கொலம்பசுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் மக்களின் வரலாறு

கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்
    • எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நோர்ஸ் மக்கள் கி.பி. 1000-ஆம் ஆண்டிலேயே கனடாவை அடைந்தனர். மேலும் அதனை ஆய்வு செய்வதற்கான தளமாகவும் பயன்படுத்தினர்.

அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்த முதல் ஐரோப்பியர்களின் "மறைக்கப்பட்ட வரலாற்றை" பிபிசி ஆராய்ந்துள்ளது.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492-ஆம் ஆண்டில் கடலில் பயணம் செய்து பஹாமாஸ் தீவுகளை அடைந்திருக்கலாம். ஆனால் நாம் இன்று அமெரிக்கா என்று அறியும் இடத்தை அடைந்த முதல் ஐரோப்பியர் அவர் அல்ல.

அவரது முன்னோர்கள் எந்தவிதமான பெரிய ஆரவாரமுமின்றியே அதைச் செய்துள்ளனர். அரசப் பிரகடனங்களோ அல்லது அவர்கள் திரும்பும்போது வரவேற்கத் தெருக்களில் திரண்ட கூட்டமோ இல்லை. மேலும் அவர்கள் பரந்த அட்லான்டிக் கடலைக் குறுக்காக ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு நேரடியாகப் பயணம் செய்யவில்லை.

கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்
படக்குறிப்பு, கிறிஸ்டோபர் கொலம்பஸ்

மாறாக, ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து ஆகியவற்றை இடைநிறுத்தத் தளங்களாகப் பயன்படுத்தி அவர்கள் அங்கு சென்றனர்.

அவர்களின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு காப்பியங்களாக சொல்லப்பட்டனவே தவிர வரலாற்றுப் புத்தகங்களாக அல்ல. மேலும் அவர்கள் கிறிஸ்டோபர் கொலம்பசுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க மண்ணில் தங்கள் முதல் பயணத்தை மேற்கொண்டனர்.

நோர்ஸ் சாகாக்கள் - வைக்கிங் கதைகள் அவர்களின் சந்ததியினரால் எழுதப்பட்டவை. இவை நம்பகமான வரலாற்று உண்மைகளைக் கொண்டவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 1966-ஆம் ஆண்டில், பிபிசி தொகுப்பாளர் மேக்னஸ் மேக்னசன் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'பிளாட்டேயார்பாக்' அல்லது 'பிளாட்டே தீவுப் புத்தகம்' என்பதை "தற்போது இருப்பில் இருக்கும் மிக மதிப்புமிக்க ஐஸ்லாந்திய கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று" என்று வர்ணித்தார்.

அந்தப் புத்தகம் எவ்வளவு மதிப்புமிக்கது என்றால், 1893-ஆம் ஆண்டில் சிகாகோ உலகக் கண்காட்சியின் அமைப்பாளர்கள் கொலம்பஸின் பயணத்தின் 400-வது ஆண்டு விழாவிற்காக அதைக் கடன் கேட்க முயன்றபோது, "அவர்கள் அதைக் கொண்டு வர டென்மார்க்கிற்கு ஒரு போர் கப்பல் மற்றும் அமெரிக்கா முழுவதும் கொண்டு செல்ல கவச ரயில் அனுப்புவதற்கும், 1 மில்லியன் டாலருக்கு காப்பீடு செய்வதற்கும் முன்வந்தனர் (அப்போது அந்தப் புத்தகம் டென்மார்க்கில் இருந்தது)". ஆனால் அப்படியும் கூட, டேனிஷ் மக்கள் அந்த அபாயத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை.

அமெரிக்கர்கள் "அதைக் கடன் வாங்க ஏன் அவ்வளவு விரும்பினர்"? என்கிற கேள்வியும் உள்ளது. அதற்குக் காரணம், அப்புத்தகம் "10-ஆம் நூற்றாண்டில் கிரீன்லாந்தில் நோர்ஸ் மக்கள் குடியேறியதற்கான வரலாற்றையும், அதைவிட ஆச்சரியமாக, கொலம்பசுக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்காவை நோர்ஸ் மக்கள் கண்டறிந்த மற்றும் குடியேற முயன்ற கதைகளையும் கொண்டுள்ளது".

கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்
படக்குறிப்பு, ஐஸ்லாந்து நிலப்பரப்பு (விளக்கப்படம்)
கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்
படக்குறிப்பு, வைக்கிங்ஸ் பயணம் (விளக்கப்படம்)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

1960-ஆம் ஆண்டில், கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள 'லான்ஸ் ஆக்ஸ் மெடோஸ்' என்ற இடத்தில் ஒரு நோர்ஸ் முகாம் ஒன்று கண்டறியப்பட்டது. மேலும் 2021-ஆம் ஆண்டில், புதிய காலக்கணிப்பு நுட்பத்தைப் பயன்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், வைக்கிங் மக்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தைக் கைப்பற்றியிருந்ததைக் கண்டறிந்தனர்.

இது வட அமெரிக்காவிற்குள் ஆழமாகச் சென்று ஆராய்வதற்கான அடித்தள முகாமாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. பிபிசியின் 'டைம்வாட்ச்' ஆவணப்படத் தொடரின் 1997-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் ராபின் எல்லிஸ் கூறுகையில், "இது ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றின் தொடக்கமாகும், ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் செய்த நூற்றாண்டுகளின் பதிவுகள் தண்ணீரில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன." என்றார்.

நோர்ஸ் மக்கள் கி.பி. 870-களில் ஐஸ்லாந்தைக் கண்டுபிடித்தனர், 100 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீன்லாந்தைக் கண்டறிந்தனர். அங்கிருந்து நவீன கனடாவில் உள்ள பபின் தீவு, டேவிஸ் நீரிணையைத் தாண்டி வெறும் 200 மைல்கள் தொலைவில் தான் உள்ளது. அதை அவர்கள் 'ஹெல்லுலாண்ட்' அதாவது பாறைகளின் நிலம் என்று அழைத்தனர்.

கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்
படக்குறிப்பு, கிரீன்லாந்து நிலப்பரப்பு (விளக்கப்படம்)

வரலாற்று கதைகளின்படி, அவர்கள் தெற்கே லாப்ரடோர் அல்லது காடுகளின் நிலம் என்று அழைக்கப்படும் மார்க்லாந்து நோக்கிய கரையைப் பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர் மேலும் தெற்கே 'வின்லாந்து' என்கிற பகுதிக்குச் சென்றனர். ஐஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எமிலி லெத்பிரிட்ஜ் 2016-ஆம் ஆண்டு டைம்வாட் நிகழ்ச்சியில் கூறுகையில், "வரலாற்று கதைகள் இந்த மனிதர்கள் ஓர் இடத்தில் மட்டும் அல்லாமல், பல இடங்களில் தங்கியிருந்ததை விவரிக்கின்றன" என்றார்.

"அவர்கள் பல ஆண்டுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுக்கு ஆராய்வதற்கு முற்றிலும் புதிய உலகம் ஒன்று காத்திருந்தது."

நார்ஸ் மக்களின் மிகவும் பிரபலமான குடியேறி என்று அழைக்கப்படும் எரிக் தி ரெட் கொலை வழக்கில் நார்வேயிலிருந்து தனது தந்தை நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து கி.பி. 960 வாக்கில் ஐஸ்லாந்துக்கு வந்ததாக வரலாற்று கதைகள் கூறுகின்றன.

கி.பி. 932-ஆம் ஆண்டில், ஐஸ்லாந்து மக்கள் 'அல்திங்' என்ற நாடாளுமன்றத்தை நிறுவினர். இது முழு நாட்டின் திறந்தவெளி மன்றமாகும், இது சட்டம் மற்றும் நீதித்துறை நோக்கங்களுக்காக ஒவ்வொரு கோடைகாலத்திலும் இரண்டு வாரங்களுக்குக் கூடும். மேலும் இது ஒரு குறிப்பிடத்தக்க சூழலில், இயற்கையான அரங்கு போன்ற ஒரு மலையிடுக்கு உள்ளே நடைபெற்றது.

லெத்பிரிட்ஜ் பிபிசியிடம் கூறுகையில், "இந்த இடத்தை சிறப்பானதாக்குவது ஒலியியல் மட்டுமல்ல" என்றார்.

மேலும் அவர், "இது ஒரு இயற்கை பிளவு கோடு. நாங்கள் வட அமெரிக்க மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறோம்". வட அமெரிக்காவை ஆராய்ந்த முதல் ஐரோப்பியர்கள், தற்செயலாக இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள ஒரு பிளவு பள்ளத்தாக்கில் தங்கள் நாடாளுமன்றங்களில் ஒன்றை அமைத்தனர்.

கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்
படக்குறிப்பு, ஐஸ்லாந்து (கோப்புப் படம்)

அந்த நாடாளுமன்றத்தில், சமூகத்தின் விதிகள் அனைத்தையும் மீறியவர்களுக்கு நாடு கடத்தும் தண்டனை விதிக்கப்பட்டதாக லெத்பிரிட்ஜ் தெரிவித்தார்.

"அத்தகைய தண்டனை விதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த இடத்துக்கும் செல்லலாம். ஆனால், அந்தத் தண்டனைக் காலம் முடியும் வரை ஐஸ்லாந்தில் கால்பதிக்க அவர்களுக்கு அனுமதி கிடையாது" என்று அவர் விளக்கினார்.

அல்டிங் அமைப்பு, அண்டை விவசாயியுடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, 982-ஆம் ஆண்டில் எரிக் தி ரெட்டை ஐஸ்லாந்திலிருந்து நாடுகடத்தியது. மேலும் அவரது நாடுகடத்தல் வைக்கிங் பயணங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தைத் தொடங்கியது.

"கிரீன்லாந்தைக் கண்டுபிடித்து பின்னர் அங்கு நிரந்தரமாகக் குடியேறிய முதல் ஐஸ்லாந்தர் எரிக் தி ரெட் ஆவார்," என்று லெத்பிரிட்ஜ் கூறினார்.

அவர் கிரீன்லாந்தில் ஒரு காலனியைத் தொடங்கினார், அது சுமார் 500 ஆண்டுகள் நீடித்தது மற்றும் நோர்ஸ் மக்களின் வட அமெரிக்கப் பயணங்களுக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது.

"அவர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் மற்றும் எதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதைப் பார்க்க அட்லான்டிக் கடலைக் கடந்த திறந்த படகுகளில் பயணம் செய்வது போன்ற பெரிய உடல்ரீதியான சோதனைகளை ஏற்கத் தயாராக இருந்தவர்கள்," என்று லெத்பிரிட்ஜ் கூறினார்.

கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்

கிரீன்லாந்தில் நோர்ஸ் குடியேற்றம் 15-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தொடர்ந்தது, மேலும் எரிக்கின் மகன் லீஃப் எரிக்சன் தலைமையில் வைக்கிங் மக்கள் அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கடல் பயணங்களை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

கனடிய நாகரிக அருங்காட்சியகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் மெக்கீ டைம்வாட் நிகழ்ச்சியில் கூறுகையில், "லீஃப் எரிக்சனும் அவரது நண்பர்களும் வின்லாந்துக்கு வந்துவிட்டு, பின்னர் கைவிட்டுச் சென்ற பிறகு, புதிய உலகத்தைப் பற்றி வேறு எந்தச் செய்தியும் கேட்கப்படவில்லை என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்" என்றார்.

"ஆனால் தொல்லியல் ரீதியாக, நோர்ஸ் மக்கள் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கு அவ்வப்போது புதிய உலகத்திற்குப் பயணம் செய்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளன" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்
படக்குறிப்பு, கிரீன்லாந்து நிலப்பரப்பு (கோப்புப் படம்)

கொலம்பசுக்கு வின்லாந்து பற்றி தெரிந்திருந்ததா?

"இடைக்காலம் முழுவதிலும், நாம் இன்று கிரீன்லாந்து மற்றும் வட அமெரிக்கா என்று அழைக்கும் இரண்டு கடலோரப் பகுதிகளிலும் கடல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிய பல வலுவான காரணங்கள் உள்ளன," என்று இடைக்காலக் கப்பல் போக்குவரத்து வரலாற்றாசிரியரான கர்ட்ஸ்டன் சீவர் 'டைம்வாட்ச்' நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

"1480-ஆம் ஆண்டிற்குள், அவர்கள் வட அமெரிக்கா அல்லது 'பிரேசில் தீவு' என்று அழைக்கப்பட்ட பகுதிக்குத் திட்டமிட்டுப் பயணம் செய்ய முயன்றதை நாம் அறிவோம். அதை அவர்களின் முதல் பயணமாகப் பார்க்கக் கூடாது.மாறாக வழமையான வழிகாட்டிக் குறியீடான கிரீன்லாந்து வழியாகச் செல்லாமல், நேரடியாகப் பயணம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாகவே பார்க்க வேண்டும்."

கொலம்பசுக்கே இத்தகைய பயணங்களைப் பற்றித் தெரிந்திருந்தது என்பதைக் சுட்டிக்காட்டும் ஆவணம் ஒன்றையும் சீவர் மேற்கோள் காட்டினார்.

கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் இன மக்கள்

"1497-98 குளிர்காலத்தில், ஜான் டே என்ற ஆங்கிலேயர், ஜான் கேபட் 1497-ஆம் ஆண்டு வட அமெரிக்காவுக்கு வெற்றிகரமாக மேற்கொண்ட பயணம் குறித்து கிறிஸ்டோபர் கொலம்பசுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்ட அவர், கொலம்பசுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த ஒரு விஷயத்தையும் இயல்பாகக் குறிப்பிட்டார். இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாகவே வட அமெரிக்காவின் வடக்குப் பகுதிக்கு இந்தப் பயணத்தை மேற்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்" என்று சீவர் கூறினார்.

எனவே, 1492-இல் கொலம்பஸ் பஹாமாஸ் கரையை அடைந்தபோதே, வைக்கிங்குகள் 'வின்லாந்து' என்று அழைத்த இடம் அவரது கவனத்தில் இருந்திருக்கக்கூடும். ஐரோப்பியர்களால் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதியைத் தவிர்க்கவே கொலம்பஸ் திட்டமிட்டு வேறு வழியில் சென்றார் என்ற கோட்பாடுகளும் உள்ளன.

"வட அரைக்கோளத்தில் பெருங்கடல்களைக் கடக்க வேண்டுமென்றால்... அட்சரேகைகள் குறைவாக உள்ள வடக்கு நோக்கிச் சென்று, விரைவாகக் கடந்து, பின்னர் மீண்டும் கீழே இறங்க வேண்டும் என்பது இன்றைக்கு இருக்கும் எந்தவொரு மாலுமிக்கும் தெரிந்தது போல கொலம்பசுக்கும் தெரிந்திருந்தது," என்று மெக்கீ 'டைம்வாட்ச்' நிகழ்ச்சியில் கூறினார்.

அதில், "ஆனால், கொலம்பஸ் அதற்குப் பதிலாகப் பெருங்கடலின் குறுக்கே நேரடியாக நீண்ட தூரப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஒருவேளை அவர் கனடாவைத் தவிர்க்க முயன்றிருக்கலாம். அல்லது அவர் தேடாத பகுதியான வின்லாந்தைத் தவிர்க்க முயன்றிருக்கலாம். கொலம்பஸின் நோக்கம் அமெரிக்காவைத் தாண்டிச் சென்று, தூரக் கிழக்கின் செல்வங்களை அடைவதாகவே இருந்தது என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

எனவே, ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் பல அமெரிக்கக் குடிமக்கள் 'கொலம்பஸ் தினத்தைக்' கொண்டாடும் வேளையில், அதற்கு முன்பே அட்லான்டிக் பெருங்கடலில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை கடற்பயணங்களையும் அவர்கள் மறந்துவிடக் கூடாது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு