நடனம் உங்கள் மூளையை பெரிதாக்கி, புத்திக்கூர்மையை தரும் என்று தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
உங்கள் மூளையை பெரிதாகவும், கூர்மையாகவும், வலிமையாகவும் மாற்ற பல வழிகள் உள்ளன. ஆனால், அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று எது தெரியுமா? தெரியவில்லை என்றால், அதற்கான பதில் நடனம்.
உங்கள் மூளையை வலுப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று நடனம். அது உங்கள் முழு உடலையும் பயன்படுத்துவதுடன், உங்கள் மூளையின் பெரும்பாலான பகுதிகளையும் செயல்பட வைக்கிறது.
ஒரே நேரத்தில் ஜாக்கிங் செய்வதோடு சுடோகு விளையாடுவது போன்றது இது. நடனம் உங்கள் மூளையை மாற்றி, அதை மேலும் வலிமையாக்கும் நான்கு வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நடனம் நிச்சயமாக கடினமான பயிற்சிதான். அதைவிடக் கடினமானது, வாரந்தோறும் தொடர்ந்து நடனமாடுவதற்கான உந்துதலைத் தக்க வைத்துக் கொள்வது. ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, வேறு எந்த உடற்பயிற்சியைவிட நடனம் உங்கள் மூளைக்கு சிறந்ததாக இருக்கலாம்.
மருத்துவர் சென் முன்னாள் தொழில்முறை நடனக் கலைஞர். இதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார்.
அவரது கூற்றுப்படி, "நாம் நமது தசைகளுக்கு மட்டும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தால், உதாரணமாக டிரெட்மில்லில் ஓடுவது அல்லது எடைகளைத் தூக்குவது போன்றவற்றை மட்டுமே செய்துகொண்டிருந்தால், காலப்போக்கில் அது இயந்திரத்தனமான தசை நினைவாற்றலாக மாறிவிடும். உங்கள் மூளைக்கு அவ்வளவு சவால் இருக்காது.
"ஆனால் நடனமாடும்போது, உங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வதைப் போலவே, உங்கள் மனதையும் வடிவமைக்க முடியும்.
"புதிய தொடர்புகளை உருவாக்கி, தன்னைத்தானே மறுசீரமைத்துக் கொள்ளும் அற்புதமான திறன் மூளைக்கு உள்ளது. இதுதான் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' என்று அழைக்கப்படுகிறது. மூளைக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக நடனம் இருக்கிறது."

பட மூலாதாரம், Getty Images
நடனமாடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
நடனம் சாம்பல் நிற மூளைத் திசு மற்றும் வெள்ளை நிற மூளைத் திசு ஆகிய இரண்டையும் அதிகரிக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. உங்கள் நியூரான்கள் பெரிதாகவும் திறமையாகவும் மாறுகின்றன. இதை எளிமையாகப் புரிந்துகொள்வோம்.
மூளை, நியூரான்கள் எனப்படும் செல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்கள்தான் மூளைத் திசுக்களை உருவாக்குகின்றன.
ஒவ்வொரு நியூரானுக்கும் அதன் கட்டுப்பாட்டு மையமாக செயல்படும் ஒரு முனைய உட்கரு உள்ளது.
இந்த நியூரான்கள் அனைத்தும் இணைந்து, மூளையின் வெளிப்புற அடுக்கில் உள்ள சாம்பல் நிற மூளைத் திசுவை உருவாக்குகின்றன. இங்குதான் தகவல்கள் பெறப்பட்டு, செயலாக்கப்படுகின்றன.
நியூரானின் வால் பகுதியான ஆக்சான், வெண்மை நிற மூளைத் திசுவாகும்.
இது மூளையின் முக்கிய இணைப்புத் திசுவாக செயல்படுகிறது. மூளையின் வெவ்வேறு பகுதிகளுக்கும், மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் இடையே இது தகவல்களை அனுப்புகிறது.
எனவே, நடனம் உண்மையில் மூளையில் உள்ள இந்தத் திசுக்கள் அனைத்தையும் அதிகரிக்கச் செய்யும். வழக்கமான உடற்பயிற்சி மூளையை வலுப்படுத்துவதுடன், பல நன்மைகளையும் அளிக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நடனமாடும் போதோ அல்லது பொதுவாக உடற்பயிற்சி செய்யும்போதோ, 'மூளையில் இருந்து பெறப்படும் நியூரோட்ரோபிக் காரணி' எனப்படும் ஒரு ஹார்மோனை உற்பத்தியாகிறது.
இது அடிப்படையில் உங்கள் மூளை செல்களுக்கு உரமாகச் செயல்பட்டு, அவை வளரவும் மேம்படவும் உதவுகிறது. இது நரம்பியல் நெகிழ்வுத்தன்மைக்கும் (நியூரோபிளாஸ்டி) ஆதரவளிக்கிறது.
மனித மூளை தோராயமாக 86 பில்லியன் நியூரான்களால் ஆனது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு நியூரானும் ஒரு வினாடிக்கு 1 முதல் 200 முறை வரை சிக்னல்களை அனுப்பும் திறன் கொண்டது.
இந்த நரம்பியல் தகவல்கள், கண் இமைப்பதைவிட வேகமாகப் பயணிக்கும் மின்சாரத் துடிப்புகளைப் போன்றவை. இந்தத் தகவல்கள் பரிமாறப்படும் முறையை நடனம் மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
மருத்துவர் ஜூலியா பேசல், நடனக் கலைஞர்கள் நடனமாடும்போது, சிறப்பு தொப்பிகளைப் பயன்படுத்தி அவர்களின் மூளைச் செயல்பாட்டை நிகழ்நேரத்தில் அளவிடும்போது இதைக் காண்கிறார்.
அவரது கூற்றுப்படி, உங்களைச் சுற்றி ஒருவர் நடனமாடுவதைப் பார்க்கும்போது, மூளையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் பரிமாற்றம் அதிகரிக்கக்கூடும்.
இது தகவல்களைக் கற்றுக்கொள்வதற்கும் நினைவில் வைத்துக்கொள்வதற்கும், சிறப்பாகச் சிந்திப்பதற்கும், உணர்வுப்பூர்வமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
"உங்கள் மூளை தான் உங்கள் உடலைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, உங்கள் நியூரான்கள் சிறப்பாகத் தகவல்களைப் பரிமாறிக்கொண்டால், நீங்கள் செய்யும் அனைத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
"இது ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. உரையாடல் மற்றும் பேச்சின் மூலம் மற்றவர்களுக்கு பதிலளிக்கும் நமது திறனை மேம்படுத்துகிறது. கணிதப் பிரச்னைகளுக்குப் பதிலளிப்பது அல்லது பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நமது திறனையும் இது மேம்படுத்துகிறது."

பட மூலாதாரம், Getty Images
நடனமாடுவது ஏன் மகிழ்ச்சி அளிக்கிறது?
நீங்கள் வகுப்பில் இருந்தாலும், கிளப்பில் இருந்தாலும், டிக்டாக்கில் இருந்தாலும், அல்லது யாரும் பார்க்காத நேரமாக இருந்தாலும், நடனம் மகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்குக் காரணம், உங்கள் மனநிலையை மேம்படுத்தும் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்களின் கலவையை மூளை வெளியிடுவது தான்.
எண்டோர்பின்கள், டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற ஹார்மோன்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எண்டோர்பின்கள் உடலின் இயற்கையான வலி நிவாரணிகளாகும். டோபமைன் மற்றும் செரோடோனின் இரண்டும் இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்கள்.
நீங்கள் மற்றவர்களுடன் இணைந்து நடனமாடும்போது, 'பிணைப்பை ஏற்படுத்தும் ஹார்மோன்' என்று அழைக்கப்படும் ஆக்சிடோசினும் வெளியிடப்படுகிறது.
நடனம் போன்ற ஒரு செயல்பாட்டை நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் மூளை அதை மீண்டும் செய்ய விரும்பும். ஒரு கட்டத்தில், மூளை அதற்காக ஏங்கவும் தொடங்குகிறது.
நாம் நடனத்தில் எவ்வளவு அதிகமாக ஈடுபட்டு, இந்த நரம்பியல் வேதிப்பொருட்களின் தாக்கத்தைப் பெறுகிறோமோ, அந்த அளவுக்கு அந்த அனுபவங்களையும் உணர்வுகளையும் மீண்டும் பெற வேண்டும் என்ற விருப்பம் அதிகரிக்கிறது.
மக்கள் மீண்டும் மீண்டும் நடன தளத்திற்குத் திரும்புவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் மூளை பெரியதாகவும், கூர்மையாகவும் இருப்பதன் தாக்கத்தை இப்போது நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால், வயதாகும்போது அது மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும்.
நமக்கு வயதாகும்போது, நமது நியூரான்கள் இயற்கையாகவே அழிந்து போகின்றன. இது பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
சேமிப்புக் கணக்கு
பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு முழுமையான சிகிச்சை இல்லை. அவற்றைத் தடுக்க மட்டுமே முடியும். அதற்கு சிறந்த வழி என்ன? பெரிய அளவிலான நரம்பியல் இருப்பை உருவாக்குவதுதான்.
இதை ஒரு சேமிப்புக் கணக்கு போல நினைத்துக்கொள்ளலாம். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது, மிகவும் கடினமான ஒன்றைச் செய்வது அல்லது நடனமாடுவது ஆகியவை உங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் போடுவது போன்றது.
உங்களிடம் 100 டாலர்கள் மட்டுமே இருக்கும்போது ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டால், நீங்கள் கடனில் சிக்கிவிடுவீர்கள். ஆனால், உங்களிடம் ஒரு மில்லியன் டாலர்கள் இருந்தால் நிலைமை வேறாக இருக்கும்.
அதேபோல், உங்கள் அறிவாற்றல் இருப்பு சிறப்பாக இருந்தால், உங்களிடம் அதிக அளவில் 'பணம்' இருக்கும். இங்கு அந்தப் பணம் என்பது நரம்பியல் இருப்பைக் குறிக்கிறது.
அதிக எண்ணிக்கையிலான நியூரான்கள் இருப்பது, தகவல்களை அனுப்புவதற்கு ஒன்று அல்லது இரண்டு பாதைகள் மட்டுமல்லாமல், பல பாதைகள் இருப்பதைக் குறிக்கிறது.
இதனால், இறந்துபோன நியூரான்களைத் தவிர்த்து, மற்ற பாதைகளைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்ப முடியும்.
மற்றவர்களுக்கு இந்தப் பாதைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் பல ஆண்டுகளாக அவற்றை உருவாக்கி வளர்த்திருப்பதால் உங்களுக்கு அவை இருக்கின்றன. நடனம் இதைச் செய்கிறது என்பதற்கு அறிவியல் ஆதாரங்களும் உள்ளன.
பல்வேறு ஓய்வு நேரச் செயல்பாடுகளுக்கும் மறதி நோய் ஏற்படும் அபாயத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
நீச்சல், நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் உள்ளிட்ட 11 வகையான உடல் செயல்பாடுகளின் தாக்கம் இந்த ஆய்வில் உற்றுநோக்கப்பட்டது.
நடனம் மட்டுமே மறதி நோய் அபாயத்தைக் குறைப்பதோடு தொடர்புடைய ஒரே செயலாகக் கண்டறியப்பட்டது.
வயதாகும்போது மூளையின் செயல்பாடு குறையத் தொடங்குகிறது. இதைத் தடுக்க நடனம் உதவும்.
இது சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நியூரான்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வயதாகும்போது குறையக்கூடிய நரம்பியக்கடத்திகளின் அளவை அதிகரிக்கவும் உதவும்.
எந்த வயதில் நடனத்தைத் தொடங்கினாலும் அது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், நரம்பியல் நெகிழ்வுத்தன்மை (நியூரோபிளாஸ்டிசிட்டி) வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































