ராஜிநாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கலா? எடப்பாடி பழனிசாமி தரப்பின் புதிய அஸ்திரம்

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அ.தி.மு.க தலைமையின் உத்தரவை மீறி த.வெ.க அரசுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களில் நான்கு பேரின் ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் ஏற்றுக் கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது.

"தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு நிலுவையில் உள்ளபோது அவர்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது சட்டத்துக்கு முரணானது" என்கிறார், அ.தி.மு.க சட்டப்பேரவைக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

இந்த விவகாரத்தில் 2019 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பையும் அ.தி.மு.க மேற்கோள் காட்டியுள்ளது.

தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்தது. ஆனால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை அக்கட்சி பெறவில்லை.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன,

மே 13 ஆம் தேதியன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசை ஆதரித்து அ.தி.மு.கவின் 25 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

முன்னதாக, 'த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்' என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதனை மீறி செயல்பட்ட உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டப்பேரவை தலைவரிடம் அ.தி.மு.க கடிதம் கொடுத்தது.

'சட்டத்துக்கு முரணானது'

இந்தக் கடிதம் மீது சட்டப்பேரவை தலைவர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இந்தநிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்வதாகக் கூறி சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கடிதம் அளித்தனர்.

இந்தக் கடிதம் ஏற்கப்பட்டு நான்கு தொகுதிகளும் காலியானதாக அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான்கு பேரின் கடிதங்களை சட்டப்பேரவை தலைவர் ஏற்றுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க் கிழமையன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க சட்டப்பேரவைக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டப்பேரவை தலைவரிடம் கடிதம் கொடுத்தோம்" என்கிறார்.

"நாங்கள் அளித்த கடிதம் ஆய்வில் உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் பேட்டியளித்தார். அப்படியிருக்கும்போது அவர்களின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டது சட்டத்துக்கு முரணானது" எனவும் அவர் கூறியிருந்தார்.

அடுத்துப் பேசிய அ.தி.மு.க எம்.பி இன்பதுரை, "சட்டமன்ற விதி 21ன்படி தனக்கு அதிகாரம் உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் கூறுகிறார். அரசிதழில் வெளியாவதற்கு முன்பே ராஜிநாமாவை ஏற்றதாக சட்டப்பேரவை தலைவர் அறிவித்தது சரியல்ல" எனக் கூறினார்.

"அரசிதழில் வெளிவருவதற்கு முன்னரே த.வெ.க அமைச்சரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏக்கள் சந்திக்கின்றனர். அவர்களுக்கு சால்வை, உறுப்பினர் அட்டை கொடுத்ததே வரவேற்பு தான்" எனவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய இன்பதுரை, "இரவு எட்டு மணிக்கு மேல் இணைப்பு நாடகத்தை நடத்தினர். அப்போது அரசிதழில் அறிவிப்பு வரவில்லை. அவர்கள் இன்னொரு கட்சியில் சேர்ந்துவிட்டனர். அவர்களின் ராஜிநாமாவை ஏற்கக் கூடாது" எனக் கூறினார்.

"இவ்வளவு அவசரம் ஏன்?" - அப்பாவு

இதே கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பதவி நீக்கம் செய்யுமாறு மனு அளித்துள்ளனர். அது நிலுவையில் உள்ளபோது நான்கு பேரின் ராஜிநாமாவை ஏற்பதில் அவசரம் காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறியுள்ளார்.

வெளியில் இருந்து பார்க்கும்போது ஆளும்கட்சிக்கு சாதகமாக சட்டப்பேரவை தலைவர் செயல்படுவது போல தெரிவதாகக் கூறியுள்ள அப்பாவு, "சட்டப்பேரவை தலைவருக்கு அதிக அதிகாரங்கள் இருந்தாலும் இப்படி வெளிப்படையாக செயல்படுவது நியாயமா எனத் தெரியவில்லை" என்கிறார்.

"அ.தி.மு.கவில் யார் கொறடா எனக் கூறாமலேயே நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை சட்டப்பேரவை தலைவர் நடத்தியிருக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும்போது ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது போல தெரிகிறது" என்கிறார் அப்பாவு.

'சட்டப்பேரவை தலைவர் முடிவே இறுதியானது' - தனபால்

இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபால், "தனது பதவியை ராஜிநாமா செய்ய விரும்புவதாக கைப்பட ஒருவர் எழுதிக் கொடுத்தால் அதை சட்டப்பேரவை தலைவர் ஏற்க வேண்டும். அதில் எதாவது சிக்கல் இருந்தால் நீதிமன்றத்தின் மூலம் தான் தீர்வைப் பெற முடியும்" எனக் கூறுகிறார்.

"அ.தி.மு.க மனு பரிசீலனையில் உள்ளபோது ராஜிநாமாவை ஏற்பது சரியல்ல" என்கிறார்களோ என்றோம். "ராஜிநாமா கடிதத்தை பரிசீலனையில் வைத்திருக்க முடியாது. அதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்" என்கிறார் தனபால்.

"சட்டப்பேரவை தலைவர் எடுக்கும் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். சபையைப் பொறுத்தவரையில் சட்டப்பேரவை தலைவர் எடுக்கும் முடிவு இறுதியானது" என்கிறார் தனபால்.

'எனக்கு காலக்கெடு விதிக்க முடியாது' - ஜே.சி.டி.பிரபாகர்

ராஜிநாமா சர்ச்சை குறித்த கேள்விகளுக்கு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.

"என்னிடம் மனு கொடுத்துள்ளனர். மூன்று பக்க மனுவை முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

நீதிமன்றத்தை நாடுவோம் என அ.தி.மு.க கூறியுள்ளது குறித்துப் பேசிய சட்டப்பேரவை தலைவர், "மனு கொடுத்த பிறகு என்னுடைய முடிவுக்காக காத்திருக்கலாம் அல்லது அவர்கள் விருப்பப்படி என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் குறுக்கிட முடியாது. எனக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது" என்கிறார்.

"ராஜிநாமா ஏற்கப்பட்டதாக கூறிவிட்டு இப்போது அ.தி.மு.க அளித்த மனு ஆய்வில் உள்ளதாகக் கூறுவது முரணாக இல்லையா?" என செய்தியாளர்கள் கேட்டபோது, "ராஜிநாமா என்பது சொந்த விருப்பம். அது முறையாக உள்ளதா என்பதைப் பார்ப்பது தான் என்னுடைய பணி" எனவும் தெரிவித்தார்.

'பதவி பறிபோகும் என்பதால் சமரசம்'

"பாரபட்சமாக நடந்து கொள்ள மாட்டேன் எனக் கூறிவிட்டு அதை சட்டப்பேரவை தலைவர் கடைபிடிக்கவில்லை என்பதையே இதன்மூலம் பார்க்க முடிகிறது" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் சத்திய சந்திரன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என எந்தத் தேதியில் அ.தி.மு.க தலைமை கடிதம் கொடுத்ததோ அப்போதே கட்சித் தாவல் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவே பார்க்க முடியும்" என்கிறார்.

"வாக்கெடுப்பு தொடர்பாக கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அது தான் நிலைப்பாடு. தங்களின் பதவி பறிபோய்விடும் என்பதால் தான் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியுடன் சமரச உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

"ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஏற்காமல் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்." என்கிறார் சத்திய சந்திரன்.

இதையே கர்நாடக சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீலின் வழக்கின் தீர்ப்பு சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதே தீர்ப்பை செய்தியாளர் சந்திப்பில் மேற்கோள் காட்டிய அ.தி.மு.க எம்.பியும் அக்கட்சியின் வழக்கறிஞர் அணியின் செயலாளருமான இன்பதுரை, "கட்சித் தாவல் தடைச் சட்டம் இருக்கும்போது ராஜிநாமா செய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்பதை பாலாசாகேப் பாட்டீல் வழக்கின் தீர்ப்பு கூறுகிறது" எனத் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு வழக்கின் தீர்ப்பு என்ன?

2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்தது. ஆனால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால், 14 மாதங்களில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை குமாரசாமி அரசு நடத்தியது. இதில் 17 பேர் பங்கேற்காததால் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்த சில மாதங்களில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக, 17 எம்.எல்.ஏக்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவராக இருந்த ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

முன்னதாக, தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்பதை உணர்ந்த பல எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்தனர். ஆனால், அதனை சட்டப்பேரவை தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனை எதிர்த்து காக்வாட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் உள்பட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஓர் உறுப்பினர் தனது ராஜிநாமா சமர்ப்பித்துவிட்டதால் மட்டும் தகுதிநீக்கத்தின் களங்கம் மறைந்துவிடாது. கட்சித் தாவல் என்பது ஓர் உறுப்பினர் தகுதிநீக்கம் அடைந்த தேதியுடன் தொடர்புடையது' எனத் தீர்ப்பில் கூறியது.

ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நிலுவையில் இருக்கின்ற அல்லது வரவிருக்கும் தகுதிநீக்க நடவடிக்கையைப் பயனற்றதாக்கிவிடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'ராஜிநாமாவை பரிசீலிக்கும்போது அது உண்மையானதா என்பதை மட்டுமே சட்டப்பேரவை தலைவரால் உறுதி செய்ய முடியும்' எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 'சுயவிருப்பத்தின் பேரில் ஒருவர் ராஜிநாமா செய்கிறார் என்றால் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை' எனக் கூறியுள்ளது.

'ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் பரிசீலிக்கும்போது வேறு எந்தவித புறக் காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதை அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாது. சட்டப்பேரவை தலைவரின் முடிவு என்பது நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்பட்டது' என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர் தனது பதவிக்காலம் முடியும் வரை அல்லது மீண்டும் தேர்வு செய்யப்படும் வரையில் அமைச்சர் பதவி உள்பட ஊதியம் பெறும் வேறு எந்த அரசியல் பதவிகளையும் வகிக்கக் கூடாது என அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 'சட்டப்பேரவையின் பதவிக் காலம் முழுவதும் அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களாகவே தொடர்வார்கள்' எனவும் கர்நாடக சட்டப்பேரவை தலைவராக இருந்த ரமேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், '17 பேரின் தகுதி நீக்கம் செல்லும். அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்' எனவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதன் மூலம் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி தொடர்ந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு