிழிடம் அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அனோஜனின் விடுதலை தொடர்பில் அரசு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஊடக சந்திப்பின்போது கருத்துரைத்தார்.

''அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, சௌதி அரசிடம் கோரிக்கை விடுக்கும் வகையில், மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். இதன்படி, உபுல் குமாரப்பெரும, பைசர் முஸ்தபா போன்றோர் இந்த விஷயத்தில் தலையீடு செய்துள்ளார்கள்."

"அதனூடாகவும், நாங்கள் சௌதி அரசிடம் கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம். அதேபோன்று, ஆளும் கட்சி,எதிர்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று, ஜனாதிபதியின் கடிதத்துடன் விரைவில் சௌதி அரேபியா நோக்கிப் பயணிக்கவுள்ளது. அதேபோலத் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபை அமர்வில், எமது வெளிவிவகார அமைச்சர், சௌதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்" என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், "நாங்கள் அனைத்துப் பக்கங்களிலும் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தச் சம்பவம் நடந்த தருணத்தில் இருந்து எமது தூதரகம், ராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த இடத்தில் வேறொரு நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்துடனேயே நாங்கள் செயல்பட வேண்டியுள்ளது. அந்த நாட்டில் இரண்டு மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்படுகின்றன."

"ஒன்று இலங்கை இளைஞருக்குச் சாதமாகவும், மற்றையது சௌதி அரசாங்கம் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த இரண்டு மேல்முறையீடுகளையும் கருத்தில் கொண்டே இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அவரது உயிரைப் பாதுகாத்து, அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளையே நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்," என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ
படக்குறிப்பு, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

இதேவேளை, சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பாகக் காணப்படும் சாத்தியங்கள் குறித்து இதன்போது அவர் பிபிசி தமிழிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

கேள்வி: சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தில் இலங்கை எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

பதில்: ''சௌதி அரேபியாவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டியுள்ளது. முதலாவது அந்த மேல்முறையீட்டைச் செய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை அவர்கள் விசாரணைக்கு எடுக்க வேண்டும். வழக்கறிஞர்களுடன் பேசி, முதலில் உச்ச நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணை முடிந்தால், அதற்குப் பிறகு ஒன்றும் செய்ய முடியாது."

"இந்த விஷயத்தில் ராஜதந்திர ரீதியில் செயல்பட வேண்டும். இலங்கையில் உள்ள சௌதி தூதரகத்திலும், சௌதியி உள்ள இலங்கை தூதரகத்திலும் பேசி அவர்களூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், ஐ.நா. சபை கூட்டத்திற்கு வெளிவிவகார அமைச்சர் சென்றுள்ளார்."

"நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, வழமையாகவே சௌதி வெளிவிவகார அமைச்சருடன் பேசுவேன். இப்போது அங்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர், சௌதி அரேபியா வெளிவிவகார அமைச்சருடன் பேச வேண்டும். சட்ட ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் இரண்டு விதத்திலும் இந்த விஷயத்தை கையாள வேண்டியதே இந்தச் சந்தர்ப்பத்தில் சிறந்ததாக இருக்கும் என்று நான் கூறுவேன்."

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி
படக்குறிப்பு, இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி

கேள்வி: சௌதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், கொலை செய்யப்பட்டவர்களின் ரத்த உறவுகள் மன்னிப்பு வழங்கினால், நீதிமன்றம் அவர்களை மரண தண்டனையை நீக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆனால், இது முஸ்லிம்கள் போற்றக்கூடிய நபிகள் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்திய சம்பவம் என்பதால், சௌதி மன்னருக்கு அதிகாரம் குறைவு என்று கூறப்படுகிறது. அனைத்து முஸ்லிம்களும் மன்னிப்பு வழங்க வேண்டுமென்ற கருத்து ஒன்றும் சமூகத்தில் நிலவி வருகின்றது. இந்த விஷயம் உண்மையா?

பதில்: "இல்லை... மன்னர் பொது மன்னிப்பு கொடுக்க முடியும். அவர்களின் சூரா கவுன்சிலுக்கு போட்டு, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அனுமதி எடுக்க முடியும். முக்கியமாக சட்ட ரீதியாகவே அணுக வேண்டும். இதில் முக்கியமாக ஒன்றைக் கேட்க வேண்டும். நபிகளுக்கு எதிராகக் கொடூரம் செய்தவர்களைக்கூட, நபிகள் பழிவாங்கவில்லை."

"மக்காவுக்கு அடுத்த நகரான தயிஃப் நகரில் நபிகள் நாயகத்திற்குக் கொடூரமான கஷ்டம் கொடுத்தார்கள். ஆனால், பின்னர் அவர்கள் நபிகளிடம் போனபோது, அவர்களை மிகுந்த அன்பாகத்தான் கவனித்தார். யாரையும் பழி எடுக்க போகவில்லை. அதனால், நபிகள் நாயகம் காட்டித் தந்த வழியில் சென்று, சமாதானமான முறையில் இன்னுமொரு சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்க வேண்டுமென சௌதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். அதுதான் நபிகள் நாயகத்தின் வழி என்று அவர்களிடம் எடுத்து கூறி, மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விட வேண்டும் என்பதுதான் எனக்குத் தோன்றுகின்றது."

செளதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்

கேள்வி: சௌதியில் மரண தண்டனையை இல்லாது செய்வார்களாக இருந்தால், அனோஜனுக்கு வேறு ஏதேனும் தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதா?

பதில்: ''ஆம்... வேறு குறைந்த தண்டனைகளைக் கொடுக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. தண்டனையை குறைத்துக் கொடுப்பார்கள். நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் சௌதி அரசுடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்த விஷயத்தை விரைவில் செய்தால், அதை வைத்து, அனோஜனை இலங்கைக்கு அனுப்புமாறும், அவரை இலங்கை சிறையில் வைப்போம் என்றும் கோரிக்கை விட முடியும். கைதிகள் பரிமாற்றத்திற்கு நாங்கள் கையொப்பம் செய்துக்கொள்ள வேண்டும். அந்த விடயம் தற்போது எந்தளவில் இருக்கின்றது என்பது இப்போது எனக்கு தெரியாது. அதை செய்துக்கொள்ள வேண்டும்."

கேள்வி: அனோஜனின் விடுதலை தொடர்பில் தற்போதைய நிலைமை என்ன?

பதில்: ''எனக்கு இன்றைய நிலைமை சரியாக தெரியாது. இந்தச் சம்பவம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். எனக்கு யாரும் தனிப்பட்ட ரீதியில் அது தொடர்பில் கூறவில்லை. வெளிவிவகார அமைச்சில்தான் அது குறித்துப் பார்க்க வேண்டும்."

கேள்வி: சௌதியில் இதற்கு முன்னர் மரண தண்டனை கொடுக்கப்பட்டு, மன்னிப்பு கிடைத்த வரலாறு ஏதேனும் இருக்கின்றதா?

பதில்: ''ஆம். இரு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். கட்டாரில் இருந்து இஸ்ரேலுக்கு தகவல் வழங்கியதற்காக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோதி, கட்டார் அமீருடன் பேசி, அவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்படி சில சம்பவங்கள் அரபு நாடுகளில் நடந்துள்ளன. நாங்கள் ஒரு சின்ன நாடு. அதனால், இந்தியா போல எங்களுக்கு அவ்வளவு பெரிய அதிகாரம் இல்லை. இருந்தாலும், நாங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டும்."

இலங்கை தமிழரசு கட்சியினர் அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜாவை சந்தித்தனர்.
படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியினர் அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜாவை சந்தித்தனர்.

கேள்வி: அமெரிக்க தூதரகம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் போன்ற இடங்களுக்குச் சென்று அனோஜனின் விடுதலை தொடர்பில் சௌதி அரசிடம் பேசுமாறு அந்த நாடுகளிடம் இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் கோரிக்கை விடுக்கின்றார்கள். இந்த விஷயம் சாத்தியமாகுமா?

பதில்: ''அது அந்தளவு சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது. அவர்கள் அவர்களின் நாடுகள் சம்பந்தமாக மாத்திரம் தான் பேசுவார்கள். இருந்தாலும், முயல்வது நல்ல விஷயம். நாங்கள் ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். சௌதி அரசாங்கத்தையோ அல்லது அவர்களின் சட்டத்தையோ நாங்கள் விமர்சிக்க கூடாது. அது அவர்களின் நாட்டு சட்டம். அதை நாங்கள் விமர்சிக்க போனால், இருக்கின்ற சந்தர்ப்பமும் இல்லாது போகும். அவர்களுக்கு மதிப்பு வழங்கி, அதனூடாகவே எங்களுடைய விஷயத்தை சாதித்து கொள்ள வேண்டும்."

கேள்வி: அனோஜனின் விடுதலை தொடர்பில் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியாக இருக்கின்றதா?

பதில்: ''நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் சொன்ன விஷயங்கள் மாத்திரமே எனக்குத் தெரியும். அதற்கு மேலதிகமான தகவல்கள் எனக்குத் தெரியாது. ஜனாதிபதி, அனோஜனின் பெற்றோரை சந்தித்துப் பேசியுள்ளார். பிரதி சபாநாயகர் தலைமையிலான ராஜதந்திர குழுவொன்று சௌதி செல்வதாகவும் கூறியுள்ளார்கள். அரசு செய்ய வேண்டிய வேலைகளைச் செய்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். இருந்தாலும், ஐ.நா. சபையின் வெளிவிவகார அமைச்சர், சௌதி வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து, இந்த விஷயம் தொடர்பில் பேசினால், அது பெரியதொரு விஷயமாக இருக்கும். அதைச் செய்துகொள்ள முடியுமோ தெரியாது."

அனோஜனின் குடும்பத்தாரை அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சந்தித்தார்.
படக்குறிப்பு, அனோஜனின் குடும்பத்தாரை அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சந்தித்தார்.

கேள்வி: இந்த மரண தண்டனைக்கு எதிராக எத்தனை நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும்?

பதில்: ''எனக்குத் தெரிந்த விதத்தில் ஒரு மாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும்."

கேள்வி: மரண தண்டனையை நிறைவேற்றும் சிறைச்சாலைக்கு அனோஜனை அழைத்துச் சென்றுள்ளதாக அவரது சகோதரர் தெரிவிக்கின்றார். இப்போது அனோஜனுடன் அவரது குடும்பத்தாருக்கு தொடர்புகொள்ள முடியவில்லை. அதில் எந்தளவு உண்மை இருக்கின்றது?

பதில்: மேல்முறையீடு செய்யும் காலம் வழங்கப்பட்டு இருப்பதனால், மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது. எனினும், மரண தண்டனை கொடுத்தமையால், அந்த சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றிருக்க வாய்ப்புள்ளது. அந்த சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றார்கள் என்பதற்காக, மரண தண்டனையைக் கொடுக்க முடியாது" என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு