'ஆண் மீன்களே இல்லை' - 1 லட்சம் ஆண்டுகளாக வாழும் இந்த பெண் மீன் இனம் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்துவது ஏன்?

    • எழுதியவர், ஃப்ளோரன்ஸ் கிரெய்க்
    • பதவி, BBC.com
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மெக்சிகோ மற்றும் தெற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள ஆறுகளில், உலகிலேயே அபூர்வமான மீன் இனம் ஒன்று நீந்திக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெண் மீன் முழுக்க முழுக்க பெண் மீன்கள் மட்டுமே நிறைந்த தனது கூட்டத்துடன் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் வெள்ளி நிறச் செதில்கள், நெருங்கிய தொடர்புடைய பிற இனங்களைச் சேர்ந்த ஆண் மீன்கள் மீது உரசுகின்றன. அந்த இடத்தில் அது தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கிறது. ஆனால், பரிணாம வளர்ச்சியின் ஒரு விசித்திரமான திருப்பமாக, அதன் சந்ததிகளை உருவாக்குவதில் அந்த ஆணின் மரபணுக்களுக்கு எவ்விதப் பங்கும் இருப்பதில்லை.

இந்த முறைக்கு 'கைனோஜெனசிஸ்' என்று பெயர். இதில் ஆண் மீனின் விந்தணுவை தனது கருமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பெண் மீன் பயன்படுத்தும் அதேவேளையில், ஆணின் மரபணுவை நிராகரித்து விடுகிறது. இதனால் அந்த மீன் ஈனும் குட்டிகள் அனைத்துமே தாயைப் போலவே இருக்கும், பெண்ணாக மட்டுமே இருக்கும். இந்த வகை மீன்களில் ஆண் மீன்கள் கிடையாது.

இந்த அபூர்வ மீனின் பெயர் அமேசான் மோலி. கிரேக்க புராணங்களில் வரும், பெண்கள் மட்டுமே கொண்ட போர்வீரர் பழங்குடியினரின் நினைவாக, இந்த மீனுக்கு 'அமேசான் மோலி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மீன் வகை, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வருகிறது.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளின்படி, பாலுறவற்ற இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் விரைவில் அழிந்துவிட வேண்டும். ஏனெனில், உடலுறவு இல்லாதபோது, காலப்போக்கில் அவற்றின் மரபணுக்களில் தீங்கு விளைவிக்கும் பிறழ்வுகள் உருவாகின்றன. ஆனால், இந்த பெண் மீன் இனம் மட்டுமே சுமார் 1,00,000 ஆண்டுகளாக அழியாமல் வாழ்ந்து வருகிறது.

அறிவியல் கோட்பாடுகளின்படி எப்பொழுதோ அழிந்திருக்க வேண்டிய இந்த 'அமேசான் மோலி' மீன், இவ்வளவு காலம் எப்படி உயிர் பிழைத்திருக்கிறது?

பாலுறவின் முக்கியத்துவம்

"பாலுறவு என்பது அதிக உழைப்பைக் கோரக்கூடியது," என்கிறார் ஜெர்மனியின் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டேஷனல் உயிரியலாளரும் அமேசான் மோலி பற்றிய புதிய ஆய்வின் இணை ஆசிரியருமான எட்வர்ட் ரைஸ்மேயர்.

உயிரினங்கள் தங்களுக்கான துணையைத் தேடிக் கண்டறிய வேண்டும், அதற்காகப் போட்டியிட வேண்டும். மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் மரபணுவில் பாதியை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு வழங்க முடியும். இனப்பெருக்கம் என்பது பெரும்பாலும் சமமற்றதாகவே இருக்கிறது. பல உயிரினங்களில் பெண் இனங்கள், குட்டிகளை உருவாக்குவதிலும், பெற்றெடுப்பதிலும் அல்லது அடைகாப்பதிலும், மற்றும் அவற்றை வளர்ப்பதிலும் ஆண் இனங்களை விட மிக அதிகமான ஆற்றலை செலவு செய்கின்றன.

இதற்கு நேர்மாறாக, பாலுறவற்ற இனப்பெருக்கம் என்பது மிகச் சிறந்ததாகத் தோன்றுகிறது. ஒரு துணையைத் தேட வேண்டியதோ அல்லது அதை கையாள வேண்டிய அவசியமில்லை. அத்துடன் மரபணுக்களை 100 சதவிகிதம் அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும்.

இருந்தபோதிலும், ஒட்டுமொத்த உயிரினங்களின் வாழ்வாதாரப் படிநிலையை உற்றுநோக்கினால், பாலுறவு இனப்பெருக்கமே முற்றிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

"நீங்கள் ஒட்டுமொத்தப் படத்தையும் பார்த்தால், இந்த உலகில் 99.9% பாலுறவு இனப்பெருக்கமே நடக்கிறது" என்கிறார் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியலாளர் டேவ் ஸ்பைஜர்.

பாலுறவு இனப்பெருக்கத்தின் போது, இரண்டு பெற்றோரின் டிஎன்ஏக்கள் "ரீகாம்பினேஷன்" எனப்படும் செயல்முறையின் மூலம் மறுசீரமைக்கப்படுகின்றன. இதன் விளைவாக, ஒவ்வொரு சந்ததியினரும் தனித்துவமான மரபணு கலவையைப் பெறுகின்றனர்.

இதன் பொருள் என்னவென்றால், பாலுறவு முறையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களிடையே பொதுவாக மரபணு பன்முகத்தன்மை அதிகமாக இருக்கும். ஏனெனில், ஒவ்வொரு தனி உயிரினமும் வெவ்வேறு விதமான மரபணுக்களின் கலவையைக் கொண்டுள்ளது. இது பொதுவாக அந்த இனம் அழியாமல் உயிர் பிழைத்திருப்பதற்குப் பெரிதும் உதவுகிறது.

பாலுறவு பாதுகாப்பையும் வழங்குகிறது. இந்த மரபணு மறுசீரமைப்பு இல்லை என்றால், மரபணுத் தொகுப்புகள் 'முல்லரின் ராட்செட்' என்று அழைக்கப்படும் ஒரு மெதுவான, நுட்பமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும்.

"டிஎன்ஏ நகலெடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது," என்கிறார் ஸ்பெயர்

பாலுறவு உயிரினங்களில் இந்தப் பிழைகள் தலைமுறைகளுக்கிடையில் மறுசீரமைக்கப்பட்டு நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், பெரும்பாலும் பாலுறவற்ற இனப்பெருக்கம் மூலம் குளோன்களாகப் பெருகும் உயிரினங்களில், அந்தப் பிழைகள் மீண்டும் மீண்டும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.

காலப்போக்கில், இந்த தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்ந்து கொண்டே இருக்கும். இதனால் மரபணுத் தொகுப்பு படிப்படியாக சிதைந்து, இறுதியில் அந்த இனம் அழிந்துவிடும் என்று கருதப்படுகிறது.

உடலுறவு இன்றி செழித்து வளருதல்

இந்தக் கோட்பாட்டின்படி பார்த்தால், பாலுறவற்ற முறையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் மரபணு சிதைவுக்கு உள்ளாகி, குறுகிய காலமே வாழ முடியாது. அவை மரபணு சிதைவால் அழிவை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், அமேசான் மோலி போன்ற சில உயிரினங்கள் உயிர்வாழ்வது மட்டுமல்லாமல், சிறப்பாக வளர்ச்சியடைந்தும் வருகின்றன.

இந்தக் கோட்பாடு விளக்கப்படும் விதத்திலிருந்தே இந்தக் குழப்பத்தின் ஒரு பகுதி உருவாகக்கூடும் என்று ஸ்பெயர் கருதுகிறார்.

அவரது கருத்துப்படி, இந்தக் கோட்பாடு பாலுறவு இனப்பெருக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக, எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் ஒரு பரந்த அடிப்படைக் கட்டுப்பாட்டைப் பற்றியது. எந்த உயிரியல் அமைப்பாக இருந்தாலும், மரபணுக்களில் ஏற்படும் "பிழைகளை" நிர்வகிக்க ஏதாவது ஒரு வழிமுறை தேவைப்படுகிறது. பாலுறவு இனப்பெருக்கம் அதற்கான ஒரு வழி மட்டுமே.

இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்போது, நீண்ட காலம் வாழும் பாலுறவற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியின் விதிகளை மீறுவதாகக் கருத முடியாது. மாறாக, அவ்விதிகளிலிருந்து தப்பித்து உயிர்வாழ்வதற்கான மாற்று வழிகளைக் கண்டறிந்துள்ளன என்றே கூற வேண்டும்.

விலங்கு உலகம் முழுவதும், கோட்பாடுகள் கணித்ததை விட நீண்ட காலமாக உயிர்வாழ்ந்து வரும் பல பாலுறவற்ற உயிரினங்கள் உள்ளன.

புதர்களில் வாழும் ஸ்டிக் இன்செக்ட்கள் முதல், சிறிய ஜெல்லி போன்ற தோற்றமுடைய நுண்ணுயிர் விலங்குகள் வரை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

அமேசான் மோலி மீன், தலைமுறை தலைமுறையாக தந்தை இல்லாமல் வாழும் பெண் மட்டும் கொண்ட இனமாகும். முல்லரின் ராட்செட்' கோட்பாடு கணித்த அந்த அழிவிலிருந்து எவ்வாறு தப்பிக்கின்றன என்பது இப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

'நகலெடுத்து ஒட்டும்' முறை

புதிய ஆய்வு ஒன்று, இதுவரை தீர்க்கப்படாமல் இருந்த ஒரு புதிருக்கான விடையை கண்டறிய, மரபணு மாற்றம் உதவுவதாக ரைஸ்மேயர் கூறுகிறார்.

மரபணு மாற்றம் என்பது ஒரு வகையான மரபணு சீரமைப்பு முறை ஆகும். இது அமேசான் மோலி மீன்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல; மனிதர்கள் உட்பட பல உயிரினங்களிலும் இது நிகழ்கிறது.

நம்மைப் போன்ற பாலுறவுஉயிரினங்களில், ஒவ்வொரு தனிநபரிடமும் பொதுவாக பெரும்பாலான மரபணுக்களின் இரண்டு பிரதிகள் இருக்கும். அதில் ஒரு பிரதி தாயிடமிருந்தும், மற்றொரு பிரதி தந்தையிடமிருந்தும் வந்திருக்கும். உதாரணமாக, புற ஊதா கதிர்களால் மரபணு சேதமடையும் போது, செல்கள் சில நேரங்களில் ஒரு மரபணுவின் பிரதியை மாதிரியாகக் கொண்டு, சிதைந்த மற்றொன்றை சரி செய்யமுடியும்.

'மரபணு மாற்றம்' என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை, காலப்போக்கில் ஒரு மரபணுவின் இரண்டு பிரதிகளையும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்ததாக ஒற்றுமையுடையதாக மாற்றும்.

மனிதர்களிலும் பெரும்பாலான விலங்குகளிலும், இந்த இயங்குமுறையானது, டிஎன்ஏ சேதம் ஏற்படும்போது அதை அமைதியாகச் சரிசெய்யும் ஒரு பின்னணிச் செயல்முறையாகவே செயல்படுகிறது. ஆனால் அமேசான் மோலி மீனில், அதன் மரபணுத் தொகுதியைப் பராமரிப்பதில் இது மிகவும் முதன்மையான பங்கை வகிப்பதாகத் தெரிகிறது.

ரைஸ்மேயரும் அவரது குழுவினரும், தலைமுறை தலைமுறையாக அமேசான் மோலி மீன்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்க்க முழு-மரபணு வரிசைமுறை நுட்பத்தைப் பயன்படுத்தினர்.

இதன் மூலம், இந்த மீன்களின் மரபணுப் பகுதிகள் மீண்டும் மீண்டும் "மேலெழுதப்பட்டு" இருப்பதைக் கண்டறிந்தனர். இது பாலுறவு இனப்பெருக்கத்தில் நடக்கும் மரபணு மறுசீரமைப்பு மூலம் நடக்கவில்லை. மாறாக, பிற விலங்குகளை விட இந்த அமேசான் மோலி மீன்களிடம் மிக அதிக அளவில் நடக்கும் 'மரபணு மாற்றம்' என்ற செயல்முறையின் மூலம் நடந்துள்ளது.

நம்முடைய மரபணுத் தொகுப்பிற்கு பாலுறவு இனப்பெருக்கம் என்ன செய்கிறதோ, அதையே தான் இந்த 'மரபணு மாற்றம்' அமேசான் மோலி மீன்களின் மரபணுத் தொகுப்பிற்கும் செய்கிறது. அதாவது, தீங்கு விளைவிக்கும் பிறழ்வுகள் குவிவதைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

பெரும்பாலான பாலுறவற்ற விலங்குகளைப் போலவே, அமேசான் மோலி இனமும் ஒரு தற்செயலான கலப்பினச் சம்பவத்திலிருந்து தோன்றியது.

சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண் 'அட்லாண்டிக் மோலி' மீன், ஒரு ஆண் 'செயில்ஃபின் மோலி' மீனோடு இணை சேர்ந்தபோது தான் இந்த இனம் உருவானதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, குதிரை மற்றும் கழுதையின் கலப்பினமான மியூல் அல்லது சிங்கம் மற்றும் புலியின் கலப்பினமான லைகர் போன்றவை இனப்பெருக்கம் செய்ய முடியாதவையாக இருக்கும்.இந்த இரு மீன்களின் இணைவு மலட்டுத்தன்மையுள்ள குட்டிகளை உருவாக்கவில்லை. மாறாக, உடலுறவு இல்லாமலேயே இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரு புதிய சந்ததியையே உருவாக்கியது.

இன்று வாழும் ஒவ்வொரு அமேசான் மாலியும், அதன் இரண்டு மூதாதைய இனங்களிலிருந்தும் மரபணுக்களைப் பெற்றிருக்கிறது

இது அந்த இனத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அதிக மரபணு வேறுபாட்டை வழங்கியுள்ளது.

இந்த இரட்டைப் பாரம்பரியமே அமேசான் மோலி மீன் இவ்வளவு விரிவான முறையில் 'மரபணு மாற்றம்' செய்வதற்கான முக்கிய திறவுகோலாக இருக்கக்கூடும். இதன் பெற்றோர் இனங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதால், அவற்றின் மரபணுக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பணிகளைச் செய்யும் அளவுக்கு ஒத்திருக்கின்றன. அதே நேரத்தில், ஒன்றுக்கொன்று முழுமையாக ஒரே மாதிரி இல்லாததால், டிஎன்ஏ சேதங்களைச் சரிசெய்ய பல்வேறு "மாதிரிகளை" வழங்குகின்றன.

இதில் ஆச்சரியமளிக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த மரபணு மாற்றம் மரபணுத் தொகுப்பின் அனைத்து இடங்களிலும் ஒரே சீராக நடப்பதில்லை. சில குறிப்பிட்ட பகுதிகளில் மற்ற இடங்களை விட மிக அதிக அளவில் நடப்பதாகத் தெரிகிறது.

"எந்த வகையான பிறழ்வுகள் மிக மோசமானவை, மிகவும் ஆபத்தானவை மற்றும் அதிக அழிவை ஏற்படுத்தக்கூடியவை என்று நாம் கருதுகிறோமோ, சரியாக மரபணுத் தொகுப்பின் அந்தப் பகுதிகளில் தான் இந்த 'மரபணு மாற்றம்' மிக அடிக்கடி நடப்பதை நாம் காண்கிறோம்," என்கிறார் ரைஸ்மேயர்.

இதன் விளைவாக, 100,000 ஆண்டுகளாக உடலுறவு கொள்ளாமல் இருந்தபோதிலும், இந்த அமேசான் மோலி மீன் இனம் வியக்கத்தக்க வகையில் மிகச் சிறந்த மரபணு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறது.

மனித உயிரியலில் இதன் தாக்கம்

மரபணு சார்ந்த "தவறுகளை" கையாள்வதற்கான இந்த மாற்று உத்திகளைப் புரிந்து கொள்வது, அமேசான் மோலி மீன்களைத் தாண்டி, மனித உயிரியலிலும் கூட சில முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

ஏனெனில், தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றங்கள் பாலுறவற்ற உயிரினங்களில் மட்டுமே ஏற்படுவதில்லை.

"புற்றுநோய் என்பதே மரபணு பிறழ்வுகளால் ஏற்படும் ஒரு நோய் தான்" என்கிறார் ரைஸ்மேயர்.

தங்களது ஆய்வின் முடிவுகளை மிகைப்படுத்திக் கூற விரும்பவில்லை என்றாலும், மரபணு மாற்றங்களைப் பற்றியும், அவற்றைச் சமாளிக்க இயற்கை பயன்படுத்தும் உத்திகளைப் பற்றியும் நமது புரிதலை அதிகரிக்கும் எந்தக் கண்டுபிடிப்பும் நீண்ட காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

பாலுறவு இனப்பெருக்கத்தின் மூலம் கிடைக்கும் அந்த 'மரபணு மறுசீரமைப்பு' ஆற்றலுக்கு இணையாக, அமேசான் மோலி மீன் கண்டறிந்துள்ள இந்த மாற்று வழிமுறை உண்மையிலேயே நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றுதானா என்பது இன்னும் விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது.

இந்த மரபணு மாற்றம், 'முல்லரின் ராட்செட்' என்னும் மரபணு அழிவை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தடுத்து நிறுத்தி வைக்கும் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெரியவில்லை.

ஆனால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின்படி நீண்ட காலம் உயிர்வாழ முடியாது என்று ஒருகாலத்தில் கருதப்பட்ட இந்த மீன் இனத்தின் மரபணு ஆரோக்கியம், எதிர்பாராத வகையில் மிகவும் வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது.

"ஒரு மரபணுத் தொகுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பாலுறவு இனப்பெருக்கம் மட்டும்தான் ஒரே சரியான வழி என்று நாம் நினைத்தோம். ஆனால் இப்போது இல்லை, அதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளோம்" என்று ரைஸ்மேயர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு