You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய அரசின் சிபிஎஸ்இ அறிவிப்பை அண்ணாமலை எதிர்ப்பது ஏன்?
சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 1 முதல் மூன்று மொழிகளைத் தங்கள் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் படிக்க வேண்டும் எனவும் அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, "கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்குவது, தற்போதிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டில் இருந்துதான் அமல்படுத்தப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், கடந்த வாரம் சிபிஎஸ்இ அனைத்து இணைப்புப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டில் இருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாக தமிழக மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், 2026-27 அல்லது 2029-30 என எந்த கல்வியாண்டாக இருந்தாலும், மாணவர்களுக்கு மும்மொழிப் பாடத் திட்டத்தைக் கொண்டு வருவதால் எவ்வித பயனும் விளைந்துவிடப் போவதில்லை என்றும் அது அவர்களுக்குக் கூடுதல் சுமையாகவே இருக்கும் என்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு விமர்சிக்கிறார்.
உண்மையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள சமீபத்திய சுற்றறிக்கையில் என்ன இருக்கிறது?
சிபிஎஸ்இ அறிவிப்பில் இருப்பது என்ன?
சிபிஎஸ்இ கடந்த மே 15ஆம் தேதியன்று வெளியிட்ட இந்த சுற்றறிக்கையில், தேசிய கல்விக் கொள்கை 2020, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023 ஆகியவற்றுக்கு இணங்க 2026-27 கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்புக்கான மொழிப் பாடத் திட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, "ஜூலை 1, 2026 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும். அவற்றில் குறைந்தது இரண்டு மொழிகளேனும் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்" என்று வாரியம் தெரிவித்துள்ளது.
அதோடு, இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே, மாணவர்கள் ஒரு வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்வு செய்யலாம் அல்லது அதைக் கூடுதலான நான்காவது மொழியாகவே படிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒன்பதாம் வகுப்புக்கான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் (NCE) பாடத் திட்டத்துடன் தனது பாடத் திட்டத்தைச் சீரமைப்பதற்கான இடைக்கால அணுகுமுறையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சிபிஎஸ்இ கூறியுள்ளது.
மேலும், "மூன்றாவது மொழிக்குரிய ஒன்பதாம் வகுப்புக்கான பிரத்யேக பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும் வரை, மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் மூன்றாவது மொழிக்குரிய ஆறாம் வகுப்பு பாடப் புத்தகங்களைப் பயன்படுத்துவார்கள்.
மேலும், சிறுகதைகள், செய்யுள்கள், மாநில இலக்கியப் படைப்புகளை இந்தப் பாடப் புத்தகங்களுடன் கூடுதலாகச் சேர்க்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான வழிகாட்டுதல்கள் ஜூன் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்" என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும், 19 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளுக்கான பாடப் புத்தகங்கள் ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று அந்தச் சுற்றறிக்கை கூறுகிறது.
"பிற இந்திய மொழிகளுக்கு, பள்ளிகள் முன்பு பின்பற்றியதைப் போலவே எஸ்.சி.ஆர்.டி மற்றும் மாநில அளவிலான புத்தகங்களைப் பயன்படுத்தலாம்."
ஆசிரியர் பற்றாக்குறை குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், "தகுதியான மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பள்ளிகள், சம்பந்தப்பட்ட மொழியில் செயல்முறைத் திறன் கொண்ட பிற பாட ஆசிரியர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்தலாம்" என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதனுடன், இந்தக் காலகட்டத்தில், பள்ளிகளுக்கு இடையிலான வளப் பகிர்வு முறை, இணையவழி கற்பித்தல் ஆதரவு, ஓய்வுபெற்ற மொழி ஆசிரியர்கள் மற்றும் தகுதிவாய்ந்த முதுகலைப் பட்டதாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டு இருப்பதாக சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக, மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு அளவில் மூன்றாவது மொழிக்கான வாரியத் தேர்வு நடைபெறாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள சிபிஎஸ்இ, அதற்கான மதிப்பீடுகள் முழுமையாகப் பள்ளி சார்ந்ததாகவும், இன்டர்னல் மதிப்பீடுகளாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளது. இருப்பினும், மூன்றாவது மொழியில் மாணவர்களின் செயல்பாடு சிபிஎஸ்இ சான்றிதழில் இடம்பெறும் என்பதையும் சுற்றறிக்கை உறுதி செய்துள்ளது.
"தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்கும் வகையிலும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த இடைக்கால நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக" வாரியம் வலியுறுத்தியுள்ளது.
விமர்சிப்பது ஏன்?
இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 2029-30 கல்வியாண்டில் இருந்து மும்மொழிப் பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது.
அப்போது அதைக் கடுமையாக எதிர்த்துப் பேசிய முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், "தேசிய கல்விக் கொள்கை 2020-உடன் இணைந்த, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் வெளியிடப்பட்ட பாடத்திட்டக் கட்டமைப்பு, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட, ஆழ்ந்த கவலைக்குரிய மொழித் திணிப்பு முயற்சி.
'இந்திய மொழிகளை' ஊக்குவிப்பதாகக் கூறிக்கொண்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்தியாவின் வளமான, பன்முக மொழிப் பாரம்பரியத்தைப் புறக்கணிப்பதுடன், ஹிந்திக்கு முன்னுரிமை அளிக்கும் செயல்திட்டத்தை ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகிறது. மும்மொழிச் சூத்திரம் என்பது, உண்மையில், ஹிந்தி பேசாத பிராந்தியங்களுக்கு அதை விரிவுபடுத்துவதற்கான ஒரு மறைமுகமான வழிமுறை," என்று விமர்சித்திருந்தார்.
அப்போது, "மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் நோக்கங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத விஷயத்தை பற்றிப் புகார் கூறுவதாக" அண்ணாமலை கூறியிருந்தார்.
மேலும், "2026-27 கல்வியாண்டுக்காக வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ இடைநிலைப் பள்ளி பாடத் திட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று மொழிகளில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் வழங்கப்படவுள்ள மொழிகளில் இருப்பதாக சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. இதில் ஹிந்தி திணிக்கப்படுவது பற்றிய கேள்வி எங்கே எழுகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள சிபிஎஸ்இ அறிக்கையைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, அதற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், "ஏப்ரல் மாதம், மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பில் இருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய, கலாசார மரபை, சிறு வயதிலேயே குழந்தைகள் அறிந்துகொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
அப்போதைய அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்குவது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தற்போதைய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டில் இருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிபிஎஸ்இ தனது முந்தைய அறிவிப்பை மீறியுள்ளது. சிபிஎஸ்இ அமைப்பின் இந்தத் திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என்று கூறியுள்ளார்.
அதற்கான காரணத்தைத் தனது அறிக்கையில் விளக்கிய அண்ணாமலை, "இந்தப் பாடத்திட்ட நடைமுறை ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டுமென எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களுடைய மொத்த கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்தப் புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள் கட்டாயமாக்கப்படும் என்ற திட்டத்தை, முன்பே அறிவித்தப்படி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றும் கோரியுள்ளார்.
'மும்மொழிக் கல்வி தேவையற்ற சுமை'
மறுபுறம், 2026-27, 2029-30 என எந்தக் கல்வியாண்டில் கொண்டு வந்தாலும், மும்மொழிப் பாடத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு எந்தவித பயனும் விளைந்துவிடப் போவதில்லை என்று கூறுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
"மூன்றாவதாக மற்றுமொரு மொழியைப் படிப்பதால் மாணவர்கள் சமூகத்தில் மேம்படுவதாகவோ, அவர்களுடைய பொருளாதார நிலை மாறும் என்றோ, வேலைவாய்ப்பில் நிச்சயத்தன்மை இருப்பதாகவோ உறுதியான தரவுகள் அல்லது ஆய்வுகள் ஏதேனும் இருக்கிறதா? அல்லது, மூன்றாவது மொழியைப் படிப்பதால் அறிவியலில் மேலும் தெளிவுபெற முடியும் அல்லது வியாபாரத்தில் வளர முடியும் என்று ஏதாவது ஆதாரம் உள்ளதா? எந்த அடிப்படையில் கூடுதலாக, மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பதால் மாணவர்கள் பயனடைவதாகக் கூறுகிறார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
மேலும், "தேசிய கல்விக் கொள்கை 2020இல் சொல்லப்பட்டதால் மாணவர்கள் நலனில் அக்கறையின்றி இது செய்யப்படுகிறது. அண்ணாமலை கூறுவது போல நேரம் கொடுத்து மும்மொழிப் பாடத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அது மாணவர்களுக்குப் பெரிய சுமையாக மட்டும்தான் இருக்குமே தவிர, அதனால் பயனேதும் இல்லை," என்றும் அவர் விமர்சித்தார்.
கூடுதலாக, செயற்கை நுண்ணறிவு, அறிவியல் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதே இதைவிட முக்கியமானது என வலியுறுத்திய அவர், "அடிப்படையில், ஒரு மின்னஞ்சலை உருவாக்குவது போன்ற தொழில்நுட்ப ரீதியான வாழ்வியல் செயல்பாடுகளுக்கு ஹிந்தியோ அல்லது பிற இந்திய மொழிகளோ போதும் என்ற நிலை இருந்தால், அவற்றைக் கூடுதலாகக் கற்பது உதவக்கூடும்.
அப்படி எவ்வித நடைமுறைப் பயன்களும் இல்லாத நிலையில், மாணவர்களுக்கு மேலதிக சுமையை ஏற்றிவைத்து, அவர்களின் நேரத்தை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இத்தகைய திட்டத்தைக் கொண்டு வருவது, அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதிக்கவே செய்யும்," என்று குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு