தன்னை அவமதித்ததாக கூறும் தவெக எம்எல்ஏ பல்லவி, மறுக்கும் மேயர் பிரியா - பள்ளி நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சென்னையில் இன்று நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் மேயர் பிரியாவால் தான் அவமதிக்கப்பட்டதாக திரு விக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் மேயர் பிரியா நடைமுறை விதிகள்படிதான் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

திமுக மேயர் மற்றும் தவெக எம்.எல்.ஏ இடையே ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சை விவாதப் பொருளாகியுள்ளது.

என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சி தற்போது திமுக கட்டுப்பாட்டில் உள்ளது. திமுகவைச் சேர்ந்த ஆர்.பிரியா சென்னை மேயராக உள்ளார்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் திரு விக நகர் மண்டலத்தில் அமைந்துள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மேயர் பிரியா, திரு விக நகர் எம்.எல்.ஏ பல்லவி, மாநகராட்சி கல்வி இணை ஆணையாளர் கற்பகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைக்கும் நிகழ்வின்போது சிறு பரபரப்பு ஏற்பட்டது. பின்னே இருந்த பல்லவி, பிரியாவுக்கு முன்பாக ரிப்பன் வெட்டினார்.

பின்பு குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலில் விளக்கேற்றினார் பிரியா. அதற்கு அடுத்து பல்லவி விளக்கேற்ற முன்வந்தபோது மெழுகுவர்த்தியை அவருக்கு கொடுக்காமல் கல்வி இணை ஆணையாளருக்கு கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடந்து பல்லவி அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.

ஷார்ட் வீடியோ

மேயரின் பதில் என்ன?

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "நாங்கள் புறக்கணிக்கவில்லை. எங்களுடன் தான் பங்கேற்றார்கள். சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் துறை சார்பாக அழைத்தோம். எங்களுடன் தான் ரிப்பன் வெட்டினார்கள். ப்ரோட்டோகால்படி ஐஏஎஸ் அதிகாரிக்கு அடுத்த சட்டமன்ற உறுப்பினர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். அது அவருக்கு தெரியவில்லை. அதற்குள்ளாகவே எதிர்வினையாற்றி விட்டார்கள். அமைச்சர் வந்தால் அவருக்கு பிறகே நான் பின்பற்ற முடியும். இப்போது நான் இருக்கிறபோது, முதலில் நான், அதன் பிறகு ஐஏஎஸ் அதிகாரி, அதன்பிறகு எம்எல்ஏ என வருவது தான் மரபு. அதுதான் நடந்தது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே எம்எல்ஏ பல்லவியை அதிகாரிகள் சமாதானம் செய்தததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அதே மண்டலத்தில் நடைபெற்ற மற்றுமொரு பள்ளி நிகழ்ச்சியில் இருவரும் மீண்டும் கலந்து கொண்டனர்.

இந்த முறை மேயர் பிரியா விளக்கேற்ற அழைத்தபோதும் எம்எல்ஏ பல்லவி மறுத்துவிட்டார். இந்தச் சம்பவத்தின் காணொளிகளும் சமூக ஊடகத்தில் வெளியானது.

எம்எல்ஏ பல்லவியின் பதில் என்ன?

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பல்லவி, "கல்வி ஆணையாளர் என்னை ஏற்றுமாறு கூறினார். ஆனால் மண்டலக் குழு அதிகாரியும் மண்டலத் தலைவரும் ஏற்றுமாறு மேயர் பிரியா கூறினார். என்னை அவமதிக்க வேண்டும் என்றே அவ்வாறு செய்தனர். பள்ளி நிகழ்ச்சி என்பதால் பிரச்னை வேண்டாம் என வெளியே வந்துவிட்டேன். அதிகாரிகளுக்கும் தங்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை எனக் கூறினார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சியிலும் அப்படியே செய்யப் பார்த்தனர், அதன் பிறகு விளக்கு ஏற்றுமாறு கூறினார்கள், நான் வேண்டாம் எனத் தெரிவித்துவிட்டேன். ரிப்பன் வெட்டும்போதே என்னை அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் வந்தது தெரிந்தது. இரவு வரையுமே அவர் வருவதாக தகவல் இல்லை. நான் வருவது தெரிந்த பிறகு தான் அவர் வருவதாக முடிவெடுத்தார்." என்றார்.

அதிகாரிகள் கூறுவது என்ன?

இந்த நிகழ்வு அரசியல் பிரச்னையாக உருவெடுத்துவிட்டது என்று கூறி பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய மாநகராட்சி அதிகாரிகள் விளக்கு ஏற்றுவதற்கு என்று பிரத்யேகமான நடைமுறை விதிகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.

"மாநகராட்சி நிகழ்ச்சியில் இருக்கை அமைப்பது, பேசும் வரிசை, கல்வெட்டுகள், ஃப்ளெக்ஸ் பேனர்களில் பெயர்கள் பதிப்பது ஆகியவற்றுக்கு என சில நடைமுறை விதிகள் உள்ளன. ஆனால் விளக்கு ஏற்றும் வரிசைக்கும் அவை பின்பற்றப்பட வேண்டுமா என்பதில் தெளிவு இல்லை," என்று அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு