விஜய் சேதுபதியின் 'பத்தா' எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனம்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா திரைப்படம் குறித்து ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?
படக்குறிப்பு, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ளது பத்தா திரைப்படம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சீதக்காதி' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'பத்தா'. 1980-களின் சென்னை பின்னணியில் உள்ளூரில் குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படம் இன்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் ஆகியோர் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடகங்களின் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் என்ன?

படத்தின் கரு

1986-ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரில் உள்ளூரில் குற்ற பின்னணியுடன் கூடிய நபராக வலம் வருகிறார் பத்தா (விஜய் சேதுபதி). அவரது பெயரைக் கேட்டாலே அஞ்சும் அளவுக்கு அந்தப் பகுதியில் செல்வாக்குடன் இருக்கிறார். சாராய வியாபாரம், சண்டை என தனது பகுதியில் அதிகாரம் செலுத்தும் பத்தாவுக்கு ஏராளமான எதிரிகள். எதிர்பாராத ஒரு சம்பவத்தால் அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது.

ஒரு பள்ளியின் பயன்படுத்தப்படாத கழிவறையில் பத்தா சிக்கிக் கொள்கிறார். பத்தாவைச் சிக்க வைத்தது யார், அதற்கான காரணம் என்ன, ஊரே அவரைத் தேடிக் கொண்டிருக்கும்போது அவர் எங்கே இருக்கிறார் என்பவை கதையின் முக்கியக் கேள்விகளாக மாறுகின்றன. இந்தச் சம்பவத்தின் வழியாக பத்தாவுக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையே உருவாகும் உறவே படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாகிறது.

படம் எப்படி இருக்கிறது?

விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படக்குறிப்பு, விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பத்தா என்ற கதாபாத்திரத்தின் சூழ்நிலையும் அவரைச் சுற்றி உருவாகும் சம்பவங்களும் நிறைந்த நகைச்சுவை கலந்த நாடகமாக படம் நகர்கிறது என்று தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த திரைப்படம் வழக்கமான கேங்ஸ்டர் கதையின் எல்லைகளைக் கடந்து பத்தா கதாபாத்திரத்தின் மனிதநேயத்தை முன்னிறுத்தும் அணுகுமுறையைச் சுற்றியே அமைந்துள்ளது என 'தி இந்து' ஆங்கில விமர்சனம் தெரிவித்துள்ளது.

படத்தின் உணர்வுப்பூர்வமான கதையையும், அந்த உணர்வுகளை இயல்பாகக் கடத்தும் விதத்தையும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் பாராட்டியுள்ளது.

வழக்கமான கேங்ஸ்டர் கதையிலிருந்து மாறுபடுகிறதா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"பத்தாவை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கியிருந்தாலும், இயக்குநர் பாலாஜி தரணீதரன் வழக்கமான வன்முறை, பழிவாங்கல் ஆகியவற்றை அதிகமாகச் சார்ந்திருக்கவில்லை.

ஊரையே மிரட்டும் ஒரு நபர் (பத்தா), ஒரு குழந்தையின் பார்வையில் எப்படிப்பட்ட மனிதராக இருக்கிறார் என்ற கேள்வியை முன்வைப்பதன் மூலம் கதையை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறார் இயக்குநர். குறிப்பாக, பத்தாவுக்கும் சிறுவனுக்கும் இடையே உருவாகும் உறவு, அவருக்குள் இருக்கும் வேறொரு மனிதனை வெளிப்படுத்துகிறது.

இந்த அணுகுமுறையே படத்தின் முக்கியமான பலமாக விமர்சனங்களில் வெளிப்படுகிறது. வழக்கமான வெகுஜன அம்சங்களைத் தவிர்த்து, மனிதநேயம் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மையப்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. படம் உருவாக்கும் உணர்வுகள் இயல்பாகவும் நம்பும்படியாகவும் இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு அதனை வலுப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதாக", இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் நகைச்சுவை மற்றும் நாடகத்தன்மை கலந்த அணுகுமுறையை கவனத்தில் கொள்கிறது. குறிப்பாக, பத்தா கதாபாத்திரத்தின் மாற்றத்தை மையமாகக் கொண்டு கதை நகர்வது படத்தின் தனித்துவமான அம்சம் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

முதல் பாதியில் பத்தா காணாமல் போகும் சூழல் தொடர்பான எதிர்பார்ப்பும் நகைச்சுவையும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துவதாக தினமணி விமர்சனம் கூறுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் முக்கிய திருப்பத்துக்குப் பிறகு கதையில் எதிர்பார்த்த அளவுக்கு மாற்றங்கள் இல்லாதது படத்தின் தாக்கத்தைக் குறைப்பதாகவும் அந்த விமர்சனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் நடிப்பு

1986-ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரில் உள்ளூர் ரௌடியாக வலம் வருகிறார் பத்தா.
படக்குறிப்பு, 1986-ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரில் உள்ளூரில் குற்ற சம்பவங்கள் புரியும் நபராக வலம் வருகிறார் பத்தா.

'பத்தா'வின் பலம் விஜய் சேதுபதியின் நடிப்பு. ஊர் முழுவதும் பயப்படும் நபராகவும், அதே நேரத்தில் அவர் பேசும்போது சிரிக்க வைக்கும் மனிதராகவும் பத்தா கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி சமநிலைப்படுத்தியிருப்பதாக தினமணி விமர்சனம் குறிப்பிடுகிறது.

பத்தாவின் வெளிப்புறத் தோற்றத்துக்கும் அவருக்குள் இருக்கும் மனிதனுக்கும் இடையிலான வேறுபாட்டை அவரது நடிப்பு வெளிப்படுத்துகிறது என, இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனமும் விஜய் சேதுபதியின் நடிப்பை படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாகக் குறிப்பிடுகிறது.

குறிப்பாக, பத்தாவுக்கும் சிறுவனுக்கும் இடையிலான காட்சிகளில் விஜய் சேதுபதியின் நடிப்பு அதிகம் கவனம் பெறுகிறது என அதன் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவன் சாய் பிருத்விராஜ் கவனம் ஈர்க்கிறாரா?

படத்தில் பத்தாவுக்கு இணையாக கவனம் பெறும் மற்றொரு கதாபாத்திரம் சிறுவன் சாய் பிருத்விராஜின் நடிப்பு
படக்குறிப்பு, படத்தில் பத்தாவுக்கு இணையாக கவனம் பெறும் மற்றொரு கதாபாத்திரம் சிறுவன் சாய் பிருத்விராஜின் நடிப்பு

படத்தில் பத்தாவுக்கு இணையாக கவனம் பெறும் மற்றொரு கதாபாத்திரம் சிறுவன் சாய் பிருத்விராஜின் நடிப்பு.

சாய் பிருத்விராஜ், பயம், குற்ற உணர்வு, பதற்றம் போன்ற உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருப்பதாக தினமணி குறிப்பிடுகிறது. குறிப்பாக விஜய் சேதுபதியும் சிறுவனும் மரத்தடியில் பேசிக்கொள்ளும் காட்சி அழுத்தமானதாக அமைந்துள்ளதாக அந்த விமர்சனம் கூறுகிறது.

விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸின் நடிப்பும் படத்துக்கு வலு சேர்ப்பதாக தினமணி குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அவரது உடல்மொழியும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் பாராட்டப்பட்டுள்ளது.

இசை மற்றும் 1980-களின் சென்னை

பத்தாவை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கியிருந்தாலும், இயக்குநர் பாலாஜி தரணீதரன் வழக்கமான வன்முறை, பழிவாங்கல் ஆகியவற்றை அதிகமாகச் சார்ந்திருக்கவில்லை.
படக்குறிப்பு, பத்தாவை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கியிருந்தாலும், இயக்குநர் பாலாஜி தரணீதரன் வழக்கமான வன்முறை, பழிவாங்கல் ஆகியவற்றை அதிகமாகச் சார்ந்திருக்கவில்லை.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் விமர்சனங்களில் கவனம் பெற்றுள்ளன. 'ஊரோட ஒத்த டான்', 'மகளே' ஆகிய பாடல்கள் திரையில் சிறப்பாக அமைந்துள்ளதாக தினமணி விமர்சனம் குறிப்பிடுகிறது. நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கான பின்னணி இசையும் கதைக்கு துணையாக இருப்பதாக அந்த விமர்சனம் கூறுகிறது.

1980-களின் சென்னையை மீண்டும் உருவாக்கியிருக்கும் கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவும் படத்தின் அந்த காலகட்ட உணர்வை ஏற்படுத்துகின்றன என்றும் சில காட்சிகளில் செயற்கைத்தன்மை தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக பழைய சென்னைச் சூழலை உருவாக்கியிருப்பதில் தொழில்நுட்பக் குழுவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்றும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு