இந்திய பங்குச் சந்தை சரிவது மோசமான அறிகுறியா? 7 கேள்வி - பதில்கள்

இந்திய பங்குச் சந்தை சரிவது மோசமான அறிகுறியா? 7 கேள்வி - பதில்கள்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய பங்குச் சந்தை கடந்த சில தினங்களாக சீரற்ற ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடங்கி அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சூழ்நிலை வரை இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச் சந்தையைவிட்டு வெளியேறுவதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பங்குச் சந்தை நிலவரம் தொடர்பாக உள்ள கேள்விகளுக்கு விளக்கம் பெற பொருளாதார விமர்சகர் வ. நாகப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.

இந்தியப் பங்குச் சந்தை, சரிவு
படக்குறிப்பு, பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன்

இந்திய பங்குச் சந்தை கடந்த சில தினங்களாக சரிவைச் சந்தித்து வருகிறது. இதற்கான காரணம் என்ன?

சந்தை என்பது முன்கூட்டியே அனைத்தையும் கழித்துக் கொள்ளும். தற்போது நிறுவனங்களுடைய செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதால் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதா? என்று கேட்டால் அப்படியில்லை. முதலாம் காலாண்டு முடிவுகள் வந்துவிட்டன. இன்றைய தேதியில் பெரும்பாலான நிறுவனங்கள் லாபம் ஈட்டியிருக்கின்றன, நல்ல லாபத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும் பங்குச் சந்தை இறங்கியுள்ளதென்றால், இந்த அளவு நேர்மறை செயல்பாட்டிற்கான விலையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சந்தை முன்கூட்டியே கழித்துவிட்டது. அதைத்தாண்டி உலகளாவிய சூழ்நிலைதான் முக்கியமான விஷயமாக உள்ளது.

போர் பதற்றத்தால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலையேற்றம், கப்பல் போக்குவரத்து பிரச்னை, காப்பீட்டுத் தொகை மற்றும் கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளது என பல விஷயங்கள் உள்ளன. கச்சா எண்ணெய்க்கு ஒருபக்கம் ஹூத்திகள் மறுபக்கம் இரான் என இரண்டு பக்கங்களிலும் பிரச்னைகள் உள்ளன.

இந்திய ரூபாய்க்கு நிகராக டாலரின் மதிப்பும் அதிகரித்துள்ளது. இந்திய பங்குச் சந்தையிலிருந்து பணம் விலகி வெளிநாட்டு முதலீடுகளுக்குச் செல்கின்றன.

அதிக வளர்ச்சி இருக்கக்கூடிய ஏஐ சார்ந்த நிறுவனங்கள், செமி கண்டக்டர் நிறுவனங்கள் இருக்கக்கூடிய தென் கொரியா, தைவான் மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் உள்ள பங்குச் சந்தைகளை நோக்கி இந்தப் பணம் செல்கிறது.

இந்தியப் பங்குச் சந்தை, சரிவு
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியாவில் எந்தெந்த துறைகள் அதிக தாக்கங்களை எதிர்கொண்டுள்ளன?

கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு அனைத்து துறைகளின் குறியீடுகளும் இறங்கியுள்ளன. தொடர்ந்து ஒரு சில துறைகள் மட்டும்தான் ஏறியுள்ளன. மற்றவை அனைத்தும் இறங்கி வருகின்றன. முதலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தாக்கம் இருக்கும் என்பதால் இறங்கி வந்தன. அதில் தர்க்கம் இல்லாமல் இல்லை.

சமீப காலமாக வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் சில பொதுத் துறை வங்கிகளுமே இழப்பை சந்தித்துள்ளன. அதிக அளவில் காப்பீடு விற்பனை செய்யும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சில விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளே மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் அதிகபட்ச லாபம் காப்பீடுகளை விற்பதன் மூலமே வருகின்றன. இந்த இரண்டு துறைகள் தான் மிகப்பெரிய அளவில் இறங்கின. அதன்பிறகு சிமென்ட் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த சில பங்குகளும் இறங்கியுள்ளன. மருந்துத்துறை பங்குகள் அந்த அளவுக்கு இறங்கவில்லை.

பங்குச் சந்தை தொடர்பான உரையாடல்களில் அது வீழ்ந்துவிட்டது (crash) அல்லது சரிந்துவிட்டது (dip) என இரண்டு விஷயங்கள் சொல்லப்படுவதை நாம் பார்க்கிறோம். இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன? தற்போது பங்குச் சந்தை என்ன மாதிரியான சூழலை எதிர்கொண்டுள்ளது?

2007க்குப் பிறகு 2008-இல் நடந்தது வீழ்ச்சி. அப்போது பங்குச் சந்தை 60% வரை வீழ்ச்சியடைந்தது. அந்த மாதிரியான வீழ்ச்சியை நாம் இப்போது சந்திக்கவில்லை. அந்த அளவுக்கான அதல பாதாள வீழ்ச்சி என்று சொல்லிவிட முடியாது. ஆரோக்கியமான சில மாற்றங்கள் நடப்பதாகத்தான் தெரிகிறது. நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பங்குச் சந்தை அதிகரித்த பிறகு ஒரு கட்டத்தில் நின்று நிதானித்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகத்தான் இது இருந்தது. ஆனால் டிரம்ப் வந்த பிறகு ஏற்பட்ட போர்ச்சூழலால் சரிந்துள்ளதாக நான் பார்க்கிறேன்.

இந்தியப் பங்குச் சந்தை, சரிவு

இது தற்காலிகமான போக்கா அல்லது நீண்ட காலம் நீடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?

இப்போதைக்கு இதை தற்காலிகமான ஒன்றாகவே பார்க்கிறேன். இப்போது இருக்கக்கூடிய நம்பிக்கை என்னவென்றால் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு இந்த போர் இருக்காது என டிரம்பே மறைமுகமாகச் சொன்னதாக செய்திகள் வருகின்றன.

போர்நிறுத்தம் ஏற்பட்டு இந்த விநியோகச் சங்கிலி சீராகி, கப்பல் போக்குவரத்து சகஜமாகி கச்சா எண்ணெய் விலை குறையுமானால் அடுத்த ஆறு மாதங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை நோக்கி நகர்வோம் என்று நினைக்கிறேன்.

பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி 7 சதவிகிதத்தையொட்டி இருக்கும் என்று கூறுகிறார்கள்.

நம்முடைய நாட்டின் பொருளாதார ஆலோசகர், அமைச்சர்கள் எனப் பலரும் நாம் உணவுப் பொருள், கச்சா எண்ணெயின் பயன்பாட்டில் கவனம் இருக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். வெளிநாட்டு பயணங்களைத் தவிருங்கள் என பிரதமரே கூறியிருக்கிறார்.

இதெல்லாம் பார்க்கிறபோது ஏதாவதொரு விஷயத்திற்கு நம்மை தயார்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிலைமை தொடர்ந்தால் அது நடக்கும். அப்படி நடந்தால் இந்த வீழ்ச்சி மேலும் ஓர் ஆண்டுவரை நீடித்த காலத்திற்கு இருக்கலாம். அப்போது அது பதற்றமடைவதற்கான சூழல் இல்லை. சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகவே பார்க்கிறேன்.

இந்தியப் பங்குச் சந்தை, சரிவு

உலகளாவிய காரணிகள் இந்திய சந்தை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை எவ்வாறு பாதிக்கிறது?

அமெரிக்கா விதிக்கும் வரிகளால் நம்முடைய ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களின் விலை அதிகரிக்கிறது. அந்தச் சூழலில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வாங்குவார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்க யோசிப்பார்கள். இதன் மூலமாக நமது ஏற்றுமதி குறையும். கச்சா எண்ணெய் அதிகரிப்பதால் அதிக விலை கொடுத்து டாலரை வாங்கி அதிக டாலரைக் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குவதால் நம்முடைய அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும்.

அப்போது டாலரின் மதிப்பு மேலும் உயரும், ரூபாயின் மதிப்பு குறையும். இதன்மூலமாக நமக்கு பணவீக்கம் இறக்குமதி செய்யப்பட்டு வட்டி அதிகரிக்கும். இது நிறுவனங்களின் லாபத்தைக் குறைக்கும். முன்னணி 500 நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் கடன் வாங்கி தான் தொழிலை நடத்துகின்றன.

அந்தக் கடன் மீது அவர்கள் செலுத்தும் வட்டி அதிகரிக்கும், லாபம் குறையும். லாபம் குறைந்து நஷ்டம் அதிகரிக்கும்போது வேலைவாய்ப்பு குறையும். அதனால் மக்களின் நுகர்வு மற்றும் வாங்கும் திறன் குறையும். இது ஒரு சுழற்சி. இவை அனைத்தும் எந்தக் கட்டத்தில் நின்று திரும்புகிறது என்பது முக்கியம். இதனுடைய கடைசி கட்டத்திற்குச் சென்றுவிட்டால் அங்கிருந்து மேல் எழும்புவதற்கு நாட்களாகும்.

இந்தியப் பங்குச் சந்தை, சரிவு

பங்குகள் சரியும்போது உத்தி பற்றி பேசப்படுகிறது. அதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்ன? இந்திய சந்தையில் அந்தப் போக்கு தொடர்கிறதா?

அந்தப் போக்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. முன்னர் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் நுழைந்தபோது 5, 6 மாதங்கள் சரிந்தால் பங்குளை விற்றுவிடுவார்கள். அந்த மாதிரி தான் தற்போதும் நடக்கும் என்று நினைத்தேன். 2020 வரை சுமார் நான்கு கோடி முதலீட்டாளர்கள் தான் இருந்தார்கள். தற்போது அந்த எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டிவிட்டது. அனுபவமில்லாத இளம் முதலீட்டாளர்கள் நான்கு ஆண்டு ஏற்றத்தைப் பார்த்துவிட்டு விற்றிவிடுவார்கள் என்று தான் நான் உள்பட பலரும் நினைத்தோம். ஆனால் இளைஞர்கள் அப்படிச் செய்யவில்லை, இந்திய நிறுவனங்கள் மற்றும் அவர்களின் முதலீடுகளின் மீது நம்பிக்கை வைத்து தொடர்கிறார்கள். ஆனால் எவ்வளவு நாள் தொடரும் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் அரசு பல விஷயங்களை மாற்றியமைத்திருக்கிறது. இன்று பங்குச் சந்தையில் பங்கு வாங்கக்கூடியவர் அல்லது விற்கக்கூடியவர் சேவைக் கட்டணம், ஜி.எஸ்.டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கிறது. சில கட்டணங்களை அதிகரித்தும் வேறு உள்ளார்கள், அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்.

இந்தியப் பங்குச் சந்தை, சரிவு

தங்கம் இந்தியர்கள் அதிகம் முதலீடு செய்யும் பொருளாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தங்கம் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்த நிலையில் தற்போதைய சூழல் என்னவாக உள்ளது? எதிர்காலத்தில் இது என்னவாக இருக்கும்?

கடிகாரத்தின் பெண்டுலம் அசைந்து முடித்து நடுவில் வந்து நிற்பதைப் போல் தான் தங்கம் மற்றும் வெள்ளி தற்போது உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தங்கம், வெள்ளியின் விலை ஏறவில்லை. அதன்பிறகு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சீராக உயர்ந்து அங்கிருந்து இறங்கி தற்போது நடுவில் வந்து நிற்கிறது. இங்கிருந்து டிரேடிங் விகிதத்தில் நான்கு, ஐந்து சதவிகித ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். மிகவும் தீவிரமான சூழல்களில் 10% வரை கூட ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். அதைத்தாண்டி ஏற்ற இறக்கங்கள் இருக்காது. பெரும்பாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு சிறு ஏற்றத்தாழ்வுகள் உடன் இருக்கும்.

(இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவலுக்காக மட்டுமே. இவை நிதி ஆலோசனையாகக் கருதப்படக் கூடாது. முதலீடு தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு, உங்களது நிதி ஆலோசகரை அணுக வேண்டும்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு