நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வாயு வெளியேற்றம் என்பது மிகவும் பொதுவான, ஆனால் மிகக் குறைவாகவே விவாதிக்கப்படும் உடல் செயல்பாடுகளில் ஒன்று.

அனைவருமே வாயுவை வெளியேற்றுகிறார்கள். பெரும்பாலான மக்கள் ஒரு நாளில் பல முறை, சில ஆய்வுகளின்படி எட்டு முதல் 25 முறை வரை, வாயு வெளியேற்றுகிறார்கள்.

அவை பெரும்பான்மை நேரங்களில் பிறரால் கவனிக்கப்படாமலே நிகழும். ஆனால், சில தருணங்களில் சுற்றி இருப்போரை அசௌகரியப்படுத்தும் வகையில் சத்தமாகவோ அல்லது துர்நாற்றத்துடனோ வாயு வெளியேறக்கூடும்.

சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?

குடல் வாயு வெளியேற்றம் என்பது என்ன?

மருத்துவ ரீதியாக, ஃப்ளாட்டுலன்ஸ் அல்லது ஃப்ளாட்டஸ் என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறையில், செரிமான அமைப்பில் இருந்து மலக்குடல் வழியாக வாயு வெளியேற்றப்படுகிறது.

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் மெட்லைன்ப்ளஸ் அண்ட் ஜான் ஹாப்கின்ஸ் மெடிசினின் கூற்றுப்படி, காற்றை விழுங்குவதன் மூலம், பெருங்குடலில் உள்ள உணவை பாக்டீரியாக்கள் நொதிக்கச் செய்வதன் மூலம் என செரிமானப் பாதையில் வாயு முக்கியமாக இரண்டு வழிகளில் உருவாகிறது.

பெரும்பாலான குடல் வாயு உண்மையில் வாசனையற்றது. இது முதன்மையாக நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் சில நேரங்களில் மீத்தேன் ஆகியவற்றால் ஆனதாக இருக்கும். இவற்றுக்கு மாறாக, குடல் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் மிகச் சிறிய அளவிலான கந்தகம் கொண்ட வாயுக்களில் இருந்துதான் துர்நாற்றம் வருகிறது.

இந்தக் கந்தக வாயுக்களில், ஹைட்ரஜன் சல்ஃபைட் என்பதுதான் மிகவும் மோசமான துர்நாற்றத்திற்குப் பெயர் பெற்றது. அழுகிய முட்டைகளின் வாசனைக்குக் காரணமாக இருப்பதும் இதே சேர்மம்தான்.

இரைப்பைக் குடலியல் தொடர்பான ஆய்வுகளில், குடல் வாயுவில் மிகச் சிறிய அளவில் மட்டுமே காணப்படும் கந்தகம் கொண்ட ஆவியாகும் கந்தக சேர்மங்கள், குறிப்பாக ஹைட்ரஜன் சல்பைடுதான் பெரும்பாலான துர்நாற்றத்திற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடல் வாயு குறித்த ஆரம்பக்கால முக்கிய ஆய்வுகளை மேற்கொண்ட இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் லெவிட் தலைமையிலான ஆய்வுக்குழு தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷன் என்ற ஆய்விதழில் வெளியிட்ட ஆய்வறிக்கையிலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடல் வாயு உற்பத்தியை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், குடல் வாயுவில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான அளவிலேயே துர்நாற்றத்தை உருவாக்கும் சேர்மங்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். ஆனால், மிகச் சிறிய அளவில் இருந்தாலும்கூட அவற்றால் கடுமையான வாசனையை உருவாக்க முடியும்.

குடல் வாயு கடும் துர்நாற்றத்தை வெளியிடுவது ஏன்?

இதற்கான பதில் பெரும்பாலும் ஒருவர் என்ன சாப்பிடுகிறார் மற்றும் அவரது குடல் நுண்ணுயிரிகள் அதை எவ்வாறு செயலாக்குகின்றன என்பதைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில உணவுகளில் கந்தகம் நிறைந்த சேர்மங்கள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவற்றை ஜீரணிப்பது சிறுகுடலுக்கு கடினமான பணியாக இருக்கும். இவ்வாறு ஜீரணிக்கப்படாத துகள்கள் பெருங்குடலை அடையும்போது, பாக்டீரியாக்கள் அவற்றை நொதிக்கச் செய்து வாயுக்களை வெளியிடுகின்றன.

"சில மாவுச்சத்துகள் சிறுகுடலில் செரிக்கப்பட்டு முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை" என்று அமெரிக்காவின் தேசிய நீரிழிவு, செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் அமைப்பு தனது இணையதளத்தில் விளக்கியுள்ளது. "அதற்குப் பதிலாக, அவை பெருங்குடலுக்குச் செல்கின்றன. அங்கு பாக்டீரியாக்கள் அவற்றைச் சிதைத்து வாயுவை உருவாக்குகின்றன." மேலும், பீன்ஸ், சில காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவை வாயுத் தொல்லைக்குப் பொதுவான காரணிகளாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

முட்டை, இறைச்சி, ப்ரொக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற கந்தகம் நிறைந்த உணவுகள், செரிமானத்தின்போது கந்தக சேர்மங்களை வெளியிடுவதால், அவை துர்நாற்றம் வீசும் வாயுவை உருவாக்கக்கூடும் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் கூறுகிறது. இவற்றுடன் "லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு பால் பொருட்களாலும் வாயு துர்நாற்றத்துடன் வெளியேறுவதில் பங்கு வகிக்கலாம்."

குடல் வாயு ஆய்வில் முன்னோடி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் மைக்கேல் லெவிட், கந்தகம் கொண்ட உணவுகள் ஹைட்ரஜன் சல்பைடு மற்றூம் அது தொடர்பான சேர்மங்களை உருவாக்கும் பாக்டீரியாக்களுக்கு எரிபொருளை வழங்குவதாக இரைப்பைக் குடலியல் ஆய்விதழில் விளக்கியுள்ளார். அதோடு, வாயுவின் அளவைவிட, இந்த வாயுக்களே வெளியேறும் துர்நாற்றத்திற்குக் காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒருவர் வாசனை ஏதுமின்றி அதிக அளவிலான வாயுவையும், அதேநேரம் மிகக் குறைந்த அளவிலான வாயுவைக்கூட அதிக துர்நாற்றத்துடனும் வெளியேற்றக்கூடும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வேறுபாடு, குடலுக்குள் வாழும் டிரில்லியன்கணக்கான நுண்ணுயிரிகளான குடல் நுண்ணுயிரித் தொகுதியின் அமைப்பைப் பொறுத்தது.

கடந்த 2023 ஜனவரியில், ஜர்னல் ஆஃப் ஃபன்ஷனல் ஃபுட்ஸ் என்ற ஆய்விதழில் வெளியான 'குடல் நுண்ணுயிரிகளால் நிகழும் குடல் வாயு உற்பத்தி - ஓர் ஆய்வுரை' என்ற ஆய்வுக் கட்டுரை, "பாக்டீராய்ட்ஸ், கிளாஸ்ட்ரிடியம், டெசல்ஃபோவிப்ரியோ, மெத்தனோபிரெவிபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் குடலுக்குள் வாயுக்களை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன" என்று கூறுகிறது.

குடல் நுண்ணுயிரித் தொகுப்பின் முக்கியப் பங்கு

கடந்த பத்து ஆண்டுகளில், வாயுத்தொல்லை என்பது வெறுமனே உணவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, செரிமான மண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையுடனும் அதற்குத் தொடர்புள்ளது என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொண்டுள்ளனர்.

பெருங்குடலில் ஒரு பெரிய நுண்ணுயிரிக் கூட்டம் உள்ளது. இது உடலால் தாமாக ஜீரணிக்க முடியாத கார்போஹைட்ரேட்டுகளை உடைப்பதற்கு உதவுகிறது. இந்தச் செயல்முறையின்போது வாயுக்கள் இயற்கையாகவே வெளியிடப்படுகின்றன.

அமெரிக்காவின் தேசிய நீரிழிவு, செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் அமைப்பின் தகவல்படி, சர்க்கரைகள், ஸ்டார்ச்கள், நார்ச்சத்துகள் போன்ற ஜீரணிக்கப்படாத கார்போஹைட்ரேட்டுகள் பெருங்குடலுக்குள் செல்கின்றன. "அங்கு பாக்டீரியாக்கள் அவற்றை நொதிக்கச் செய்து வாயுவை உருவாக்குகின்றன."

சிலரின் குடல் பாக்டீரியாக்கள் அதிக மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்கின்றன, மற்ற சிலருக்கு அவை அதிக கந்தக வாயுக்களை உற்பத்தி செய்யக்கூடும். சில பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களை உருவாக்குகின்றன, மற்ற சில நுண்ணுயிரிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன. நுண்ணுயிரிகளுக்கு இடையிலான இந்தச் சமநிலை, துர்நாற்றத்தின் வீரியத்தில் பங்களிப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

நேச்சர் ரிவ்யூஸ் காஸ்ட்ரோஎன்டராலஜி & ஹெபடாலஜி என்ற ஆய்விதழில் இதுகுறித்து வெளியான ஆய்வறிக்கைப்படி, ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களுக்கும், மெத்தனோஜென்கள் மற்றும் சல்பேட்டை குறைக்கும் பாக்டீரியாக்கள் போன்ற ஹைட்ரஜனை உட்கொள்ளும் நுண்ணுயிரிகளுக்கும் இடையிலான வினைபுரிதலின் விளைவாக குடல் வாயுக்கள் உருவாகின்றன.

இந்தக் குடல் நுண்ணுயிரித் தொகுப்புகள் தனிநபர்களிடையே வேறுபடுவது ஏன் என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர். மரபியல், உணவுமுறை, நுண்ணுயிர், தொற்றுகள், நீண்டகால உணவுப் பழக்கங்கள் எனப் பல்வேறு காரணிகள் ஒருவரின் குடல் நுண்ணுயிரிச் சூழலியலை வடிவமைப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

காற்றை விழுங்கினால் கூட வாயு வெளியேறுமா?

வாயுத்தொல்லை அனைத்திற்கும் பாக்டீரியாக்களின் நொதித்தல் செயல்முறை மட்டுமே காரணமாக இருப்பதில்லை. சில நேரங்களில், உணவு உண்ணும்போதோ அல்லது திரவ உணவுகளைப் பருகும்போதோ மக்கள் சிறிதளவு காற்றையும் சேர்த்து விழுங்கக்கூடும்.

அதேவேளையில், மிக வேகமாகச் சாப்பிடுவது, சூயிங்கம் மெல்வது, புகைப்பிடிப்பது, குளிர்பானங்களை அருந்துவது போன்ற பழக்கங்களால்கூட ஒருவர் விழுங்கும் காற்றின் அளவு அதிகரிக்கக்கூடும்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் மற்றும் தேசிய நீரிழிவு, செரிமான, சிறுநீரக நோய்கள் அமைப்பின் தகவல்படி, இந்த அதிகப்படியான காற்று செரிமானப் பாதை வழியாகப் பயணித்து இறுதியில் வாயுவாக வெளியேற்றப்படலாம்.

மன அழுத்தம் மற்றும் பதற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பதற்றமான நபர்கள் தாங்கள் அறியாமலே அதிக காற்றை விழுங்கக்கூடும் எனவும், இது வயிறு உப்புசம், வாயுத்தொல்லை அறிகுறிகளை மோசமாக்கலாம் எனவும் க்ளீவ்லேண்ட் கிளினிக் தரவுகள் குறிப்பிடுகின்றன.

குடல் வாயு துர்நாற்றம் உடல் ஆரோக்கியத்தின் குறியீடா?

வாயு வெளியேற்றம் என்பது முற்றிலும் இயல்பான ஓர் உயிரியல் செயல்முறை என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். எப்போதாவது ஏற்படும் துர்நாற்றம் வீசக்கூடிய வாயு, பொதுவாக நோயைவிட உணவுப் பழக்கத்தாலேயே ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும், வாயு வெளியேற்றத்தில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள், குறிப்பாக வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச் சிக்கல், எடை இழப்பு அல்லது வயிறு உப்புசம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்பட்டால், அது அடிப்படை செரிமானக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அறிவுறுத்துகிறது.

குடல் எரிச்சல் நோய்க்குறி, லாக்டொஸ் சகிப்புத்தன்மை இல்லாமை, செலியாக் நோய் மற்றும் சில இரைப்பைக் குடல் தொற்றுகள் போன்ற நிலைகள், வாயு உற்பத்தியை அல்லது குடல் வாயு மீதான உணர்திறனை அதிகரிக்கக்கூடும் என்று தேசிய நீரிழிவு, செரிமான, சிறுநீரக நோய்கள் அமைப்பு விவரிக்கிறது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை என்பது பொதுவானது. பால் பொருட்களில் காணப்படும் சர்க்கரையான லாக்டோஸ் சரியாகச் செரிக்கப்படாதபோது, பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் அதை நொதிக்கச் செய்து, வாயு, வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன.

இவைபோக, மலத்தில் ரத்தம், தொடர்ச்சியான வயிற்று வலி, திடீரென காரணமின்றி ஏற்படும் எடை இழப்பு, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் சேர்த்து, அதிகப்படியான வாயு வெளியேற்றம் இருந்தால் மருத்துவ உதவியை நாடும்படி தேசிய சுகாதார சேவை மையம் அறிவுறுத்துகிறது.

உணவுமுறை மாற்றம் உதவுமா?

அதிகப்படியான வாயு அல்லது துர்நாற்றம் வீசும் வாயு வெளியேறும் பிரச்னையைக் குறைக்க, தேசிய சுகாதார சேவை மையம் பல நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளைப் பரிந்துரைக்கிறது.

"சிறிய அளவிலான உணவை உண்பது, உணவை மெதுவாக மென்று சாப்பிடுவது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, இத்தகைய அறிகுறிகளைத் தொடர்ந்து தூண்டக்கூடிய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது" ஆகியவை இதில் அடங்கும்.

அதேவேளையில், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது, சீரான குடல் இயக்கத்தை எளிமையாக்குகிறது எனவும் கூறுகிறது.

ஆய்வுகளின்படி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள், அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பதன் மூலம் சிலர் பயனடைகிறார்கள்.

இருப்பினும், தொழில்முறை வழிகாட்டுதல் இல்லாமல் சுயமாக உணவுமுறைகளில் மாற்றங்களைச் செய்து கொள்வதைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், அதிகப்படியான உணவுகளைத் தவிர்ப்பது ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, உரிய ஊட்டச்சத்து நிபுணருடன் ஆலோசித்து தங்களுக்கு உரிய உணவுமுறையை உறுதி செய்து பின்பற்றுவதே சரியான வழி என்றும் வலியுறுத்துகின்றனர்.

அடிப்படையில், செரிமான செயல்பாடுகள் சரியாகச் செயல்படுவதற்கான ஓர் இயல்பான அறிகுறியாகவே வாயு வெளியேறுவதை நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, சமூக சூழல்கள் பெரும்பாலும் வாயு வெளியேற்றத்தை அடக்கிக் கொள்ள வேண்டுமென்ற மனநிலையை மக்களிடையே ஏற்படுத்தினாலும், வாயுவை அடக்கிக்கொள்வது வயிறு உப்புசம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

குடல்களுக்குள் சிக்கிய வாயு, வயிறு உப்புசம், தசைப் பிடிப்புகள், வயிற்று அழுத்தம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு