அமெரிக்காவில் இருமுறை மரண ஊசி செலுத்தியும் மரண தண்டனை கைதி உயிருடன் இருந்தது எப்படி? அடுத்து என்ன நடக்கும்?

கிறிஸ்டா பைக்
    • எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவில் கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்டா பைக்குக்கு, டென்னசி மாகாண அதிகாரிகள் மரண ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முயன்றது தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு "உயிர் காக்கும் சிகிச்சைகள்" அளிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே பெரும் சட்டப் போராட்டத்துக்கு உள்ளான பைக்கின் மரண தண்டனை நிறைவேற்ற முயற்சி, தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

என்ன தவறு நடந்தது, அடுத்து என்ன நடக்கப் போகிறது, மேலும் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் எழுப்பும் முக்கியமான மற்றொரு கேள்வியான — மரண தண்டனை திட்டமிட்டபடி நிறைவேறாதபோது கைதிக்கு ஏற்படும் வேதனை — ஆகியவை அவற்றில் அடங்கும்.

என்ன நடந்தது?

கொலீன் ஸ்லெம்மர்
படக்குறிப்பு, கொலீன் ஸ்லெம்மர்

50 வயதான பைக்குக்கு, 19 வயதான கொலீன் ஸ்லெம்மரை கொலை செய்த குற்றத்துக்காக 1996ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவரது காதலராக இருந்த டாடரில் ஷிப்புடன் இணைந்து இந்தத் தாக்குதலை அவர் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (செப்டம்பர் 30) மாலை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்ற நிலையில், கடைசி நேரத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு அனுமதி அளித்தது.

பைக்குக்கு பென்டோபார்பிட்டல் (pentobarbital) என்ற மருந்தின் இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்டன. ஆனால், அவை அவரது இதயத் துடிப்பை நிறுத்தவில்லை என்றும், அவர் தொடர்ந்து குறட்டை விடும் சத்தம் கேட்டதாகவும் அவரது சட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

தாங்கள் பின்பற்றிய நடைமுறையை டென்னசி திருத்தத் துறை (Department of Correction) நியாயப்படுத்தியது. மேலும், "இந்த நடைமுறையில், இன்று (புதன்கிழமை) மாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி இல்லை" என்று தெரிவித்தது.

இரண்டாவது மருந்தளவு செலுத்தப்பட்ட பிறகும் கைதி உயிருடன் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாகாணத்தின் நடைமுறை விதிகளில் தெளிவான வழிகாட்டுதல் இல்லை என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைக்குக்கு செலுத்தப்பட்ட மருந்தளவு ஏன் மரணத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கான விளக்கத்தை அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை. எனினும், மருத்துவ நிபுணர்கள் இதுகுறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

எமோரி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் பேராசிரியரான ஜோயல் ஸிவோட், பைக்கின் சட்டக் குழுவினரால் மருத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். பென்டோபார்பிட்டல் மருந்தின் போதுமான அளவு அவரது ரத்தத்தில் சென்றடையாததால், சுவாசம் நின்று இதய-ரத்த ஓட்ட செயலிழப்பு ஏற்படும் அளவுக்கு மருந்தின் தாக்கம் ஏற்படாமல் போயிருக்கலாம் என்று அவர் கூறினார்.

அடுத்து என்ன நடக்கும்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பைக்கை வேறு இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக மாகாண திருத்தத் துறை தெரிவித்துள்ளது.

அவருக்கு மருத்துவமனையில் "உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன" என்று அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி அவரது உடல்நிலை குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.

பிபிசிக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் ஜோயல் ஸிவோட், "உயிர் மீட்பு சிகிச்சையைத் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மூன்றாம் தரப்பு விசாரணை நடத்த மாகாண ஆளுநர் பில் லீ உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டில் திட்டமிடப்பட்டிருந்த கடைசி மரண தண்டனை நிறைவேற்றமும் திட்டமிட்டபடி நடைபெறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பைக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த கொலீன் ஸ்லெம்மரின் தாயார் மே மார்டினஸ், நடந்த சம்பவங்கள் "குழப்பமாக இருந்தன" என்று என்பிசி நியூஸ்-க்கு தெரிவித்துள்ளார்.

மரண தண்டனைக்கு எதிரானவர்களும் இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளனர்.

சர்வதேச சட்ட அமைப்பான ரீப்ரைவ்-ன் (Reprieve) தலைமை நிர்வாகி மாயா ஃபோவா கூறுகையில், "திரைக்குப் பின்னால் ஏராளமான விஷயங்கள் நடந்துள்ளதால், உண்மையில் என்ன தவறு நடந்தது என்பதை நாம் துல்லியமாக அறிய முடியாது. மரண ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றும் முறையானது, அரசு ஒரு மனிதரின் உயிரைப் பறிக்கும் வன்முறையை மறைப்பதற்காக ஒவ்வொரு கட்டத்திலும் ரகசியமாக செயல்படுத்தப்படுகிறது" என்றார்.

பைக்குக்கு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சி செய்வார்களா என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும், மரண தண்டனை கைதிகளுக்கு ஏற்கெனவே ஒரு முறை தோல்வியடைந்த பிறகு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்ற அதிகாரிகள் முயன்ற சம்பவங்கள் வரலாற்றில் உள்ளன.

இதற்கிடையில், பைக்கின் காதலரும் இணைக் குற்றவாளியுமான ஷிப் தொடர்ந்து சிறையில் உள்ளார். அவர் 17 வயதாக இருந்தபோது ஸ்லெம்மர் கொல்லப்பட்டார். மாகாண சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

பென்டோபார்பிட்டல் என்பது என்ன?

2006-ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையின்போது, கொலீன் ஸ்லெம்மரின் தாயார் மே மார்டினஸ்
படக்குறிப்பு, 2006-ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையின்போது, கொலீன் ஸ்லெம்மரின் தாயார் மே மார்டினஸ்.

பென்டோபார்பிட்டல் என்பது சக்திவாய்ந்த மயக்க மருந்தாகும். இது நரம்பு மண்டலம் உள்ளிட்ட உடலின் செயல்பாடுகளை மெதுவாக்குகிறது. சில மருத்துவ நிலைகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதிக அளவில் செலுத்தப்படும்போது, உடலின் செயல்பாடுகளை நிறுத்தி மரணத்தை ஏற்படுத்துவதற்காக மரண ஊசி முறையிலும் பயன்படுத்தப்படலாம்.

மரண ஊசியில் இதைப் பயன்படுத்துவது கடந்த ஆண்டு மீண்டும் ஆய்வுக்கு உட்பட்டது. அப்போது அமெரிக்க கூட்டாட்சி அரசின் ஓர் ஆய்வில், இந்த மருந்து "தேவையற்ற வலி மற்றும் வேதனையை" ஏற்படுத்தக்கூடும் என்று கவலை தெரிவிக்கப்பட்டது.

அப்போது அதிபராக இருந்த ஜோ பைடன் தலைமையிலான அரசு, மத்திய அரசால் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளில் இந்த மருந்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. ஆனால், டென்னசி போன்ற தனி மாகாணங்களுக்கு அந்தத் தடை பொருந்தாது; அவை தங்களுக்கான மரண தண்டனை முறைகளைத் தேர்வு செய்யலாம்.

சமீப ஆண்டுகளில், மருந்து நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மரண தண்டனை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மரண ஊசிக்குத் தேவையான சில மருந்துகளைப் பெறுவது மாகாணங்களுக்கு கடினமாகியுள்ளது.

பைக்குக்கு பயன்படுத்தப்பட்ட பென்டோபார்பிட்டல் "தரமிழந்திருந்தது" என்ற அவரது சட்டக் குழுவின் குற்றச்சாட்டு குறித்து டென்னசி திருத்தத் துறை குறிப்பாக பதிலளிக்கவில்லை. மருந்து பயன்பாட்டுக்கான காலக்கெடுவைத் தாண்டியிருந்தாலோ அல்லது அதன் வீரியம் குறைந்திருந்தாலோ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகள் தரமிழக்கக்கூடும்.

எனினும், அந்தத் துறை தனது நடைமுறையைப் பொதுவாக நியாயப்படுத்தி வெளியிட்ட அறிக்கையில், "நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மரணத்தை ஏற்படுத்தும் ரசாயனம் தொடர்ந்து திறம்பட செயல்பட்டு வந்துள்ளது" என்று தெரிவித்தது.

இதுபோன்ற சம்பவம் முன்பும் நடந்துள்ளதா?

2026ஆம் ஆண்டில் டென்னசியில் திட்டமிட்டபடி நடைபெறாத முதல் மரண தண்டனை முயற்சி பைக்குடையது அல்ல.

1994ஆம் ஆண்டு மூன்று பேரைக் கடத்தி கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட டோனி கார்த்தர்ஸின் மரண தண்டனை, மரண ஊசி செலுத்துவதற்காக அவரது நரம்பைக் கண்டறிய அதிகாரிகளால் முடியாததால் மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு ஆளுநர் பில் லீ ஓராண்டு கால அவகாசம் வழங்கினார்.

அமெரிக்க அளவிலும், திட்டமிட்டபடி நடைபெறாத அல்லது கடுமையான சிக்கல்களுடன் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்த கவலை தொடர்ந்து நிலவி வருகிறது.

மரண தண்டனை தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளை வழங்கும் மரண தண்டனை தகவல் மையம் (Death Penalty Information Center - DPI) அமைப்பின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை தோல்வியடைந்தவையாகவோ அல்லது குறிப்பிடத்தக்க சிக்கல்களைக் கொண்டவையாகவோ இருந்தன. இந்த அமைப்பு மரண தண்டனை குறித்து தார்மீக ரீதியான ஆதரவு அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லை.

மரண ஊசி மூலம் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளில்தான் இத்தகைய தோல்வி அல்லது கடுமையான சிக்கல்கள் அதிகம் இருப்பதாக DPI தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு ஓக்லஹோமாவில் நடந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. கிளேட்டன் லாக்கெட்டுக்கு மூன்று மருந்துகளைப் பயன்படுத்தி மரண ஊசி செலுத்தப்பட்டது. அவரது நரம்பு ஒன்று கிழிந்ததால் மருந்துகள் முறையாகச் செயல்படவில்லை. 20 நிமிடங்களுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சி நிறுத்தப்பட்டது. இதன்போது அவர் கட்டுப்பாடின்றி உடல் துடித்து நடுங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 27 மாகாணங்களில் மாகாணச் சட்டத்தின்படி மரண தண்டனை நடைமுறையில் உள்ளது.

அமெரிக்க கூட்டாட்சி அரசும் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும். மரண தண்டனையை ஆதரிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு அதற்கான இடைக்காலத் தடையை முடிவுக்குக் கொண்டு வந்தார். எனினும், அதன்பிறகு கூட்டாட்சி அரசு இதுவரை எந்த மரண தண்டனையையும் நிறைவேற்றவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு