உலகை சுற்றும் பயணத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானி - 28 கிலோ எடையை தூக்கும் ராட்சத 'தேங்காய் நண்டுகள்' வாழும் தீவில் தேடல்

மார்ஷல் தீவுகளில் காணப்படும் தேங்காய் நண்டுகள், அமீலியா ஏர்ஹார்ட் மாயமானதில் பங்கு வகித்திருக்கலாம்.
படக்குறிப்பு, மார்ஷல் தீவுகளில் காணப்படும் தேங்காய் நண்டுகள், அமீலியா ஏர்ஹார்ட் மாயமானதில் பங்கு வகித்திருக்கலாம்.
    • எழுதியவர், அலெக்ஸ் பிலிப்ஸ் மற்றும் மேக்ஸ் மாட்சா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

புகழ்பெற்ற விமானி அமீலியா ஏர்ஹார்ட், 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் முயற்சியின்போது மாயமானார். அவர் பயணம் செய்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் தொலைதூரத் தீவில் ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சென்றடைந்துள்ளது.

தொல்பொருள் மரபு ஆய்வு நிறுவனம் மற்றும் பர்டியூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்தக் குழு, பசிபிக் பெருங்கடலில் உள்ள நிகுமரோரோ தீவுக்கு கடந்த வாரம் சென்றடைந்தது.

மோசமான வானிலை காரணமாக ஆராய்ச்சியாளர்கள் சில நாள்கள் தேடுதல் பணியை நிறுத்தியிருந்த நிலையில், விமானத்தின் சிதைவுகளைத் தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமாக, ஆராய்ச்சிக் கப்பலிலேயே மூன்று நாள்கள் குழுவினர் தங்க வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் மீண்டும் தொடங்கின.

இந்தத் தேடுதல் பணிகளுக்குப் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. நிலத்தில் வாழும் பிரம்மாண்ட நண்டுகளும், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வலுவானதாக இருக்கும் எல் நினோ காலநிலை நிகழ்வும் தேடுதல் பணிகளுக்குத் தடையாக இருக்கலாம்.

கொள்ளை நண்டுகள் என்றும் அழைக்கப்படும் தேங்காய் நண்டுகள், இரவு நேரங்களில் வெளியே வந்து சிறிய பாலூட்டிகளையும் கடற்பறவைகளையும் வேட்டையாடும். எனவே, தங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தேடுதல் குழுவினர் இரவு நேரங்களில் கப்பலிலேயே தங்க வேண்டியிருக்கும்.

தேங்காய் நண்டுகள்

"பல காரணங்களுக்காக, ஆய்வுக் குழுவினர் ஒவ்வொரு இரவும் 'மரின் மைனிகு' கப்பலிலேயே தங்குவார்கள். அவற்றில் ஒன்று, தேங்காய் நண்டுகள். அவற்றின் பெரிய அளவும், இரவு நேரங்களில் அவை சுறுசுறுப்பாக இயங்குவதும் தீவில் தங்குவதைச் சாத்தியமற்றதாக்குகின்றன" என்று ஆய்வுக் குழுவின் வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர்ஹார்ட் விமான விபத்தில் சிக்கி அந்தத் தீவில் உயிர் பிழைத்திருக்கலாம் என்றும், பின்னர் இறைச்சியை உண்ணும் ராட்சத நண்டுகளால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சில கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அந்த நண்டுகள் அவரது எலும்புகளைக் கூட இழுத்துச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பவளத் தீவுகளிலும், மக்கள் வசிக்காத தீவுகளிலும் இந்த நண்டுகள் வாழ்கின்றன. அவற்றால் 28 கிலோ வரை எடையைத் தூக்க முடியும். தேங்காயை உடைத்துத் திறக்கக்கூடிய சில உயிரினங்களில் இவையும் அடங்கும். அதேசமயம், எலிகள், பறவைகள் போன்ற உயிருள்ள விலங்குகளையும் இவை வேட்டையாடுகின்றன

ஒரு மீட்டர் வரை கால்களை விரித்திருக்கக்கூடிய இந்த நண்டுகள், 4 கிலோவுக்கும் அதிகமான உடல் எடையைக் கொண்டிருக்கலாம். இவற்றால் மரங்களிலும் ஏற முடியும்.

2018-ஆம் ஆண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க விமானங்களின் சிதைவுகளைத் தேடும் சர்வதேசக் குழு ஒன்று, பன்றிகளின் உடல்களைப் பயன்படுத்தி ஓர் ஆய்வை நடத்தியது. இந்த நண்டுகள் உடல்களை இழுத்துச் சென்று, இரண்டு வாரங்களுக்குள் எலும்புகளில் உள்ள சதையையும் அகற்றிவிடும் என்பதை அந்த ஆய்வு விளக்கியது.

1937-ஆம் ஆண்டு, தனது எலெக்ட்ரா விமானத்தை ஓட்டிச் சென்றபோது, அமீலியா ஏர்ஹார்ட் பசிபிக் பெருங்கடல் பகுதியில் மாயமானார்.
படக்குறிப்பு, 1937-ஆம் ஆண்டு, தனது எலெக்ட்ரா விமானத்தை ஓட்டிச் சென்றபோது, அமீலியா ஏர்ஹார்ட் பசிபிக் பெருங்கடல் பகுதியில் மாயமானார்.

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விமானப் பயணத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்கரான அமீலியா ஏர்ஹார்ட், விமான வழிகாட்டி ஃப்ரெட் நூனனுடன் உலகைச் சுற்றி வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானார். அவரது மறைவு பல தசாப்தங்களாகப் பல்வேறு ஊகங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

2020-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் படங்களில் முதன்முதலில் தென்பட்டதாகக் கூறப்படும் 'தரையா பொருள்' எனப் பெயரிடப்பட்டுள்ள அமைப்பைக் கண்டறிவதே ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். இந்தப் பொருள், நிகுமரோரோ தீவுக்கு அருகே உள்ள ஒரு நீர் பரப்பின் விளிம்பில் அமைந்துள்ளது.

அது ஏர்ஹார்ட் பயணம் செய்த விமானத்தின் சிதைவாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், அது உண்மையில் விமானத்தின் ஒரு பகுதியா என்பதில் மற்றவர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர். அது முறிந்து விழுந்த மரமாக இருக்கலாம் என்பதும் ஒரு கருத்தாக முன்வைக்கப்படுகிறது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிகுமரோரோ தீவுக்குச் செல்ல அனுமதி பெற்ற முதல் பயணம் இதுவாகும். மேலும், தரையா தீபகற்பத்துக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் பயணமும் இதுவே என்று பர்டியூ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தெற்கு பசிபிக் பெருங்கடலில் 830 கடல் மைல்கள் (சுமார் 1,537 கி.மீ.) தொலைவைக் கடந்து, ஐந்து நாள்கள் பயணம் செய்த 'மரின் மைனிகு' கப்பல் கடந்த வாரம் கிரிபாட்டி நாட்டின் ஒரு பகுதியான நிகுமரோரோ தீவின் மேற்குப் பகுதியைச் சென்றடைந்தது.

"தரையா பொருளைப் பற்றிய எங்கள் ஆய்வை நிறைவு செய்யும் அளவுக்கு நெருங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 89 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் அமீலியா ஏர்ஹார்ட் மற்றும் ஃப்ரெட் நூனன் ஆகியோர் மாயமானது குறித்த மர்மத்துக்கு இறுதியாகத் தீர்வு காணவும் இது உதவக்கூடும்" என்று இந்தப் பயணத்தின் தலைவரான ரிக் பெட்டிக்ரூ வலைப்பதிவுப் பதிவில் தெரிவித்துள்ளார்.

நிகுமரோரோ தீவின் நீரேரியில் உள்ளதாகக் கூறப்படும் ‘தரையா பொருள்’ குறித்த செயற்கைக்கோள் படம்.
படக்குறிப்பு, நிகுமரோரோ தீவில் உள்ளதாகக் கூறப்படும் 'தரையா பொருள்' குறித்த செயற்கைக்கோள் படம்.

"இறுதியாகக் கப்பலில் இருந்து இறங்கி, நிகுமரோரோ தீவில் கால்பதிக்க முடிகிறது" என்று இந்த ஆய்வுப் பயணத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப நிபுணர் சிரிஷா பண்ட்லா தெரிவித்தார். 'மரின் மைனிகு' கப்பலின் மேல் தளத்தில் இருந்து வெளியிட்ட காணொளிப் பதிவில் அவர் இதைக் கூறினார்.

ஆராய்ச்சியாளர்கள் கடந்த வாரம் மக்கள் வசிக்காத நிகுமரோரோ பவளத் தீவுக்கு வந்து, ஆய்வு செய்ய வேண்டிய பகுதியில் நீருக்கடியில் ஆய்வைத் தொடங்கினர்.

ஆனால், மோசமான வானிலை, அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளைத் தொடங்குவதற்குத் தடையாக இருந்து வருகிறது.

மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த ஆய்வின் இரண்டாம் கட்டத்தை இதுவரை தொடங்க முடியவில்லை. இந்தக் கட்டத்தில், நீருக்கடியில் உள்ள பொருள்களின் ஆழத்தைக் கண்டறிய அவற்றை ஆய்வுக் கருவிகளால் பரிசோதிப்பதுடன், கடலடியில் படிந்துள்ள வண்டல் மண்ணும் அகழ்ந்தெடுக்கப்படும்.

ஆய்வுப் பயணத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஸ்டீவ் ஷுல்ட்ஸுடன் (இடது) இருக்கும் சிரிஷா பண்ட்லா (வலது), குழுவினர் “மிகுந்த உற்சாகத்தில்” இருப்பதாகத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, ஆய்வுப் பயணத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஸ்டீவ் ஷுல்ட்ஸுடன் (இடது) இருக்கும் சிரிஷா பண்ட்லா (வலது), குழுவினர் "மிகுந்த உற்சாகத்தில்" இருப்பதாகத் தெரிவித்தார்.

1937-ஆம் ஆண்டு

அமீலியா ஏர்ஹார்ட், இரட்டை எஞ்சின்களைக் கொண்ட தனது லாக்ஹீட் எலெக்ட்ரா விமானத்தில் கலிபோர்னியாவில் இருந்து தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளைக் கடந்து வெற்றிகரமாகப் பயணம் செய்திருந்தார். அதன் பிறகு, 1937-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி பப்புவா நியூ கினியில் உள்ள லே நகரைச் சென்றடைந்தார்.

அங்கிருந்து விமான வழிகாட்டி ஃப்ரெட் நூனனுடன் ஹவாய் தீவுகளுக்குச் சென்று, பின்னர் கலிபோர்னியாவுக்குத் திரும்புவது அவர்களின் திட்டமாக இருந்தது.

ஆனால், எரிபொருள் நிரப்புவதற்காக நிகுமரோரோ தீவுக்கு அருகே உள்ள, மக்கள் வசிக்காத தொலைதூரப் பவளத் தீவான ஹவ்லேண்ட் தீவை அடைய முயன்றபோது, அவர்களது விமானம் எந்தத் தடயமும் இன்றி மாயமானது.

ஏர்ஹார்ட் திசையைத் தவறாகக் கணித்து நிகுமரோரோ தீவுக்குச் சென்றிருக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. அங்கு அவர் விமானத்தை கடலில் இறக்கியிருக்கலாம் என்றும், பின்னர் அத்தீவில் தனித்து விடப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் இந்தக் கோட்பாடு தெரிவிக்கிறது.

பர்டியூ பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, 'தரையா பொருள்' என அழைக்கப்படும் அமைப்பு 1938-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே தென்படுகிறது. அந்தப் படங்களில், ஆழம் குறைந்த கடல் பகுதியில் சிறிய ரக விமானத்தின் சிதைவுகளைப் போன்ற ஓர் அமைப்பு காணப்படுகிறது. இருப்பினும், அது விமானத்தின் சிதைவுதான் என்பதில் மற்ற ஆய்வாளர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம் நியூசிலாந்து விமானப்படை அருங்காட்சியகம் வெளியிட்ட 1938-ஆம் ஆண்டு படங்களில், அப்போது கார்ட்னர் தீவு என்று அழைக்கப்பட்ட நிகுமரோரோ தீவு காணப்படுகிறது. படத்தின் கீழ் வலது மூலையில், ‘எஸ்எஸ் நார்விச் சிட்டி’ கப்பலின் சிதைவுகளும் இடம்பெற்றுள்ளன.
படக்குறிப்பு, நியூசிலாந்து விமானப்படை அருங்காட்சியகம் வெளியிட்ட 1938-ஆம் ஆண்டு படங்களில், அப்போது கார்ட்னர் தீவு என்று அழைக்கப்பட்ட நிகுமரோரோ தீவு காணப்படுகிறது. படத்தின் கீழ் வலது மூலையில், 'எஸ்எஸ் நார்விச் சிட்டி' கப்பலின் சிதைவுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆய்வுப் பயணத்தின் மீதான ஆர்வத்தைத் தொடர்ந்து, நியூசிலாந்து விமானப்படை அருங்காட்சியகம், இதுவரை வெளியிடப்படாத நிகுமரோரோ தீவின் வான்வழிப் படங்களை வெளியிட்டது.

1938-ஆம் ஆண்டு கடல் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்களில், 'தரையா பொருள்' தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், 1929-ஆம் ஆண்டு புயலின்போது நிகுமரோரோ தீவில் தரைதட்டி விபத்துக்குள்ளான பிரிட்டிஷ் வணிகக் கப்பலான 'எஸ்எஸ் நார்விச் சிட்டி'யின் சிதைவுகள் அவற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த தொல்பொருள் மரபு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வுப் பயணத்தை முன்னெடுத்து வரும் பர்டியூ பல்கலைக்கழகம், இந்தச் சம்பவம் அந்தத் தீவைச் சுற்றியுள்ள ஆபத்துகளை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளது.

தீவின் பவளத் திட்டைத் தாண்டி, அதன் உட்பகுதியில் உள்ள நீர் பரப்புக்கு செல்ல வேண்டும். இதற்காக, 1963-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் பவளத்திட்டில் உருவாக்கப்பட்ட குறுகிய பாதை வழியாகப் படகு செல்ல வேண்டும். அந்தத் தீவில் மக்கள் கடைசியாக வசித்த காலம் அதுவே.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை வரை தீவைச் சுற்றி மணிக்கு 31 மைல் (சுமார் 50 கி.மீ.) வேகத்தில் காற்று வீசியதாகப் பர்டியூ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனால், எழும் பெரிய அலைகளில் சிக்கி ஆய்வுக் குழுவினரின் படகு பவளத்திட்டின் மீது மோதும் அபாயம் இருந்தது.

இருப்பினும், நார்விச் சிட்டி கப்பலின் சிதைவுகள், ஆராய்ச்சியாளர்களின் கோட்பாட்டுக்கு ஆதரவாக இருக்கலாம் என்று பர்டியூ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

1937-ஆம் ஆண்டு, தனது எலெக்ட்ரா விமானத்தை ஓட்டிச் சென்றபோது, அமீலியா ஏர்ஹார்ட் பசிபிக் பெருங்கடல் பகுதியில் மாயமானார்.
படக்குறிப்பு, 1937-ஆம் ஆண்டு, தனது எலெக்ட்ரா விமானத்தை ஓட்டிச் சென்றபோது, அமீலியா ஏர்ஹார்ட் பசிபிக் பெருங்கடல் பகுதியில் மாயமானார்.

ஏர்ஹார்ட் மாயமான சிறிது நேரத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது தந்தையின் குறுகிய அலைவரிசை வானொலியில் ஏர்ஹார்ட்டின் குரல் "நியூயார்க் சிட்டி" என்று மீண்டும் மீண்டும் கூறுவதைக் கேட்டதாகப் பர்டியூ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏர்ஹார்ட் விமான விபத்துக்குப் பிறகு தீவில் தனித்து விடப்பட்டிருக்கலாம் என்ற கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், அவர் தனது இருப்பிடத்தை நார்விச் சிட்டி கப்பலுக்கு அருகில் இருப்பதாகத் தெரிவித்ததை அந்தச் சிறுமி தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மூன்று நாள்கள் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதால், கள ஆய்வை முடிப்பதற்காக ஆராய்ச்சிக் குழு தனது பயணக் காலத்தை நீட்டித்துள்ளது. ஏர்ஹார்ட் பயணம் செய்த விமானம் தொடர்பான நம்பகமான ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்துள்ளனவா என்பது குறித்து இதுவரை குழு தெரிவிக்கவில்லை.

உலகம் முழுவதும் இந்த ஆய்வுப் பயணம் குறித்த ஆர்வம் இருப்பதைத் தங்கள் குழு அறிந்துள்ளதாக தொல்பொருள் மரபு ஆய்வு நிறுவன இயக்குநர் ரிக் பெட்டிக்ரூ தெரிவித்துள்ளார். ஆய்வு முடிவுகளைத் தங்களால் முடிந்தவரை விரைவில் பகிர்ந்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மோசமான வானிலை தொடங்குவதற்கு முன்பு, தரையா பொருள் என்ன என்பதை ஓரிரு நாள்களிலேயே கண்டறிய முடியும் என்று பர்டியூ பல்கலைக்கழகம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.

ஏர்ஹார்ட் மாயமான காலகட்டத்தில் அந்தத் தீவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இருப்பினும், தரையா பொருள் என்பது பவளத் தீவிலிருந்து நீரேரிக்குள் விழுந்த ஒரு மரமாக மட்டுமே இருக்கலாம் என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.

ஏர்ஹார்ட்டின் 'லாக்ஹீட் எலெக்ட்ரா' விமானத்தைக் கண்டறிவதற்கான முந்தைய முயற்சிகளும் வெற்றிபெறவில்லை.

2024-ஆம் ஆண்டு, ஹவ்லேண்ட் தீவுக்கு அருகே கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,877 மீட்டர் (16,000 அடி) ஆழத்தில் அந்த விமானம் கிடந்திருக்கலாம் என்று ஒரு ஆராய்ச்சிக் குழு தெரிவித்தது. ஒலியலைப் படமெடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தக் கண்டுபிடிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், பின்னர் அது பாறை அமைப்பு என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதேபோல், 2019-ஆம் ஆண்டு நிகுமரோரோ தீவுக்கு அருகே நீரிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த விமானத்தின் தரையிறங்கும் சக்கர அமைப்பைப் போன்ற ஒரு பொருள் இடம்பெற்ற புகைப்படத்தை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணமும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு