துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட பெண் - 'மயில் இறகு டாட்டூ' கொலை மர்மத்தை உடைத்தது எப்படி?

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன)
இது சிறு வயதிலேயே தாயை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு பெண்ணின் கதை. அந்தப் பெண்ணின் சொந்த மகனும் சிறு வயதிலேயே ஆதரவற்றோர் இல்லத்தில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவின் இப்ராஹிம்பட்டினம் காவல் நிலையப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கின் மர்மம் தற்போது விலகியுள்ளது.
தாய் கொலை செய்யப்பட்டதாலும், வளர்ப்புத் தந்தை சிறைக்குச் சென்றதாலும், அவரது நான்கு வயது மகன் ஆதரவற்றவரானார்.
இப்ராஹிம்பட்டினம் காவல் சர்கிள் ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் ஏசிபி துர்கா ராவ் அளித்த தகவலின்படி, விடிபிஎஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் கர்ரி துர்கா என்கிற கல்யாணி என்பவருடையது என்பது அடையாளம் காணப்பட்டது.
ஷாபி என்ற நபர்தான் இந்தக் கொலையைச் செய்ததாக காவல்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கால்வாயில் கிடந்த உடல்
இந்த மாதம் 18-ஆம் தேதி மாலை, விஜயவாடா புறநகர்ப் பகுதியில் உள்ள விடிபிஎஸ் கால்வாயில் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அங்கு சென்ற காவல்துறையினர், சடலத்தின் எஞ்சிய உடல் பாகங்களைத் தேடினர். ஆனால், உடலில் இருந்த ஆடைகளைத் தவிர வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அனல் மின் நிலையத்துக்குச் செல்லும் இந்தக் கால்வாயில் ஒரு சிறுபாலம் உள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) வீரர்களின் உதவியுடன் காவல்துறையினர் அந்த சிறுபாலம் அமைந்துள்ள பகுதியில் தேடினர். அப்போது ஒரு கை மற்றும் இரண்டு கால்கள் கிடைத்தன.
உடையில் இருந்த பிராண்ட் அடையாளத்தைத் தவிர, உயிரிழந்தவரை அடையாளம் காண காவல்துறையினரிடம் வேறு எந்தத் தடயமும் இல்லை.
இதையடுத்து, காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். விடிபிஎஸ் கால்வாயின் குறுக்கே உள்ள பாலங்களில் ஒன்றின் வழியாக சடலம் கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
உயிரிழந்தவரின் கையில் இருந்த மயில் இறகு டாட்டூ இந்த வழக்கின் விசாரணையில் முக்கியத் தடயமாக அமைந்தது.
இந்த டாட்டூ மூலம் உயிரிழந்தவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் காவல்துறையினர் அடையாளம் காண முடிந்தது.
அவரது கொலுசுகள், காதணிகள், டாட்டூ , ஆடைகள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களை காவல்துறையினர் எடுத்து, இவற்றை வைத்து உயிரிழந்தவரை யாராவது அடையாளம் காண முடியுமா என்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிர்ந்தனர்.
சடலம் யாருடையது என்பதைக் கண்டறிய காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சடலத்தில் இருந்த ஆடைகள் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் விவரங்களையும் விசாரித்தனர்.
எனினும், சமூக வலைதளப் பதிவுகளைப் பார்த்த சிலர் மங்களகிரி காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு, குறிப்பிட்ட டாட்டூ குத்திய பெண்ணைப் பார்த்ததாகத் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர்.
இதற்கிடையில் தனது சகோதரியின் டாட்டூவைப் போலவே இருப்பதாகவும் கூறி கல்யாணியின் சகோதரர் காவல்துறையைத் தொடர்புகொண்டார்.
"ஒரு வாரமாக தனது சகோதரியுடன் பேசவில்லை என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தனர். வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அவர் மூன்று நாட்களாக வீட்டில் இல்லை என்பது தெரியவந்ததாக அவரது சகோதரர் கூறினார்" என்று காவல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
விடிபிஎஸ் அனல் மின் நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் பெயர் மற்றும் விவரங்களை அறிந்த பிறகு, அவரது தொலைபேசி எண்ணின் உதவியுடன் ஆதாரங்களைச் சேகரித்தனர். இது காவல்துறையினரின் விசாரணைக்கு வழிவகுத்தது.
உயிரிழந்தவரின் தொலைபேசி எண்ணை அடிப்படையாகக் கொண்டு அழைப்புத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. அவர் கடைசியாக யாருடன் பேசினார், யாருடன் அதிகம் பேசினார் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்ததன் மூலம் வழக்கின் மர்மம் விலகியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஷாபி என்ற நபர் மீது சந்தேகம் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

பட மூலாதாரம், UGC
என்ன நடந்தது?
காவல்துறையினரின் தகவலின்படி, உயிரிழந்தவரின் பெயர் கர்ரி துர்கா என்கிற கல்யாணி. இவரது சொந்த ஊர் ஏலூரு மாவட்டத்தில் உள்ள சின்ன தாடினாடா.
சிறு வயதிலேயே தாயை இழந்த பிறகு, கிருஷ்ணா மாவட்டத்தின் கண்ணவரம் அருகே உள்ள ஆசிரமத்தில் கல்யாணியையும் அவரது சகோதரரையும் தந்தை சேர்த்துள்ளார்.
சுமார் 18 வயது வரை கல்யாணியும் அவரது சகோதரரும் அந்த ஆசிரமத்திலேயே வளர்ந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியே வந்தனர். பல்வேறு ஹோட்டல்களில் வேலை செய்து கல்யாணி தனது வாழ்க்கையை நடத்தி வந்ததுடன், மங்களகிரியில் வசித்து வந்தார்.
அவருடன் வசித்து வந்ததாகக் கூறிய ஒருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொண்டார்களா அல்லது சேர்ந்து வாழ்ந்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் தெளிவுபடுத்தவில்லை.
இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையின் தந்தையும் கல்யாணியும் பிரிந்தனர். அந்தக் குழந்தை வேறு ஒருவரால் தத்தெடுக்கப்பட்டது. குழந்தையின் தந்தையின் உறவினரான ஷாபி என்ற இறைச்சி வியாபாரி அந்தச் சிறுவனைத் தத்தெடுத்தார்.
ஷாபிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருந்தபோதிலும், ஆண் குழந்தை வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இந்தக் குழந்தையை அதிகாரப்பூர்வமற்ற முறையில் தத்தெடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை தகவலின்படி, குழந்தை தத்தெடுக்கப்பட்ட பிறகு கல்யாணி ஷாபியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
குழந்தையைத் தத்தெடுத்தபோது ஷாபி கல்யாணிக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் அவர் மேலும் பணம் கேட்டபோது, சிறிய தொகைகளாகவும், சில தங்க நகைகளாகவும் ஷாபி கொடுத்ததாக ஏசிபி துர்கா ராவ் தெரிவித்தார்.
ஆனால், கல்யாணி தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால், அவரைக் கொலை செய்ய ஷாபி முடிவு செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், UGC
'அவர் அடிக்கடி பணம் கேட்பார்'
ஷாபி விஜயவாடாவின் பவானிபுரத்தில் வசித்து வருகிறார்.
"கடந்த 17-ஆம் தேதி, ஷாபி தனது மனைவி மற்றும் குழந்தைகளை குண்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பின்னர் கல்யாணியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு, ஷாபி கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், பெரிய கத்தியால் அவரது உடலைத் துண்டுகளாக வெட்டி, அவற்றை பைகளில் போட்டு, இரண்டு கட்டங்களாக பைக்கில் எடுத்துச் சென்று விடிபிஎஸ் கால்வாயில் வீசியுள்ளார். அப்போது, அவருடன் பணியாற்றிய துர்கா ராவ் என்கிற அப்துல்லாவையும் அழைத்துச் சென்றுள்ளார்." என காவல்துறை கூறுகிறது.
அப்துல்லா தற்போது தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
"அவர் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். பணம் கொடுக்காவிட்டால், குழந்தையை திரும்ப பெற்றுக்கொள்வார் என ஷாபி அஞ்சியுள்ளார். ஷாபிக்கு அந்தக் குழந்தை மீது அதிக பாசம் இருந்துள்ளது. குழந்தையைத் திருப்பிக் கொடுக்க விரும்பாத ஷாபி, அவரைக் கொலை செய்துவிட்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று நினைத்துள்ளார். இதனால், அவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ஆட்டிறைச்சியை வெட்டுவதற்குப் பயன்படுத்திய அதே கத்தியைக் கொண்டு அவரைக் கொலை செய்துள்ளார். கொலைக்கான வேறு காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை" என்று ஏசிபி துர்கா ராவ் ஊடகங்களிடம் விளக்கினார்.
கல்யாணியின் சொந்த மகனும், ஷாபியால் தத்தெடுக்கப்பட்ட மகனும் தற்போது நான்கு வயதாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தத் தத்தெடுப்பு சட்டவிரோதமானது என்பதால், சட்ட ஆலோசனை பெற்ற பிறகு அந்தச் சிறுவனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
கொலை செய்த பிறகு உடலைத் துண்டுகளாக வெட்டி மறைத்து வைத்துவிட்டால், யாராலும் அடையாளம் காண முடியாது என்று ஷாபி நினைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் கல்யாணியின் சகோதரரிடம் பேச பிபிசி முயற்சி செய்து வருகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































