விதை குறைவு, அதிக சதை, நீண்ட நாள் கெடாமல் இருக்கும் சீதாப்பழம் நமக்கு எப்படி கிடைக்கிறது?

    • எழுதியவர், பிரீதி குப்தா
    • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அசோகா சிவாரெட்டி. தென்னிந்தியாவின் வறட்சி நிலவும் கோலார் மாவட்டத்தில் விவசாயத்தையே வாழ்வாதரமாக கொண்டு வாழ்க்கை நடத்துவது கடினமாக இருந்தது.

"இந்த பகுதியில் 60 முதல் 70 சென்டிமீட்டர் மட்டுமே மழை பெய்கிறது. இதனால் விவசாயிகள் 1,300 அடி வரை ஆழ்துளை கிணறுகளை தோண்டுகிறார்கள். அவர்களின் பெரும்பாலான பணம் தண்ணீரைத் தேடியே செலவாகிறது," என்று அசோகா சிவார்ரெட்டி கூறுகிறார்.

தொடர்ந்து விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவரது குடும்பம் விவசாயத்தைக் கைவிட்டு 2005-ல் பெங்களூரு நகரத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு காய்கறி கடையைத் தொடங்கியது.

சிவாரெட்டி செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளராக மாறினாலும், விவசாயத்தின் மீதான அவரது ஆர்வம் ஒருபோதும் குறையவே இல்லை.

2018-ஆம் ஆண்டில் தங்களுடைய குடும்ப விவசாயத்தை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்த அவர், அதனை மிகவும் அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் அணுகினார்.

"மிகக் குறைந்த தண்ணீரில் உயிர்வாழக்கூடிய, மழையை நம்பி வளரக்கூடிய, பூச்சிக்கொல்லிகளை அதிகம் சார்ந்திருக்காத ஒரு பயிரைத் தேடிக்கொண்டிருந்தேன்" என்று அவர் தன்னுடைய திட்டத்தை பற்றி தெரிவித்தார்.

இதற்கு சீதாப்பழம் சிறந்த தேர்வாகத் தோன்றியது. பெரிதாக இருக்கும் சீதாப்பழத்தின் கிரீம் போன்ற, இனிப்பான சதைப்பகுதி ஓரளவிற்கு 'கஸ்டர்ட்' போன்ற சுவையைத் தரும் - அதனால்தான் சீதாப்பழத்தை ஆங்கிலத்தில் கஸ்டர்ட் ஆப்பிள் என்று அழைக்கின்றனர்.

சிவாரெட்டியின் பூர்வீக விவசாய நிலம் அமைந்திருந்தப் பகுதியில் சீதாப்பழ மரங்கள் தானாகவே காடுகளில் வளர்ந்திருந்தன. உள்ளூர் மக்கள் அந்தப் பழங்களை அறுவடை செய்து சந்தையில் விற்று வந்தனர். அது விவசாயம் செய்ய முடிவெடுத்த சிவாரெட்டிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

சீதாப்பழ சாகுபடியைத் தொடங்கிய அவர், விளைச்சலை அதிகரிக்க, வழக்கமாக மரங்களுக்கு நடுவில் விடப்படும் தொலைவை குறைத்து மிகவும் நெருக்கமாக நட்டார்.

மேலும், வெவ்வேறு நன்மைகளைக் கொண்ட மூன்று ரகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்தார். இந்த அணுகுமுறை தற்போது நல்ல பலனைத் தருவது போல் தெரிகிறது.

"கடந்த ஆண்டு சுமார் 20 டன்கள் விளைச்சல் கிடைத்தது. இந்த ஆண்டு, அது சுமார் 25 டன்களாக உள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சீதாப்பழத்திற்கான தேவை அதிகமாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

சீதாப்பழ சாகுபடியில் உள்ள சவால்களும் தீர்வுகளும்

வறண்ட சூழ்நிலையிலும் உயிர்வாழக்கூடியவை என்றாலும் சீதாப்பழ சாகுபடியில் பல சவால்கள் இல்லாமலும் இல்லை.

பாரம்பரிய ரகமான பாலங்கார் வகை சீதாப்பழம், மிகக் குறுகிய ஆயுட்காலம் கொண்டது. சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால், இது விற்பனைக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும், அதிகப்படியான விதைகள் இருக்கும் இந்த ரகம், நுகர்வோருக்கு ஈர்ப்பானதாக இருப்பதில்லை.

"பாரம்பரிய ரக சீதாப்பழங்கள் நல்ல சுவையானதாக இருந்தாலும், அவற்றில் சதைப்பகுதி குறைவாகவும், விதைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். அதோடு அவை மிகவும் விரைவாக கெட்டுப் போய்விடுகின்றன" என்று பெங்களூவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சக்திவேல் கூறுகிறார்.

இவரது குழுவினர் 'அர்கா சஹான்' என்ற புதிய கலப்பின சீதாப்பழத்தை உருவாக்கினார்கள். இது சாதாரண அறை வெப்பநிலையில் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். மேலும் இதில் விதைகள் குறைவாகவும் சதைப்பற்று அதிகமாகவும் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இந்த ரகம் தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளது.

"காட்டு ரகங்களில் 30 சதவிகிதமாக இருந்த சதைப்பகுதியின் அளவு, அர்கா சஹான் போன்ற கலப்பின வகைப் பழங்களில் 70 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது விளைச்சலை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதால் விவசாயிகள் கூடுதல் நிலத்தில் பயிரிடமாலேயே நல்ல லாபத்தைப் பெற உதவுகிறது" என்கிறார் சக்திவேல்.

ஐஸ்கிரீம், மில்க்ஷேக் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சீதாப்பழத்தை பரவலாகப் பயன்படுத்தும் வகையில், பழத்தைப் பதப்படுத்துவதற்கும் அதன் சதைப்பகுதியைத் தனியாக எடுப்பதற்கும் சிறந்த வழிகளை இவரது குழுவினர் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

சீதாப்பழத்திலிருந்து எடுக்கப்படும் சதைப் பகுதியானது மிக விரைவாக பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது என்பதுதான் சிக்கல். அதை சரிசெய்ய இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இந்தச் சதைப்பகுதி நீண்ட நேரத்திற்கு அதன் பால் போன்ற வெள்ளை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் புதிய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிசோதித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சீதாப்பழ உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை சாகுபடி செய்கிறது.

மகாராஷ்டிர மாநில விவசாயி நவ்நாத் மல்ஹாரி கஸ்பதே பல தசாப்தங்களாக இப்பழத்தை சாகுபடி செய்து வருகிறார்.

அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து விதைகளைச் சேகரித்து, அவற்றை தனது பண்ணைக்குக் கொண்டு வந்து கலப்பு மகரந்தச் சேர்க்கை செய்தார்.

"சீதாப்பழத்தில் யாருமே கவனம் செலுத்தவில்லை அல்லது ஆராய்ச்சி செய்யவில்லை, அதனால் நான் இதில் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்தேன். ஒரு புதிய ரகத்தை உருவாக்க 12 முதல் 15 ஆண்டுகள் ஆகும். இது விரைவாக நடக்கும் வேலை அல்ல, பல தசாப்த கால சோதனை முயற்சி" என்று அவர் கூறுகிறார்.

அவரது கடின உழைப்பின் விளைவாக 'NMK-01' (அவரது பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டு பெயரிடப்பட்டது) என்ற ரகம் உருவானது. இது அதிக விளைச்சலைத் தருவதற்காப் பெயர் பெற்றது. இது 2014-ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது.

"நாங்கள் இப்போது கிட்டத்தட்ட 50 ஏக்கரில் சீதாப்பழ சாகுபடி செய்கிறோம். ஏக்கருக்கு சுமார் 10 டன்கள் விளைச்சல் கிடைக்கிறது. எளிதில் கெட்டுப்போகாத இந்த மேம்படுத்தப்பட்ட ரகம், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினோம், ஐரோப்பாவிற்குக்கூட அனுப்பினோம். இதற்கு முன்பு இந்த அளவிற்குப் பெரிய அளவில் சீதாப்பழ ஏற்றுமதி நடந்ததே இல்லை" என்று அவர் கூறுகிறார்.

கஸ்பதேவின் ஆராய்ச்சிப் பணிகள் இப்போதும் தொடர்கின்றன. அவர், சிறந்த தோற்றம் மற்றும் நோய்களுக்கு எதிரான அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட புதிய ரக சீதாப்பழத்தை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

ஏற்றுமதி வாய்ப்பு

மனோஜ் குமார் பராய் என்பவர் 'NMK-01' ரக சீதாப்பழங்களை அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்.

"ஏற்றுமதிக்கு நாங்கள் NMK-01 ரகத்தையே விரும்புகிறோம். ஏனெனில் பிற ரகங்களுடன் ஒப்பிடும்போது இது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை, தடிமனான தோல், அதிக சதை மற்றும் கூடுதல் இனிப்புச் சுவையைக் கொண்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், இவ்வளவு மென்மையான ஒரு பழத்தை ஏற்றுமதி செய்வதற்கு மிகவும் நுணுக்கமான செயல்முறைகள் தேவைப்படுகின்றன.

"அறுவடை செய்யும் நேரம், பேக்கிங் செய்யும் இடங்களுக்கு கொண்டு செல்லுதல், விமான நிலையத்திற்கு மாற்றுதல், விமானங்கள், சுங்க அனுமதி என அனைத்தையும் நாங்கள் துல்லியமாகத் திட்டமிட வேண்டும், இதில் ஒவ்வொரு மணி நேரமும் முக்கியமானது."

வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது என்பது சீதாப்பழத்தை கையாள்வதில் மிக முக்கியமான ஒன்றாகும்.

"சீதாப்பழம் வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. மேலும் சிறிது நேரம் வெப்பத்தில் வைத்திருந்தால்கூட, அது பழம் கெடாமல் இருக்கும் நாட்களைக் குறைத்துவிடும்" என்கிறார் அவர்.

கடுமையான வெப்பத்தின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக, சீதாப்பழத்தை சாலை வழியாக கொண்டு செல்வது பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே செய்யப்படுகின்றன.

"மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில், வெப்பநிலை 40 டிகிரி வரை உயரக்கூடும். பயணத்தின் போது கூட அது 30 முதல் 35 டிகிரியை எட்டலாம். இது இப்பழத்திற்கு உகந்தது அல்ல."

பழங்கள் பேக் செய்யப்படுவதற்கு முன்பு ஐந்து மணி நேரம் குளிரூட்டப்படுகின்றன. பின்னர் அவை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, விமானம் மூலம் அனுப்பப்படும் முன் குளிர் அறைகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

பழங்களைப் பாதுகாக்கவும், அவை குளிர்ச்சியாக இருக்க உதவவும் பிரத்யேக அட்டைப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது அதிகளவிலான பழங்கள் சதைப்பகுதியாகவோ அல்லது தூள் வடிவிலேயே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது ஏற்றுமதித் துறைக்குக் கிடைத்த ஒரு "புரட்சி" என்கிறார் பராய்.

சீதாப்பழத்தின் கூழ் போன்ற சதைப்பகுதி வெளிநாடுகளில் உள்ள ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள், பேக்கரிகள் மற்றும் கஃபேக்களில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கூழை -18°C வெப்பநிலையில் சேமித்து கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், பழக்கூழை ஏற்றுமதி செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல.

இருப்பினும், சீதாப்பழத்தை பழமாக அனுப்புவதைவிட கூழாக அனுப்புவது விமானக் கட்டணத்தை குறைக்கிறது.

கோலாரில், சிவாரெட்டி முழுப் பழங்களை விற்பதுடன், அதன் சதைப்பகுதியையும் விற்பனை செய்து தனது வணிகத்தை விரிவுபடுத்த விரும்புகிறார்.

அறுவடை செய்த பழங்களில் விற்பனையாகாமல் மீதமாகும் பழங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சீதாபழத்தின் கூழை அதாவது சதைப்பகுதியை பதப்படுத்தும் பிரிவு ஒன்றை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், சதைப்பகுதியைத் தனியாக எடுத்து, அதை -20°C வெப்பநிலையில் குளிரூட்டுவதற்கான உபகரணங்களை வாங்க பெரும் முதலீடு தேவைப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

"சீதாப்பழம் ஒரு விசித்திரமான இடைவெளியை எதிர்கொள்கிறது. இதற்கான தேவை அதிகரித்து வருகிறது, ஆனால் இப்பயிர் இயற்கையிலேயே வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது என்பதால், இதன் விவசாயம் இன்னும் உயர் தொழில்நுட்பமாக மாறவில்லை. இது ஊட்டச்சத்து குறைந்த மண்ணிலும் வளரும், மிகக் குறைந்த தண்ணீரே போதுமானது மற்றும் மழையை நம்பியே உயிர்வாழும். விவசாயிகளுக்கு விலையுயர்ந்த நீர்ப்பாசனம், சென்சார்கள் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சூழல்கள் தேவைப்படுவதில்லை, எனவே தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது குறைவாகவே உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு