'நகைச்சுவையாக பேசி இயல்பாக இருப்பார்கள்' - மனச்சோர்வின் 7 கவனிக்கப்படாத அறிகுறிகள் இவைதான்

“வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல தோன்றினாலும், உள்ளுக்குள் மனச்சோர்வுடனும் துயரத்துடனும் இருப்பதையே இது குறிக்கிறது” என்கிறார் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனநல ஆராய்ச்சியாளர் முனைவர் ஒலிவியா ரீம்ஸ்.
படக்குறிப்பு, 'புன்னகைக்கும் மனச்சோர்வு' என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நோயறிதல் அல்ல. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தச் சொல்லைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.
    • எழுதியவர், இசபெல் ஷா
    • பதவி, உலகளாவிய சுகாதாரம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கற்பனை செய்து பாருங்கள். படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட அவர் சிரமப்படுவதாக நீங்கள் நினைக்கலாம்.

ஒருவேளை, அவர் அடிக்கடி அழலாம், நண்பர்களிடமிருந்து விலகி இருக்கலாம் அல்லது அன்றாடப் பணிகளைச் செய்து முடிப்பதற்குக்கூட போதுமான ஆற்றல் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், அதே நபர் இரவு உணவின்போது நகைச்சுவையாகப் பேசுவது, பரபரப்பான சமூக வாழ்க்கையைச் சமாளிப்பது, வேலையில் சிறந்து விளங்குவது போன்றவற்றை நீங்கள் கற்பனை செய்து பார்க்க மாட்டீர்கள்.

ஆனால், 'புன்னகை மனச்சோர்வு' (Smiling Depression) என்று அழைக்கப்படும் மனநிலையைக் கொண்டவர்களிடம், இதுபோன்ற நிலைதான் காணப்படலாம்.

சில நேரங்களில், இதில் ஏமாற்றப்படுபவர் நண்பராகவோ, துணையாகவோ அல்லது உடன் பணிபுரிபவராகவோ இருக்க மாட்டார். அது நீங்களாகக் கூட இருக்கலாம்.

'புன்னகை மனச்சோர்வு' என்பது என்ன?

‘புன்னகைக்கும் மனச்சோர்வு’ (Smiling Depression) என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நோயறிதல் அல்ல. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தச் சொல்லைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.
படக்குறிப்பு, உலகம் முழுவதும் சுமார் 32.2 கோடி மக்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

'புன்னகை மனச்சோர்வு' (Smiling Depression) என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நோயறிதல் அல்ல. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தச் சொல்லைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.

"வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல தோன்றினாலும், உள்ளுக்குள் மனச்சோர்வுடனும் துயரத்துடனும் இருப்பதையே இது குறிக்கிறது," என்கிறார் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனநல ஆராய்ச்சியாளர் முனைவர் ஒலிவியா ரீம்ஸ்.

நாம் அனைவரும் அவ்வப்போது மனச்சோர்வை உணர்கிறோம். ஆனால், உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 322 மில்லியன் மக்களுக்கு இந்த உணர்வுகள் மன அழுத்தமாக உருவாகின்றன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தொடர்ச்சியான சோகம் அல்லது ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியை இழத்தல் போன்ற அறிகுறிகள் வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் நீடித்து, வேலை, உறவுகள், தூக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்போது அது மனச்சோர்வாகக் கருதப்படுகிறது.

ஆனால், நாம் எதிர்பார்க்கும் விதத்தில் மனச்சோர்வு எப்போதும் வெளிப்படுவதில்லை. உண்மையில், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களில் 40% பேர் வரை, வழக்கமான அறிகுறிகள் குறித்த பொதுவான கண்ணோட்டத்திலிருந்து மாறுபடும் "வழக்கத்துக்கு மாறான" மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, சிலர் வழக்கத்தை விடக் குறைவாகத் தூங்குவதற்குப் பதிலாக அதிகமாகத் தூங்கலாம் அல்லது குறைவாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக அதிகமாகச் சாப்பிடலாம். அதேபோல், மகிழ்ச்சியான அல்லது உற்சாகமளிக்கும் சம்பவங்கள் நிகழும்போது அவர்களின் மனநிலை தற்காலிகமாக மேம்படலாம்.

மேலும், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மறைக்கக்கூடும் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இதனை 'உணர்வுகளை மறைத்தல்' என்றும் அழைக்கின்றனர். மற்றவர்களுடன் இயல்பாகக் கலந்திருப்பதற்காக, ஒருவர் தனது சில குணங்கள் அல்லது உணர்வுகளை மறைக்க முயல்வதே இதன் பொருளாகும்.

மக்கள் ஏன் மனச்சோர்வை மறைக்கிறார்கள்?

இத்தகைய மனச்சோர்வு கொண்ட சிலர், தாங்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பதையே உணராமல் இருக்கலாம். இதனால், தாங்கள் அதை மறைத்துக் கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெரியாமல் போகலாம்.

"பரபரப்பான, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தான் தங்களது அறிகுறிகள் என்று அவர்கள் நினைக்கலாம்" என்கிறார் ரீம்ஸ்.

மற்றவர்கள் தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதை உணர்ந்திருக்கலாம். ஆனால், அதை மற்றவர்கள் கவனிக்காமல் இருக்க கடுமையாக முயற்சி செய்வார்கள். குறிப்பாக, எல்லாவற்றையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் அதிக பொறுப்புணர்வு கொண்டவர்களிடம் இந்தப் பண்பு பொதுவாகக் காணப்படுகிறது.

"அவர்கள் தங்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தங்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ ஒப்புக்கொள்ள அவர்கள் விரும்பாமல் இருக்கலாம்" என்கிறார் அவர்.

சிலர் சமூகத்தில் ஏற்படும் அவப்பெயர் குறித்தும், தங்களால் மற்றவர்களுக்குச் சுமை ஏற்படுவது குறித்தும் அஞ்சுகின்றனர். மற்றவர்கள் தங்களைத் தவறாக மதிப்பிடுவார்கள் அல்லது வேலையிலும் உறவுகளிலும் எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சிலர் கவலைப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கலாசார அல்லது குடும்ப எதிர்பார்ப்புகளும் தங்களது உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதை மேலும் கடினமாக்கலாம்.

மனச்சோர்வை மறைப்பதால் ஏற்படும் அபாயங்கள் என்ன?

வெளியில் எல்லாம் நன்றாக இருப்பதைப் போலக் காட்டிக்கொள்வது ஆபத்தானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

"மனச்சோர்வு நம்மை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி, தனிமையாக உணரச் செய்கிறது. பெரும்பாலும், மனநிலையை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதுதான்," என்கிறார் பிரிட்டனில் உள்ள எக்ஸெட்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியலாளர் பேராசிரியர் பார்னி டன்.

இது, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தேவையான உதவியைப் பெறாமல் போவதற்கும் வழிவகுக்கலாம்.

"இந்த ஆரம்பகட்ட அறிகுறிகளைக் கவனிக்காமல் விட்டால், அவை படிப்படியாக வளர்ந்து நாள்பட்ட, தீவிரமான பிரச்னையாக மாறக்கூடும். மேலும், தற்கொலைக்கான அபாயத்தையும் அதிகரிக்கலாம்" என்கிறார் ரீம்ஸ்.

மனச்சோர்வின் எளிதில் கவனிக்கப்படாத ஏழு அறிகுறிகள்

நீங்கள் எல்லாவற்றையும் நன்றாகச் சமாளிப்பதைப் போலத் தோன்றும்போது, சில மாற்றங்களை எளிதில் கவனிக்காமல் விட்டுவிடலாம்.
படக்குறிப்பு, வழக்கத்தைவிட நிராகரிப்புகள் அல்லது விமர்சனங்களால் அதிகமாகப் பாதிக்கப்படுவது மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கலாம்.

நீங்கள் எல்லாவற்றையும் நன்றாகச் சமாளிப்பதைப் போலத் தோன்றும்போது, சில மாற்றங்களை எளிதில் கவனிக்காமல் விட்டுவிடலாம்.

1. நீங்கள் முன்பு விரும்பிச் செய்த விஷயங்களில் இப்போது ஆர்வம் இழந்திருக்கலாம்

நண்பர்களைச் சந்திப்பது, ஜிம்முக்குச் செல்வது அல்லது உங்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்ற வழக்கமாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயங்கள் கூட இப்போது சுமையாகத் தோன்றத் தொடங்கினால், அதற்கான காரணத்தை ஆழமாக ஆராய்வது அவசியமாக இருக்கலாம்.

"வழக்கமாக விரும்பிச் செய்யும் பொழுதுபோக்குகளில் ஆர்வம் அல்லது மகிழ்ச்சி இல்லாமல் போவதை, பரபரப்பான மற்றும் வேகமான வாழ்க்கை முறையுடன் தொடர்புபடுத்துவது எளிது" என்கிறார் ரீம்ஸ்.

2. உங்கள் கைகள் அல்லது கால்கள் வழக்கத்துக்கு மாறாகக் கனமாக உணரும்

'லீடன் பாராலிசிஸ்' என்று அழைக்கப்படும் இந்த நிலையில், கைகள் மற்றும் கால்கள் அதிக எடையுடன் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும். இதனால், அன்றாடச் செயல்களைச் செய்வதற்குக் கூட அதிக முயற்சி தேவைப்படலாம். இது வழக்கத்துக்கு மாறான மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கலாம்.

3. நீங்கள் தொடர்ந்து திட்டங்களை ரத்து செய்யலாம்

மற்றவர்களுடன் இருக்கும் போது சில நேரங்களில் நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் இயல்பாகவும் காணப்படலாம். ஆனால், உங்கள் மனநிலை சரியில்லாதபோது திட்டங்களை ரத்து செய்யத் தொடங்கலாம். அப்போது, உங்கள் உணர்வுகளை மறைத்து வைத்திருப்பதும் கடினமாகிவிடலாம்.

4. அதிக நேரம் தூங்கினாலும் சோர்வாகவே உணர்வீர்கள்

வழக்கமான அன்றாடச் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தாலும், நீங்கள் அதிக சோர்வை உணரலாம்.

"மாலை நேரங்கள் குறிப்பாகக் கடினமாக இருக்கலாம். இந்தப் பாதிப்பைக் கொண்டவர்கள் நாளின் இறுதியில் அதிக மனச்சோர்வை உணரக்கூடும். மேலும், வழக்கத்தைவிட அதிக நேரம் தூங்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்" என்கிறார் ரீம்ஸ்.

5. விமர்சனங்கள் அல்லது நிராகரிப்புகளை அதிகமாக உணர்ச்சிபூர்வமாக எடுத்துக்கொள்ளலாம்

உங்கள் மேலதிகாரி சாதாரணமாகக் கூறும் ஒரு கருத்தோ அல்லது நண்பர் திட்டத்தை ரத்து செய்வதோ வழக்கத்தைவிட அதிகமாக உங்களைப் பாதிக்கலாம்.

விமர்சனங்கள் அல்லது நிராகரிப்புகளுக்கு அதிக உணர்திறனுடன் எதிர்வினையாற்றுவது, ஏடிஹெச்டி (ADHD) பாதிப்பு கொண்டவர்களிடமும் காணப்படக்கூடிய ஒரு பண்பாகும். இது வழக்கத்துக்கு மாறான மனச்சோர்வின் ஓர் அறிகுறி என்கிறார் ரீம்ஸ்.

6. நீங்கள் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுபவராக அல்லது மற்றவர்களுக்கு உதவுபவராக இருக்கலாம்.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்போதும் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. சில நேரங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கலாம். விருந்துகளில் அனைவரையும் உற்சாகப்படுத்துபவராக இருப்பது, வேலையில் முழுமையாக மூழ்கிவிடுவது அல்லது மற்றவர்களுக்கு உதவுவதற்காகத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

7. உங்கள் மனதுக்குள் தொடர்ந்து எதிர்மறையான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்

வெளியில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்பட்டாலும், உங்களுக்குள் உங்களை நீங்களே கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கலாம்.

தன்னம்பிக்கையின்மை, தகுதியற்றவர் என்ற உணர்வு மற்றும் வெறுமையாக இருப்பதைப் போன்ற எண்ணங்கள் ஆகியவை எச்சரிக்கையளிக்கும் அறிகுறிகளாக இருக்கலாம்.

எது உதவக்கூடும்?

"புன்னகைக்கும் மனச்சோர்வு" (Smiling Depression) என்ற சொல்லுக்கும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை.

ஒருவர் தான் அனுபவிக்கும் மனநிலையை அடையாளம் கண்டு, அதற்குப் பெயரிட இந்தச் சொல் உதவக்கூடும். ஆனால், சிக்கலான ஓர் அனுபவத்தை இது "மிகவும் எளிமைப்படுத்திவிடவும்" கூடும் என்கிறார் ரீம்ஸ்.

"'புன்னகை' என்ற சொல் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நினைவூட்டுகிறது" என்று கூறும் அவர், "ஆனால், இந்த மனநிலையின் அடிப்படை அம்சங்கள் நம்பிக்கையின்மை, வெறுமை மற்றும் தாம் மதிப்பற்றவர் என்ற உணர்வு ஆகியவை தான்" என்கிறார்.

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கொஞ்சம் பகிர்ந்துகொள்வதன் மூலம் சிறிய அளவில் தொடங்கலாம் என்கிறார் டன்.

"இவ்வாறு பகிர்ந்துகொள்வது மற்றவர்களுடனான உறவுகளை வலுப்படுத்தவும், அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை உணரவும், இதேபோன்ற உணர்வுகளை அனுபவிப்பதில் தாங்கள் தனியாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது என்பதைக் கண்டு பலர் ஆச்சரியப்படுகிறார்கள்" என்கிறார் அவர்.

நீங்கள் சிரமங்களை எதிர்கொண்டால், மருத்துவரிடம் பேசுமாறும் அவர் பரிந்துரைக்கிறார்.

"பேச்சுப் பயிற்சி [மன அழுத்த எதிர்ப்பு], மனச்சோர்வுக்கான மருந்துகள் மற்றும் சமூக ஆதரவு சார்ந்த சிகிச்சைகள் ஆகியவை பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு நல்ல ஆதாரங்கள் உள்ளன" என்கிறார் அவர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு