'சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர்' - 12 பேர் பலியான இலங்கை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை தெரிந்தது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இலங்கையின் ஹொரணை - அங்குருவாதோட்டை - படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இசுரு அனுஷ்க என்ற நபரினால் இந்த முதியோர் இல்லம் நடாத்தி செல்லப்பட்டுள்ளதுடன், அந்த நபர் போலீஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 11ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த முதியோர் இல்லத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை என்ன தெரியும்?

அங்குருவாதோட்டை - படகொட பகுதியிலுள்ள 'மவ்பிய சேவன சேனேஹசே கெதெல்ல' முதியோர் இல்லத்தில் நேற்று (03) பிற்பகல் பாரிய தீ பரவலொன்று ஏற்பட்டது.

இந்த தீ விபத்து தொடர்பில் தமக்க மாலை 5.59 அளவில் தகவல் கிடைக்கப் பெற்றதாக ஹொரணை தீயணைப்பு பிரிவு பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள நபர்களை பராமரிப்பதற்காக இரண்டு ஊழியர்கள் இருந்துள்ளதுடன், முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நபரொருவர் பராமரிப்பதற்காக குடும்பமொன்றிடமிருந்து மாதாந்தம் 35000 ரூபா பணம் பெறப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணைகளில் வெளியான தகவல்கள்

தீக்கிரையான முதியோர் இல்லம் தொடர்பான விசாரணைகளை நடாத்துவதற்காக ஹொரணை பிரதம நீதவான் இன்று (04) முற்பகல் சம்பவ இடத்திற்கு சமூகமளித்ததாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தீக்கிரையான முதியோர் இல்லத்திற்குள் 10 பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளனர்.

தீ பரவிய சந்தர்ப்பத்தில் முதியோர் இல்லத்திற்குள் சுமார் 69 பேர் இருந்துள்ளதாகவும், ஹொரணை தீயணைப்பு பிரிவு, போலீஸார், பிரதேசவாசிகளின் உதவியுடன் 51 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணைகள் நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் இந்த முதியோர் இல்லத்தின் பொறுப்பாளராக கடமையாற்றிய இசுறு அனுஷ்க பெரேரா போலீஸாரினால் கைது செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் போலீஸார் மற்றும் அரச பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் என்ன சொல்கின்றார்கள்?

இந்த தீ பரவிய சந்தர்ப்பத்தில் முதியோர் இல்லத்திலிருந்த நபர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

தீ பரவிய முதியோர் இல்லத்திற்குள் சிக்கியிருந்த நபர்கள் குளியலறையில் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததாகவும், சிலர் சங்கலியினால் கட்டப்பட்டிருந்தமையினால் அவர்களை காப்பாற்ற முடியாது போனதாகவும் தலஹேன - படகொட பகுதியைச் சேர்ந்த சந்தயுரு ஆகாஷ் என்ற இளைஞன் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

'என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய அக்காவை அழைத்து செல்வதற்காக இந்த இடத்திற்கு வருகைத் தந்தார். இந்த இடத்தில் பாரிய புகை பரவியதை அவர் அவதானித்துள்ளார். இந்த இடத்தில் தீ பரவுகின்றது, வருகைத் தருமாறு அவர் எம்மை அழைத்தார். நாங்கள் செல்லும் போது வீதியில் 500 பேர் வரை இருந்தார்கள். நாங்கள் இந்த இடத்தில் பாய்ந்து உள்ளே சென்றோம். சிலர் குளியலறைக்குள் பின்புறத்தில் கூச்சலிடும் சத்தம் கேட்டது. நாங்கள் கூரையை கழற்றி எடுத்து, அதனூடாக உள்ளே சென்று அங்கிருந்த ஒவ்வொருவராக காப்பாற்றினோம். அவர்களை பிடிக்கும் போது அவர்களின் தோல் எமது கைகளுக்கு வந்தது. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தான் காப்பாற்றினோம். ஒருவர் தீ பரவும் பகுதிக்குள் ஓடினார். நான் அவரை பின்தொடர்ந்து சென்று காப்பாற்றினேன்.

சிலர் சங்கிலியிட்டு கட்டப்பட்டிருந்தனர். சுமார் 6 அல்லது 7 பேர் அவ்வாறு இருந்தனர். அவர்களை காப்பாற்ற முடியாது போனது. ஒருவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். கால்களுக்கு சுமார் 6 அடி நீளமான சங்கிலி இடப்பட்டிருந்தது. காப்பாற்றிய சிலர் மீண்டும் தீக்குள் ஓடினார்கள்." என அவர் கூறினார்.

தான் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் தீ பரவியதை அவதானித்ததாகவும், அதன்பின்னர் தீயில் சிக்குண்டிருந்தவர்களை காப்பாற்றியதாகவும் படகொட பகுதியைச் சேர்ந்த அசேல விதுரங்க தெரிவிக்கின்றார்.

''நான் வீட்டில் இருக்கும் போது புகை செல்வதை அவதானித்தேன். நான் கீழே வந்து பார்க்கும் போது சிலர் கூரை மீதேறி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுக்கு உதவி செய்தேன். பின்புற கதவுக்கு அருகில் இருவர் கட்டப்பட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த போதிலும், கட்டியிருந்தமையினால் அவர்களை எம்மால் காப்பாற்ற முடியவில்லை. இந்த இடத்தில் வேலை செய்வதற்காக இருவர் இருந்தார்கள். அவர்கள் அங்கும் இங்கும் ஓடி தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த இடத்தின் முன்பக்கத்தில் இரும்பு கதவொன்று காணப்பட்டமையினால், அதனை திறந்துக்கொள்ள முடியாது போனது. உண்மையில் கவலையாக உள்ளது. ஏனென்றால், மனித உயிர் அல்லவா. அவர்கள் கட்டப்படாதிருந்திருந்தால், அவர்கள் தவிழ்ந்தேனும் வந்து தம்மை பாதுகாத்திருப்பார்கள்" என அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துக்கள்

இந்த முதியோர் இல்லத்தை நடாத்தி செல்லும் 'லொக்கு ஐயா" என அழைக்கப்படும் இசுறு அனுஷ்க என்ற நபரின் டிக் டொக் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தள கணக்குகளில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வாளர்கள் இருக்கின்றமையை பிபிசி சிங்கள சேவை அவதானித்துள்ளது.

இந்த முதியோர் இல்லத்திலுள்ள நபர்களுடன் வெளியிடப்படும் வீடியோக்கள் காரணமாக லொக்கு ஐயா என்ற இசுறு அனுஷ்கவினால் நடாத்தி செல்லப்படும் மவ்பிய சேவன முதியோர் இல்லம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

''வாழ்க்கையில் ஏதோ ஒரு பாவத்தை செய்துள்ளேன். என்னுடைய இரண்டு கண்களில் இவ்வாறான ஒன்றை பார்ப்பதற்கு என்னிடம் பாவம் செய்த இரண்டு கண்கள் இருக்கின்றன. நானும் இந்த வீட்டிற்குள்ளேயே தீக்கிரையாகியிருந்தால் என்று நினைக்கும் அளவிற்கு கவலையாக உள்ளது." என நேற்று (03) லொக்கு ஐயா தமது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார்.

இந்த வீடியோவிற்கு 6000திற்கும் அதிகமானோர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

'உள்ளே மக்கள் தீக்கிரையாகிக் கொண்டிருக்கும் போது, இந்த நபர் வீடியோ எடுக்கின்றார் எப்படி" என அநுராதா இந்திவரி என்ற யுவதி குற்றம் சுமத்தியுள்ளார்.

''இன்றைய காலத்தில் தமது பெற்றோரை வெளியில் அனுப்பியவர்களுக்கு அன்னதானம் வழங்கியவர் இந்த நபர் எவ்வளவு நல்லதொரு விடயத்தை செய்துள்ளார். பாவமான கதைகளை சொல்ல வேண்டாம்'' என மது கஜவீர என்ற நபர் கருத்துரைத்துள்ளார்.

69 நபர்களை தங்க வைக்கப்பட்டிருந்த மத்திய நிலையத்தில் போதுமான இடவசதி மற்றும் போதுமான பாதுகாப்பு இருந்துள்ளதாக என மேலும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தீயில் சிக்குண்டு உயிரிழந்த நபர்கள் சங்கிலியினால் கட்டப்பட்டிருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படவில்லை

இந்த முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என தேசிய முதியோர் செயலகம் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.

முதியோருக்கான தங்கியிருந்து பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நிறுவி நடத்தும் எந்தவொரு தன்னார்வ அல்லது பிற வகை நபரும், அந்த நிறுவனத்தில் 05 பேருக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்து பராமரிப்பு பெறுகின்றனர் என்றால், முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி அந்த நிறுவனம் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் பிபிசி சிங்கள சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படாது, அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வழிகாட்டல்களை பின்பற்றாது நடாத்தி செல்லப்பட்டமையினால் இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்குருவாதோட்டை போலீஸாருக்கு அறிவுறுத்தல் பிறப்பித்துள்ளதாக தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு