ஜந்தர் மந்தர் 2.0: காக்ரோச் ஜனதா கட்சி தவறியது எங்கே? நேஹா போராவின் பலமாக மாறியது எது? – ஓர் அலசல்

பட மூலாதாரம், Reuters
கடந்த வாரம் டெல்லியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்தப் பதற்றம் நாட்டின் பல பகுதிகளிலும் எதிரொலித்தது. போராட்டங்கள் நடைபெற்ற சூழலில், தேசியத் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
சுமார் 30,000 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர், பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேருந்துகளில் ஏற்றும் காட்சிகள் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் வெளியாகின.
இந்தப் போராட்டங்களின் மையத்தில் சிஜேபி எனப்படும் காக்ரோச் ஜனதா கட்சி இருந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையானது பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமாக இருப்பதாக இந்தக் கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த இயக்கத்தை மூன்று முக்கிய சக்திகள் வழிநடத்துவதாகத் தெரிகிறது. காக்ரோச் ஜனதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி மற்றும் இடதுசாரி அமைப்புகள். இந்தப் போராட்டங்கள் அரசுக்கு சவாலாக அமைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த நிகழ்வுகளும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
முந்தைய போராட்டங்களிலிருந்து காக்ரோச் ஜனதா கட்சியின் இந்த போராட்டம் எவ்வாறு வேறுபடுகிறது? இம்முறை, ஒரு குறிப்பிட்ட முடிவையோ தனிநபரையோ எதிர்ப்பது மட்டுமே பிரச்னையாக இல்லை; தேர்தல் முறையே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
ஆனால், இந்தப் போராட்டம் சாமானிய மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதா? இதில் காக்ரோச் ஜனதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் என்ன பங்கு வகிக்கின்றன?
எல்லாவற்றையும்விட முக்கியமான கேள்வி, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான். இந்தப் போராட்டம், எஸ்ஐஆர் நடைமுறை குறித்து அமைப்பு ரீதியிலான மறுபரிசீலனைக்கு வழிவகுக்குமா? அல்லது போராட்டங்கள், தடுப்புக் காவல்கள், அரசியல் மோதல்கள் ஆகியவற்றுக்குப் பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாமல் போகுமா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் வகையில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் துறை இயக்குநர் முகேஷ் குமார், பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித், மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீனிவாசன் ஜெயின் மற்றும் 'தி இந்து' நாளிதழின் அரசியல் ஆசிரியர் நிஸ்துலா ஹெப்பர் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
டெல்லி காவல்துறை மீது எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Shammi MEHRA / AFP via Getty Images
ஜந்தர் மந்தரில் இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையின் முன்னேற்பாடுகளும் நடவடிக்கைகளும் மிக விரிவாகவும் விரைவாகவும் இருந்தன.
இந்தப் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித் கூறுகையில், எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழாமல் தடுப்பதே காவல்துறையின் முக்கிய நோக்கமாக இருந்தது என்கிறார்.
அவர் கூறுகையில், "10-ஆம் தேதி மதியம், மண்டி ஹவுஸ் பகுதியில் எல்லாம் அமைதியாக இருந்தது. திடீரென எங்கிருந்தோ இரண்டு பெண்கள், ஒரு சிறிய பதாகையை ஏந்தியபடி வந்தனர். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதைக்கூட எங்களால் படிக்க முடியவில்லை. அவர்கள் ஐந்து அல்லது பத்து அடிகள் நடந்திருப்பார்கள். அதற்குள் டஜன் கணக்கான பாதுகாப்பு படையினர் அங்கு வந்துவிட்டனர். உடனடியாக ஒரு பேருந்தும் வந்தது. அந்தப் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்த சம்பவமும் மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் முடிந்துவிட்டது. அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம்." என்றார்.
அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் 'தி இந்து' நாளிதழின் அரசியல் ஆசிரியர் நிஸ்துலா ஹெப்பரும், இம்முறை காவல்துறை கூடுதல் முன்னேற்பாடுகளுடன் இருந்ததாகக் கருதுகிறார்.
அவர் கூறுகையில், "போராட்டக்காரர்கள் எங்கும் நிலையாகத் தங்கிவிட அனுமதிக்கக் கூடாது என்பதில் காவல்துறை முழுமையாகத் தயாராக இருந்ததாக நினைக்கிறேன். கடந்த முறை போராட்டம் பரவியதைப் போல இம்முறையும் பரவிவிடக் கூடாது என்று அவர்கள் விரும்பினர். 'இந்தியா' கூட்டணியின் போராட்டத்தின்போது யாரும் பெரிதாகத் தாக்கப்படவில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அங்கு நிலைமைகள் எளிதாக்கப்பட்டிருந்தன. ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடிந்தது. சாலைகளில் ஏராளமான காவல்துறையினர் இருந்தனர். ஆனால், அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை." என கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீனிவாசன் ஜெயின் கூறுகையில், "அரசு சர்வாதிகாரியைப் போல நடந்துகொள்கிறது என்ற குற்றச்சாட்டே இப்போது ஒரு பிரச்னையாக மாறியுள்ளது. அதைச் சுற்றி வேலையின்மை, பணவீக்கம், பெண்களின் பாதுகாப்பு போன்ற பிரச்னைகள் குறித்த குரல்களும் ஒலிக்கின்றன. இது வழக்கத்துக்கு மாறானதல்ல. பல போராட்டங்களில் ஒரு முக்கியப் பிரச்னை முன்னிறுத்தப்படும்; அதைச் சுற்றிப் பிற பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களும் இணைவார்கள்." என தெரிவித்தார்.
டெல்லி காவல்துறையின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளதாக ஜுகல் புரோஹித் கூறுகிறார்.
"முந்தைய போராட்டங்களின்போது சாதாரண உடையில், முகத்தை மூடியபடி, அடையாள அட்டைகள் ஏதுமின்றிப் பலர் செயல்பட்டனர். இந்தப் போராட்டத்திலும் அதே நிலை காணப்பட்டது. பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான கேள்விகளும் இன்னும் நீடிக்கின்றன" என்றார்.
"பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி நாங்கள் கடுமையாக முயன்றோம். ஆனால், இதுவரை அது பதிவு செய்யப்படவில்லை. விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், பாலியல் துன்புறுத்தல் குறித்துப் புகார் அளித்தவர்கள் மீது தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது." என்றார்.
எதிர்க்கட்சிகளின் வியூகம், நேஹா போராவின் எழுச்சி

பட மூலாதாரம், MANAN VATSYAYANA/AFP via Getty Images
டெல்லியில் மூன்று முக்கியக் குழுக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
காக்ரோச் ஜனதா கட்சி, அகில இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடதுசாரி அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி. இவர்களில் போராட்டத்தின் செயல்திட்டத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் செயல்திட்டம் குறைந்தபட்சம் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பதாக நிஸ்துலா ஹெப்பர் கூறுகிறார்.
ஆனால், போராட்டங்களை எவ்வாறு சிறப்பாகவும், திருப்திகரமாகவும் முடிப்பது என்பது ஒரு சவாலாகும். குறிப்பாக, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழலில் இது முக்கியமானதாகிறது என கூறினார்.
அவர் கூறுகையில், "இந்தியா கூட்டணி தன் போராட்டத்தை அமைத்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. அது உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்றது. எதிர்க்கட்சிகளுக்கும் நேஹா போராவுக்கும் நல்ல மதிப்பெண்களை வழங்கலாம். காக்ரோச் ஜனதா கட்சிக்கு சற்றுக் குறைவான மதிப்பெண்களே வழங்க வேண்டும்." என்றார்.
இந்தப் போராட்டத்தில் மூன்று தரப்பினரிடமும் ஒரு சில ஒற்றுமைகள் இருந்ததை ஜுகல் புரோஹித் கவனித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகல் கோரிக்கை, எஸ்ஐஆர் நடைமுறை ஆகியவை குறித்து மூன்று தரப்பினரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், அவற்றை அணுகும் முறையில் ஒற்றுமை இல்லை என அவர் கருதுகிறார்.
அரசுக்கு எதிராகச் சவால் விடுக்கும்போது, அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீனிவாசன் ஜெயின் கூறுகிறார். போராட்டம் நடத்தப் போவதாகவோ, சவால் விடுப்பதாகவோ அறிவித்துவிட்டு, களத்தில் இறங்காமல் இருந்தால் மக்கள் நிச்சயம் அதைக் கவனிப்பார்கள் என்கிறார்.
அவர் கூறுகையில், "நேஹா போரா இவ்வளவு கவனத்தைப் பெறுவதற்குக் காரணம், அவர் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு, மக்கள் பார்வையில் இருப்பதுதான். காக்ரோச் ஜனதா கட்சி ஒருபோதும் களத்தில் இறங்கவில்லை. ஆனால், நேஹா 10-ஆம் தேதியும் முயற்சி செய்தார்; 11-ஆம் தேதியும் தொடர்ந்து முயன்றார். அதன்பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்" என்றார்.
காக்ரோச் ஜனதா கட்சி மீதான கேள்விகள்

பட மூலாதாரம், Vipin KUmar/Hindustan Times via Getty Images
காக்ரோச் ஜனதா கட்சி தற்போது அதன் அணுகுமுறை, செயல்படும் விதம், களப்பணியில் காட்டும் முனைப்பு ஆகியவற்றுக்காக விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இப்போது அதன் தலைவர்கள் போராட்டத்தில் இல்லாதது குறித்தும் கேள்விகள் எழுகின்றன. இந்தச் சூழலில் காக்ரோச் ஜனதா கட்சி பின்தங்குகிறதா?
இதற்குப் பதிலளித்த ஸ்ரீனிவாசன் ஜெயின், "இதை ஒரு முரண்பாடாகப் பார்க்கலாம். முதன்முதலில் அவர்கள் திரண்டபோது, இது சமூக ஊடகங்களில் மட்டுமே நிகழும் ஒரு போக்கு என்றும், களத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அரசு நினைத்தது. ஆனால், நிலைமை தீவிரமடைந்து, ஒரு அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது" என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "காக்ரோச் ஜனதா கட்சிக்கு நிச்சயமாக ஒருவிதமான வலிமை இருக்கிறது. மக்களைத் திரட்டும் திறன், செல்வாக்கு, சமூக ஆதரவு, பார்வையாளர்கள் எனப் பல அம்சங்கள் அதற்கு உள்ளன. இந்த அளவிலான ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்று காக்ரோச் ஜனதா கட்சியேகூட எதிர்பார்த்திருக்காது. இப்போது அக்கட்சியின் போராட்டம் எந்த அளவுக்குத் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றால், இந்தியாவின் ஒட்டுமொத்தத் தலைநகரமே முடக்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் போராட்டக் குழுவுக்காகவும் இதுபோன்று நடந்ததில்லை." என்றார்.
"ஆனால், இதற்கிடையில் அக்கட்சியின் அமைப்பு ரீதியான செயல்திறன் வெளிப்படவில்லை. அதன் தலைவர்கள் மூவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டபோது, மாற்றுத் திட்டமோ தெளிவான செயல்திட்டமோ அவர்களிடம் இல்லை. இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்ட பிற குழுக்கள் சிறந்த திட்டமிடலுடனும் ஒருங்கிணைப்புடனும் செயல்பட்டன. அமைப்பு ரீதியாகப் பார்க்கும்போது, அக்கட்சிக்கு அனுபவமின்மை உள்ளிட்ட சில பலவீனங்கள் உள்ளன."
நிஸ்துலா ஹெப்பர் கூறுகையில், " காக்ரோச் ஜனதா கட்சி இரண்டாவது முறையாக மக்களைப் போராட்டத்துக்கு அழைத்தபோது, டெல்லியே ஏற்கெனவே பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற சூழலுக்கு மாறியிருந்தது. இப்படிப்பட்ட நிலையில், 'இந்த விமானத்தில், இந்த வழியில் நாங்கள் வருகிறோம்' என்று காணொளி வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 'வந்து எங்களைக் கைது செய்யுங்கள்' என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்ததைப் போல அது அமைந்துவிட்டது." என்றார்.
நிஸ்துலா ஹெப்பர் மேலும் கூறுகையில், "அவர்கள் காவலில் எடுக்கப்பட்டதும் யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழத்தொடங்கியது. போராட்டத்துக்கு வந்த அனைவருக்கும் வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. நீங்கள்தான் அவர்களைப் போராட்டத்துக்கு அழைத்தீர்கள். அதனால்தான் மக்களிடையே சில சந்தேகங்கள் எழுகின்றன."என்றார்
'சமூக ஊடகத் தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்கு'

பட மூலாதாரம், Yousuf Sarfaraz/Anadolu via Getty Images
இந்த முறை போராட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேருந்துகளில் ஏற்றும் புகைப்படங்களும் காணொளிகளும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜுகல் புரோஹித் கூறுகையில், போராட்டத்தின்போது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் வெளியே வராமல் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.
"பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில், காவல்துறையினரும் பிற பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்களைச் சுற்றி முழுமையாக அரண் அமைக்க முயன்றனர். பத்திரிகையாளர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் புகைப்படம் எடுப்பதைத் தடுப்பதற்காகக் காவலர்கள் தங்களது கேடயங்களை உயர்த்தினர்." என்கிறார் அவர்.
அவர் கூறுகையில், "இப்படியொரு சம்பவத்தை நான் முதல்முறையாகப் பார்த்தேன். இதைத் தவிர, நாங்கள் மைக்கில் பேசிக்கொண்டிருந்தபோது, சிலர் எங்களைச் சுற்றி நின்று மைக்குக்கு முன்னால் விசில் அடிக்கத் தொடங்கினர். அனைவரும் இதைச் செய்தனர். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது 20 பேர் உங்கள் முன்னால் நின்று விசில் அடித்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மைக்கின் செயல்பாடும் ஒலிப்பதிவும் பாதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி, நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் கருத்துகளின் தொடர்ச்சியும் தடைப்படும்." என கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீனிவாசன் ஜெயின் கூறுகையில், "2014-ஆம் ஆண்டு முதல், பத்திரிகை சுதந்திரம் ஒன்றன்பின் ஒன்றாக நசுக்கப்படுவதைப் பார்த்து வருகிறோம். இப்போது களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களைத் தடுப்புக் காவலில் வைக்கும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன." என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மோதல் பகுதிகளைத் தவிர, போராட்டக்காரர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வேறுபாடு காட்டுவதற்குக் காவல்துறைக்கு இவ்வளவு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை நான் பார்த்ததில்லை. பத்திரிகையாளர்கள் தங்களது அடையாள அட்டைகளைக் காட்டுகிறார்கள், மைக்குகளை காட்டுகிறார்கள். ஆனாலும், என் கண் முன்னாலேயே சுமார் ஏழு அல்லது எட்டு பத்திரிகையாளர்கள் மிகக் கடுமையாகப் பிடித்து இழுக்கப்பட்டனர்; அவமதிக்கப்பட்டனர்; பின்னர் ஒரு வேனில் ஏற்றப்பட்டனர்."
"இது கவலையளிக்கும் புதிய போக்காகும். ஜந்தர் மந்தர் 1.0 போராட்டத்துக்குப் பிறகு, காயமடைந்த புலியைப் போல அரசு மாறிவிட்டது. தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்க வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது. இந்த முறை இன்னும் ஆக்ரோஷமாகத் தாக்குகிறது. இது ஊடகத் துறையினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது."
சமூக ஊடகங்களில் யார் வேண்டுமானாலும் ஊடக அடையாள அட்டையை உருவாக்கலாம்; ஒரு இலச்சினையை வடிவமைக்கலாம்; தங்களது கைப்பேசியில் காணொளிகளைப் பதிவு செய்யத் தொடங்கலாம் என்றும் ஸ்ரீனிவாசன் ஜெயின் கூறுகிறார். இத்தகைய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது சவாலானது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.
இருப்பினும், அரசின் நோக்கம் குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார். "ஆனால், அரசு சித்தரிக்க முயல்வதைப் போல இது மிகப் பெரிய சட்டம்-ஒழுங்குப் பிரச்னை அல்ல. பெரும்பாலான பிரதான ஊடகங்கள் அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டன. ஆனால், சமூக ஊடகங்களில் உள்ள பெரிய மற்றும் சிறிய தளங்கள் அரசுக்கு சவாலாக விளங்குகின்றன. எனவே, அவற்றை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும், முடக்கவும் இந்த விவகாரம் ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படுகிறது." என்றார் அவர்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































