மாரடைப்பு அறிகுறிகள் மார்பு தவிர்த்து உடலில் வேறு எங்கெல்லாம் தோன்றும்? அறிவது எப்படி?

ஒருவர் தோள்வலியால் அவதிப் படுவது போன்ற புகைப்படம்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், ஓங்கார் கரம்பேள்கர்
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மார்பில் ஏற்படும் கடுமையான வலி, மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறியாக அறியப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் மாரடைப்பு இதைவிட நுட்பமான, எளிதில் கவனிக்காமல் விடப்படும் அறிகுறிகளுடன்கூட தொடங்கலாம்.

திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுவது, வழக்கத்தைவிட அதிகமான சோர்வை உணர்வது, குமட்டல் அல்லது வாந்தி, குளிர்ச்சியான வியர்வை, தலைச் சுற்றல், தாடை, கழுத்து, முதுகு, தோள் அல்லது கைகளில் அசௌகரியம் ஆகியவையும் இதய பிரச்னைகள் தொடர்பான தீவிர எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.

ஆனால், இத்தகைய அறிகுறிகளைப் பலரும் அமிலத்தன்மை, வாயுத் தொல்லை, தசை இறுக்கம், வேலையால் ஏற்படும் மன அழுத்தம் அல்லது சாதாரண சோர்வு என்று நினைத்து அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

நிபுணர்களின் கூற்றுப்படி, மாரடைப்பு ஒவ்வொரு முறையும் திடீரெனவும் வெளிப்படையாகவும் தொடங்குவதில்லை. சில நேரம், அறிகுறிகள் லேசாக இருக்கலாம், சிறுகச் சிறுக வந்து போகவும் செய்யலாம். இதனால் ஆபத்தை அடையாளம் காண்பது மேலும் சிரமமாகிறது. குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு உள்ளவர்களுக்கு மாரடைப்பின் வழக்கமான அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம்.

ஆண்டுதோறும் உலகளவில் லட்சக்கணக்கானோர் இதய நோய்களால் இறக்கின்றனர். இந்த நிலையில், உடல் வெளிப்படுத்தும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை அடையாளம் கண்டு, உரிய நேரத்தில் மருத்துவ உதவி பெறுவது உயிரைக் காப்பாற்றக்கூடும். உலக இதய தினமான செப்டம்பர் 29ஐ முன்னிட்டு, மாரடைப்பின் அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான அறிகுறிகள் யாவை, அவை தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

மாரடைப்பின் பல அறிகுறிகள் ஆண்கள், பெண்களுக்கு ஒரே மாதிரியாகவே இருக்கும். இரு பாலருக்கும் மிகப் பொதுவான அறிகுறியாக மார்பு வலி அல்லது அசௌகரியம் இருக்கலாம்.

ஆனால் பெண்களுக்கு மூச்சுத் திணறல், காரணமற்ற அல்லது வழக்கத்திற்கு மாறான சோர்வு, குமட்டல் அல்லது வாந்தி, தலைச் சுற்றல், அஜீரணம், முதுகு, தோள், கை அல்லது தாடையில் வலி அல்லது அசௌகரியம் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் ஆண்களுக்கும் ஏற்படலாம். ஆனால் பெண்களிடையே இவை இதயப் பிரச்னைகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என்பது உடனடியாகத் தெரியாமல் போகலாம். பல நேரங்களில் அவற்றை அமிலத்தன்மை, மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது பொதுவான சோர்வு காரணமாக ஏற்பட்டவை எனக் கருதி புறக்கணித்து விடுகிறார்கள்.

குறிப்பாக, மார்பு வலி இல்லாதபோதோ அல்லது வலி லேசாக இருக்கையிலோ, மூச்சுத் திணறல், சோர்வு, குமட்டல், அஜீரணம், முதுகு அல்லது தாடையில் ஏற்படும் அசௌகரியம் ஆகியவை கவனிக்கவே படாமல் போகலாம். இதனால் மருத்துவ உதவியை நாடுவதில் தாமதம் ஏற்படக் கூடும்.

ஒருவர் நெஞ்சுவலியால் அவதிப்படுவது போன்ற காட்சி
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பல இளைஞர்கள், 'இவ்வளவு குறைந்த வயதில் எனக்கு எப்படி மாரடைப்பு வரும்?' என்று நினைக்கிறார்கள். வயது அதிகரிக்கையில் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றாலும், அதன் பொருளாக இளம் வயதில் மாரடைப்பு ஏற்படாது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

புகைப் பிடித்தல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்ற இதய நோய்க்கான வழக்கமான ஆபத்துக் காரணிகள் இளைஞர்களுக்கும் பொருந்தும். இவற்றுடன், மரபியல் காரணங்கள், இதயம் அல்லது ரத்த நாளங்களில் உள்ள சில கட்டமைப்புக் குறைபாடுகள், இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் ஏற்படும் அரிதான பாதிப்புகள் ஆகியவையும் மாரடைப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

சில இளம் பெண்களுக்கு, கொரோனரி தமனியில் திடீரெனப் பிளவு ஏற்படும் மிக அரிதான பிரச்னை உருவாகலாம். இதனால் வழக்கமான ஆபத்துக் காரணிகள் எதுவும் இல்லாவிட்டாலும் மாரடைப்பு ஏற்படலாம். எனவே, ஒருவரது வயதை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், அறிகுறிகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தே அவற்றை மதிப்பிடுவது அவசியம். இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ, தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மார்பில் வெளிப்படையான வலி இல்லாதபோதும் அசாதாரண சோர்வு, மூச்சுத் திணறல், குமட்டல், முதுகு அல்லது தாடையில் ஏற்படும் வலி ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக எவ்வாறு இருக்க முடியுமென வாஷியில் உள்ள ஃபோர்டிஸ் ஹிரானந்தானி மருத்துவமனையில் ஆலோசனை இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி நிபுணராகப் பணியாற்றும் மருத்துவர் பிரசாந்த் பவாரிடம் கேட்டோம்.

ஒருவர் இதயத்தின் படதை கையில் பிடித்திருப்பது போன்ற படம்

அப்போது, "இதயத் தசைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரெனக் குறைந்தாலோ, முற்றிலும் தடைபட்டாலோ மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால், அதன் அறிகுறிகள் எப்போதும் தெளிவான மார்பு வலியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை" என்று கூறிய அவர், சோர்வு, மூச்சுத் திணறல், குமட்டல் போன்ற அறிகுறிகளைப் பார்க்கையில், அவை அந்த நபரின் வழக்கமான நிலையைவிட வேறுபட்டவையாக உள்ளனவா என்பதை கவனிக்க வேண்டும் என்றார். எடுத்துக்காட்டாக, "முன்பு எளிதாகச் செய்ய முடிந்த வேலைகளைச் செய்யும்போது திடீரென அதிக சோர்வு அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அது கவலையளிக்கும் அறிகுறியாக இருக்கலாம்."

அதோடு, "குமட்டல் அல்லது அஜீரணம் போன்ற பிரச்னை திடீரெனத் தொடங்கியிருந்தால், அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றால், அது தொடர்ந்து நீடித்தால் அல்லது அதனுடன் வியர்வை, மூச்சுத் திணறல், பலவீனம், மார்பு மற்றும் உடலின் மேற்பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டால், அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதே போல, முதுகு அல்லது தாடையில் திடீர் வலி தொடங்கியிருந்தால், அதற்கான காரணம் புரியவில்லை என்றால், உடல் உழைப்பின்போது அந்த வலி அதிகரித்தால் அல்லது பிற அறிகுறிகளுடன் இணைந்து தோன்றினால், "அது இதயம் தொடர்பானதாக இருக்கலாம்" எனவும், "மார்பு வலி இல்லை என்பதாலேயே இத்தகைய அறிகுறிகளைப் புறக்கணித்துவிடக் கூடாது" என்று எச்சரித்தார்.

இளைஞர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டதை போன்ற படம்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மார்பில் புதிதாக அழுத்தம், கனத்த உணர்வு, இறுக்கம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டு, அது சில நிமிடங்கள் நீடித்தாலோ, அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது உடல் உழைப்பின்போது ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டுமென்றும் மருத்துவர் பவார் அறிவுறுத்தினார்.

அவரது அறிவுறுத்தலின்படி, மார்பு வலி இல்லாததால் நிலைமை பாதுகாப்பானது எனக் கருதுவது தவறு. "திடீரெனவும் தெளிவான காரணமின்றியும் மூச்சுத் திணறல் ஏற்படுவது, குறிப்பாக ஓய்வில் இருக்கும்போது அல்லது மிகக் குறைந்த உடல் இயக்கத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்படுவது, காரணமின்றி வியர்வை அல்லது குமட்டல் ஏற்படுவது, தலைச் சுற்றல் அல்லது மயங்கி விழுவது, கை, தோள், முதுகு, கழுத்து அல்லது தாடைக்குப் பரவும் புதிய வலி அல்லது அசௌகரியம் ஆகியவையும் கவலைக்குரிய அறிகுறிகளாகும்."

குறிப்பாக, "இதுபோன்ற பல அறிகுறிகள் ஒரே நேரத்தில் தென்பட்டாலோ, அவை திடீரெனத் தொடங்கியிருந்தாலோ அல்லது அந்த நபருக்கு வழக்கத்திற்கு மாறானவையாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்."

ஒருவர் கழுத்து வலியால் அவதிப்படுவது போன்ற ஒரு புகைப்படம்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அசிடிட்டி, தசை வலி, மன அழுத்தம் போன்ற பொதுவான பிரச்னைகளில் இருந்து இதயம் தொடர்பான தீவிர அறிகுறிகளை வேறுபடுத்திப் பார்ப்பது எப்படி? இதுகுறித்து மருத்துவர் பிரசாந்த் பவாரிடம் கேட்டோம்.

வீட்டிலேயே இந்த அறிகுறிகளை நம்பகமாக வேறுபடுத்திக் கண்டறிய எந்த உறுதியான வழியும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும், சில அம்சங்கள் கவலைக்குரியதாக இருக்கலாம் என்றார். "அறிகுறிகள் புதிதாக ஏற்பட்டவையாக இருந்தால், திடீரெனத் தொடங்கியிருந்தால், அவற்றுக்குப் பின்னால் தெளிவான காரணம் இல்லாவிட்டால் அல்லது சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது மிகவும் தீவிரமாகத் தோன்றினால், அவற்றைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்றும் சுட்டிக் காட்டினார்.

உதாரணமாக, "அஜீரணம் போன்ற அசௌகரியம் திடீரெனத் தொடங்கி, அதற்குத் தெளிவான காரணமின்றி, அதனுடன் வியர்வை, மூச்சுத் திணறல், பலவீனம், மார்பு மற்றும் உடலின் மேற்பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டால், அது கவலைக்குரியதாக இருக்கலாம்."

"முதுகு, தோள் அல்லது தாடையில் ஏற்படும் வலி, உடலின் இயக்கம், உட்காரும் நிலை அல்லது ஏற்கெனவே தெரிந்த தசைப் பிரச்னையுடன் தெளிவாகத் தொடர்புடையதாக இல்லாவிட்டால், அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் பவார்.

அதேபோல, "முன்பு எளிதாகச் செய்யக்கூடிய வேலையைச் செய்கையில் திடீரென மூச்சுத் திணறல் அல்லது சோர்வு ஏற்பட்டால், அதற்கு மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை மட்டுமே காரணம் எனக் கருதக்கூடாது."

இந்த விஷயத்தில் மருத்துவர் பவார் ஒரு முக்கியமான ஆலோசனையையும் வழங்கினார். "மிக முக்கியமான விஷயம் என்னவெனில், ஒரு அறிகுறி அசிடிட்டி, தசை வலி அல்லது மன அழுத்தம் போன்றதாகத் தோன்றினாலும், அது புதிதாக ஏற்பட்டதாக இருந்தாலோ அல்லது பிற ஆபத்தான அறிகுறிகளுடன் இணைந்து தோன்றினாலோ, அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்."

ஒருவர் கைகளில் இதயத்தின் படத்தை வைத்திருப்பது போன்ற புகைப்படம்

மாரடைப்பின் தெளிவான அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது ஏன் அவசியம்?

மாரடைப்பு ஏற்படும்போது, இதயத் தசைகளுக்கு ரத்தம் வழங்கும் தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ, அந்த அளவுக்கு இதயத் தசைகளுக்கு அதிக சேதம் ஏற்படக்கூடும். எனவே, அறிகுறிகள் தானாகக் குறையலாம் எனக் காத்திருப்பது ஆபத்தானதாக இருக்கலாம். ஆரம்பத்தில் லேசாகத் தோன்றும் அசௌகரியம்கூட சிறிது நேரத்திலேயே தீவிரமான நிலையாக மாறக்கூடும்.

"அறிகுறிகள் மாரடைப்பைக் குறிக்கின்றன என்றால், உடனடியாக நிலைமையை மதிப்பீடு செய்து சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைக்குச் செல்வது அவசியம். மாரடைப்பைப் பொறுத்தவரை நேரம் மிக முக்கியமானது. எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்படுகிறதோ, அவ்வளவு சிறந்த பலனைப் பெற முடியும்," என்கிறார் மும்பை கார் பகுதியில் செயல்படும் பி.டி. ஹிந்துஜா மருத்துவமனை மற்றும் எம்.ஆர்.சி-யில் ஆலோசனை இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் நிபுணராகப் பணிபுரியும் மருத்துவர் நிலேஷ் கௌதம். அவரிடம் இதுதொடர்பாகச் சில கேள்விகளைக் கேட்டோம்.

'இந்த அறிகுறிகள் இருந்தபோதும் நோயாளி மருத்துவமனை செல்லத் தயாராக இல்லாவிட்டால், குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டபோது, "குடும்பத்தினர் முதலில் இந்த அறிகுறிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். நோயாளியுடன் வாக்குவாதம் செய்யாமலும், அவரை அச்சுறுத்தாமலும் அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" என்றார் அவர்.

அதோடு, 'பரிசோதனையில் அசிடிட்டி அல்லது உடல் வலி எனத் தெரிய வந்தாலும் பரவாயில்லை; ஆனால் மாரடைப்பை மட்டும் புறக்கணித்துவிடக் கூடாது' என்பதை நோயாளியிடம் அமைதியாக எடுத்துச் சொல்ல வேண்டுமென வலியுறுத்திய நிலேஷ், "நோயாளியை அமைதியாக உட்கார வைக்க வேண்டும். தேவையற்ற அசைவுகளைத் தவிர்க்க வேண்டும். அவர் தனியாக மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக, மருத்துவ உதவியை நாட வேண்டும். அறிகுறிகள் அதிகரிக்கத் தொடங்கினால், தலைச் சுற்றல் ஏற்பட்டால், கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அல்லது அவர் மயக்கமடைந்தால், அது மருத்துவ அவசர நிலை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறுகிறார்.

ஒருவருக்கு மார்பில் வலி ஏற்பட்டிருப்பது போன்ற புகைப்படம்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இத்தகைய சூழலில் வெறும் வலி நிவாரணி அல்லது ஆன்டாசிட் எடுத்துக் கொள்வது அல்லது வீட்டில் ஓய்வெடுத்து அறிகுறிகள் குறையக்கூடும் எனக் காத்திருப்பது ஆபத்தானதாக இருக்கலாம் என்று கூறப்படுவதைக் குறிப்பிட்டு அதன் காரணத்தைக் கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த மருத்துவர் நிலேஷ் கௌதம், "ஆன்டாசிட் எடுத்த பிறகு சிறிது நேரம் நிவாரணம் கிடைத்தாலும், இதயம் தொடர்பான பிரச்னை இல்லை என்று அர்த்தமல்ல. மாரடைப்பின் அறிகுறிகள் வெவ்வேறு விதங்களில் வெளிப்படலாம். சில நேரம் நோயாளிக்கு சிறிது நேரம் நன்றாக இருப்பது போலத் தோன்றலாம். அதேபோல, வலி நிவாரணி மருந்தால் அசௌகரியம் குறைந்தாலும், இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட அடைப்பு நீங்கிவிடாது" என்று விளக்கினார்.

மருத்துவரை அணுகாமல் வீட்டில் ஓய்வெடுப்பதால், இந்த அறிகுறிகள் ஏற்பட்டதற்கான உண்மைக் காரணம் என்னவென்பதை உறுதிசெய்ய முடியாது. தற்காலிகமாக நிவாரணம் கிடைப்பதால் தவறான நம்பிக்கை ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்வதில் தாமதம் ஏற்படலாம். மார்பில் புதிதாகவோ அல்லது காரணம் தெரியாமலோ அசௌகரியம் ஏற்பட்டால், குறிப்பாக அதனுடன் வியர்வை, மூச்சுத் திணறல், குமட்டல் அல்லது பலவீனம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

வாழ்க்கை முறையில் முக்கியமான மாற்றங்களைச் செய்ய விரும்பினாலும், உணவில் மாற்றம் செய்ய விரும்பினாலும், மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், உடற்பயிற்சியைத் தொடங்க விரும்பினாலும் மருத்துவர் மற்றும் தகுதியான பயிற்சியாளர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

உங்கள் உடல்நிலையையும் அறிகுறிகளையும் மருத்துவரிடம் முறையாகப் பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை அடிப்படையிலேயே வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வது சரியானது. மருத்துவரை அணுகாமல் சுய சிகிச்சை மேற்கொள்வது ஆபத்தானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு