எல்நினோ எதிரொலி: இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா?

எல் நினோவால் வறட்சி வருமா? இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுமா?
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எல் நினோ தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், 2026–27ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2025–26ஆம் ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 376.56 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2026–27ஆம் ஆண்டுக்கான இலக்கு 373.93 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்புக்கு எல் நினோ உள்ளிட்ட வானிலை நிலவரங்கள் காரணமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு இந்தச் சூழலை சமாளிக்கும் திறன் உள்ளது என்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி.

அதேநேரத்தில், மழை சீரற்றதாக இருக்கும் சூழலில் முறையான திட்டமிடல் இல்லாவிட்டால் வேளாண்மை கடுமையான சவாலை எதிர்கொள்ளும் என்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான கீதா லட்சுமி.

மத்திய அரசு கூறியது என்ன?

மத்திய வேளாண்மை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2026–27ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கு 373.93 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். 2025–26ஆம் ஆண்டின் உண்மையான உற்பத்தியான 376.56 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது இது 2.63 மில்லியன் டன் குறைவு.

கடந்த 2026–27ஆம் ஆண்டுக்கான இலக்கில் கரீஃப் பருவத்திற்கு 196.21 மில்லியன் டன்னும், ரபி பருவத்துக்கு 177.72 மில்லியன் டன்னும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எல் நினோ, நீர் இருப்பு, மண்ணின் ஈரப்பதம், மாநிலங்களுடனான ஆலோசனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மழைப்பொழிவு சுமார் 12% குறைவாக இருந்தாலும், "பெரிய நெருக்கடி இல்லை, சில பகுதிகளில் பிரச்னை உள்ளது" என்றும் சௌகான் தெரிவித்தார்.

'இந்தியா இந்த அதிர்ச்சியை சமாளிக்கும்' - ராமசாமி

எல் நினோவால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாதிப்பு ஏற்படாது என்றும், நாட்டின் வேளாண் பன்முகத்தன்மை உணவுப் பாதுகாப்பைத் தக்க வைக்க உதவும் என்றும் ராமசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"பொது மக்கள் அச்சப்படலாம். ஆனால் அது உளவியல்ரீதியான அச்சம்தான். எல் நினோவால் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்படாது. சில இடங்களில் வறட்சியும் சில இடங்களில் அதிக மழையும் இருக்கும்," என்று அவர் கூறினார்.

"இந்தியா இந்த தாக்கத்தைச் சமாளிக்கக் கூடிய நாடு. ஒரு பகுதியில் உற்பத்தி குறைந்தால் மற்றொரு பகுதியில் உற்பத்தி அதிகரிக்கலாம். ஒரு பகுதியில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டால், மற்றொரு பகுதியில் இருந்து அதை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்," என்றார்.

தேவைப்பட்டால் அரிசி ஏற்றுமதியைக் குறைத்து உள்நாட்டுத் தேவையைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம், மழைப் பொழிவு சீரற்றதாக இருப்பதால் உணவுப் பொருட்களின் விலையில் தாக்கம் ஏற்படலாம் என்றும் ராமசாமி குறிப்பிட்டார்.

எல் நினோவால் வறட்சி வருமா? இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுமா?

'முறையான திட்டமிடல் இல்லாவிட்டால் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'

எல் நினோ சூழலில் மழை பெய்யும் விதத்தில் ஏற்படும் மாற்றமே வேளாண்மைக்கு முக்கிய சவாலாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான கீதா லட்சுமி கீதா லட்சுமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"நீண்ட வறட்சிக்குப் பிறகு திடீரென மழை பெய்யும் நிலை ஏற்படலாம். இதனால் பயிர் உற்பத்தி பாதிக்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பரவலான மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கிடைக்கவில்லை. அக்டோபர் மத்தியில் நல்ல மழைப்பொழிவு கிடைத்தால் தற்போதைய நிலைமையைச் சமாளிக்க முடியும்" என்று அவர் விளக்கினார்.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, வறட்சியைத் தாங்கக் கூடிய சிறுதானியங்களைப் பயிரிடுவது மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் பயிர்த் திட்டமிடலை மேற்கொள்வது அவசியம் என்று கீதா லட்சுமி தெரிவித்தார். அத்துடன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகுதி வாரியாக மழைப் பொழிவைக் கண்காணித்து, அதற்கேற்ப விவசாயத் திட்டங்களை மாற்ற வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

எல் நினோவால் வறட்சி வருமா? இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுமா?

எல் நினோவை எதிர்கொள்ள நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட எல் நினோ நிபுணர் குழுவும் பல்வேறு காலகட்டங்களுக்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால வானிலை முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வேளாண் எச்சரிக்கை அறிவுறுத்தல்களை வலுப்படுத்த வேண்டுமென குழு பரிந்துரைத்துள்ளது.

வானிலை மற்றும் ஈரப்பதம் தொடர்பான பூச்சி, நோய்த் தாக்குதல்களைக் கண்காணித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்றும், வடகிழக்குப் பருவமழை விதைப்புக்குத் தேவையான விதைகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் குழு தெரிவித்துள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட மானியத்துடன் கூடிய பயிர்க் காப்பீட்டை ஊக்குவிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2027 கோடைக்காலத்திற்கு முன்பாக, பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் அதிக நீர் தேவைப்படும் பயிர்களின் பரப்பைக் குறைத்து, குறைந்த நீர் தேவைப்படும், குறுகிய காலப் பயிர்களையும் வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கக்கூடிய ரகங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று குழு கூறியுள்ளது.

பதினைந்து மற்றும் 25 நாட்கள் மழையில்லாத காலத்தை அடிப்படையாகக் கொண்ட எச்சரிக்கை அளவுகோல்களைப் பயன்படுத்தி, தொழில்நுட்பம் மற்றும் கள ஆய்வுகள் மூலம் பயிர்களின் நிலையை கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எல் நினோவால் வறட்சி வருமா? இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுமா?

பருப்பு இறக்குமதி ஏன் முக்கியம்?

உணவுப் பாதுகாப்பு விவாதம் அரிசி, கோதுமையுடன் முடிவதில்லை. பருப்பு வகைகளின் நிலவரமும் முக்கியமானது.

உள்நாட்டு பருப்பு உற்பத்தி மற்றும் விலை குறித்த கவலைகளுக்கு மத்தியில், பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த 2024–25ஆம் ஆண்டில் இந்தியாவின் பருப்பு உற்பத்தி 25.7 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 7.3 மில்லியன் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தியாவின் மொத்த பருப்பு நுகர்வில் இறக்குமதியின் பங்கு சுமார் 23 சதவிகிதமாக இருந்தது.

தமிழ்நாட்டில் குறுவைக்கு என்ன நடந்தது?

தேசிய அளவில் மத்திய அரசு பெரிய அளவிலான உணவு நெருக்கடி இல்லை என்று தெரிவிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மழை மற்றும் நீர் பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கெனவே குறுவை சாகுபடியில் பதிவாகியுள்ளது.

மேட்டூர் அணையில் உள்ள நீர் பாசனத் தேவைக்கு 30 நாட்களுக்கும் குறைவாகவே போதுமானதாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த முக்கியமான பயிர் பருவமான சம்பா சாகுபடியின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

எல் நினோவால் வறட்சி வருமா? இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுமா?

இந்த ஆண்டின் நிலவரத்தைப் புரிந்துகொள்ள 2015–16 காலகட்டத்தின் தமிழ்நாட்டு அனுபவத்தை கீதா லட்சுமி சுட்டிக்காட்டுகிறார். 2015ஆம் ஆண்டில் அதிக மழையும் வெள்ளமும் ஏற்பட்ட பின்னர், 2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு வறட்சியை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு அரசு 147 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கை நிர்ணயித்தது. பின்னர், 2017ஆம் ஆண்டு மார்ச் மாத பட்ஜெட்டில் அந்த இலக்கு 100 லட்சம் மெட்ரிக் டன்னாகக் குறைக்கப்பட்டது.

தற்போது 2026–27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி இலக்கு 125 லட்சம் மெட்ரிக் டன்.

'இப்போதைக்கு உற்பத்தி இலக்கை குறைக்கும் திட்டமில்லை' - சுப்பையன்

தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி இலக்கை தற்போதைய நிலையில் குறைக்கும் திட்டம் இல்லை என்று வேளாண் துறைச் செயலர் சுப்பையன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"எங்களிடம் இலக்கை குறைக்கும் திட்டம் இல்லை. சம்பா பருவம்தான் முக்கியமான பருவம். விவசாயிகள் ஏற்கெனவே நேரடி விதைப்பைத் தொடங்கிவிட்டார்கள். அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்று சுப்பையன் தெரிவித்தார்.

தேவை ஏற்பட்டால் ஒரு மாதத்திற்குப் பிறகு நிலைமையை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் அவர் கூறினார். அதோடு, குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் பயிர்களைத் தேர்வு செய்யுமாறு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் முக்கியமானது. ஆனால் எங்களிடம் உணவு தானியங்கள் போதுமான கையிருப்பு உள்ளது. வறட்சி ஏற்பட்டால் அதன் தாக்கத்தை அடுத்த ஆண்டில்தான் எதிர்கொள்வோம். இன்னும் ஓரிரு மாதங்களில் நமக்குத் தெளிவு கிடைக்கும். அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்," என்று சுப்பையன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு