You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் - புதிய ஆய்வு கூறுவது என்ன?
- எழுதியவர், டொமினிக் ஹியூஸ்
- பதவி, சுகாதாரச் செய்தியாளர்
- எழுதியவர், லெஸ்லி ஹிட்சன்
- பதவி, சுகாதாரச் செய்தியாளர்
- எழுதியவர், ஜேம்ஸ் கோவன்
- பதவி, சுகாதாரச் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
புதிய ஆராய்ச்சியின்படி, வாரத்திற்கு 90 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பளு தூக்கும் பயிற்சி செய்வது, முன்கூட்டியே ஏற்படும் மரண அபாயத்தை பெருமளவில் குறைக்கும்.
பல தசாப்தங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து திரட்டப்பட்ட தரவுகள், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து உடற்தடை அல்லது பளு பயிற்சிகளைச் செய்து வருவது, இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் மரண வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன.
நரம்பியல் சார்ந்த நோய்களால் ஏற்படும் மரண அபாயத்தைக் குறைப்பதும் இந்த நன்மைகளில் அடங்கும்.
வலிமை சார்ந்த பயிற்சியானது உடல்நலக்குறைவை முறியடிக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ உதவும் என்பதற்கும், அதோடு பணிச்சுமையால் திணறும் சுகாதாரச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கக்கூடும் என்பதற்கும் இது ஒரு கூடுதல் சான்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
28 வயதாகும் கேட் ஹோகார்த் தனது பிற்கால வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருப்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அவர் பளு தூக்கும் பயிற்சியை மட்டுமல்ல, அது தற்போது தனக்கு அளிக்கும் தன்னம்பிக்கையையும் மிகவும் விரும்புகிறார். அதே வேளையில், இதனால் கிடைக்கும் நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளையும் அவர் உணர்ந்துள்ளார்.
"நான் எனது பிற்கால வாழ்க்கையில் மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல் வாழ விரும்புகிறேன்.
பலப்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியம், தசைகள், எலும்புகள் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது என ஏராளமான ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.
எனது 70, 80, 90 வயதிலும் நான் உலகம் முழுவதும் சுற்ற விரும்புகிறேன். என் பேரக்குழந்தைகளைத் தூக்கி அவர்களோடு விளையாட விரும்புகிறேன். அந்த அளவிற்கு ஒரு சுதந்திரமான, சுயசார்பான வாழ்க்கையைக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறுகிறார்.
நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமாக இருப்பதற்காக தனது உடல் தகுதியை மேம்படுத்திக்கொள்ள கேட் ஹோகார்த் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.
ஜாகிங், மிதிவண்டி ஓட்டுதல் அல்லது நீச்சல் பயிற்சி என ஏரோபிக் பயிற்சிகளின் நன்மைகளை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அமைப்பின்படி, வழக்கமான ஏரோபிக் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், இதய நோய், பக்கவாதம் மற்றும் 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.
இருப்பினும், மரண அபாயத்தைக் குறைப்பதில் பலம் சார்ந்த பயிற்சிகள் எந்த அளவிற்குப் பங்காற்றுகின்றன என்பது இதுவரை தெளிவாகத் தெரியாமல் இருந்தது.
அந்த நிலை இப்போது மாறத் தொடங்கியுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக 1,47,374 ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய மூன்று ஆய்வுகளின் தரவுகளை, 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்' இதழில் எழுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
வாரம் தோறும் 90 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து பளு தூக்கும் பயிற்சி செய்தவர்களுக்கு, எந்தவொரு காரணத்தினாலும் ஏற்படும் முன்கூட்டிய மரண அபாயம் 13 சதவிகிதம் குறைந்துள்ளதை அவர்கள் கண்டறிந்தனர்.
உதாரணமாக, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இருதய நோய்களால் ஏற்படும் மரண அபாயம் 19 சதவிகிதம் குறைவாக இருந்தது.
நரம்பியல் நோய்களால் உதாரணமாக டிமென்ஷியாவால் ஏற்படும் மரண விகிதத்தின் வீழ்ச்சி இன்னும் அதிகமாக, அதாவது 27 சதவிகிதம் குறைவாக இருந்தது.
ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் பலப்பயிற்சிகள் ஆகிய இரண்டையுமே அதிக அளவில் செய்து வந்தவர்களிடம் தான் மரணத்திற்கான "மிகக் குறைந்த அபாயம்" காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் பல மணி நேரம் ஏரோபிக் பயிற்சிகளைச் செய்து, மிகவும் சுறுசுறுப்பாக விளங்கிய இந்த நபர்களிடம், எந்தக் காரணத்தினாலும் ஏற்படும் முன்கூட்டிய மரண அபாயம் 58% வரை குறைந்துள்ளது.
இருப்பினும், வாரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பலப்பயிற்சிகளைச் செய்வது உண்மையில் எந்தவொரு கூடுதல் நன்மைகளையும் வழங்கவில்லை என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஹாரோகேட்டில் தனிப்பட்ட உடற்பயிற்சியாளராக பணியாற்றி வரும் பெவ் வில்சன், பளு தூக்கும் பயிற்சியின் நன்மைகளை நேரடியாகக் காண்கிறார்.
"உடற்பயிற்சி செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களுக்கு, ஆரம்பத்தில் மூட்டு வலி, ஆற்றல் குறைபாடு அல்லது வளர்சிதை மாற்ற குறைபாடு போன்ற பிரச்னைகள் இருப்பதையும், இதனால் அவர்கள் உடல் எடை அதிகரிப்பதையும் நான் கவனிக்கிறேன்.
வலிமைப் பயிற்சி செய்வது அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவைச் சிறப்பாக நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இது மூட்டு வலியைக் குணப்படுத்தி, அவர்களின் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது என்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன்.
இதன் மூலம் அவர்கள் தங்களை மிகவும் பலமாகவும், புத்துணர்ச்சியுடனும், அதிக ஆற்றலுடனும் உணர்கிறார்கள்.
"மேலும், இது ஒரு நபரின் மூளை ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்று பெவ் வில்சன் கருதுகிறார். "அவர்கள் அதிக ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் உணர்வதோடு மட்டுமன்றி, தங்களது அறிவாற்றல் செயல்பாட்டிலும் முன்னேற்றங்களைக் காண்கிறார்கள்.
அவர்களால் வேலையில் அதிக கவனம் செலுத்த முடிகிறது மற்றும் அவர்களின் நினைவாற்றலும் மேம்படுகிறது."
'ஸ்போர்ட் இங்கிலாந்து' அமைப்பின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக் கொள்கைக்கான உத்திசார் தலைவர் டாம் பர்டன், ஆரோக்கியமான, வளமான மற்றும் மகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்குவதற்கு உடற்பயிற்சியே முக்கிய திறவுகோல் என்று கூறினார்.
"வலிமையை அடிப்படையாகக் கொண்ட உடல் செயல்பாடு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். குறிப்பாக, முதுமையிலும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது பெரிதும் துணைபுரிகிறது. உடல்நலக் குறைவைத் தடுக்க அல்லது தாமதப்படுத்தவும், நம்மை எளிதாக நடமாடவும் யாருடைய உதவியுமின்றி சுயசார்புடன் வாழவும் வைக்கிறது. மேலும் அதிக சுமையால் தவிக்கும் சுகாதார மற்றும் பராமரிப்பு சேவைகளின் மீதான அழுத்தங்களைக் குறைக்கவும் உதவுகிறது," என அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு