ஃப்ளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் என்ன செய்தார்? டிரம்ப் முதல் நெதன்யாகு வரை 'ஹீரோ' என பாராட்டு

பட மூலாதாரம், @IsraelMFA
ஃப்ளைதுபை விமானம் FZ1073-ல் கத்தியால் குத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார், மயங்கி விழுவதற்கு முன்பு விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய பயணி யானிவ் ஹயூன், புதன்கிழமை பென் குரியான் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இதைத் தெரிவித்தார்.
"கத்தியால் குத்தப்பட்ட விமானி கதவுக்கு மிக அருகில் இருந்தார். அதனால், எங்களால் கதவைத் திறப்பது கடினமாக இருந்தது" எனவும் அவர் கூறினார்.
"அவர் தனது சமயோசிதமான செயல்பாட்டால் எங்களுக்காகக் கதவைத் திறந்துவிட்டு, பின்னர் மயங்கி விழுந்திருக்க வேண்டும் என்பதுதான் என் முடிவு" என்று அவர் கூறினார்.
பின்னர் நெதன்யாகுவும் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, மச்சாரின் துணிச்சலைப் பாராட்டினார்.
"கத்தியால் தாக்கப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையிலும், அவர் தாக்குதலுக்கு எதிர்த்து போராடினார். காக்பிட் கதவைத் திறந்து, பயணிகளும் விமானப் பணியாளர்களும் தாக்குதல்காரரை கட்டுப்படுத்த உதவினார். இதன் மூலம் விமானத்தில் ஏற்படவிருந்த மிகப்பெரிய பேரழிவு தடுக்கப்பட்டது" என்று இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலியர்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 174 பேரின் உயிரை மச்சார் காப்பாற்றியதாகவும் நெதன்யாகு கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகமும், மச்சார் மருத்துவமனையில் சீரான உடல்நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கத்திக்குத்து தாக்குதலின்போது ஸ்மித் என்ன செய்தார்?
ஸ்மித் மச்சாருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இரானைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக ஊடகத்தில், "என் கணவர் ஒரு விமானி. காக்பிட்டுக்குள் இருந்து அதன் கதவைத் திறக்க விமானிகளிடம் ஒரு ஸ்விட்ச் இருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். எனவே, கேப்டன் ஸ்மித் மச்சார் உதவி கோரியதுடன், மயங்கி விழுவதற்கு முன்பு அந்த ஸ்விட்சையும் அழுத்தியிருக்கலாம். இதனால் விமானப் பணியாளர்களும் பயணிகளும் காக்பிட்டுக்குள் செல்ல முடிந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"காக்பிட் கதவு பூட்டியே இருந்திருந்தால், யாராலும் உள்ளே சென்று விமானத்தைக் காப்பாற்ற உதவியிருக்க முடியாது. அந்த ஒரு முடிவு, விமானத்தில் இருந்த அனைவரின் உயிரையும் காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றியது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த விமானிக்கு பல பயணிகள் முதலுதவி அளித்ததாக இஸ்ரேலிய செய்தி இணையதளமான ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த பல் மருத்துவர் ஷோட்டா முசாயேவும் ஒருவர்.

பட மூலாதாரம், Reuters
விமானம் செளதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கிய பிறகு, மச்சார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மச்சாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், அவரது தலை மற்றும் கைகளில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதாகவும் முசாயேவ் இஸ்ரேலிய ஊடகங்களிடம் தெரிவித்தார். ஒரு பல் மருத்துவராக, அவர் ரத்தக்கசிவை கட்டுப்படுத்த உதவினார். அதன்பிறகு மச்சாரின் உடல்நிலை சீரானதாகவும், ஆனால் விமானம் தரையிறங்கும்போது மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், மற்றொரு விமானி தன்னை கத்தியால் தாக்கியதாக மச்சார் தன்னால் முடிந்த அளவுக்கு வாய்மொழியாகத் தெரிவித்ததாகவும் முசாயேவ் கூறினார்.
மச்சார் அனுபவம் வாய்ந்த விமானி என்றும், புதிய விமானிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளவர் என்றும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்மித் மச்சார் யார்?
அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஸ்மித் மச்சார், பின்னர் ஃப்ளைதுபையில் இணைந்தார்.
அவரது சுயவிவரத்தின்படி, போயிங் 737-800, 737 MAX 8 மற்றும் 737 MAX 9 ஆகிய விமானங்களில் சுமார் 9,750 மணி நேரம் அவர் பறந்துள்ளார்.
மச்சாருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்மித் மச்சாரைப் பாராட்டிய மோதி, டிரம்ப்
கேப்டன் ஸ்மித் மச்சாரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
"கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டபோதும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மிகுந்த துணிச்சலை அவர் வெளிப்படுத்தினார்.
அவரது துணிச்சலான செயல்பாடு நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், மிகப்பெரிய பேரழிவைத் தவிர்க்கவும் உதவியது. கேப்டன் மச்சாரைப் பார்த்து இந்தியா பெருமை கொள்கிறது.
அவர் விரைவாக குணமடைந்து, மீண்டும் வலிமை பெற்று, நல்ல உடல்நலத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கேப்டன் ஸ்மித் மச்சாரைப் பாராட்டினார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், மச்சார் சமயோசிதமாகச் செயல்பட்டு காக்பிட் கதவைத் திறந்து உதவிக்காகக் குரல் எழுப்பியதாக டிரம்ப் கூறினார்.
இதன் மூலம் விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கும் முயற்சி எனக் கூறப்படும் சம்பவம் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தான் பேசியதாகக் கூறினார்.
"விமானி மிகவும் மோசமான நிலையில் இருந்தார். ஆனால், அந்த நிலையிலும் அவர் சமயோசிதமாகச் செயல்பட்டது உண்மையிலேயே ஆச்சரியமானது. ஒருவகையில் அவர் ஒரு ஹீரோ" என்று டிரம்ப் கூறினார்.
தனக்குக் கிடைத்த தகவல்களை மட்டுமே தான் தெரிவித்ததாகவும், இந்தத் தகவல்களைத் தாமாகவே உறுதிப்படுத்தவில்லை என்றும் டிரம்ப் தெளிவுபடுத்தினார்.

பட மூலாதாரம், EFA
செளதியில் உள்ள இந்திய தூதரகம் கூறியது என்ன?
''ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகமும், தபுக் நகருக்குத் திருப்பிவிடப்பட்ட ஃப்ளைதுபை விமானத்தின் துணிச்சலான இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.'' என செளதியில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
''அவர் செளதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபுக் நகரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.''
''அவர் தனது காயங்களில் இருந்து விரைவில் குணமடைய நாங்கள் விரும்புகிறோம். அவரது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். செளதி அரேபிய அதிகாரிகளுடன் இணைந்து அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், அவரது நலனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்று அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளோம்.'' என கூறியுள்ளது

பட மூலாதாரம், Smit Machchhar's LinkedIn
ஃப்ளைதுபை விமானத்தில் என்ன நடந்தது?
ஃப்ளைதுபையின் FZ1073 விமானம் துபை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலில் உள்ள பென் குரியான் விமான நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
விமானம் புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு, செளதி அரேபியாவின் வான்பரப்பில் விமானம் வேகமாகக் கீழிறங்கியதாக விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் ஃபிளைட்ரேடார்24 இணையதளத்தின் தரவுகள் தெரிவித்தன. இரண்டு நிமிடங்களுக்குள் 17,000 அடிக்கும் (5,000 மீட்டருக்கும்) அதிகமாக அந்த விமானம் கீழ் இறங்கியதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் அவசரநிலையை குறிக்கும் ஸ்க்வாக் 7700 குறியீட்டைச் செயல்படுத்தியது. பின்னர், விமானக் கடத்தல் நடைபெறுவதாகக் குறிக்கும் ஸ்க்வாக் 7500 குறியீட்டுக்கு அது மாற்றப்பட்டது.
இந்தக் குறியீடுகள் செயல்படுத்தப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் செளதி அரேபியாவை நோக்கி மீண்டும் திரும்பியது. பின்னர், தரையிறங்குவதற்காக மேனுவல் முறையில் கீழிறங்கத் தொடங்கியது
ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்துக்குப் பிறகு, விமானம் மீண்டும் ஸ்க்வாக் 7700 அவசரநிலை குறியீட்டுக்கு மாறியது.
இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, இஸ்ரேல் மற்றும் செளதி அரேபிய விமானப் படைகள் போர் விமானங்களை அனுப்பின. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோசனைகளை நடத்தினார்.
ஆரம்பத்தில் வெளியான ஊடகச் செய்திகள், விமானத்தின் இரண்டு விமானிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே விமானம் வேகமாகக் கீழிறங்கி தரையிறங்கக் காரணமாக இருந்ததாகத் தெரிவித்தன.
ஆனால், விமானம் செளதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் தரையிறங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியான நேரில் பார்த்தவர்களின் தகவல்களும், நெதன்யாகுவின் கருத்தும் வேறு தகவலைத் தெரிவித்தன. விமானிகளில் ஒருவர் மற்றொருவரைக் கத்தியால் குத்தியதாகவும், அவர் விமானத்தை "விபத்துக்குள்ளாக்க முயன்றதாகத் தெரிகிறது" என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































