உங்கள் வீட்டில் சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் மானியம் பெறுவது எப்படி? செலவு, வங்கிக்கடன், பராமரிப்பு உள்பட முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பருவமழைக் காலத்திலும் வெயில் இன்னும் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலை பயன்படுத்தி சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், மின் கட்டணத்தை பெருமளவில் குறைக்க முடியுமென்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.
ஒரு கோடி வீடுகள் இலக்கு; இதுவரை பயன் பெற்றது 58 லட்சம் வீடுகள்
இந்தியாவில் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) சார்பில், 'பிஎம் சூர்யா கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா' (PM Surya Ghar: Muft Bijli Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மாதம் 300 யூனிட் வரை சோலார் மின் உற்பத்தியால் இலவச மின்சாரத்தை வழங்குவதன் வாயிலாக ஒரு கோடி வீடுகளுக்கு மின்சார வசதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோதி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் 2024 பிப்ரவரி 15 அன்று துவங்கியது; வரும் 2027 மார்ச் இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
ஒரு கோடி வீடுகள் என்ற இலக்குடன் துவக்கப்பட்ட இத்திட்டத்தில், மத்திய அமைச்சகத்தின் இணையதள (https://pmsuryaghar.gov.in/#/) புள்ளி விபரங்களின்படி, 2026 செப்டெம்பர் 22 வரையிலும், நாடு முழுவதும் 84,53,680 விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. மொத்தம் 49,08,811 சோலார் மின் உற்பத்தி கட்டமைப்புகள் பொருத்தப்பட்டு 58,63,871 வீடுகள் பயன் பெறுகின்றன.
பிற பெரிய மாநிலங்களை ஒப்பிடுகையில் இத்திட்டத்தில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியுள்ளது. சோலார் மின் உற்பத்திக்கு மத்திய அரசு அளிக்கும் மானியத்துடன் தமிழக அரசும் ரூ.22 ஆயிரம் வரை மானியம் வழங்கவுள்ளதாக அறிவித்து, அதற்கான புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளது.
இதற்காக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் சார்பில் தமிழ்நாடு சூரியசக்தி இணையதளம் (https://tnebltd.gov.in/usrp/) கடந்த செப்டெம்பர் 21 அன்று தொடங்கப்பட்டு, வீடுகள்தோறும் மேற்கூரை சோலார் திட்டத்தை எளிதாக தெரிந்துகொண்டு, மானிய விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கும் வகையில் "தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம்" (Tamilnadu Rooftop State Subsidy Scheme) ஒன்று புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகளில் வீட்டு மேற்கூரை சோலார் பேனர் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இடைத்தேர்தல் நடக்கவுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் இந்த மானியத்திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது.
இதன்படி, 3 கிலோ வாட் மற்றும் அதற்கும் அதிகமான கிலோ வாட் சோலார் மின் உற்பத்திக் கட்டமைப்பை ஒரு வீட்டில் உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகளால் ஒரு லட்ச ரூபாய் மானியம் தரப்படும்.
இந்த மானியத்தைப் பெறுவது எப்படி என்பதை, மத்திய, மாநில அரசுகளின் இணையதளங்கள், மின் வாரிய அதிகாரிகள் மற்றும் சோலார் மின் உபகரண நிறுவனங்கள் நடத்துவோர், விற்பனையாளர் என பல தரப்பிலும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
கேள்வி 1: வீடுகளில் மேற்கூரை சோலார் மின் உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, மத்திய அரசின் மானியத்தைப் பெறுவதற்கான தகுதிகள் என்ன?
இதற்கு விண்ணப்பிப்பவர், இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். சோலார் பேனல்களைப் பொருத்துவதற்கு ஏற்ற வகையில் மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ள அளவில் மொட்டைமாடியுடன் கூடிய சொந்தவீடும், அந்த விண்ணப்பதாரரின் பெயரிலான மின் இணைப்பும் இருக்க வேண்டும். சோலார் பேனல் அமைப்பதற்கு வேறு எந்தத் திட்டத்திலும் மானியம் பெற்றிருக்கக்கூடாது.
கேள்வி 2: இத்திட்டத்தில் மத்திய அரசின் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், PMSuryaghar/Website
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில், இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள (https://pmsuryaghar.gov.in/#/) என்ற இணையதளத்தில், மின் நுகர்வோர் மானியம் பெறுவதற்கான விண்ணப்ப வழிமுறைகள் உள்ளன. இதற்கு 10 படிநிலைகளை வெவ்வேறு காலகட்டங்களில் பூர்த்தி செய்ய வேண்டும். முதலில் இணையதளத்தில் நுழைந்து அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, மின் நுகர்வோர் எண் மற்றும் மின் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பதிவிட்டால் ஓடிபி வரும்.
அதற்குப் பின் அதே போர்ட்டலில் தமிழ்நாடு மின் வாரியத்தின் இணையமும் திறக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தில் பல்வேறு விவரங்கள் கேட்கப்படும். விண்ணப்பிப்பவர் பெயர், மின் நுகர்வோர் எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், அமைக்கப்போவது எத்தனை கிலோ வாட், பகுதி, இடம், தற்போது மின் இணைப்பில் பெறப்பட்டுள்ள மின் அளவு (சிங்கிள் பேஸ், 3 பேஸ்) உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பதிவிட்டபின்பு, அடுத்தடுத்த ஆவணங்கள் திறக்கும்.
அதில் எந்த சோலார் நிறுவனம் அல்லது விற்பனையாளரை (Vendor) கொண்டு சோலார் கட்டமைப்பை அமைக்கிறீர்கள் என்ற விபரத்தை உள்ளிட வேண்டும். வங்கிக்கடன் பெறுவதாக இருந்தால் அதற்கான வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது. சொந்தப்பணத்தில் இதை அமைப்போர், அதற்கான செலவில் பாதித்தொகையைச் செலுத்தி சோலார் மின் உற்பத்திக் கட்டமைப்பைப் பொருத்த வேண்டும்.
சோலார் பேனல் மற்றும் இன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட பின்பு, இந்த விவரங்களைச் சமர்ப்பித்து மின் வாரியத்திடம் நெட் மீட்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். நெட் மீட்டருக்கு மின் வாரியத்துடன் 100 ரூபாய் முத்திரைத் தாளில் மின் நுகர்வோர் ஓர் ஒப்பந்தம் போட்டு அதைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பின் மின் வாரியத்திடமிருந்து செயல்பாட்டுச் சான்றிதழ் ஒப்புதல்களுக்குப் பின்பு நெட் மீட்டர் பொருத்தப்படும்.
அதற்குப் பின்பே சோலார் மின் உற்பத்திக் கட்டமைப்பு, முழுமையாகச் செயல்படத் துவங்கும். அது இயங்கத் துவங்கியவுடன் சோலார் பேனல் கட்டமைப்புடன் நுகர்வோரை வைத்து புகைப்படம் எடுத்து, நுகர்வோரின் வங்கிக் கணக்கு, அவருடைய ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைத்து மத்திய அரசின் மானியத்துக்கு விற்பனையாளர்கள் அனுப்புவார்கள். அடுத்த 15 வேலை நாட்களில், நுகர்வோரின் வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசின் மானியம் வந்துவிடும்.
கேள்வி 3: தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் கூடுதல் மானியத்தைப் பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் மானியம் வரவு வைக்கப்பட்ட பின்பு, தமிழக அரசின் இணையதளம் தானாகவே பொறுப்பேற்று மானியத் தொகையை விடுவிக்கும்.
கேள்வி 4: வீட்டு மேற்கூரை சோலார் மின் கட்டமைப்பை உருவாக்க வங்கிகளில் கடன் பெற முடியுமா?
மத்திய அரசின் இணையதளத்திலேயே இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இதற்கு 6 முதல் 6.50 சதவீத வட்டியில் ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனைப் பெறுவதற்கு, வீடுகளில் அமைக்கப்படும் மேற்கூரை சோலார் பேனலுக்கான செலவில் 20 சதவீதத் தொகையை நுகர்வோர், விற்பனையாளருக்குச் செலுத்த வேண்டும்.
அதற்கு அவர்கள் ரசீது கொடுப்பார்கள். மானியத்துக்கு விண்ணப்பிக்கும்போது இந்த ரசீதை பதிவேற்றம் செய்ய வேண்டும். மீதமுள்ள 80 சதவீதத் தொகைக்கு, அதாவது பொருத்தப்படும் கிலோ வாட் அளவுக்கேற்ப, ஒன்றரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் வரை வங்கிக் கடன் பெறமுடியும். கடனை வங்கி அனுமதிக்கும் டிஜிட்டல் கடிதம் மற்றும் ஒப்புகைச்சீட்டு ஆகியவற்றுடன் பிரதமரின் மானியம் பெறுவதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.
இவற்றை இணைத்து வங்கிக்கு மின்னஞ்சலில் தகவல் அனுப்பினால் அதை வைத்து வங்கிக்கடனுக்கான நடவடிக்கைகள் துவங்கும். முதலில் 50 சதவீத கடன் தொகை விற்பனையாளருக்கு அனுப்பப்படும். அதை வைத்து பணியைத் துவக்குவார்கள். பணியை முடித்து நெட் மீட்டர் பொருத்திய பின்பு, மீதித்தொகை வங்கியிடமிருந்து விற்பனையாளருக்கு விடுவிக்கப்படும். இந்த வங்கிக் கடன் பெறுவதற்கு 10 அடுக்குகளில் நுகர்வோர் மற்றும் விற்பனையாளருக்கு ஓ.டி.பி.க்கள் வரும். பல்வேறு விபரங்களையும் வங்கிக்கும் வழங்க வேண்டியிருக்கும்.
வங்கிக் கடனுக்கு விண்ணப்பிப்பவருக்கு, அதிகபட்சமாக 65 வயது இருக்கலாம். அந்த வயதில் கடன் வாங்குபவர், 70 வயதிற்குள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும். சிபில் ஸ்கோர் 680 மற்றும் அதற்கு மேற்பட்ட சிபில் ஸ்கோர் உள்ள விண்ணப்பதாரர்கள், புதிய கடன் பெறுபவர்கள் (NTC) ஆகியோரும் இந்த வங்கிக் கடன் பெறத் தகுதியுடையவர்கள்.
கேள்வி 5: எந்த வீட்டுக்கு எவ்வளவு அளவில் மேற்கூரை சோலார் பேனல் அமைக்க வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
இதுபற்றி சோலார் பேனல் விற்பனையாளர்கள் குறிப்பிடும்போது, ஒரு வீட்டின் அளவிற்கேற்ப இல்லாமல் அந்த வீட்டின் பயன்பாடு அல்லது மின் கட்டணத்துக்கேற்பவே சோலார் பேனல் மின் உற்பத்தி அளவை முடிவு செய்ய வேண்டுமென்கின்றனர். குறைந்தபட்சம் 2 கிலோ வாட், அதிகபட்சமாக 5 கிலோ வாட் வரை வீடுகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்கலாம்.
இவற்றை அமைப்பதற்கேற்ப ஏற்கெனவே பெற்றுள்ள மின் இணைப்பில், மின் நுகர்வு அளவின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக அனுமதிக்கப்பட்ட மின் நுகர்வு அளவு (Sanction Load) 3 கிலோ வாட் என்றால், 5 கிலோ வாட் வரை மின் வாரியத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஒரு வேளை குறைவாக இருந்தால் அதை அதிகரிக்க அனுமதி பெற்று, அதன்பின்பு சோலார் பேனல் பொருத்திக் கொள்ளலாம்.
கேள்வி 6: இவற்றுக்கு ஆகும் செலவு மதிப்பீடு என்ன? இவற்றில் மத்திய, மாநில அரசுகளால் அதிகபட்சமாக எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது?
தற்போதுள்ள சந்தை நிலவரப்படி, 2 கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ஒன்றரை லட்ச ரூபாயும், 3 கிலோ வாட் பொருத்துவதற்கு ரூ.2 லட்சமும், 5 கிலோ வாட் பேனலுக்கு ரூ.3.40 லட்சமும் ஆகும் என்று விற்பனையாளர்கள் தகவல் பகிர்கின்றனர். இவற்றில் ஒரு கிலோ வாட்டுக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட்டுக்கு ரூ.78 ஆயிரமும் மானியமாக வழங்குகிறது.
இதில் தமிழக அரசின் சார்பில் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.5 ஆயிரமும், 2 கிலோ வாட்டுக்கு ரூ.10 ஆயிரமும், 3 கிலோ வாட்டுக்கு ரூ.22 ஆயிரமும் மானியமாக வழங்கப்படவுள்ளது. மொத்தத்தில் இந்த அளவுள்ள பேனல்களுக்கு முறையே ரூ.35 ஆயிரம், ரூ.70 ஆயிரம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் மானியமாகக் கிடைக்கும். அதற்கு மேல் எத்தனை கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தாலும் ஒரு லட்ச ரூபாய் மானியமே அதிகபட்சம்.
கேள்வி 7: வீட்டு மேற்கூரை சோலார் பேனலில் உற்பத்தியாகும் மின் அளவை எப்படிக் கணக்கிடுவது, வீட்டுத்தேவைக்குப் போக கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரம் என்னவாகும்?
வீட்டு மேற்கூரை சோலார் பேனலில் உற்பத்தியாகும் மின்சாரம் குறித்த விவரங்கள் நெட் மீட்டரில் பார்த்தால் தெரியவரும். இதை நமது மொபைலிலும் செயலியாக பதிவிறக்கம் செய்து, மின் உற்பத்தி அளவைப் பார்த்துக் கொள்ளலாம். பகலில் பயன்படுத்தியது போக அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரம் மின் வாரியத்துக்குச் சென்றுவிடும். மின்சார உற்பத்தி அளவு, பயன்படுத்தும் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு, இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தின் அளவுக்கே நுகர்வோருக்கு மின் கட்டணம் கணக்கிடப்படும்.
உதாரணமாக 3 கிலோ வாட் அளவு சோலார் பேனல் அமைத்துள்ள ஒரு வீட்டில் மழைக்காலத்தில் குறைந்தபட்சமாக 10 முதல் 12 யூனிட்களும், அதிக வெப்பமுள்ள கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 15 யூனிட்களும் மின்சாரம் உற்பத்தியாகும். ஓராண்டில் ஒரு வீட்டு மேற்கூரை சோலார் பேனலில் 10 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி, அவற்றில் 8 ஆயிரம் யூனிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
மீதமுள்ள 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் மின் வாரியத்தில் நுகர்வோர் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதிக்குள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது நுகர்வோருக்கு இழப்பாகி விடும். இதற்காக மாநில அரசு எந்த தொகையும் வழங்காது.
கேள்வி 8: மத்திய அரசின் இந்த மானியத் திட்டம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விடுமா? அதற்குப் பின் மானியம் கிடைக்காதா?

பட மூலாதாரம், PMSuryaghar/Website
வரும் மார்ச் மாதத்துடன் அதிகபட்சமாக ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கும் இந்த திட்டம் முடிவுக்கு வந்துவிடும். அதன் பின்பு மத்திய அரசு அதை அதிகரிக்குமா, குறைக்குமா என்பது தெரியாது. அதேபோன்று தமிழக அரசின் மானியத் திட்டமும் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும். அது நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது அரசின் கையில்தான் உள்ளது.
கேள்வி 9: மின்சாரம் இருக்கும்போது மட்டும்தான் சோலார் பேனலில் உற்பத்தியாகும் மின்சாரம் வீட்டிற்குக் கிடைக்குமா? மின்சாரம் இல்லாதபோது அந்த மின்சாரத்தை யுபிஎஸ் போன்றவற்றில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியுமா?
மின்சாரம் இருக்கும்போது மட்டுமே சோலார் மின் உற்பத்தி மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது பேட்டரி டைப் வீட்டு மேற்கூரை சோலார் பேனல்கள் வந்துள்ளன. இவை மின்சாரத்தை உற்பத்தி செய்து யுபிஎஸ் உபகரணங்களில் சேமித்து, மின்வெட்டின்போது மின்சாரத்தை விநியோகிக்கும். உயர்வகை சோலார் பேனல் (Hybrid System) எனப்படும் இந்த வகை சோலார் பேனலுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.
கேள்வி 10: சோலார் பேனல் மற்றும் அதற்குப் பயன்படுத்தும் இன்வெர்ட்டர் உள்ளிட்ட பிற உபகரணங்கள் எத்தனை ஆண்டு காலம் உழைக்கும்? எத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவற்றை மாற்ற வேண்டியிருக்கும்?
விற்பனையாளர்கள் மற்றும் சோலார் நிறுவனம் நடத்துவோர் பகிரும் தகவலின்படி, வீட்டு மேற்கூரை சோலார் பேனல்களுக்கான இன்வெர்ட்டர்களுக்கு 10 ஆண்டுகள் வரையும், சோலார் பேனல் எனப்படும் சூரியஒளியை ஈர்க்கும் தகடுகளுக்கு 15 ஆண்டுகளும் உத்தரவாதம் (Warranty) தரப்படுகிறது.
கேள்வி 11: சோலார் பேனல்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இருக்கிறதா?
எந்தவிதமான பராமரிப்பும் தேவையில்லை. தூசி அதிகமாகப் படியும் பகுதிகளில், இந்த தகடுகளில் மேற்புறங்களில் படிகின்ற தூசியை அகற்றி, தண்ணீரால் சுத்தம் செய்யும் போது, அவற்றின் திறன் பாதுகாக்கப்படும் என்றும் வீட்டு மேற்கூரை சோலார் பேனல் நிறுவனம் நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.
கேள்வி 12: வீட்டு மேற்கூரை சோலார் மின் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகத்தின் நிலை என்ன?
ஒரு கோடி வீடுகளுக்கு வீட்டு மேற்கூரை சோலார் பேனல் அமைக்க மானியம் என்ற மத்திய அரசின் திட்டம் 2024 பிப்ரவரியில் துவங்கியது.
- இத்திட்டத்தில் அதிக பயன் பெற்ற மாநிலமாக குஜராத் உள்ளது. செப்டெம்பர் 22 நிலவரப்படி, குஜராத்தில் இதுவரை 12,57,704 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 8,56,505 வீட்டு மேற்கூரை சோலார் கட்டமைப்புகள் பொருத்தப்பட்டு, 12,11,537 வீடுகள் பயன் பெற்றுள்ளன.
- அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 15 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அங்கு 8,11,853 பேனல்கள் அமைக்கப்பட்டு, 12,53,667 வீடுகள் பயன்பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- அண்டை மாநிலமான கேரளத்தில் இதுவரை 4,66,982 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,56,197 பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் இதுவரை மொத்தமே 1,15,936 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு, 98,870 வீட்டு மேற்கூரை சோலார் பேனல்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை விட மிகவும் பின் தங்கிய நிலையில் கர்நாடக மாநிலம் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































