இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI
டெல்லிக்கு அண்மையிலுள்ள உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சனிக்கிழமை தங்கள் வீட்டில் சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
செய்தி முகமையான ஏஎன்ஐ, நொய்டா காவல்துறையை மேற்கோள் காட்டி, உயிரிழந்தவர்கள் மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35), குழந்தைகள் லட்டு (11), மிஷ்டி (மகள், 7) மற்றும் சாக்ஷாத் (3) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கள ஆய்வு பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தை விரிவாக ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளன.
முதற்கட்டமாகப் பார்க்கும்போது, இது உணவு நச்சுத்தன்மை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரேட்டர் நொய்டா டிசிபி ஸ்ரவண் குமார் சிங் கூறுகையில், "மிகவும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "இவர்கள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். மறுநாள் காலை அவர்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்கள் என்ன சாப்பிட்டனர் என்பதைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். மற்ற ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
அண்டை வீட்டாரின் தகவல்படி, உயிரிழந்தவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை ஒரு திருவிழாவுக்குச் சென்றிருந்தனர். அங்கிருந்து திரும்பியபின் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் காலை, அந்த நூடுல்ஸை சாப்பிட்ட கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்தது.
காவல்துறை கூறுகையில், உள்ளூர் மக்கள் மற்றும் மகேஷின் தாயின் தகவலின்படி, "குடும்ப உறுப்பினர்கள் முந்தைய இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டிருந்தனர்" என தெரிவித்துள்ளது.
மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் பிற அறிவியல் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குடும்பத்தினர் என்ன கூறினர்?
லலிதாவின் மாமா கன்ஹையா சிங் கூறுகையில், "இதுவரை நேரில் பார்த்த சாட்சிகள் எவரும் இல்லை. வீட்டில் ஐந்து பேர்தான் இருந்தனர். அந்த ஐவரும் இறந்துவிட்டதால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தக் குடும்பத்திடம் அதிக அளவில் சொத்து இருந்தது" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்தக் குடும்பத்தில் சொத்து தொடர்பாக ஏற்கெனவே பிரச்னைகள் இருந்துள்ளன. குடும்பத்தில் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். முதலில் மூத்த சகோதரர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். பின்னர் தந்தை உயிரிழந்தார். இப்போது இவர்களும் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தக் குடும்பமே இல்லாமல் போய்விட்டது" என்றார்.
கன்னையா சிங் டெல்லியில் வசிக்கிறார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு அனைத்து உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்தக் குடும்பத்தில் இப்போது தாய் மட்டுமே எஞ்சியுள்ளார். அவராலும் எழுந்து உட்காரக்கூட முடியாது என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சொத்துகள் தாயின் பெயரில் இருந்தன. சொத்து தொடர்பாக மகள்கள் தாயுடன் ஏதோ பிரச்னை செய்துள்ளனர். ஆனால், இதுகுறித்து என்னால் உறுதியாக எதுவும் கூற முடியாது" என்றார்.

பட மூலாதாரம், ANI
கன்னையா சிங் கூறுகையில், "இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. உடற்கூறாய்வின் மூலம் உயிரிழப்புக்கான காரணத்தை மட்டுமே அறிய முடியும். ஆனால், மரணம் ஏன் நிகழ்ந்தது என்பதை எங்களால் கூற முடியாது" என்றார்.
இந்தச் சம்பவத்தில், குழந்தைகளின் மாமாவும் லலிதாவின் சகோதரருமான சோனு கூறுகையில், "என் தம்பி இதே பகுதியில் வேலைக்காக வந்திருந்தான். அவன் 'அக்காவைப் போய் பார்த்துவிட்டு வரலாம்' என்று சொன்னான். இங்கே வந்தபோது எல்லாம் முடிந்துவிட்டதை பார்த்தோம்" என்றார்.
உயிரிழந்த குடும்பத்தின் வீட்டிலிருந்து அடிக்கடி சண்டை சச்சரவுகளின் சத்தம் கேட்கும் என்று சில அண்டை வீட்டுப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அண்டை வீட்டுப் பெண் ஒருவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "அன்று இரவு அனைவரும் திருவிழாவைப் பார்த்துவிட்டு திரும்பியபோது, மாமியார் 'இவ்வளவு நேரமாகிவிட்டதால் சமைக்க வேண்டாம், அனைவரும் மேகி சாப்பிட்டு தூங்கிவிடுங்கள்' என்று கூறியதாக" தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்த வீட்டில் மாமியாருடன் அடிக்கடி தகராறு நடந்தது. லலிதாவின் மாமியார், தன் சொத்துகள் அனைத்தையும் மகள்களுக்கு அளித்துவிடுவேன் என்று கூறுவார்" என்றார்.
உணவுப் பாதுகாப்பு அதிகாரி கூறியது என்ன?
இந்தச் சம்பவம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் ஜேவர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நக்லா பதம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
உள்ளூர் பாஜக எம்எல்ஏ தீரேந்திர சிங் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிர்வாக அதிகாரிகளும் இங்கு உள்ளனர். தடயவியல் குழுவும் வந்துள்ளது. உணவுத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது" என்றார்.
"நச்சுப் பொருள் உட்கொண்டது தொடர்பான விசாரணையில் என்ன உண்மைகள் வெளிவருகின்றன என்பதன் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்புடைய பொருள் பரிசோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது நச்சுத்தன்மை கொண்டதாகக் கண்டறியப்பட்டால், அதைத் தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
ஆனால் உணவு பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சிங், விசாரணைக்குப் பிறகு கூறுகையில், "அனைத்து ரேப்பர்களையும் பரிசோதித்தோம். காலாவதியான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. வேறு எந்த சந்தேகத்துக்கிடமான பொருளும் எங்களுக்கு கிடைக்கவில்லை" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "இது உணவு நச்சுத்தன்மை சம்பவமாக இருந்தால், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்திருக்கும். ஆனால் உடல்கள் அனைத்தும் சாதாரணமாக படுத்திருந்த நிலையில் கிடைத்தன" என்றார்.
இது, "விதை அல்லது பயிர்ச் சாகுபடியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் போன்ற நச்சுப்பொருட்களால் ஏற்படும் நச்சுத்தன்மை பாதிப்பாக இருக்கலாம்" என்ற சந்தேகத்தையும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































