பக்ரீத் அன்று முஸ்லிம்கள் ஆடு, மாடுகளை பலியிடுவது ஏன்? நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு என்ன?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை அன்றோ அல்லது வேறு எந்த நாளிலோ விதிமுறைகளை மீறி, ​​நியமிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் மாடு உள்ளிட்ட எந்தவொரு விலங்கையும் அறுப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் வேலை செய்வதற்கும் இனப்பெருக்கத்துக்கும் தகுதியற்ற மாட்டைத் தவிர வேறு எந்த மாட்டையும் இறைச்சிக்காக வெட்ட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது என்ன? பக்ரீத் பண்டிகையன்று மாடு உள்ளிட்ட விலங்குகளை பலியிடுவது குறித்து இஸ்லாமிய மதம் கூறுவது என்ன?

நீதிமன்றம் கூறியது என்ன?

பக்ரீத் பண்டிகையன்று இறைச்சிக் கூடங்கள் அல்லாத பொது இடங்களில் மாடுகள் அல்லது கன்றுகளை பலியிடுவதை தடுக்க கோரிய இந்த வழக்கில் புதன்கிழமை (மே 27) அன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லஷ்மிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அந்த உத்தரவில், "ஒரு முஸ்லிம் தனது மத நம்பிக்கையையும் கருத்தையும் வெளிப்படுத்துவதற்காக, அந்த நாளில் மாட்டைப் பலியிடுவது ஒரு கட்டாயமான வெளிப்படையான செயல் அல்ல" என முகமது ஹனிஃப் குரேஷி எதிர் பிகார் அரசு வழக்கு, மேற்கு வங்க அரசு எதிர் அஷுதோஷ் லஹிரி வழக்கு, குஜராத் அரசு எதிர் மிர்சாபூர் மோதி குரேஷி கசாப் ஜமாத் வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.

மேலும், "பல முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பசுவதை ஒழிக்கப்பட்டது. பசுப் பாதுகாப்பு என்பது மகாத்மா காந்திக்கு மிகவும் பிரியமான ஒரு விஷயமாக இருந்தது. காலனித்துவப் படையின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே, பசுக்கள் மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டன என்று புகழ்பெற்ற அறிஞர் ஸ்ரீ தரம்பால் சுட்டிக்காட்டினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றின, அந்தச் சட்டங்களும் நிலைநிறுத்தப்பட்டன" என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, "10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் வேலை செய்வதற்கும் இனப்பெருக்கத்துக்கும் தகுதியற்ற பசுவைத் தவிர வேறு எந்தப் பசுவையும் இறைச்சிக்காக வெட்ட முடியாது. அல்லது காயம், உடல் குறைபாடுள்ள அல்லது குணப்படுத்த முடியாத ஏதேனும் நோய் காரணமாக அது வேலை செய்வதற்கோ அல்லது இனப்பெருக்கம் செய்வதற்கோ நிரந்தரமாக இயலாத நிலையை அடைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் தகுதிவாய்ந்த அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தகுதிவாய்ந்த அதிகாரியால் கையொப்பமிடப்பட்ட, பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் அத்தகைய சான்றிதழ் எதுவும் சமர்ப்பிக்கப்படாவிட்டால், இறைச்சிக்காக வெட்ட அனுமதிக்கப்படாது." எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இறைச்சிக் கூடத்தை தவிர வேறு எங்கும் எந்தவொரு நபரும் எந்த விலங்கையும் அறுக்கக் கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகையின் முந்தைய நாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ பசுவோ கன்றோ அறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த உத்தரவு மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய மதம் என்ன சொல்கிறது?

முதலில் பக்ரீத் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

இறைத்தூதர் இப்ராஹிம் தன் மகனின் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்ததை நினைவுக்கூரும் ஈத் அல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்ராஹிம் கிறிஸ்துவ மற்றும் யூத மதங்களில் ஆபிரஹாம் என அறியப்படுகிறார்.

இறைத்தூதர் இப்ராஹிம் ஒரு கனவு கண்டதாகவும், அதை அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியாகக் கருதி, கீழ்ப்படிதலுக்காக தன் மகன் இஸ்மாயிலை பலியிடுமாறு சொன்னதாகவும் நம்பப்படுகிறது. இதனை அவர் தன் மகனிடம் கூறியபோது அதை இஸ்மாயில் ஏற்றுக்கொண்டார். இப்ராஹிம் தன் மகனை கொல்லச் சென்றபோது அல்லாஹ் அவரை தடுத்து நிறுத்தி, மகனுக்கு பதிலாக பலியிடுவதற்கு செம்மறியாட்டை வழங்கியதாக நம்பப்படுகிறது.

இந்த பண்டிகையின்போது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வெவ்வேறு விதமான கால்நடைகளை பலியிடுவதை சடங்காக கடைபிடித்துவருகின்றனர். இப்படி பலியிடப்படுவது 'குர்பானி' என அழைக்கப்படுகிறது.

எதற்காக விலங்குகளை பலியிட வேண்டும்?

இஸ்லாமிய மதப்படி எந்தெந்த விலங்குகளை பலியிட வேண்டும், எப்படி பலியிட வேண்டும் என்பதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

குர்-ஆனில் இதுகுறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இஸ்லாமிய அறிஞர் (மௌலவி) இல்யாஸ் ரியாஜி பிபிசி தமிழிடம் விளக்கினார்.

அவரது கூற்றின்படி, "ஆதி மனிதன் தோன்றியது முதல் ஒவ்வொரு சமுதாயத்திலும் இந்த பலியிடும் முறையை நாம் ஏற்படுத்தி வைத்தோம்" - குர்ஆன் அத்தியாயம்: 22, வசனம்: 34-ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

"கால்நடைகளை விடவும் பெரிய செல்வம் மனிதர்களுக்குக் கிடையாது. ஆதிமனிதன் காலம் தொட்டு மனிதனின் அன்றாட வாழ்வியலில் கலந்தது கால்நடைகள். தன் செல்வங்களுள் மிகப்பெரிய செல்வத்தை இறைவனுக்கு அளிப்பது ஒருவனின் தியாகத்தின் உச்சத்தைக் காட்டும்.

இறைவன் வழங்கிய கால்நடைகளை இறைவனின் பெயரைச் சொல்லி அறுக்க வேண்டும். அறுத்து நீங்களும் உண்ணுங்கள், இல்லாதவர்களுக்கும் வறுமையுற்றவர்களுக்கும் வாரி வழங்குங்கள் என்பதே இதன் நோக்கம். கேட்டு வருபவர்களுக்கும் கேட்டு வராமல் தன்மானத்துடன் இருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். 'வெட்டப்படும் விலங்குகளின் இறைச்சியோ, ரத்தமோ இறைவனை சென்றடையாது. மாறாக, உங்களின் உள்ளங்களில் இருக்கும் இறை அச்சமும் இறை கட்டுப்பாடும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக' என குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்கிறார் இல்யாஸ் ரியாஜி.

பலியிடப்படக்கூடிய விலங்குகள்

பக்ரீத் பண்டிகை அன்று ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகள் பலியிடப்படுகின்றன. "அரபு நாடுகளில் ஒட்டகத்தை பலியிடுவார்கள். இந்தியாவில் பெரும்பாலும் ஆடு, மாடு ஆகியவற்றை பலியிடுவார்கள்." என கூறுகிறார் இல்யாஸ்.

"இந்த நாளன்று வாய்ப்பு, வசதி உள்ள இஸ்லாமியர் அவசியமாக விலங்குகளை அறுத்து பலியிட வேண்டும். அதன்மூலம், ஏழைகளுக்கு வாரி, வழங்க வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்குவதுதான் இதன் நோக்கம்."

பலியிடப்படக்கூடிய விலங்குகள் எப்படி இருக்க வேண்டும்?

மௌலவி இல்யாஸ் ரியாஜியின் கூற்றுப்படி குர்ஆனில் இதுகுறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி,

பலியிடப்படக்கூடிய மாடுகள் 2 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆடு என்றால் ஒரு வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஒட்டகமாக இருந்தால் 5 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

பலியிடப்படக் கூடிய விலங்குகள், நோய்வாய்ப்பட்டதாகவோ, காது கிழிந்திருத்தல், கொம்பு உடைந்தோ, கால்கள் காயமடைந்தோ, கண் பார்வையற்றதாகவோ என வெளிப்படையாக தெரியக்கூடிய "குறைகளை" கொண்டிருக்கக் கூடாது.

"ஏற்கெனவே உடல்நல பிரச்னைகளை கொண்ட விலங்குகளை பலியிடக் கூடாது. ஏனெனில், பலியிடுவதற்காக அவற்றை நாம் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தது போன்றாகிவிடும். எனவே, உளப்பூர்வமாக இதனை செய்ய வேண்டும்" என்கிறார் இல்யாஸ் ரியாஜி.

அதிலும், "குட்டிகளுக்கு பாலூட்டும் தாய் பிராணிகளை பலியிடுவதிலிருந்து தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதனால் குட்டிகள் பாதிப்படையும் என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது" என்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இஸ்லாமிய அறிஞருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.

"தமிழ்நாட்டில் ஒட்டகங்கள் பலியிடப்படாது. பெரும்பாலும் ஆடுகள் மாடுகள் தான் பலியிடப்படும். மாடுகளை பலியிடும்போது அதிகபட்சம் 7 பேர் வரை சேர்ந்து பணம் செலுத்தி பலியிடலாம்." என கூறுகிறார் ஜவாஹிருல்லா.

"தமிழ்நாட்டில் பெரும்பாலும் காளை மாடுகளைதான் பலியிடுவார்கள். கன்றுகளை பலியிடுவதில்லை. பொது இடங்களில் அவற்றை பலியிடுவதில்லை. வீடுகள் அல்லது பள்ளிவாசல்கள் என மூடப்பட்ட வளாகங்களிலேயே பலியிடப்படுகின்றன." என்கிறார் அவர்.

மௌலவி இல்யாஸ் ரியாஜி கூற்றுப்படி, "அதிகாலையில் தொழுகை முடிந்ததும் விலங்குகளை பலியிடலாம். சூரிய உதயத்திலிருந்து அரை மணிநேரத்துக்குப் பிறகு ஆரம்பித்து சூரியன் மறையும் வரை எப்போது வேண்டுமானாலும் பலியிடலாம். சூரியன் மறைந்தபின் இரவு நேரத்தில் பலியிடக் கூடாது" என்கிறார்.

"விலங்குகளை அறுக்க பயன்படுத்தப்படும் கத்தி கூர்மையாக இருக்க வேண்டும்" என்கிறார் எம்.ஹெச். ஜவாஹிருல்லா.

"இந்த இறைச்சியை மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள், ஏழைகளுக்கு அவற்றை வழங்க வேண்டும். அதன் எல்லா பாகங்களையும் தானமாகத்தான் வழங்க வேண்டும். அந்த கால்நடைகளின் கழுத்தில் போட்டிருக்கும் கயிறு வரை தானமாகவே வழங்க வேண்டும்" என்கிறார் எம்.ஹெச். ஜவாஹிருல்லா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு