பாகிஸ்தானில் கடத்தப்பட்ட விமானத்தில் 300 பேரை காப்பாற்றி உயிரை விட்ட இந்திய பெண்ணின் கதை

பட மூலாதாரம், @IsraelMFA and akhil bhanot
ஃப்ளைதுபை எப்ஃஇசட் 1073 விமானத்தில் காயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சல் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அந்நாட்டுப் பயணி யானிவ் ஹயூன் கூறுகையில், கேப்டன் மச்சார் மயங்கி விழுவதற்கு முன்பு தனது சொந்த முயற்சியால் காக்பிட் கதவைத் திறந்ததாகவும், இதன் மூலம் மற்றவர்கள் காக்பிட்டுக்குள் நுழைந்து விமானத்தை காப்பாற்ற உதவியதாகவும் தெரிவித்தார்.
பின்னர், விமானத்தில் கேப்டன் ஸ்மித் மச்சார் வெளிப்படுத்திய துணிச்சலை நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பாராட்டினார். காக்பிட் கதவு மூடியே இருந்திருந்தால், யாராலும் உள்ளே சென்று விமானத்தை காப்பாற்ற உதவியிருக்க முடியாது என்று அவர் கூறினார்.
இந்திய விமானப் பணியாளர்களின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் பதிவாகியுள்ள மற்றொரு சம்பவமும் உள்ளது.
அது நீரஜா பானோட்டின் கதை. 1986-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பான் ஆம் (Pan AM) விமானத்தில் அவர் மூத்த விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார் .
தனது புத்திசாலித்தனம் மற்றும் துணிச்சலால் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய நீரஜா, முடிவில் கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்.
கராச்சியில் பான் ஆம் விமானம் கடத்தப்பட்ட போது...

பட மூலாதாரம், Pan Am Crew Facebook Page
1986 செப்டம்பர் 5-ஆம் தேதி, பான் அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் மும்பையில் இருந்து கராச்சி, ஃபிராங்க்ஃபர்ட் வழியாக நியூயார்க் நோக்கிய பயணத்தை தொடங்கியது. அந்த விமானம் கராச்சியில் கடத்தப்பட்டது.
விமானத்தில் 360 பயணிகளும் 19 விமானப் பணியாளர்களும் இருந்தனர். விமானத்துடன் தங்களை வெடிக்கச் செய்ய நான்கு கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தனர்.
விமானம் கடத்தப்பட்டதை முதலில் விமானிகளிடம் தெரிவித்தவர் நீரஜா. இதையடுத்து, விமானி, துணை விமானி மற்றும் விமானப் பொறியாளர் ஆகியோர் அவசரகால வாயில் வழியாக விமானத்திலிருந்து வெளியேறினர்.
கடத்தல்காரர்களுடன் 16 மணி நேர போராட்டம் நீடித்த நிலையில், இருள் சூழத் தொடங்கிய போது நீரஜா விமானத்தின் அவசரகால கதவைத் திறந்தார். இதையடுத்து, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர்.
கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் வெளியேறிவிட்ட நிலையில், மூன்று சிறு குழந்தைகள் மட்டும் விமானத்துக்குள் சிக்கியிருந்தனர்.
நீரஜா அந்தக் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, கடத்தல்காரர்கள் அவர்களைப் பார்த்தனர். குழந்தைகள் தப்பித்துவிட்டனர். ஆனால், கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளில் இருந்து நீரஜாவால் தப்பிக்க முடியவில்லை.
இந்தச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 150 பேர் காயமடைந்தனர்.
செய்திகளின்படி, கடத்தல்காரர்கள் பாலஸ்தீனப் போராளிகள். அவர்களில் முக்கிய கடத்தல்காரராக சயீத் ஹசன் அப்துல்-லத்தீஃப் மசூத் அல்-சஃபாரினி இருந்தார்.
2001-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு நீதிமன்றம் அவருக்கு 160 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு பணியாளர்கள் கூறியது என்ன?
இந்தச் சம்பவம் தொடர்பான தங்களது அனுபவங்களை விமானப் பணியாளர்கள் விரிவாக விவரித்துள்ளனர்.
2016-ஆம் ஆண்டு, பான் ஆம் 73 விமானத்தின் ஆறு விமானப் பணியாளர்கள், விமானக் கடத்தல் சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஊடகங்களிடம் பேசினர்.
விமானப் பணிப்பெண் நுபுர் அப்ரோல் பிபிசி நியூஸிடம் கூறுகையில், "முதலில், இறக்கைப் பகுதியில் உள்ள அவசரகால கதவைத் திறந்து, சில பயணிகளுடன் விமானத்தில் இருந்து குதித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அது மற்ற பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று பின்னர் உணர்ந்தேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை, எனது சக பணியாளர்களைப் பொறுத்தவரை, விமானக் கடத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில விமானப் பணியாளர்களும் பயணிகளும் இன்னும் இந்தக் கனவிலிருந்து மீண்டு வரவும், இந்தச் சம்பவத்தின் மர்மங்களைப் புரிந்துகொள்ளவும் போராடிக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.
ஆயுதம் ஏந்திய நபர்கள் விமானத்திற்குள் எப்படி நுழைந்தனர்?

பட மூலாதாரம், Akhil Bhanot
மும்பையில் இருந்து புறப்பட்ட விமானம், அதிகாலை 6 மணியளவில் கராச்சி விமான நிலையத்தை சென்றடைந்தது. ஆயுதம் ஏந்திய நான்கு பேர் விமான நிலையத்தின் பாதுகாப்பை மீறி, விமானத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
விமானப் பணிப்பெண் நுபுர், தனது சக பணியாளர்களில் ஒருவர் காலின் அருகே சுடப்பட்டிருப்பதைப் பார்த்தார். விமானக் கதவை மூடுமாறு அவரிடம் கத்திக் கூறினார்.
விமானப் பணிப்பெண் ஷிரின் பவானை ஆயுதம் ஏந்தியவர்கள் பார்க்கவில்லை. துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்ட அவர், இண்டர்காம் கருவியை எடுத்து காக்பிட்டுக்கான அவசரகால எண்ணைத் தொடர்புகொண்டார்.
இரண்டாவது முயற்சியில் விமானி தொலைபேசியை எடுத்தார். விமானம் கடத்தப்பட்டதை ஷிரினுக்குத் தெரிவிக்கும் குறியீட்டை அவர் கூறினார்.
மற்றொரு விமானப் பணிப்பெண்ணான சன்ஷைன் வெசுவாலா, கடத்தல்காரர்கள் நீரஜா பானோட்டை பிடித்து, அவரது தலையில் துப்பாக்கியை வைத்திருப்பதைப் பார்த்தார்.
ஏகே-47 துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் இருந்த பயங்கரவாதி ஒருவர், தன்னை கேப்டனிடம் அழைத்துச் செல்லுமாறு சன்ஷைனிடம் கேட்டார்.
ஆனால், காக்பிட் முற்றிலும் காலியாக இருந்தது. காக்பிட்டின் மேற்கூரையில் இருந்த அவசரகால வெளியேறும் வழியும் திறந்திருந்தது.
ஆனால், இவை அனைத்தையும் தான் பார்க்காதது போல் அவர் நடித்தார்.
அவரது கூற்றுப்படி, கடத்தல்காரர்களுக்கு விமானம் குறித்து போதிய அறிவு இல்லை என்று தெரிந்தது. அதனால், விமானத்திலிருந்து வெளியேறும் வழிகளையும், உபகரணங்களையும் அவர்கள் கவனிக்கவில்லை.
விமானிகளின் வெளியேற்றம் பல உயிர்களை காப்பாற்றியதா?
பலர் பின்னர், பயணிகளைத் தனியாக விட்டுவிட்டு விமானத்திலிருந்து வெளியேறிய விமானிகளை விமர்சித்தனர்.
ஆனால், மற்றொரு விமானப் பணியாளரான திலீப் பி.டி. சந்தானி, விமானிகள் வெளியேறியதால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக நம்பினார்.
"விமானிகள் விமானத்தை விட்டு வெளியேறியதால், நாங்கள் தீவிரவாதிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் சிக்கவில்லை. விமானிகள் அங்கேயே இருந்திருந்தால், விமானத்தை ஒரு கட்டடத்தின் மீது மோதச் செய்யவோ அல்லது நடுவானில் வெடிக்கச் செய்யவோ தீவிரவாதிகள் அவர்களிடம் கூறியிருக்கலாம்" என்று அவர் கூறினார்.
தீவிரவாதிகள் விமானியை கட்டாயப்படுத்தி, விமானத்தை சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் மீது பறக்கச் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
அவர்களது அமைப்பைச் சேர்ந்த வேறு சிலர் சைப்ரஸ் மற்றும் இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
பான் அமெரிக்கன் சர்வீஸ் அமைப்பின் கராச்சி இயக்குநரான விராஃப் தரோகா, மெகாஃபோன் மூலம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.
தாங்கள் செல்ல விரும்பும் எந்த இடத்திற்கும் ஒரு விமானி விமானத்தை இயக்கிச் செல்வார் என்று அந்த நான்கு ஆயுதம் ஏந்தியவர்களிடம் அவர் கூறினார். விமான நிலைய அதிகாரிகள் விமானத்துக்குள் ஒரு விமானியை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தீவிரவாதிகள் விமானத்தில் தனது இருக்கையில் இருந்த 29 வயதான அமெரிக்கக் குடிமகன் ராஜேஷ் குமாரை இழுத்துச் சென்றனர்.
அவரை விமானத்தின் கதவு அருகே அழைத்துச் சென்று, மண்டியிடுமாறு கட்டாயப்படுத்தினர். பின்னர், அவரது மீது துப்பாக்கியால் குறிவைத்தனர்.
ஒரு மணி நேரம் ஆகியும் விமானி யாரும் வராததால், தீவிரவாதிகள் ராஜேஷ் குமாரை சுட்டுக் கொன்று, அவரது உடலை விமானத்திலிருந்து வெளியே வீசினர்.
"இந்தச் சம்பவம் விமானத்துக்குள் இருந்த சூழலை முற்றிலுமாக மாற்றியது. அவர்கள் இரக்கமற்ற கொலையாளிகள் என்பது தெளிவாகிவிட்டது" என்று சன்ஷைன் கூறினார்.
அமெரிக்க பயணிகளை மீட்க முயற்சி

பட மூலாதாரம், Akhil Bhanot
விமானக் கடத்தல் நடந்து சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, தீவிரவாதிகள் அமெரிக்க குடிமக்களைத் தேடத் தொடங்கினர். அவர்களின் அமைப்பான அபு நிதால் அமைப்பு, மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளை எதிர்த்து வந்தது.
சன்ஷைன், மாதவி பகுகுணா மற்றும் மற்ற விமானப் பணியாளர்கள் பயணிகளின் பாஸ்போர்ட்டுகளைச் சேகரிக்கத் தொடங்கினர். ஆனால், அவர்கள் ரகசியமாக ஒரு திட்டத்தை வகுத்தனர். அமெரிக்க குடிமக்களை விமானக் கடத்தல்காரர்களால் அடையாளம் காண முடியாத வகையில், அவர்களது பாஸ்போர்ட்டுகளைச் சேகரிக்கவில்லை.
விமானப் பணியாளர்களான ஷிரீன் மற்றும் சன்ஷைன், முக்கிய விமானக் கடத்தல்காரரான சயீத் ஹசன் அப்துல்-லத்தீஃப் சஃபாரினியுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டனர்.
விமானத்துக்கு வெளியே உள்ள பகுதிகளைச் சென்று பார்ப்பதற்காக, சஃபாரினி துப்பாக்கி முனையில் அந்த இருவரையும் தனது கேடயங்களாகப் பயன்படுத்தினார்.
"இதுபோன்ற சூழ்நிலையில், அவர் என் தலைமுடியைப் பிடித்து, என் முகத்தை ஜன்னலில் அழுத்தி, வெளியே என்னால் என்ன பார்க்க முடிகிறது என்று கேட்பார். அமெரிக்க போர் விமானத்துக்காக காத்திருப்பதாக அவர் கூறுவார்"என்று ஷிரீன் கூறினார்.
விமான மெக்கானிக்காகப் பணியாற்றிய 28 வயதான மெஹர்ஜி கராஸ், அதிகாரிகளை வானொலி மூலம் தொடர்புகொள்ளுமாறு தீவிரவாதிகளால் கட்டாயப்படுத்தப்பட்டார்.
விமானத்தை இயக்குவதற்கு ஒரு விமானியைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இன்னும் இருந்தது.
சஃபாரினி தன்னுடன் பலமுறை கேலியாகப் பேசியதாகவும், தன்னுடன் சைப்ரஸுக்கு வருமாறு அழைத்ததாகவும் சன்ஷைன் கூறினார்.
நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, விமானி வரவில்லை என்றால் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பயணியைச் சுட்டுக் கொல்வோம் என்று தீவிரவாதிகள் அறிவித்தனர்.
மெஹர்ஜி கொல்லப்பட்டதை ஷிரீன் பார்த்தார்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில், நுபூர் மற்றும் மாதவி விமானத்தின் இறக்கையின் மீது குதித்தனர். சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், அவர்களது எலும்புகள் முறிந்தன.
சன்ஷைனும் திலீப்பும் அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் இருட்டாக இருந்ததால், எங்கு குதிப்பது என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை.
பின்னர், விமானப் பணியாளர்கள் அவசரகால ஸ்லைடு வழியாக பயணிகளை வெளியேற்றத் தொடங்கினர்.
அனைத்து பயணிகளும் இறக்கையில் இருந்து வெளியேறியதும், விமானப் பணியாளர்கள் மீண்டும் விமானத்துக்குள் சென்றனர்.
அதற்குள் துப்பாக்கிச் சூடு நின்றுவிட்டது. தீவிரவாதிகள் எங்கு இருந்தனர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
நீரஜா எத்தகைய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்?

பட மூலாதாரம், Akhil Bhanot
சன்ஷைன் விமானத்துக்குள் நீரஜாவைக் கண்டார். அவரது முதுகில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது. அதிகளவில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த போதிலும், அவர் சுயநினைவுடன் இருந்தார்.
உதவிக்காக சன்ஷைன் திலீப்பை அழைத்தார். இருவரும் நீரஜாவை அவசரகால ஸ்லைடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
முதலில் நீரஜாவை ஸ்லைடு வழியாகக் கீழே இறக்கிய அவர்கள், பின்னர் தாங்களும் இறங்கினர்.
ஷிரீனும் அவருடன் இருந்த ராணி வாஸ்வானியும் விமானத்திலிருந்து வெளியேறிய கடைசி இரண்டு பணயக்கைதிகள்.
மூன்று விமானக் கடத்தல்காரர்களும் தப்பிச் செல்ல முயன்றபோது, விமான நிலையப் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் விமானத்துக்குள் வந்தபோது, சஃபாரினி இன்னும் அங்கேயே இருந்தார். கராச்சியில் உள்ள ஜின்னா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது நீரஜா உயிருடன் இருந்ததாக அவரது சக பணியாளர்கள் தெரிவித்தனர்.
"நீரஜா வெகு தொலைவில் உள்ள ஏதாவது ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று, முறையான சிகிச்சை அளித்திருந்தால், அவர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்"என்று சன்ஷைன் கூறினார்.
"விமான நிலையத்தில் மருத்துவ வசதிகள் மிகக் குறைவாகவே இருந்ததை நான் பார்த்தேன். விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நீரஜா ஸ்ட்ரெச்சர் இல்லாமல் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்தார்"என்று திலீப் கூறினார்.
'நீரஜா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தைரியமானவராக இருந்தார்'
நீரஜா பானோட் தொடர்பான பல தகவல்களை அவரது சகோதரர் அகில் பானோட் பகிர்ந்துள்ளார்.
நீரஜா 1963 செப்டம்பர் 7ஆம் தேதி பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். அவரது குடும்பம் சண்டிகரைச் சேர்ந்தது. குடும்பத்தினர் அவரை அன்புடன் "லாடோ" என்று அழைத்தனர். அவரது குடும்பத்தில் தந்தை ஹரிஷ் பானோட், தாய் ரமா பானோட் மற்றும் மூத்த சகோதரர்கள் அனிஷ், அகில் பானோட் ஆகியோர் இருந்தனர்.
ஹரிஷ் பானோட் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.
நீரஜா ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, அவரது தந்தைக்கு மும்பைக்கு பணியிட மாற்றம் கிடைத்தது. மும்பையில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் படித்த அவர், பின்னர் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
அகிலின் கூற்றுப்படி, நீரஜா அச்சமற்றவராகவும், தனது கொள்கைகளில் உறுதியானவராகவும் இருந்தார். அவரது தந்தையைப் போலவே அவரும் அச்சமின்றி இருந்ததுடன், தந்தையால் உத்வேகம் பெற்றிருந்தார்.
ஒருமுறை, அகிலுடன் ஸ்கூட்டரில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார் நீரஜா. வழியில், ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.
நீரஜா ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, அந்த நபரின் கையைப் பிடிக்கச் சென்றார்.
அப்போது அந்தப் பெண், தன்னை விட்டு விலகிச் செல்லுமாறு நீரஜாவிடம் கூறியதுடன், இது தனது தனிப்பட்ட விவகாரம் என்றும் தெரிவித்தார். ஆனால், நீரஜா அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். அகில் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அகிலின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் நீராஜா, "இந்த வாழ்க்கை யாருக்கும் தெரியாமலேயே கடந்துவிடும். நான் என் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அங்கு நடந்து கொண்டிருந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை," என்று கூறியிருந்தார்.
நீரஜா மாடலிங் உலகிற்குள் எப்படி நுழைந்தார்?

பட மூலாதாரம், Akhil Bhanot
நீரஜா படிப்புடன் சேர்த்து மாடலிங் செய்யத் தொடங்கினார். அவர் மாடலிங் துறையில் நுழைந்த போது அவருக்கு வெறும் 19 வயதுதான் என்று அகில் கூறுகிறார்.
ஒருமுறை, நீரஜா தனது நண்பர்களுடன் கல்லூரிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது 'பாம்பே' என்ற இதழ் 'கேர்ள்ஸ் நெஸ்ட் டோர் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைத் தயாரித்து வந்தது.
அந்த இதழுக்காக நீரஜாவை புகைப்படம் எடுத்தனர். அந்தப் புகைப்படம் வெளியான பிறகு, பல பிரபல நிறுவனங்களிடம் இருந்து அவருக்கு விளம்பர வாய்ப்புகள் வரத் தொடங்கின.
1980-களில் பல்வேறு நிறுவனங்களுக்காக அவர் சுமார் 70 முதல் 80 விளம்பரங்களில் நடித்தார்.
நீரஜா மிகவும் உற்சாகமானவர் என்று அகில் கூறுகிறார். அவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்ததுடன், எப்போதும் மற்றவர்களைச் சிரிக்க வைப்பார்.
ஒருமுறை சிரிக்கத் தொடங்கிவிட்டால், அவர்களால் நிறுத்தவே முடியாது. கண்களில் கண்ணீர் வரும் அளவுக்குக்கூட அவர்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
குடும்பத்தில் யாராவது அழுதுகொண்டிருந்தாலோ அல்லது சோகமாக இருந்தாலோ, நீரஜா, "புஷ்பா, எனக்கு கண்ணீரைப் பிடிக்காது" என்று கூறுவார்.
அவர் ராஜேஷ் கன்னாவின் மிகப்பெரிய ரசிகையாக இருந்தார். அவர் அடிக்கடி, "பாபுமோஷாய், எனது வாழ்க்கை நீண்டதாக இருக்க வேண்டும்; குறுகியதாக இருக்கக்கூடாது..." என்ற அவரது வசனத்தை மேற்கோள் காட்டுவார்.
அகிலின் கூற்றுப்படி, நீரஜா தனது தந்தையை மிகவும் மதித்தார். அவரது விருப்பங்களை ஒருபோதும் மறுத்ததில்லை. 1985-ல், நீரஜாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தந்தை விருப்பம் தெரிவித்தார்.
நீரஜாவுக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. இருப்பினும், தனது தந்தையை மகிழ்விப்பதற்காக அதற்கு சம்மதித்தார். திருமணத்துக்குப் பிறகு, கணவருடன் அவர் ஷார்ஜா சென்றார்.
அகிலின் கூற்றுப்படி, "நீரஜா அங்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருந்தார். அவரது கணவர் வரதட்சணைக்காக அவரைத் துன்புறுத்தினார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நீரஜா, ஏதோ ஒரு காரணத்தைக் கூறி மும்பைக்குத் திரும்பினார். மும்பைக்குத் திரும்பிய பிறகு, அவர் மீண்டும் மாடலிங் செய்யத் தொடங்கினார்."
விமானப் பணிப்பெண் ஆவதற்கான வாய்ப்பு

பட மூலாதாரம், Akhil Bhanot
நீரஜாவின் தோழி ஒருவர் பான் அம் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். நேர்முகத் தேர்வுக்குத் தன்னுடன் வந்து, தனக்கு மேக்கப் செய்ய உதவுமாறு அவர் நீரஜாவிடம் கேட்டுக்கொண்டார்.
அங்குதான் விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் நீரஜாவைப் பார்த்து, பான் அம் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார்.
நீரஜா தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்காக மயாமிக்கு அனுப்பப்பட்டார். மயாமியில் பயிற்சியில் இருந்தபோது, அவர் பர்சர் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.
நீரஜா 1986-ல் பான் அம் நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் பணியாற்றிய ஏழாவது விமானப் பயணத்தில்தான் அந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியது. அன்று நீரஜாவுக்கு விடுமுறை நாளாக இருந்தது. பணியில் இருந்த மற்றொரு விமானப் பணியாளர் உடல்நலக்குறைவால் பணிக்கு வர முடியாமல் போனார்.
இதையடுத்து, பணிக்கு வருமாறு நீரஜாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு அவர் சம்மதித்தார்.
விமானக் கடத்தல் சம்பவத்துக்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு, இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சியைப் பெற்றுவிட்டு நீரஜா லண்டனில் இருந்து திரும்பியிருந்தார்.
பிறந்தநாளன்று உடல் வீட்டிற்கு வந்து சேர்ந்தது

பட மூலாதாரம், Akhil Bhanot
கடத்தப்பட்ட விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, நீரஜா ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய அவர், படப்பிடிப்பு தொடர்பான விவரங்களை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, அவரது பிறந்தநாள் குறித்துப் பேசத் தொடங்கினர். இந்த முறை தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடாமல், குடும்பத்தினருடன் மட்டுமே கொண்டாடப் போவதாக நீரஜா கூறியிருந்தார்.
"ஆனால், அவரது உடல் அவருடைய பிறந்தநாளன்றே வீட்டிற்கு வந்தது," என அகில் பிபிசியிடம் தெரிவித்தார்.
நீரஜாவின் துணிச்சலுக்காக, இந்திய அரசு 1987-ம் ஆண்டு அவருக்கு அசோக சக்கர விருதை வழங்கியது. பாகிஸ்தான் அரசு அவருக்கு தம்கா-இ-பாகிஸ்தான் விருதையும், அமெரிக்க அரசு வீரத்துக்கான விருதையும் வழங்கியது.
அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'நீரஜா' என்ற திரைப்படம் 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் சோனம் கபூர் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, நீரஜாவின் தாயார் ரமா பானோட்டிடம் தான் கேட்ட ஒரு சம்பவத்தை சோனம் கபூர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.
"நீரஜாவின் தாயார் ரமா பானோட், அசோக சக்கர விருதைப் பெறச் சென்றபோது, அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், அவர் ஏன் அழுகிறார் என்று கேட்டார். இப்படிப்பட்ட ஒரு குழந்தையைப் பெற்றிருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டும் என்றும் கூறினார்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































