You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'17-ஆம் நூற்றாண்டிலே ரூ.8,000 செலவில் கட்டுமானம்' - முதல்வர் விஜய் சென்ற புனித மேரி தேவாலயத்தின் வரலாறு
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சமீபத்தில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் இருக்கும் புராதன மற்றும் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டார். அதன் ஒரு பகுதியாக அங்கு அமைந்துள்ள புனித மேரி தேவாலயத்திற்கும் சென்றார். இந்திய வரலாற்றில் இந்த தேவாலயத்திற்கு முக்கியமான இடம் இருக்கிறது.
இந்திய துணைக் கண்டத்தின் காலனிய வரலாற்றில் மதராசிற்கு (தற்போது சென்னை) முக்கியமான இடம் உண்டு. காலனிய மரபுகளை தாங்கி நிற்கும் சின்னங்கள் தற்போதும் இங்கு உயிர்ப்புடன் உள்ளன. அதன் ஒரு அங்கம் தான் கிட்டத்தட்ட 345 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த புனித மேரி தேவாலயமும்.
இந்தியாவில் கட்டப்பட்ட மிகவும் பழமையான ஆங்கிலிக்கன் (Anglican) தேவாலயம் இதுவாகும். பல கட்ட பிரெஞ்சு படையெடுப்பு, ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் படையெடுப்புகளைக் கடந்தும் இந்த தேவாலயம் தற்போதும் நிலைத்து நிற்கிறது. அதன் வரலாறு என்ன?
இந்த தேவாலயத்தை கிழக்கின் வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே (லண்டனில் உள்ள பழமையான தேவாலயம்) என்று அழைப்பதாக 'புனித மேரி தேவாலயத்திற்கான ஒரு கையேடு' என்ற புத்தகத்தில் சார்லஸ் ஹெர்பர்ட் மால்டென் குறிப்பிடுகிறார்.
"ஆசியாவின் முதல் ஆங்லிக்கன் தேவாலயம்"
"இது ஆங்கிலேய குடியேறிகளால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவில் கட்டப்பட்ட பழமையான பிரிட்டிஷ் கட்டடம்," என்று தனது புத்தகத்தில் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் 'இது ஆசியாவில் கட்டப்பட்ட முதல் ஆங்லிக்கன் தேவாலயமாகவும் இருக்கலாம்' என்கிற குறிப்பு இந்திய வரலாறு மற்றும் கலாசாரத்திற்கான இதழ் (Journal of Indian History and Culture) என்கிற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
1678-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள் முடிந்து 1680-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி திறக்கப்பட்டது.
"போர்த்துகீசியர்களுக்கு போட்டியாக உருவான தேவாலயம்"
இந்த தேவாலயம் அமையப்பெற்ற நிகழ்வுகளை "மெட்ராஸ் ரீ-டிஸ்கவர்ட் - Madras rediscovered" புத்தகத்தில் எஸ் முத்தையா விளக்குகிறார்.
இந்த தேவாலயத்திற்கான கட்டுமானத்தின் அடிக்கல் நாட்டு விழா நடந்த 1678, மார்ச் 25-ஆம் தேதி கிறிஸ்தவ மதத்தில் கடைபிடிக்கப்படும் "லேடி டே" என்பதால் அந்த தேவாலயத்திற்கு மேரியின் பெயர் சூட்டப்பட்டதாக மெட்ராஸ் ரீ-டிஸ்கவர்ட் புத்தகம் தெரிவிக்கிறது.
ஸ்ட்ரெய்ன்ஷாம் மாஸ்டர் என்பவர் புனித ஜார்ஜ் கோட்டையின் நிர்வாகியாக இருந்தபோது இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக முத்தையா குறிப்பிடுகிறார்.
மாஸ்டருடன் அவருடைய கவுன்சில் உறுப்பினர்களான ஜோசப் ஹைன்மரஸ், ஜான் நிக்ஸ், ஜான் ப்ரிட்ஜர் மற்றும் டிமோதி வில்க்ஸ் ஆகியோர் இதற்கான திட்டத்தை இறுதி செய்து நிதியையும் ஏற்பாடு செய்தனர்.
1640 வாக்கில் மதராஸில் குடியேறத் தொடங்கிய ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் குடியேற்றங்களை ஏற்படுத்தி வந்தனர். அதற்கு முன்பே அங்கு குடியேறி இருந்த போர்த்துகீசியர்களுடன் அவர்களுக்கு இணக்கமான சூழலே நிலவி வந்தது.
மேரி தேவாலயத்திற்கு முன்பே கோட்டை வளாகத்திற்குள் போர்த்துகீசியர்களுக்கு தேவாலயம் மற்றும் கல்லறைத் தோட்டம் செயல்பட்டு வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
"ஆனாலும் பிரித்தானியர்களுக்கு என்று தனியாக தேவாலயம் இல்லாமல் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியும் அதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் மாஸ்டர் அப்போது ஜார்ஜ் கோட்டையில் தங்கியிருந்தவர்களிடம் பணம் வசூலித்து தேவாலயத்தை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார்," என்று எஸ்.முத்தையா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்னதாக கோட்டையின் உள்புறத்தில் (தற்போதைய தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடம்) பிரார்த்தனைகள் நடத்தப்பட்டதாக சார்லஸ் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
கோட்டையில் தங்கியிருந்த ஆங்கிலேய வணிகர்கள் இதற்கு பெருமளவில் பங்களிப்பு செய்ததாக இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கான இதழ் (Journal of Indian History and Culture) என்கிற புத்தகம் குறிப்பிடுகிறது.
"புனித மேரி தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பே ரோமன் கத்தோலிக்கர்களுக்கான புனித ஆண்ட்ரூ தேவாலயமும் அங்கு இருந்தது. இரு தேவாலயங்கள் ஒரு சேர இயங்கி வந்தன. இதில் ஆண்ட்ரூ தேவாலயம் 1752-ஆம் ஆண்டு பிரெஞ்சு முற்றுகையின்போது இடிக்கப்பட்டது." என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ரூ.8,000 பொருட்செலவில் கட்டப்பட்ட தேவாலயம்"
இதன் கட்டுமானத்திற்கு தேவையான 805 பகோடா (சுமார் 8,000 ரூபாய்) செலவான நிலையில் ஆளுநராக இருந்த மாஸ்டர் சுமார் 100 பகோடா பங்களிப்பு செய்ததாக எஸ் முத்தையா பதிவு செய்கிறார்.
"மொத்தம் 38 பேர் பங்களிப்பு செய்தனர். இவர்களில் பின்னாளில் கவர்னரான எலிஹு யேலும் அடங்கும். அவர் 20 பகோடா (சுமார் 200 ரூபாய்) பங்களிப்பு செய்தார். இது அவருடைய அப்போதைய ஆண்டு வருமானத்தில் சுமார் 60 சதவிகிதம் (ஐந்தில் மூன்று)," என்று மெட்ராஸ் ரீ-டிஸ்கவர்ட் புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார்
வில்லியன் டிக்சன் என்கிற கோட்டை வடிவமைப்பாளர் இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். எட்வர்ட் ஃபவுல் என்பவர் இதன் கட்டடக் கலைஞராக செயல்பட்டார்.
"கோட்டையின் வடக்குப் புறத்தில் ஏற்கெனவே பல கட்டடங்கள் இருந்தன. 1670களில் கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அதனால் கோட்டையின் தெற்குப் புறத்தில் தேவாலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது." என்று இந்திய வரலாறு மற்றும் கலாசாரத்திற்கான இதழ் தெரிவிக்கிறது
"கட்டுமானப் பணி 1679-ஆம் ஆண்டே முடிந்தாலும் அதனை திறப்பதற்கான அனுமதி லண்டன் பிஷப்பிடமிருந்து 1680 அக்டோபர் மாதம் தான் கிடைத்தது. அம்மாதத்தின் 28-ஆம் தேதி தேவாலயம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கவர்னர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்." என முத்தையா மெட்ராஸ் ரீ-டிஸ்கவர்ட் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்த தேவாலயம் பல கட்ட படையெடுப்பு மற்றும் இயற்கை பேரிடர்களைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
"மேரி தேவாயலத்தின் முதல் திருமணம்"
இந்த தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றவர்கள், திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் குறிப்புகள் தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பின்னாளில் மதராஸ் கவர்னராக இருந்த எலிஹு யேலின் திருமணம் தான் இங்கு முதலில் பதிவு செய்யப்பட்ட திருமணம்.
அப்போதைய கவுன்சில் உறுப்பினரான ஜோசப் ஹைன்மர்ஸ் 1680-இல் மறைந்த பிறகு அவருடைய மனைவி கேத்தரின் ஹைன்மர்ஸ் எலிஹு யேலை திருமணம் செய்து கொண்டார். இந்த தேவாலயத்தில் நடைபெற்ற முதல் திருமணமும் அதுவே.
ராபர்ட் கிளைவ் மற்றும் மிஸ் மாஸ்கிளின் திருமணமும் 1753-ஆம் ஆண்டு இங்கு தான் நடைபெற்றது.
"பீரங்கி குண்டுகளைத் தாங்கும் தனித்துவமான கட்டுமானம்"
இந்த தேவாலயத்தின் வட்ட வடிவிலான கூரை பீரங்கித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டதாக சார்லஸ் எழுதிய புனித மேரி தேவாலயத்திற்கான கையேடு தெரிவிக்கிறது.
இதன் வெளிப்புற சுவர்கள் நான்கு முதல் ஆறு அடி தடிமன் உடனும் கோபுரம் வளைவான விதத்திலும் கட்டப்பட்டுள்ளது.
இதன் கட்டுமான அமைப்பு பற்றி விவரித்த வரலாற்று ஆய்வாளர் வி ஶ்ரீராம், "பீரங்கியில் இருந்து வீசப்படும் குண்டுகள் கீழே விழுவதற்காக வளைவான கூரை அமைக்கப்பட்டது. தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக இதன் கட்டுமானத்தில் மரம் பயன்படுத்தப்படவில்லை." என்று ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தில் இருந்து தனித்து நிற்கும் கோபுரம் 1701-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின்னர் 1710-ஆம் ஆண்டு ஸ்தூபி ஒன்றும் நிறுவப்பட்டது. இந்தக் கோபுரம் 1760-ஆம் ஆண்டு தேவாலயத்துடன் இணைக்கப்பட்டது. தற்போதைய கோபுரம் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டதாக சார்லஸ் தெரிவிக்கிறார்.
"முதலில் கட்டப்பட்ட கோபுரம் 1759-ஆம் ஆண்டு பிரெஞ்சு படையெடுப்பின்போது பலத்த சேதமடைந்தது. அதன் பிறகு கிழக்கு இந்திய கம்பெனியின் செலவில் புதிதாக முன்பிருந்ததை விடவும் உயரமான கோபுரம் கட்டப்பட்டது," என ஃப்ராங்க் பென்னி எழுதிய புனித ஜார்ஜ் கோட்டை, மதராஸ் என்கிற புத்தகம் பதிவு செய்கிறது.
1795-ஆம் ஆண்டில் இதனை கலங்கரை விளக்கமாக மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டு பின்னர் கைவிடப்பட்டதாக எஸ் முத்தையா தெரிவிக்கிறார்.
"ஆங்கிலேயர்களுக்கு தலைவலியாக மாறிய கல்லறைத் தோட்டம்"
தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தை ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களே அகற்றும் நிலை உருவானது. அந்த நிகழ்வுகளை புனித மேரி தேவாலயத்திற்கான ஒரு கையேடு புத்தகத்தில் சார்லஸ் ஹெர்பர்ட் மால்டென் விவரிக்கிறார்.
சர் தாமஸ் மன்றோ உள்பட பலரும் இந்தக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். அதற்கான குறிப்பு பலகையும் புனித மேரி தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
"இந்த தேவாலயத்தின் கல்லறை தற்போது உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தில் முன்பு இருந்தது. அந்த இடம் கொய்யா தோட்டம் (The guava garden) என அழைக்கப்பட்டது. தற்போதும் அங்கு இரண்டு கல்லறை கற்கள் இருக்கின்றன. அதில் எலிஹு யேலின் மகன் டேவிட் யேலின் கல்லறையும் அடங்கும்."
1758 டிசம்பர் தொடங்கி 1759 பிப்ரவரி வரை பிரெஞ்சு படைகள் மதராஸை முற்றுகையிட்டிருந்தன. அந்த முற்றுகை விலக்கப்பட்ட பிறகு அப்போது முதன்மை பொறியாளராக இருந்த ஜான் கால் அரசாங்கத்திற்கு பின்வருமாறு எழுதுகிறார்.
"கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைகளால் நாம் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டோம் என்பதை நான் குறிப்பிட வேண்டும். அவை பெரிய வளைவுக் கட்டமைப்புகளாக, ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக ஒரு நேர்கோட்டில் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் அவை எதிரியை நமது துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், நமது எறிகுண்டுகளுக்கு எதிராகவும் பாதுகாப்பான ஒரு மறைவிடத்தையும் அவர்களுக்கு வழங்கின."
இந்தக் கடிதத்தை கிடைக்கப்பெற்ற அரசாங்கம் பழைய கல்லறைத் தோட்டத்தில் இருந்த பெரிய கல்லறைகளை இடித்து புதிய கல்லறைத் தோட்டம் ஒன்றைத் திறக்க உத்தரவிட்டது. அந்த கல்லறைத் தோட்டம் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கிருந்த கல்லறை கற்கள் எடுத்து வரப்பட்டு 1763-ஆம் ஆண்டு தேவாலயத்தைச் சுற்றி வைக்கப்பட்டன.
1782-இல் ஹைதர் அலி படையெடுத்து வந்தபோது கல்லறைக் கற்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, பீரங்கிகளைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டன. அதில் பல கற்கள் சேதமடைந்த நிலையில் மீதமுள்ளவை தேவாலயத்தைச் சுற்றிய நடைபாதையில் பதிக்கப்பட்டன.
இதில் எலிசபெத் பேக்கர் என்பவருடைய 1652-ஆம் தேதியிடப்பட்ட ஒரு கல்லறை கல்லும் அடங்கும். இந்தியாவில் உள்ள பிரிட்டன் கல்வெட்டுகளில் மிகவும் பழமையான கல்வெட்டு இதுவே.
"படையெடுப்புகளின் போது மேரி தேவாலயம்"
இந்த தேவாலயம் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
1746-இல் பிரெஞ்சு படைகள் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியபோது இந்த தேவாலயம் முதலில் ராணுவ வீரர்கள் தங்குமிடமாகவும் பின்னர் கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டது.
1746-ஆம் ஆண்டு பிரெஞ்சு படைகள் மதராஸை கைப்பற்றியதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேவாலயத்தின் அனைத்து பதிவேடுகளும் நிறுத்தப்பட்டன.
1758-இல் பிரெஞ்சு படைகள் மீண்டும் மதராஸை முற்றுகையிட்டபோது கோட்டை கல்லறை யுத்தக் களமாக செயல்பட்டது. அப்போது தேவாலயம் வீரர்களின் குடியிருப்பாக செயல்பட்டது.
1782-இல் திப்பு சுல்தான் உடனான போரின்போது கோட்டை முழுவதும் வீரர்களும் போர் உபகரணங்களும் இருந்த நிலையில் இந்த தேவாலயம் ஒன்பது மாத காலம் சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டது. அப்போது பிரார்த்தனைகள் அருகில் இருந்த மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டன.
"மதிப்புமிக்க தி லாஸ்ட் சப்பர் ஓவியம்"
இந்த தேவாலயத்தின் மற்றுமொரு முக்கியமான மதிப்புமிக்க பொருள் அதன் பீடத்தின் மீது உள்ள தி லாஸ்ட் சப்பர் ஓவியம். இது புகழ்பெற்ற ஓவியரான ரஃபேல் உருவாக்கியது எனக் கூறப்பட்டாலும் அதன் உண்மையான ஓவியர் யார் என்பது தெரியவில்லை. இது 1761-ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம்.
"1761- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை பிரெஞ்சு கைப்பற்றியபோது அது மதராஸ் கொண்டு வரப்பட்டிருக்கலாம். முன்னர் மேரி தேவாலயத்தில் வார்டனாக இருந்த ஜோசியாஸ் டு ப்ரே என்பவர் பாண்டிச்சேரியில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பொறுப்பு ஆணையராக இருந்தார். அவர் பாண்டிச்சேரியில் இருந்து பல பொருட்களை மதராசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் ஒரு அங்கமாக இந்த ஓவியமும் வந்திருக்கலாம்." என்று இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கான இதழ் என்கிற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தி லாஸ்ட் சப்பர் ஓவியத்தின் வரலாறு, அது யாரால் வழங்கப்பட்டது என்பது பற்றிய பதிவுகள் இல்லை. 1782-ஆம் ஆண்டின் குறிப்பு ஒன்றில் தான் அது பீடத்தில் உள்ள ஓவியம் என முதன் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று ஃப்ராங்க் பென்னி எழுதிய புனித ஜார்ஜ் கோட்டை, மதராஸ் என்கிற புத்தகம் தெரிவிக்கிறது.
இதன் அளவு 10 அடிக்கு 8 அடி என இருந்தது. இந்த ஓவியம் தேவாலயத்தில் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இறுதியாக 1902-ஆம் ஆண்டு மீண்டும் பீடத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டது. அப்போதில் இருந்து அதே இடத்தில் தான் தொடர்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு