இலங்கை: ஒரு புறம் 19 இரானிய கப்பல்கள், மறுபுறம் அமெரிக்க போர்க்கப்பல் - திரைமறைவில் ராஜதந்திர நகர்வுகள்

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ளன.
படக்குறிப்பு, இலங்கையின் கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச எல்லையில் உள்ள இரானிய கப்பல்.
    • எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ள சம்பவம், நாட்டின் அரசியல், ராஜதந்திர மற்றும் வணிகத் துறைகளில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் அமலில் உள்ள நிலையில், நடுக்கடலில் தவிக்கும் இக்கப்பல்களும் அதில் உள்ள நூற்றுக்கணக்கான மாலுமிகளும் எதிர்கொள்ளும் மனிதநேய நெருக்கடி ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவின் 'இரண்டாம் நிலைத் தடைகளுக்கு' மத்தியில் இலங்கை அரசு எடுத்துள்ள தற்காப்பு நிலைப்பாடு பூகோள அரசியலின் முக்கிய நகர்வாக மாறியுள்ளது.

இதற்கு முன்னர், திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நின்ற 'ஐஆர்ஐஎஸ் புஷெஹர்' என்ற இரானியக் கப்பலின் 13 பணியாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் வழங்கிப் பாதுகாத்திருந்தது. எனினும், தற்போதைய சூழலில் சர்வதேசக் கடலில் நங்கூரமிட்டுள்ள இரானியக் கப்பல்கள் விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

ஒருபுறம் இரானியக் கப்பல்கள், மறுபுறம் கொழும்பில் அமெரிக்க போர்க்கப்பல்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர்
படக்குறிப்பு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர்

இரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால் அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் இலங்கையில் நிலவிவரும் அதேவேளையில், அமெரிக்க கடற்படையின் அதிநவீன 'யுஎஸ்எஸ் டல்ஸா' (USS Tulsa - LCS 16) போர்க்கப்பல் திட்டமிடப்பட்ட துறைமுக விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை கடற்படையின் வரவேற்புடன் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இப்போர்க்கப்பல், தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிரப்பிக் கொள்வதுடன், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளது.

இவ்விஜயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர், "இத்துறைமுக விஜயமானது அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் நீடித்த கடல்சார் பங்காண்மையினையும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் உள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேசக் கடலில் தவிக்கும் இரானிய வணிகக் கப்பல்களுக்கு விநியோகங்களை வழங்க இலங்கை தயங்கி வரும் அதே தருணத்தில், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தங்கி எரிபொருள் நிரப்புவது, பிராந்திய பூகோள அரசியலில் இலங்கை எதிர்கொள்ளும் நுட்பமான ராஜதந்திர நிலைப்பாட்டை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'அணிசேரா கொள்கைக்கும் பொருளாதார ஆபத்துக்கும் இடையிலான ஊசலாட்டம்'

இலங்கையின் இந்த நிலைப்பாடு குறித்து சர்வதேச உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் பேராசிரியர் ஹசித் கந்தௌதஹேவா தெரிவிக்கையில், கொழும்பு தற்போது ஒரு கடினமான ராஜதந்திர ஊசலாட்டத்தில் சிக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார். இலங்கை தொடர்ச்சியாக பின்பற்றும் அணிசேரா கொள்கைக்கு அமைய சகல தரப்புக்கும் உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட மாநாட்டின் படி, சர்வதேசக் கடற்பகுதியில் நிற்கும் கப்பல்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் வழங்குவது ஒரு கடமையாகும். ஆனால், அமெரிக்காவின் 'இரண்டாம் நிலைத் தடைகள்' சர்வதேச சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிதி மற்றும் வணிகத் தடையை உருவாக்குகின்றன என்பதை சுட்டிக்காட்டினார்.

"ஒருபுறம் அமெரிக்கப் போர்க்கப்பலைத் துறைமுகத்தில் அனுமதித்து உபசரிப்பதும், மறுபுறம் அமெரிக்கத் தடைகளுக்கு அஞ்சி இரானிய வணிகக் கப்பல்களின் மாலுமிகளுக்கு அத்தியாவசியப் விநியோகங்களை நிறுத்த முற்படுவதும், இலங்கை தனது பாரம்பரிய அணிசேராக் கொள்கையிலிருந்து விலகுகிறதோ என்ற பிம்பத்தை சர்வதேச சமூகத்திற்கு அளிக்கக்கூடும். எனினும், பொருளாதார ரீதியாக மீண்டு வரும் இலங்கையால் அமெரிக்கத் தடைகளின் ஆபத்தை எதிர்கொள்ள முடியாதென்பதே நடைமுறைச் சவாலாகும்" என அரசியல் ஆய்வாளரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையும் சிவில், குற்றவியல் தண்டனை ஆபத்தும்

பேராசிரியர் ஹசித் கந்தௌதஹேவா
படக்குறிப்பு, பேராசிரியர் ஹசித் கந்தௌதஹேவா

அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் தரவுகளின்படி, தடை செய்யப்பட்ட இரானியக் கப்பல்கள் குறித்த விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற கடல்சார் தடைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறையின் போது அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தடை செய்யப்பட்ட இரானியக் கப்பல்களுக்கு எரிபொருள், உணவு அல்லது பிற பொருட்களை வழங்குவது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அமெரிக்கத் தடைகளின் ஆபத்திற்கு (உரிமையியல் அல்லது குற்றவியல் தண்டனைகள் உட்பட) உட்படுத்தும்" என எச்சரிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத இரானிய வருவாய்க்கான வழிகளை அடைக்க பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்ட அமெரிக்கத் தூதரகம், இதுதொடர்பான நேரடி ராஜதந்திர தொடர்புகள் குறித்து மேலதிக கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது

"இலங்கையை இலக்கு வைத்தது அல்ல" - அரசு விளக்கம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்கத் தடைகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரோட்ரிகோ கூறுகையில், "அமெரிக்காவினால் விதிக்கப்படும் 'இரண்டாம் நிலைத் தடைகள்' என்பது உலகளாவிய ரீதியில் அமல்படுத்தப்படும் பொதுவான கொள்கையாகும். இவை இலங்கையைக் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்ல" என்றார்.

அதேவேளையில் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கையில், "இலங்கைக்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள 19 இரானியக் கப்பல்களும் நாட்டின் பிராந்தியக் கடற்பகுதிக்கு வெளியே நிற்கின்றன. ஆனால் இரானியக் கப்பல்களுக்கான விநியோகத்தைத் தடுக்குமாறு அமெரிக்காவிடம் இருந்து எங்களுக்கு எவ்வித நேரடி அழுத்தமோ அல்லது கோரிக்கையோ வரவில்லை" எனத் தெளிவுபடுத்தினார்.

அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில், "மத்திய கிழக்கில் யுத்த சூழல் நிலவும்போது இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது இயல்பானது. இலங்கை எந்தவொரு தரப்பிற்கும் சார்பாகச் செயல்படவில்லை. மறுபுறம் இரானிய கப்பல்களில் இருந்து அரசாங்கத்திடம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவரும் உதவி கோரவில்லை. மேலும் இந்த விடயத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம்

வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்
படக்குறிப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்

இந்நிலையில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு நாட்டின் வர்த்தகத் துறையில் புதிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இப்னம் கஃபூர் இது குறித்து பிபிசி தமிழுடன் பேசுகையில், "சர்வதேச மனிதநேய விதிகளின்படி நடுக்கடலில் தவிக்கும் மாலுமிகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது. ஆனால், அமெரிக்கத் தடைகளுக்கு அஞ்சி விநியோகங்களை நிறுத்தும் சூழல் நிலவுகிறது. ஒருவேளை இலங்கை நிறுவனம் ஏதேனும் உதவி வழங்கி அமெரிக்கா தடையை அமல்படுத்தினால், நமது நாட்டின் ஏற்றுமதித் துறை முற்றிலும் முடங்கும்."

"ஏற்கனவே பல வணிகக் கப்பல்கள் இலங்கையைத் தவிர்த்து இந்தியா வழியாகச் செல்வதால், கப்பல் கட்டணங்கள் இரட்டிப்பாகி நாட்டின் டாலர் கையிருப்பு வெளியேறுகிறது. எனவே, அமெரிக்க மற்றும் இரானியத் தூதரகங்களுடன் அரசு உடனடியாக ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும்," என அவர் வலியுறுத்தினார்.

இரானியத் தூதுவரின் நேரடி கோரிக்கையும் ராஜதந்திர நகர்வுகளும்

அரசாங்கத் தரப்பில் உதவிகள் கோரப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு வரும் போதிலும், இலங்கைக்கான இரானியத் தூதுவர் அலிரெசா டெல்கோஷ் திரைக்குப் பின்னால் தீவிர ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற இரானியத் தூதுவர் அலிரெசா டெல்கோஷ், இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைச் சந்தத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன், சில வாரங்களுக்கு முன்னர் அவர் இலங்கை நாடாளுமன்றத்திற்கும் நேரில் விஜயம் செய்திருந்தார்.

இவ்விஜயங்களின் போது, இரானிய மாலுமிகளுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கும் தற்போதைய சூழல் குறித்துத் தனக்கு நெருக்கமான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்த அவர், இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் இரானியக் கப்பல்களில் உள்ள மாலுமிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தியாவசிய உதவிகளை வழங்குமாறு இரானியத் தூதரகம் சார்பில் இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நடுக்கடலில் தவிக்கும் மாலுமிகளின் மனிதநேயப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்காவிற்கு அரசு அடிபணிந்துவிட்டது" - எதிர்க்கட்சிகள் சாடல்

இரானியக் கப்பலின் 13 பணியாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் வழங்கிப் பாதுகாத்திருந்தது.
படக்குறிப்பு, இரானியக் கப்பலின் 13 பணியாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் வழங்கிப் பாதுகாத்திருந்தது.

இந்நிலையில் இரானிய மாலுமிகள் விடயத்தில் தற்போது அரசாங்கம் பின்பற்றும் கொள்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹகீம் இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (06.10.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், "தனது இடதுசாரிக் கொள்கைகளை மறந்து தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவிற்கு முழுமையாக அடிபணிந்துவிட்டது. நடுக்கடலில் தவிக்கும் மாலுமிகளுக்கு உணவும் குடிநீரும் கூட வழங்க மறுப்பது மனிதநேயமற்ற செயல். இத்தகைய பலவீனமான வெளியுறவுக் கொள்கையை எண்ணி நாடே வெட்கப்பட வேண்டும்" என விமர்சித்திருந்தார்.

அதேபோல், முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "நமது கடல் எல்லைக்கு அருகில் உள்ள கப்பல்களில் உணவும் குடிநீரும் இன்றி மாலுமிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. அமெரிக்கத் தடைகளை மீறிச் செயல்பட இலங்கைக்குப் போதிய பலமில்லை என்பது உண்மைதான். எனினும், இது ஒரு தூய மனிதாபிமானப் பிரச்னை. இலங்கை தனது பாரம்பரிய அணிசேராக் கொள்கையிலிருந்து விலகிச் செல்வதையே இது காட்டுகிறது" எனக் குற்றம் சாட்டினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹகீம்
படக்குறிப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹகீம்

'இந்திய, வங்கதேச மாலுமிகளும் உள்ளனர்' - முஜிபூர் ரஹ்மான் பிரத்யேக பேட்டி

இவ்விவகாரம் குறித்து பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், நடுக்கடலில் உள்ள மாலுமிகளைப் பாதுகாப்பது இலங்கையின் மனிதாபிமானக் கடமை என சுட்டிக்காட்டினார்.

"இரானியக் கப்பல்களில் வெறுமனே இரானியப் பிரஜைகள் மட்டுமே தங்கியிருக்கவில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட வேறு சில நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளும் இக்கப்பல்களில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் போருக்கு ஆதரவு கொடுக்க வலியுறுத்தவில்லை, மாறாக மனிதநேய உதவிகளை வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம். எதிரியாக இருந்தாலும் ஆபத்தில் உதவும் கொள்கையைக் கொண்ட மனிதநேய நாடு எமது நாடு. அவ்வாறான சூழலில் தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானச் செயல்பாடுகளைத் தட்டிக்கழித்து அமெரிக்காவின் அழுத்தங்களினால் அச்சப்பட்டு நிற்கிறது," எனச் சாடினார்.

"இலங்கைக்கும் இரானுக்கும் இடையிலான நட்புறவு என்பது மிக நீண்டகாலமான ஒன்று. நாடு வங்குரோத்து அடைந்த நேரத்தில் எரிபொருள் வழங்கி உதவி செய்த நாடு இரான். உமா ஓயா திட்டத்தின் ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதுடன், பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. இப்போது அவர்கள் மனிதாபிமான உதவி கோரியும் இலங்கை அரசாங்கம் மௌனம் காப்பது இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு," என அவர் கூறினார்.

கடற்படை தீவிர கண்காணிப்பு

இச்சம்பவம் குறித்து இலங்கை கடற்படையின் ஊடகப் பணிப்பாளராக கமாண்டர் சமிந்த வலாகுலுகே பிபிசி தமிழுக்கு தெரிவிக்கையில், இக்கப்பல்கள் இலங்கையின் 12 கடல் மைல் பிராந்தியக் கடலுக்கு வெளியே சர்வதேசக் கடல் வழியிலேயே நிற்பதால், கடற்படை அவற்றின் நகர்வுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது என்றும், நாட்டின் கடல் எல்லைப் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அதேவேளை, கொழும்பிலுள்ள இரானியத் தூதரகம் இக்கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் நிலை குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித பகிரங்க அறிக்கையையும் வெளியிடவில்லை என்பதுடன் பிபிசி தமிழ் தொடர்ச்சியாக தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவர்களின் பதிலை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

சர்வதேச சட்டம், மனிதாபிமானம் மற்றும் பூகோள அரசியல் - ஒரு பகுப்பாய்வு

இச்சம்பவம் வெறுமனே 19 கப்பல்களின் முடக்கத்துடன் முடிந்துவிடக்கூடிய ஒன்று அல்ல. மாறாக, வல்லரசுகளின் பொருளாதார மோதல்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கை எதிர்கொள்ளும் கட்டமைப்புச் சார்ந்த நெருக்குவாரத்தையே இது வெளிப்படுத்துகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒருபுறம், சர்வதேசக் கடல்சார் சட்டத்தின் கீழ் நடுக்கடலில் ஆபத்திலிருக்கும் மாலுமிகளுக்கு உதவ வேண்டிய மனிதநேயக் கடமை இலங்கை முன் உள்ளது. மறுபுறம், கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு வரும் ஒரு நாடு என்ற வகையில், உலகளாவிய நிதி அமைப்புகள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில் அமெரிக்கத் தடைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார யதார்த்தமும் இலங்கைக்கு உள்ளது.

இத்தகைய சூழலில், அமைதியான தற்காப்பு நிலைப்பாட்டை மட்டும் எடுப்பது இலங்கையின் பாரம்பரிய அணிசேராக் கொள்கை மற்றும் கடல்சார் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை சர்வதேச அரங்கில் எழுப்பக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, நடுக்கடலில் மனித உயிர்கள் ஆபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அமெரிக்க மற்றும் இரானிய ராஜதந்திரத் தரப்புகளுடன் இலங்கை அரசு நேரடியாக உரையாடி, ஒரு தற்காலிக மனிதநேய வழித்தடத்தையோ அல்லது தீர்வையோ உருவாக்க முன்வருவதே, நாட்டின் தேசிய நலன்களையும் சர்வதேச கடப்பாடுகளையும் ஒரேநேரத்தில் பாதுகாப்பதற்கான ஒரே வழியாக இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு