அழகுக்கான சான்றாக விளங்கிய பெண்ணுறுப்பு 'அவமானத்தின்' குறியீடாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி ஆப்பிரிக்கா
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதர்கள் பெண்களின் வெளிப் பாலுறுப்பான யோனியைப் பற்றிப் பேசி வருகிறார்கள். தொடக்கத்தில், இந்தப் பகுதி வளத்தின் குறியீடாக இருந்தது, ஆனால் காலப்போக்கில் இது அவமானகரமானதாகவும் மறைக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் கருதப்பட்டது.
தற்போது பெண்களின் பாலுறுப்பை மையமாகக் கொண்டு ஒரு மிகப்பெரிய தொழில் இயங்கி வருகிறது. இறுக்கம் என்ற பெயரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, அழகு சிகிச்சைகள் போன்ற சேவைகளை இது வழங்குகிறது.
கலைஞர்கள் பாலுறுப்பைத் தங்களது கலைப் படைப்புகளில் சித்தரிக்கிறார்கள். சமூக ஆர்வலர்கள் இதை எதிர்ப்பின் குறியீடாகப் பயன்படுத்துகிறார்கள். மறுபுறம், பெண் பாலுறுப்பின் இயற்கை அமைப்பில் தனிநபர் வேறுபாடுகள் உள்ளன என்பதை நிரூபிக்க மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள்.
எனவே, மனித உடலின் இந்தப் பகுதி எவ்வாறு வளத்தின் குறியீட்டில் இருந்து அவமானத்தின் குறியீடாகவும், அழகின் குறியீட்டில் இருந்து அரசியல் குறியீடாகவும் மாறியது?
பிரெஞ்சு நாளிதழான 'ல மோந்த்' (Le Monde) இந்த வரலாற்றை ஆராய முயன்றது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் நாளிதழான 'தி கார்டியன்' (The Guardian) இதில் ஆபாசப் படங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை வழங்கியது.
இந்த இரு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகள், பெண்களின் பாலுறுப்பு பற்றிய சர்ச்சை வெறும் உடலுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. மாறாக அது அதிகாரம், அவமானம், அழகு, தங்களது சொந்த உடலின் மீதான உரிமை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

பட மூலாதாரம், stefano Guidi/Getty Images)
'பாலுறுப்புக்கு சிறப்பு முக்கியத்துவம்'
இன்றைய காலகட்டத்தில், கலை வடிவங்களில் எந்தவித சங்கடமும் இன்றி பெண்களின் பாலுறுப்பைக் காட்சிப்படுத்துவதைக் கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், மக்கள் பெண்களின் படங்களை வரைந்தபோதோ, செதுக்கியபோதோ, பாலுறுப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தனர்.
இதற்கான சான்றுகள் பிரான்சின் பண்டைய லா ஃபெரெட்டில் உள்ள ஷூவே குகைகளில் (Chauvet Caves) உள்ளன. இங்குதான் உலகின் பழமையான குகை ஓவியங்கள் அமைந்துள்ளன. கூடுதலாக, ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, 'மோம்பாசியரின் வீனஸ்' (Venus of Mompazier) என்ற சிறிய சிற்பத்தில், பெண் பாலுறுப்பு வேண்டுமென்றே பெரிதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களின் திறனை வலியுறுத்தவே பண்டைய மக்கள் விரும்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பண்டைய மெசபடோமியாவில்கூட, பெண்களின் பாலியல் அவமானகரமானதாகக் கருதப்படவில்லை.
ஒரு பண்டைய நூலில், இஷ்டார் என்ற பெண் கடவுள் தனது காதலனிடம், " அன்பே... உன் விதையை என் யோனியில் விதைப்பாயாக" என்று கூறுகிறாள்.
ஆனால் காலம் செல்லச் செல்ல எல்லாமே மாறியது. பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமாபுரி பெண்களின் பாலியலை ஓர் ஆபத்தான விஷயமாக பார்க்கத் தொடங்கியபோதுதான் இந்த முக்கிய மாற்றம் ஏற்பட்டதாக பண்டைய வரலாற்றாசிரியர் கிறிஸ்டியன் - ஜார்ஜஸ் ஸ்வென்ட்செல் 'ல மோந்த்' நாளிதழிடம் தெரிவித்தார்.
"கிரேக்கத்திலும் ரோமிலும், யோனியின் வெளிப்புறப் பகுதி அருவருப்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டதாக," அவர் விளக்குகிறார். இது ஆசைகள் கொண்ட பெண்களை அடக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற எண்ணத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த யோசனை நீண்ட காலமாக நீடித்தது.
பண்டைய காலம் முதல் தற்போதைய நாள் வரை பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் "பெண் பாலுறுப்பு பற்றிய பயத்தை" மறைத்துள்ளதாக உளவியலாளர் சாரா பியாஸா கூறுகிறார்.

பட மூலாதாரம், Nicolas Economou/NurPhoto via Getty Images
அழகின் பின்னால் ஒளிந்திருக்கும் கட்டுப்பாடு
பெண் பாலுறுப்பின் தோற்றத்தை மாற்றும் ஆசை நவீன யுகத்தில் உருவானது அல்ல. பல்வேறு கலாசாரங்களில் பாலுறுப்பின் பகுதிகளை அகற்றுவது அல்லது அவற்றின் தோற்றத்தை மாற்றுவது தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.
நவீன அழகு அறுவை சிகிச்சையின் வருகைக்கு முன், ஐரோப்பிய மருத்துவம் வெளிப்புறப் பாலுறுப்பைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை விவரித்தது.
இன்று, பெண்கள் தங்கள் உடலின் மீது முழு சுதந்திரம் கொண்டுள்ளனர். ஆனால், இங்கே ஒரு கேள்வி எழுகிறது. சமூகம் 'சரியான' பெண்ணுடல் எது என்பதைத் தொடர்ந்து தீர்மானித்தால், இந்தச் சுதந்திரம் உண்மையானதா?
மருத்துவ ரீதியாகப் பார்த்தால், வெளிப்புறப் பாலுறுப்புக்கு ஒரு குறிப்பிட்ட 'சரியான' வடிவம் என எதுவும் இல்லை. பாலியல் நிபுணர் ஜோயல் மிக்னோட், பாலுறுப்புகளின் தோற்றத்திற்கு மருத்துவத் தரநிலைகள் எதுவுமில்லை என வலியுறுத்துகிறார். ஆண்களைப் போலவே, பெண்களும் இந்த உறுப்புகளின் வடிவம் மற்றும் அளவில் பெரிதும் வேறுபடுகிறார்கள். இருப்பினும், தங்கள் இயல்பான உடலைப் பார்த்த பிறகும், தங்களிடம் ஏதேனும் தவறு இருக்கிறதோ என்று பெண்கள் கவலைப்படுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அழகின் வரைவிலக்கணத்தை தீர்மானித்தது யார்?
கடந்த சில தசாப்தங்களாக, ஆபாசத் தொழில், சமூக ஊடகங்கள், அழகு அறுவை சிகிச்சைக்கான விளம்பரங்கள் ஆகியவை பாலுறுப்பு முடிகளை முற்றிலுமாக அகற்றும் போக்கு உள்பட இந்த அழுத்தத்தை அதிகரித்துள்ளன. இது படிப்படியாக ஒரு 'சரியான பெண்ணின்' செயற்கையான பிம்பத்தை உருவாக்க வழிவகுத்தது. அதில் ஒரு பெண்ணின் தோல் மென்மையானதாக, முடியற்றதாக, சுருக்கங்கள் அற்றதாக, இளஞ்சிவப்பு நிறத்தில் மற்றும் துர்நாற்றமற்றதாக இருக்கும்.
மகப்பேறு மருத்துவர் சோஃபி பர்வில் இதை 2000களில் உருவான 'தங்கத் தரநிலை' (gold standard) என்று அழைக்கிறார். இளைஞர்கள் பெண்களின் பாலுறுப்புகள் இயல்பாகவே வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே இங்குள்ள பிரச்னை என்று 'தி கார்டியன்' நாளிதழ் கூறுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வை சுட்டிக்காட்டிய 'தி கார்டியன்', 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்களில் 23% பேர் தங்களது பாலுறுப்பின் தோற்றத்தைக் கண்டு கவலைப்படுகிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள் என்றும், அவர்களில் பாதி பேர் அறுவை சிகிச்சையைப் பரிசீலித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், உடல் அமைப்பை மேம்படுத்த விரும்பும் அனைத்துப் பெண்களும் விளம்பரங்கள் அல்லது ஆபாசப் படங்களால் பாதிக்கப்படுவதில்லை.
மகப்பேறு மருத்துவர் சோஃபி பர்வில், சில நோயாளிகள் தங்களது பாலுறுப்பின் தோற்றம் குறித்துப் பல ஆண்டுகளாகத் தங்களது சுயமரியாதையில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்று கூறுகிறார்.
சிலர் தங்களது துணையின் முன் நிர்வாணமாக இருக்கத் தயங்குகிறார்கள் அல்லது பாலியல் உறவைத் தவிர்க்கிறார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அத்தகைய மனிதர்களின் மனநிலையும் பாலியல் வாழ்க்கையும் மேம்பட்டதாக அவர் விளக்கினார். எனவே, அறுவை சிகிச்சை செய்துகொள்வதா வேண்டாமா என்பது இங்கு கேள்வி அல்ல. அத்தகைய அறுவை சிகிச்சையின் அபாயங்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி ஒருவர் முழுமையாக அறிந்திருப்பதும், அறுவை சிகிச்சை செய்வதற்கான முடிவு அவர்களுடைய சொந்த முடிவாக இருப்பதும் முக்கியம்.
இணையம் மற்றும் ஆபாசப் படங்களின் தாக்கம் மனிதர்கள் தங்களது இயற்கை உடலை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்குவதாக அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கல்லூரி எச்சரித்துள்ளது. மேலும், இந்தப் பகுதியில் செய்யப்படும் பல அழகுசார் அறுவை சிகிச்சைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்துப் போதுமான மருத்துவச் சான்றுகள் இல்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அவமானத்தில் இருந்து போராட்டம் மற்றும் புரிதல் வரை
இங்கிருந்து, இந்தக் கதை ஓர் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. நீண்ட காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல், இப்போது பகிரங்கப் போராட்டங்களுக்கான தளமாக மாறியுள்ளது. 1969ஆம் ஆண்டில், ஆஸ்திரிய கலைஞர் வாலி எக்ஸ்போர்ட் (Valie Export) ஜெர்மனியில் உள்ள மியுனிக் நகரில் ஒரு திரையரங்கிற்கு ஒரு விசித்திரமான ஆடையை அணிந்து சென்றார்.
பெண்களின் உடல்களை ஆண்களின் பார்வையில் இருந்து மட்டுமே பார்க்கும் விதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கவும், இந்த விஷயத்தில் ஒரு விவாதத்தைத் தொடங்கவும் அவர் இதைச் செய்தார். திரையில் ஒரு பாலியல் பொருளாகக் காட்டுவதற்குப் பதிலாக, பெண்களை அவர்களின் உண்மையான வடிவத்தில் அவர் பொது மக்களுக்கு முன்னால் நிறுத்தினார்.
கடந்த 1970களில், பெண் கலைஞர்கள் பெண்களின் உரிமைகள் மற்றும் உடலின் மீதான சுயநிர்ணய உரிமையைக் கேள்வி கேட்கத் தங்களது படைப்புகளில் பெண் பாலுறுப்புகளின் படங்களை வெளிப்படையாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஜூடி சிகாகோ போன்ற கலைஞர்கள் இந்த இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். கலை விமர்சகர் சிண்டி நெம்சரும் இந்த இயக்கத்தை ஆதரித்தார்.
காலப்போக்கில், இந்த விஷயம் கலையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. 2019ஆம் ஆண்டில், கலைஞர் டெபோரா டி ராபர்ட்டிஸ், அதிகாரப் பதவிகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லாததைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன் மேலாடையின்றிப் போராட்டம் நடத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
அதே நேரத்தில், உடலின் உறுப்புகள் பற்றிய அவமானத்தை அறிவாக மாற்றுவதற்கான திட்டங்கள் தொடங்கின. 2011ஆம் ஆண்டில், கலைஞர் ஜேமி மெக்கார்ட்னி, பெண்ணுடலின் பன்முகத்தன்மையைக் காட்ட 400 பெண்களின் பாலுறுப்புகளைக் கொண்ட 'தி கிரேட் வெஜைனா வால்' (The Great Vagina Wall) என்ற சிற்பத்தை உருவாக்கினார்.
கடந்த 2016ஆம் ஆண்டில், 'தி வூல்வா கேலரி' (The Vulva Gallery) என்ற ஆன்லைன் திட்டம் தொடங்கப்பட்டது, இது பெண் பாலுறுப்பின் பல்வேறு வடிவங்களைக் காட்சிப்படுத்தியது. கூடுதலாக, லண்டனில் 2019இல் "யோனி அருங்காட்சியகம்" (Vagina Museum) தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பெண்களின் உடலமைப்பு, ஆரோக்கியம், பெண்கள் உடல் குறித்து சமூகத்தின் பார்வை ஆகியவற்றைப் பற்றி பொது மக்களுக்குக் கற்பிக்கிறது.
இப்போது, மீண்டும் ஒருமுறை, பெண்களின் பாலுறுப்பு பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது, ஆனால் இந்த முறை காரணம் வேறு. சுதந்திரம் கோருவதற்கான ஒரு போராட்டமாக இது மாறியுள்ளது.
சமூகத்தில் இருக்கும் அவமானத்தைப் போக்க முயன்று வருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தங்கள் உடலின் மீது முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பதையும், இதுவொரு சக்தி என்பதையும் காட்ட இது பல்வேறு கலை வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
"வெளிப்புற யோனியின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும்?" என்பது இப்போது கேள்வியல்ல. இது பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. அதுவே அதன் இயற்கை தோற்றம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































