You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதியில் மரண தண்டனை பெற்ற கேரள கார் ஓட்டுநரை காப்பாற்ற ரூ.34 கோடி குருதிப் பணம் திரண்டது எப்படி?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"எனது அம்மா ஃபாத்திமா பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்துல் ரஹிம் அவரது கண் முன் வரும்போது தான் அவர் நம்புவார்."
அப்துல் ரஹிம் என்பவரின் சகோதரர் நசீரின் வார்த்தைகள் இவை. இவருக்காக கேரளம் உள்பட உலகம் முழுவதும் நிதி திரட்டும் செயலி மூலம் 'குருதிப் பணமாக (Blood Money)' ரூ.34 கோடி திரட்டப்பட்டுள்ளது.
இந்த அளவிலான குருதிப் பணம் இந்தியாவில் இதற்கு முன்னதாக திரட்டப்பட்டதில்லை.
நசீரின் கவலைகள் 20 ஆண்டுகள் பழையன. 2006-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நசீரின் குடும்பம் சிரமங்களைச் சந்தித்தது. அப்போது கோழிக்கோட்டில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த ரஹிம் ஓட்டுநராக வேலை செய்ய சௌதி அரேபியாவிற்குச் சென்றார்.
சௌதியில் வேலைக்குச் சேர்ந்த 20 நாட்களில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே ரஹிம் அவருடைய முதலாளியின் மகனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
ரியாத்தில் உள்ள ஹைப்பர்மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போது காரின் பின் பக்க இருக்கையில் இருந்த அந்தச் சிறுவனின் சுவாசக் கருவி தற்செயலாக துண்டிக்கப்பட்டதாக ரஹிம் தெரிவித்தார்.
ரஹிமின் ஆயுள் தண்டனை மே 20-ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் ரஹிமின் குடும்பம் மற்றும் கமிட்டி உறுப்பினர்களின் கவலை அதிகரித்துள்ளது.
நசீர் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து தான் என் அப்பாவுக்கு தகவல் தெரியவந்தது. அவர் மிகவும் கவலைக்கு உள்ளாகி அனைவரிடமிருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதற்குச் சில மாதங்கள் கழித்து அவர் உயிரிழந்தார்." எனத் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'குருதிப் பணம்' செலுத்தப்பட்டதில் இருந்து, ரஹிம் ஒருநாள் நிச்சயம் வீட்டுக்கு வருவான் என நசீரின் தாய் அவரிடம் கூறி வருகிறார்.
அவர் நம்பிக்கை உடன் வாழ்ந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக, வெவ்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு மேல்முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மரண தண்டனையை ரத்து செய்ய அரசரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரஹிம் எப்போதும் ஆபத்திலே இருந்தார்.
பேச்சுவார்த்தைகளும் சட்டப் போராட்டங்களும்
அப்துல் ரஹிம் சட்ட உதவிக் குழுவின் உறுப்பினரான அஷ்ரஃப் வெங்கட் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "2011-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது நாங்கள் அந்தக் குழந்தையின் தந்தையிடம் பேசத் தொடங்கினோம். 2024 ஜூனில் தான் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது." என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் அப்போதைய வெல்ஃபேர் அதிகாரி யூசுஃப் குன்னம்மால் உடன் இணைந்து குழு உறுப்பினர்களும் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.
இதனுடன் சிறுவனின் குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்பு பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டன.
2019-ஆம் ஆண்டு அக்டோபரில் தான் வழக்கறிஞர் மூலம் தீவிரமான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக யூசுஃப் குன்னம்மால் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "அக்டோபர் 2023-இல் ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தை அடைந்தோம். அப்போது தான் குடும்பம் 15 மில்லியன் சௌதி ரியால் அல்லது இந்திய நாணய மதிப்பில் ரூ.34 கோடியை (அப்போதைய நிலவரப்படி) குருதிப் பணமாக பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டனர்." என்றார்.
அவ்வளவு பெரிய தொகையை ரஹிமின் குடும்பத்தால் திரட்ட முடியாது என்பதை மனதில் வைத்து 'அப்துல் ரஹிம் சட்ட உதவிக் குழு' ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யபப்ட்டது.
"முதல் சில வாரங்கள், நிதி திரட்டும் செயலி மூலமாக ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை மட்டுமே கிடைத்தது. பின்னர் திடீரென உள்ளூர் சேனல்கள், யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளுயென்சர்கள் மூலமாக தகவல் பரவியது. கோவில் மற்றும் தேவாலயங்களில் இருந்தும் கூட எனது சகோதரனுக்கு நிதி திரட்ட அழைத்து விடுத்தனர்," என்றும் நசீர் தெரிவிக்கிறார்.
தொழிலதிபர் பாபி செம்மனூர் (செம்மனூர் ஜுவல்லர்ஸ்) ரூ.1 கோடி நிதி வழங்கியதுடன், மேலும் நிதி திரட்டுவதற்காக திருவனந்தபுரத்தில் பேருந்து ஓட்டினார்.
அரசியல் கட்சிகள் மற்றும் மலையாள திரையுலக பிரபலங்களும் இதற்கு பங்களிப்பு செய்தனர்.
47 கோடி ரூபாய் திரண்டது
2024-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிதி திரட்டும் செயலி தொடங்கப்பட்டதாக அஷ்ரஃப் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த தொகை ரூ.34 கோடியாக அதிகரித்தது. அது ரமலானின் 27வது நாள். அதனால் தான் மக்கள் நன்கொடை வழங்கியிருப்பார்கள். இந்த இலக்கை அடைந்த பிறகு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது." என்றார்.
அந்தச் சம்பவத்தை விவரித்த அஷ்ரஃப், "மக்கள் தொடர்ந்து அந்தக் கணக்கிற்கு நன்கொடை வழங்கினர். மொத்த தொகை ரூ.47 கோடி ஆக அதிகரித்தது. அந்த வங்கி கணக்கில் தற்போது ரூ.13 கோடி உள்ளது. ரஹிம் திரும்பி வந்த பிறகு அந்த கூடுதல் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை குழு முடிவு செய்யும்." என்று தெரிவித்தார்.
அந்தக் குழு 'குருதிப் பணத்தை' வெளியுறவு அமைச்சகத்திடம் வழங்கியது. அவர்கள் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கினர்.
"அதற்கான காசோலை ரியாத் ஆளுநர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்று நீதிமன்றம் அறிவித்தது," என்கிறார் அஷ்ரஃப்.
"வழக்கறிஞரின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. அவர் அந்த இளைஞரின் குடும்ப உறுப்பினரும் கூட," எனக் கூறுகிறார் யூசுஃப் குன்னம்மால்.
இந்திய தூதரகத்தின் ஓய்வுபெற்ற இந்த அதிகாரி, சௌதி அரேபியாவில் ஒன்பது இந்தியர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்.
ரஹிமைத் தவிர இந்த ஒன்பது பேரில் பஞ்சாப், பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கேரளத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரும் அடங்குவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு