மெக்காவில் உள்ள மசூதியில் 'தகாத செயலில்' ஈடுபட்டதாகக் கூறி தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: செளதி அரேபியாவிடம் விளக்கம் கேட்ட வங்கதேசம்

செளதி அரேபிய ஊடகங்களின் தகவலின்படி, ‘தகாத’ செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
படக்குறிப்பு, செளதி அரேபிய ஊடகங்களின் தகவலின்படி, 'தகாத' செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மெக்காவில் உள்ள ஒரு மசூதியில் 'தகாத' செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு செளதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.

ஆனால், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கோ தூதரகத்துக்கோ தகவல் தெரிவிக்காமல் இருந்ததன் மூலம் செளதி அரேபியா வியன்னா உடன்படிக்கையை மீறியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் வங்கதேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை செளதி அரேபியாவுக்கு உள்ளதா? வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் எவ்வாறு வங்கதேசத்துக்குக் கொண்டு வரப்படும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் தூதரக வட்டாரங்கள், அந்த இருவரும் காவலில் வைக்கப்பட்டது, வழக்கு விசாரணை நடைபெற்றது, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஆகியவை குறித்து செளதி அதிகாரிகள் தூதரகத்துக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

எனினும், வங்கதேசம் கேட்டுள்ள விளக்கத்தை அளிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை செளதி அரேபியாவுக்கு உள்ளதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

வெளிநாட்டில் இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளும் ஒருவர், தனது நாட்டின் தூதரகத்தைத் தொடர்புகொண்டு உதவி கோரலாம் என, வங்கதேசத்தின் முன்னாள் தூதர் ஹுமாயூன் கபீர் கூறுகிறார்.

இதுகுறித்து பிபிசி வங்கத்திடம் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. வழக்கு விசாரணை என்பது செளதி அரேபியாவின் சொந்தச் சட்ட நடைமுறையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதுகுறித்து வங்கதேசத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை அந்நாட்டு அதிகாரிகளுக்கு இல்லை. இருப்பினும், வங்கதேசம் இதுகுறித்துத் தகவல் கேட்டால், செளதி அதிகாரிகள் பதிலளிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

மசூதியில் தகாத செயலில் ஈடுபட்டதாக வங்கதேசத் தம்பதியினர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அந்த மசூதியின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.
படக்குறிப்பு, மசூதியில் தகாத செயலில் ஈடுபட்டதாக வங்கதேசத் தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அந்த மசூதியின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

இரு வங்கதேசக் குடிமக்களின் குடும்பத்தினருக்கும் வங்கதேசத் தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்காமல் தண்டனையை நிறைவேற்றியதன் மூலம் செளதி அரேபியா வியன்னா உடன்படிக்கையை மீறியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

செளதி அரேபியா வியன்னா உடன்படிக்கையில் உறுப்பினராக உள்ளது. அந்நாடு 1981ஆம் ஆண்டு தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இது வியன்னா நெறிமுறை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையின் 36வது பிரிவின்படி, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டாலோ காவலில் வைக்கப்பட்டாலோ, அவர் கோரிக்கை விடுத்தால் தாமதமின்றி அவரது நாட்டுத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பிரிட்டனில் வசிக்கும் சர்வதேசச் சட்ட நிபுணர் ரெஹான் ரஷீத் கூறுகையில், "இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, மேல்முறையீட்டு நடைமுறைகள் முடிந்த பிறகே இரு வங்கதேசக் குடிமக்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, இந்த நடவடிக்கை திடீரென மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.

இதுகுறித்து பிபிசி வங்கத்திடம் பேசிய அவர், "இந்த விவகாரம் குறித்து வங்கதேசத் தூதரகத்துக்குத் தகவல் தெரிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபரோ அல்லது செளதி அதிகாரிகளோ தகவல் தெரிவிக்கும் வரை தூதரகத்துக்கு எதுவுமே தெரியாமல் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த முழு நடைமுறையும் ஒரே நாளில் முடிந்துவிடக்கூடியது அல்ல" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "வியன்னா உடன்படிக்கையின்படி, தூதரக உதவியைப் பெற விரும்புகிறார்களா இல்லையா என்பது குறித்து இருவரிடமும் மீண்டும் மீண்டும் தெரிவித்து உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் அந்த உதவியைப் பெற விரும்பவில்லை என்றால், அதற்காக செளதி அதிகாரிகளைப் பொறுப்பாக்க முடியாது" என்றார்.

என்ன நடந்தது?

செளதி அரேபியாவில் அடிக்கடி மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு, இந்தோனேசியக் குடிமகன் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து ஜகார்த்தாவில் உள்ள செளதி தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது.
படக்குறிப்பு, செளதி அரேபியாவில் அடிக்கடி மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு, இந்தோனீசியக் குடிமகன் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து ஜகார்த்தாவில் உள்ள செளதி தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது.

செளதி அரேபியாவின் செய்தி முகமை புதன்கிழமையன்று, அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை வெளியிட்டது.

மெக்காவில் உள்ள ஒரு மசூதியில் ஒழுக்கக்கேடான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, செளதி பாதுகாப்புப் படையினர் இருவரையும் கைது செய்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகம் வியாழக்கிழமையன்று செளதி வெளியுறவு அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி, சம்பவம் குறித்த விரிவான தகவல்களைக் கேட்டது.

இதற்கிடையில் இரு வங்கதேசக் குடிமக்களும் கைது செய்யப்பட்ட விவரம், வழக்கு விசாரணை மற்றும் தண்டனை குறித்து செளதி அதிகாரிகள் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று வங்கதேசத் தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், இருவரும் வங்கதேச குடிமக்கள்தான் என்பதைக்கூட செளதி அதிகாரிகள் தூதரகத்தின் மூலம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், வியன்னா உடன்படிக்கையின்படி, எந்தவொரு நாட்டின் குடிமகனும் காவலில் வைக்கப்பட்டாலோ சிறையில் அடைக்கப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

வங்கதேசத்தைச் சேர்ந்த பிராக் (BRAC) அமைப்பின் குடியேற்ற பிரிவு தலைவர் ஷரிஃபுல் ஹசன் கூறுகையில், இந்த முழு நடைமுறையிலும் செளதி அரேபியா வியன்னா உடன்படிக்கையை மீறியுள்ளது என்றார்.

தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னெடுப்பில் 1961ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும். தூதர்களின் பணிகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான விதிகள் இதில் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கையின் விதிகளின்படி, பல்வேறு நாடுகளில் பிற நாடுகளின் தூதரகங்கள் அல்லது பிரதிநிதிகள் நியமிக்கப்படுகின்றனர்.

உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த உடன்படிக்கையை அங்கீகரித்துள்ள நிலையில், சர்வதேசத் தூதரக மற்றும் சட்ட நடைமுறைகளுக்கான முக்கிய அடித்தளமாக இது விளங்குகிறது.

இந்த உடன்படிக்கையின் 36வது பிரிவு, வேறொரு நாட்டில் கைது செய்யப்படும் அல்லது காவலில் வைக்கப்படும் குடிமகன் ஒருவர் தனது நாட்டுத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு சட்ட உதவி பெறுவதற்கான உரிமையை வழங்குகிறது.

இதன்படி, தூதரக அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள நபரைச் சந்திக்கலாம், அவருடன் பேசலாம், அவருடன் தொடர்பில் இருக்கலாம். அந்த நபர் விரும்பினால், அவருக்காகச் சட்டப் பிரதிநிதியையும் ஏற்பாடு செய்யலாம்.

'அவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக இருந்திருந்தால் செளதி அரேபியா இப்படிச் செய்திருக்குமா?'

செளதி அரேபியாவில் ஏராளமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்
படக்குறிப்பு, செளதி அரேபியாவில் ஏராளமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்

வங்கதேசமும் செளதி அரேபியாவும் வியன்னா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன என ரெஹான் ரஷீத் கூறுகிறார்.

"எனவே, வெளிநாட்டுக் குடிமகன் ஒருவர் காவலில் வைக்கப்படும்போது இரு நாடுகளும் இந்த உடன்படிக்கையின் விதிகளைப் பின்பற்ற வேண்டும்" என்கிறார் அவர்.

அவர் கூறுகையில், "காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தூதரக உதவியைப் பெறுவதற்கான உரிமை குறித்து தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்பட்டதா இல்லையா என்பதற்கான ஆதாரம் செளதி அரேபியாவிடம் இருக்க வேண்டும்" என்றார்.

வியன்னா உடன்படிக்கையின் 36வது பிரிவு, முக்கியமாக வெளிநாட்டுக் குடிமக்களின் தூதரக மற்றும் சட்ட உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதாவது, வெளிநாட்டுக் குடிமகன் ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவரது நாட்டின் தூதரகப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டுக் குடிமகனுடன் பேசவும், அவருக்குத் தேவையான சட்ட உதவியை ஏற்பாடு செய்யவும் முடியும்.

பிராக் அமைப்பின் குடியேற்ற பிரிவு தலைவர் ஷரிஃபுல் ஹசன் கூறுகையில், "ஆனால், இந்த விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. வங்கதேசக் குடிமக்களிடம் செளதி அரேபியா இதற்கு முன்பும் இவ்வாறு நடந்துகொண்டுள்ளது. எனது கேள்வி இதுதான்: இந்த இருவரும் அமெரிக்கக் குடிமக்களாக இருந்திருந்தால், செளதி அரேபியா அவர்களிடமும் இதேபோல நடந்துகொண்டிருக்குமா?" என்றார்.

வங்கதேசத்தின் முன்னாள் தூதர் ஹுமாயூன் கபீர் கூறுகையில், "ஒரு நாட்டில் வெளிநாட்டுக் குடிமகன் ஒருவர் குற்றத்தில் ஈடுபட்டால், அந்த நாட்டின் உள்நாட்டுச் சட்ட நடைமுறைகளுக்கு எந்தத் தடையும் ஏற்படாது. சம்பந்தப்பட்ட நபரின் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதும் சட்டப்படி கட்டாயமல்ல" என்றார்.

இதுகுறித்து பிபிசி வங்கத்திடம் அவர் மேலும் கூறுகையில், "இருப்பினும், பல நாடுகளில் வெளிநாட்டுக் குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டால், அந்நாட்டு அதிகாரிகள் அவரது தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கின்றனர். அதேபோல், ஒரு நாட்டின் குடிமகன் கைது செய்யப்பட்டாரா அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து அவரது நாடு தகவல் கேட்டால், சம்பந்தப்பட்ட நாடு அந்தத் தகவலை வழங்குகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அவ்வாறு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டப்பூர்வக் கட்டாயம் இல்லை" என்றார்.

வங்கதேசக் குடிமக்களின் உடல்கள் எப்போது தாயகம் கொண்டுவரப்படும்?

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் (கோப்புப் படம்).
படக்குறிப்பு, வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் (கோப்புப் படம்).

டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் தூதரகத்தின் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அந்த இரு வங்கதேசக் குடிமக்கள் குறித்து செளதி அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வழங்கவில்லை.

இதனால், இருவரின் உடல்களும் எங்கு உள்ளன, அவற்றை வங்கதேச அதிகாரிகளிடம் எவ்வாறு, எப்போது ஒப்படைக்கப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

மறுபுறம், வங்கதேசத்துக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்படாததால், இருவரின் குடும்பத்தினரையும் தொடர்புகொள்ளவோ அவர்களுக்கு எந்தத் தகவலையும் வழங்கவோ தூதரகத்தால் முடியவில்லை.

குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தால், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப உடல்களை மீண்டும் வங்கதேசத்துக்குக் கொண்டுவருவதற்கு தூதரகம் உதவி செய்யும்.

"ஆனால், இந்த விவகாரத்தில் செளதி அதிகாரிகள் தூதரகத்தையோ குடும்ப உறுப்பினர்கள் யாரையுமோ தொடர்புகொள்ளவில்லை. இருவருக்கும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டதா என்பதுகூட தெளிவாகத் தெரியவில்லை" என ஷரிஃபுல் ஹசன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "வெளிநாட்டுக் குடிமக்கள் என்ற முறையில், தூதரக உதவியின் கீழ் தங்கள் நாட்டுத் தூதரகம் மூலம் சட்ட உதவி பெறும் உரிமை அவர்களுக்கு இருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் செளதி அரேபியா யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு