பெத்தி விமர்சனம்: 2 ஆண்டு உழைப்புக்கு பிறகு பெரும் ஹிட் கொடுத்தாரா ராம் சரண்?

    • எழுதியவர், ஜி.ஆர். மகரிஷி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெத்தி திரைப்படம் இறுதியாகத் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பிறகு ராம் சரணுக்கு சொல்லக்கூடிய அளவிற்கு வெற்றிப் படம் எதுவும் அமையவில்லை. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மிகக் கடுமையாக ராம் சரண் உழைத்துள்ளார்.

நமது நாடு விளையாட்டுகளில் பதக்கங்களை பெருமளவில் பெறமுடிவதில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் வேதனைப்படுகிறார். திறமையான இளம் வீரர்களைத் தேடி விஜயநகரத்திற்கு தேர்வுக் குழு அதிகாரி ஒருவரை (பொம்மன் இரானி) அனுப்புகிறார்.

விஜயநகரத்திற்கு வரும் தேர்வுக்குழு அதிகாரி, அங்குள்ள விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் 'பெத்தி' தான் மிகப்பெரிய உத்வேகமாக விளங்குகிறார் என்று தெரியவருகிறது.

"யார் இந்த பெத்தி?" என்று அதிகாரி விசாரிக்கும் போது, ஒரு பழங்குடியின நபர் அவரைத் தன் மலை கிராமத்திற்கு அழைத்துச் சென்று, 'பெத்தி'யின் கதையைக் கூறுகிறார்.

எந்தவிதமான பாதையோ, அடிப்படை வசதிகளோ இல்லாத ஒரு மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, படிப்பறிவில்லாத ஒரு இளைஞன் தான் இந்த பெத்தி (ராம் சரண்).

அந்த ஊர் மக்கள் அனைவரும் பிழைப்பிற்காக விஜயநகரத்திற்குச் சென்று வருகிறார்கள்.

பெத்தியைக் காசு கொடுத்து விளையாடும் ஒரு 'வாடகை ஆட்டக்காரராக' ஏலத்தில் எடுத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்கிறார்கள். பெத்தி அடித்தால் சிக்ஸர், அவர் களத்தில் இறங்கி ஆடினால் வெற்றி என்ற அளவில் பெத்தி பிரபலமானவராக இருக்கிறார்.

அந்த ஊர் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் சுபத்ர ராஜுவின் (ராவ் ரமேஷ்) மகள் அச்சயம்மா (ஜான்வி கபூர்) மீது பெத்திக்கு முதல் பார்வையிலேயே காதல் மலர்கிறது.

மலையடிவாரக் கிராமத்தைச் சேர்ந்த சூரி (ஜகபதி பாபு) என்பவர், சிவப்புக்கொடியை ஏந்தி மலைப்பாதையில் வரும் ரயிலை நிறுத்தத் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். தங்கள் ஊரில் ரயில் நின்றால், அங்கு ஒரு ரயில் நிலையம் உருவாகும் என்றும், அதன் மூலம் குழந்தைகளுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் கிடைக்கும் என்பதும் அவரது நம்பிக்கை. இதற்காக அதிகாரிகளையும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரையும் மீண்டும் மீண்டும் சந்தித்து மனுக்களைச் சமர்ப்பிக்கிறார். ஆனால் கோரிக்கைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.

கிரிக்கெட் விளையாடும் பெத்தியை, விளையாட்டிலிருந்து முற்றிலுமாக ஒடுக்க வேண்டும் என்று ஊரில் உள்ள இரண்டு எதிரெதிர் கோஷ்டிகளும் ஒன்று சேர்கின்றன. இதை அவர் எப்படி எதிர்கொண்டார்?

பெத்தி ஏன் ஒரு மல்யுத்த வீரராக மாறினார்? தன் கிராமத்திற்காகவும், அதன் அடையாளத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் எந்த எல்லை வரை செல்லத் தயாராக இருக்கிறார்? இறுதியில் தன் இலக்கை அவர் எப்படி அடைகிறார்? என்பதே மீதிக்கதை.

இதற்கு மேல் சொன்னால் அது கதையின் சுவராசியத்தைக் குறைத்துவிடும்.

கதாபாத்திரங்கள் பற்றிய ஒரு பார்வை

இன்றும் இந்தியாவில் சாலை, மின்சாரம், குடிநீர் இல்லாத ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. ஆம்புலன்ஸ் வர வழியில்லாமல் கர்ப்பிணி பெண்களைத் தூக்கிக்கொண்டு போகும் அவலநிலையை செய்திகளில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தின் கதைதான் இந்த பெத்தி. அப்படிப்பட்ட, அறியப்படாத, அங்கீகரிக்கப்படாத ஒரு கிராமத்தின் கதையைச் சொல்கிறது.

இதுவே திரைப்படத்தின் கதைக்களத்தின் மையக் கருவாகவும், ஆன்மாவாகவும் அமைகிறது.

சொல்ல வந்த விஷயத்தில் நேர்மையும் தீவிரமும் இருந்தாலும், திரைக்கதை அமைப்பில் சில குறைபாடுகள் உள்ளன. இதனால் படம் ஆங்காங்கே ஒரு ஆவணப்படத்தை பார்ப்பதுபோல இருக்கிறது.

வணிகரீதியிலான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட ஹீரோவின் அறிமுகப் பாடல், நாயகியின் காதல் காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதியில் வரும் ஐட்டம் பாடல் ஆகியவை கதையின் இயல்பான ஓட்டத்தை பாதிக்கின்றன.

மல்யுத்த பயிற்சியாளராக வரும் சிவராஜ்குமார் திரையில் தோன்றிய பிறகே கதையில் வேகம் கூடுகிறது. அவருக்கும் ராம் சரணுக்கும் இடையிலான காட்சிகள் மிகச் சிறப்பு. படத்தின் முழுக் கதையும் இரண்டாம் பாதியில்தான் உள்ளது.

முதல் பாதியில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், யாருக்கும் சரியான தனித்துவமான குணாதிசயங்கள் இல்லை. எந்த கதாபாத்திரமும் மனதில் பதியவில்லை. ஜெகபதி பாபுவின் கதாபாத்திரத்தை போன்ற கதாபாத்திரங்களை நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்துவிட்டோம். ராவ் ரமேஷ் போன்ற ஒரு சிறந்த நடிகர் இருந்தும், அவரை வெறும் ஐந்து நிமிடத்திற்கு மட்டுமே பயன்படுத்தியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தபோது 'ரங்கஸ்தலம்' சமந்தா போல ஜான்விக்கு வலுவான ஒரு கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், முதல் பாதியில் சிறிது நேரமும், இரண்டாம் பாதியில் சிறிது நேரமும் மட்டுமே வருகிறார். கதாநாயகி இல்லாவிட்டாலும் இந்தத் திரைக்கதைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றே தோன்றுகிறது. ரசிகர்களுக்காக மட்டுமே அவர் படத்தில் இருக்கிறார் என்பதுபோல தோன்றுகிறது.

ராம் சரணின் இரண்டு வருட உழைப்புக்கு பலன் கிடைத்ததா?

இந்தத் திரைப்படத்தில் பிரத்யேகமாகக் குறிப்பிட வேண்டியது ராம் சரணைப் பற்றித்தான். கடந்த இரண்டு வருடங்களாக அவர் போட்ட உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. கிரிக்கெட் மற்றும் மல்யுத்தக் காட்சிகளுக்காக அவர் சிறப்புப் பயிற்சி எடுத்து நடித்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரேயொரு படத்திற்காக இவ்வளவு கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது. அவரது திரைப்பயணத்தில் நிலைத்து நிற்கும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் ஏற்கெனவே பெரும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் அவரது தனித்துவமான பாணி பின்னணி இசையிலும் தெளிவாகப் புலப்படுகிறது.

ஒளிப்பதிவும், தயாரிப்பு வடிவமைப்பும் மிக நேர்த்தியாக உள்ளன. தயாரிப்பாளர்கள் எதற்கும் தயங்காமல் தாராளமாகச் செலவு செய்திருப்பது திரையில் தெரிகிறது.

இயக்குனர் புச்சி பாபு சனா படத்தை உருவாக்குவதில் காட்டிய கவனத்தை, கதையாக்கத்தில் காட்டவில்லை எனத் தோன்றுகிறது.

மேலும், கிராம மக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை நிலைநிறுத்துவதற்கோ அல்லது எடுத்துக்காட்டுவதற்கோ தேவையான வலுவான காட்சிகளும் இல்லை.

மூன்று மணி நேரம் ஓடும் படம் மிகவும் நீளமாகத் தோன்றுகிறது. திரைப்படத்தின் நீளத்தை நிச்சயமாகக் குறைத்திருக்கலாம். நகைச்சுவை நடிகர் சத்யாவைப் பொறுத்தவரை, படத்தில் அவரது இருப்பு பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. அவர் இருக்கிறார், ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

நிறைகள்

1) ராம் சரணின் நடிப்பு, சிவராஜ்குமாரின் இருப்பு

2) ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள், பின்னணி இசை

3) ஒளிப்பதிவு

4) கிரிக்கெட், மல்யுத்தக் காட்சிகள்

குறைகள்

1) முதல் பாதியில் மெதுவான கதை நகர்வு

2) கதையில் இயல்பான ஓட்டம் இல்லாமை

3) நீளமான படம்

4) கதாபாத்திரச் சித்தரிப்பு இல்லாமை, வலுவான காட்சிகள் இல்லாமை

இறுதியில், இது ராம் சரணின் தனி ஒருவன் ஆட்டம்.

(கருத்துகள் விமர்சகரின் தனிப்பட்டவை)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு