அமெரிக்காவில் '2 முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் உயிருடன் இருந்த மரண தண்டனை கைதி மருத்துவமனையில் அனுமதி'

அமெரிக்காவில் 2 முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் உயிருடன் இருந்த மரண தண்டனைக் கைதி: மருத்துவமனையில் அனுமதி
    • எழுதியவர், சரீன் ஹபேஷியன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை கைதியாக உள்ள கிறிஸ்டா பைக்கிற்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்தப்பட்டபோதும் அவரது இதயம் தொடர்ந்து துடித்ததால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தண்டனை நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தபோதே, பைக்கின் மரண தண்டனையை நிறுத்தக் கோரி அவரது சட்டக் குழு அவசர மனுவைத் தாக்கல் செய்தது. அதில், "பைக் சுயநினைவை இழந்துவிட்டார். அவரது இதயம் இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறது. மேலும், அவர் குறட்டைவிடும் சத்தம் கேட்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

பென்டோபார்பிட்டல் மருந்து நிரப்பப்பட்ட இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்ட பின்னர், 50 வயதான பைக்கிற்கு மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து டென்னசி மாகாண நிர்வாகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கொலீன் ஸ்லெம்மர் கொலை வழக்கில் 1996-ஆம் ஆண்டு பைக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை நிறைவேற்றும் முயற்சி புதன்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 20:00 மணியளவில், நாஷ்வில்லில் உள்ள ரிவர்பெண்ட் அதிகபட்ச பாதுகாப்புச் சிறையில் நடைபெற்றது.

பைக்கிற்கு இரண்டு முறை பென்டோபார்பிட்டல் மருந்து செலுத்தப்பட்டதாகவும், சாட்சிகள் இருந்த அறைக்கான திரை இரண்டு முறை மூடப்பட்டதாகவும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டத்தில், ஊடகப் பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொலீன் ஸ்லெம்மர்
படக்குறிப்பு, கொலீன் ஸ்லெம்மர்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பைக்கின் சட்டக் குழு தி டென்னஸீயன் நாளிதழுக்கு அளித்த அறிக்கையில், "இன்றிரவு டென்னசி மாகாண அரசு மீண்டும் ஒருமுறை சட்டப்பூர்வமான மரண தண்டனையை நிறைவேற்றத் தவறியுள்ளது. நாங்கள் கூறியது சரியாகிவிட்டதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. ஆனால், பைக் எழுப்பிய கவலைகள் உண்மையாகிவிட்டன. நரம்புகளில் ஊசி செலுத்துவதில் சிரமம், நரம்புகள் சேதமடைதல், தரம் குறைந்த பென்டோபார்பிட்டல் மருந்து, எதிர்பார்த்தபடியே ஏதேனும் தவறு நடந்தால் அவசர மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்னும் ரகசியமாகவே வைக்கப்படும் நடைமுறையின் கீழ் நடந்துள்ளன" என்று தெரிவித்தனர்.

மரண ஊசி செலுத்தும் நடைமுறை தோல்வியடைந்ததாகத் தெரிந்ததைத் தொடர்ந்து, பைக்கின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கோரி அவரது வழக்கறிஞர்கள் அவசர மனுவைத் தாக்கல் செய்தனர்.

மாவட்ட நீதிபதி கிளிஃப்டன் எல். கோர்க்கர் பிறப்பித்த உத்தரவில், "மனுவில் கோரப்பட்டதுபோல் மருத்துவப் பணியாளர்கள் மருத்துவச் சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எமோரி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் பேராசிரியரான டாக்டர் ஜோயல் ஸிவோட், பைக்கின் சட்டக் குழு தன்னை மருத்துவ நிபுணராக நியமித்துள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

தண்டனையை நிறைவேற்றும் முயற்சியின்போது, மூச்சுத்திணறல் மற்றும் இதயம் செயலிழப்பு ஏற்படும் அளவுக்கு அவரது ரத்தத்தில் போதுமான அளவு பென்டோபார்பிட்டல் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

"உயிர்த்தெழச் செய்யும் சிகிச்சையைத் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக, அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்று ஸிவோட் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

கீழ் நீதிமன்றம் புதன்கிழமை காலை வழங்கிய தண்டனை நிறுத்த உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக, மரண ஊசி மூலம் பைக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

அன்று முன்னதாக, அமெரிக்க ஆறாவது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், பைக்கின் வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பரிசீலிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகக் கூறி, மரண தண்டனை நிறைவேற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தினர்.

1996-ஆம் ஆண்டு பைக்கிற்கு மரண தண்டனை விதிக்கும் முன்பு, சிறுவயதில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிட்ட தண்டனையைக் குறைப்பதற்கான ஆதாரங்களைப் பரிசீலிக்க நடுவர் குழுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

சிறுவயதில் தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக பைக் கூறியது பொய் என்று டென்னசி மாகாண அரசு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாதிட்டு வந்ததாக அவரது தரப்பு தெரிவித்தது.

ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றும் முறைகுறித்த சமீபத்திய விசாரணையின்போது, பைக் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளானதைத் தாங்கள் மறுக்கவில்லை என்று மாகாண அரசு தெரிவித்தது.

டென்னசி ஆளுநர், அந்த மாகாணத்தின் மரண தண்டனைப் பட்டியலில் உள்ள ஒரே பெண்ணான பைக் தாக்கல் செய்த கருணை மனுவை இந்த வாரம் நிராகரித்தார்.

2006-ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையின்போது, கொலீன் ஸ்லெம்மரின் தாயார் மே மார்ட்டினெஸ்.
படக்குறிப்பு, 2006-ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையின்போது, கொலீன் ஸ்லெம்மரின் தாயார் மே மார்ட்டினெஸ்.

பைக்கும் அவரது அப்போதைய காதலரான டாடரில் ஷிப்பும், 'பிரச்னைகளை எதிர்கொண்ட இளைஞர்களுக்கான' வேலைப் பயிற்சி முகாமில் சந்தித்த 19 வயதான கொலீன் ஸ்லெம்மரைத் தாக்கி, சித்ரவதை செய்து கொலை செய்தபோது பைக்கிற்கு 18 வயது.

கருணை மனுவில், ஸ்லெம்மரைத் தாக்க வேண்டும் என்பதுதான் தனது நோக்கமாக இருந்ததே தவிர, அவரைக் கொலை செய்ய வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்று பைக் தெரிவித்திருந்தார். ஆனால், "அதைத் தடுத்து நிறுத்த என்னால் முடியவில்லை" என்றும் அவர் கூறியிருந்தார்.

"நான் மனநலம் பாதிக்கப்பட்ட 18 வயது சிறுமியாக இருந்தேன். நான் செய்த செயலின் தீவிரத்தை உணரவே எனக்குப் பல ஆண்டுகள் ஆனது. என் செயலால் எத்தனை பேரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இன்னும் அதிக காலம் எடுத்தது. நான் ஒருவரின் மகளை, சகோதரியை, நண்பரை உயிரிழக்கச் செய்தேன். அப்படிப்பட்ட கொடூரமான குற்றத்தைச் செய்யும் அளவுக்கு நான் இருந்தேன் என்பதை இப்போது நினைத்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கொலைக்கு முன்பு, கொலீன் தன்னை அவமதித்ததாகவும், தனது அப்போதைய காதலரைத் தன்னிடமிருந்து பறிக்க முயன்றதாகவும் பைக் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த முகாமில் தங்கியிருந்த மேலும் இருவர் பின்னர் சாட்சியம் அளித்தனர். கொலைக்கு முன்பும், கொலைக்குப் பிறகும் பைக் அதைப் பற்றி பெருமையாகப் பேசியதாகவும், கொலீனின் மண்டை ஓட்டின் ஒரு துண்டை அவர்களிடம் காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கொலீன் ஸ்லெம்மரின் தாயார், பைக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். பல ஆண்டுகளாகக் காத்திருந்த நிலையில், பைக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பார்க்க தான் விரும்புவதாக அவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

"ஒவ்வொரு முறையும் இதைப் பற்றி நினைக்கும்போது, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு கொலீன் எழுந்து ஓட முயன்றதை நினைத்துப் பார்க்கிறேன்" என்று மே மார்ட்டினெஸ் சனிக்கிழமை அந்தச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தானும் தனது கணவரும் புளோரிடாவில் இருந்து டென்னசிக்குச் சென்று மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரில் பார்ப்பதற்காக, ஒரு குழுவினர் தங்களுக்காக நிதி திரட்ட உதவியதாக அவர் கூறினார்.

"கொலீனைப் பற்றி நான் நினைக்காத ஒரு நாளோ, ஒரு நிமிடமோ கூடக் கிடையாது. விடுமுறை நாட்கள்தான் மிகவும் மோசமானவை" என்று மார்ட்டினெஸ் கூறினார்.

1976-ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது முதல், அமெரிக்காவில் இதுவரை 18 பெண்களுக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 1,663 ஆண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளில் பெண்களின் எண்ணிக்கை சுமார் 1% மட்டுமே.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு