திருப்பதியில் பெருமாளை தரிசிக்க உள்ள 11 வழிகள் பற்றி தெரியுமா?

திருப்பதி பெருமாள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஸ்ரீனிவாஸ் நிம்மகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

திருமலையில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் பெருமாளை தரிசிக்க தினமும் 60,000 முதல் 80,000 பேர் வரை வருகின்றனர். திருமலை என்றால் நிரந்தர நலனும் பசுமையான நுழைவாயிலும் என்று கூறப்படுகிறது.

காலை நடைபெறும் சுப்ரபாத சேவையில் தொடங்கி, இரவு நடைபெறும் ஏகாந்த சேவை வரை ஸ்ரீவாரிக்கு பல்வேறு சேவைகள் செய்யப்படுகின்றன.

சமீப காலங்களில், 'தினமும் 65,000 முதல் 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்' என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிடும் செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகமாகிறது.

பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்ப, பெருமாளை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள வழிமுறைகள் என்ன? மலையில் எத்தனை வகையான தரிசனங்கள் உள்ளன? பக்தர்கள் இன்னும் ஏன் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்? என்னென்ன விமர்சனங்கள் உள்ளன?

திருமலைக்கு வரும் பக்தர்களிடையே மிகவும் பரவலாக அறியப்பட்ட தரிசன முறை சர்வ தரிசனம் ஆகும். சர்வ தரிசனம் என்றால் அனைவருக்குமான தரிசனம் என்று பொருள்.

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு தரிசனத்தை எளிதாக்குவதற்கான பயனுள்ள வழிமுறைகளை பின்பற்றி வருவதாக திருமலை தேவஸ்தானம் (TTD) கூறுகிறது.

இந்த சர்வ தரிசன டோக்கன்கள், திருமலையில் தரிசனத்திற்கான நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, திருப்பதியில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம், அலிபிரி அருகே உள்ள பூதேவி வளாகம் ஆகிய இடங்களில் 'ஸ்லாட்டட் சர்வ தரிசன டோக்கன்கள்' என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

சர்வ தரிசனம் முற்றிலும் இலவசம். இதற்கு எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை. சர்வ தரிசன டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு ஏற்ப, பக்தர்கள் திருமலையில் உள்ள இரண்டாவது வைகுண்டம் வரிசை வளாகத்திற்குச் செல்ல வேண்டும்.

முக்கிய கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்திற்குள் நுழைந்த பிறகு, பக்தர்கள் தங்களுக்கான நேரம் வரும் வரை அங்குள்ள அறைகளில் காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் இந்தக் காத்திருப்பு நேரம் 24 மணி நேரம் வரை நீள்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூற்றுப்படி, சாதாரண நாட்களில் சர்வ தரிசனத்திற்காக 18 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில், சர்வ தரிசனத்திற்கான நேரம் 20 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.

2026 - ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும் விவரங்கள். சிவப்பு நிறம் ஒதுக்கீடு நிரம்பிவிட்டதைக் குறிக்கிறது.

பட மூலாதாரம், https://ttdevasthanams.ap.gov.in/slot-booking?

படக்குறிப்பு, 2026 - ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும் விவரங்கள். சிவப்பு நிறம் ஒதுக்கீடு நிரம்பிவிட்டதைக் குறிக்கிறது. சாம்பல் நிறம் கிடைக்காத தேதிகளைக் குறிக்கிறது.

இந்த சிறப்பு நுழைவு தரிசனம், விரைவு தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தரிசனம், பக்தர்களுக்கு விரைவாக தரிசனம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

பின்னர், இது ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல், முன்பதிவு முறையின் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு ஆன்லைனில் வழங்கி வருகிறது.

இந்த டிக்கெட்டின் விலை ரூ.300. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயன்படுத்திய அதே அசல் புகைப்பட அடையாள அட்டையை தரிசனத்திற்குச் செல்வதற்கு முன்பு காண்பிக்க வேண்டும்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுவதற்கு வயதுக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

ஒருமுறை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், முன்னதாக வர விரும்பினாலும் அதை மாற்றியமைக்கவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ முடியாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் விதிகள் தெரிவிக்கின்றன.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுவதற்கு வயதுக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

பட மூலாதாரம், TTD

படக்குறிப்பு, அலிபிரி அடிவாரத்தில் பக்தர்கள்

மலையேறி வரும் பக்தர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் அறிமுகப்படுத்திய தரிசன முறைதான் திவ்ய தரிசனம்.

வெங்கடேஸ்வர சுவாமி கோயிலை வாகனங்கள் மூலம் சென்றடையக் கூடிய மலைப்பாதைகளைத் தவிர, பக்தர்கள் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய இரண்டு நடைபாதைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று அலிபிரி நடைபாதை. மற்றொன்று ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு.

ஸ்ரீவாரிமெட்டு படிகள் வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

ஸ்ரீவாரிமெட்டு படிகள் வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

பட மூலாதாரம், TTD

படக்குறிப்பு, திருப்பதியில் இருந்து ஸ்ரீவாரிமெட்டுக்கு தர்மரதம் என்ற பெயரில் இலவச பேருந்துகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இயக்கி வருகிறது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஸ்ரீவாரிமெட்டு, ஸ்ரீநிவாசமங்காபுரம் அருகே அமைந்துள்ளது. திருமலைக்கு நடந்து செல்லும் பாதைகளில் இதுவே மிகக் குறுகிய தூரம் கொண்டது.

திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீவாரிமேட்டிற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தர்மரதம் என்ற பெயரில் இயக்கப்படுகின்றன.

காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்தம் 18 பேருந்து சேவைகள் இயக்கப்படும். 45 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.

கடைசி பேருந்து ஸ்ரீவாரிமெட்டில் இருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்படும்.

மாலை 6 மணிக்குப் பிறகு பக்தர்கள் ஸ்ரீவாரி படிகளில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்தப் பாதை மீண்டும் காலை 6 மணிக்குத் திறக்கப்படும்.

இந்தப் பாதையில் பயணிக்கும் பக்தர்களுக்காக 4,000 முதல் 5,000 திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய பிரமுகர்களுக்கும், சிறப்புப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும் தரிசனம் தான் விஐபி தரிசனம் ஆகும். பொதுப் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் பரிந்துரைக் கடிதங்களின் பேரில் இந்தத் தரிசனம் வழங்கப்படுகிறது.

அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கும் நன்கொடையாளர்களுக்கும், அவர்கள் வழங்கும் நன்கொடையின் அடிப்படையில் விஐபி இடைவேளை தரிசனம் மற்றும் விரைவு தரிசன வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஸ்ரீவாணி தர்சனம்

இது நன்கொடை அடிப்படையிலான சேவையாகும். பக்தர்கள் பெருமாளுக்கு ரூ.10,000 நன்கொடையாக வழங்கிய பின்னர், ரூ.500 செலுத்தி பிரேக் தரிசன டிக்கெட்டை வாங்க வேண்டும். அதாவது, மொத்தம் ரூ.10,500 செலுத்த வேண்டும்.

இந்த டிக்கெட்டுகளை வாரத்தின் எந்த நாளிலும் ஆன்லைனில் பெறலாம். முன்பு காலையில் நடத்தப்பட்டு வந்த இந்த தரிசனம், சமீபத்தில் மாலை நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பிரேக் தரிசனம் வழங்கப்படுகிறது.

இந்த டிக்கெட்டுகளை வாரத்தின் எந்த நாளிலும் ஆன்லைனில் பெறலாம். முன்பு காலையில் நடத்தப்பட்டு வந்த இந்த தரிசனம், சமீபத்தில் மாலை நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Screenshot/TTD

படக்குறிப்பு, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனம் கிடைக்கும் விவரங்கள்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு தரிசனம் வழங்குகிறது .

முதியவர்கள் தங்கள் வயதுக்கான ஆதாரமாக ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்ட சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். இந்த சிறப்பு தரிசனத்தில், அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த சிறப்பு தரிசனம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு 1,000 பேருக்கு வழங்கப்படுகிறது.

சிறப்பு தரிசனத்திற்கும் முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். தினமும் 750 பேர் அனுமதிக்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் ஸ்ரீவாரியை விரைவாக தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் வசதி செய்து வருகிறது.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், தட்சிணமடா வீதியை ஒட்டியுள்ள சுபதம் வழியாக கோயிலுக்குள் அனுப்பப்படுகின்றனர்.

மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை, தரிசனம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்படும்.

இந்த தரிசனத்தில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பெற்றோருக்கு மற்றொரு குழந்தை இருந்தால், அந்தக் குழந்தை 12 வயதுக்குட்பட்டதாக இருந்தால் அவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

சுபதம் நுழைவாயிலில் முன்கூட்டியே ஆன்லைன் முன்பதிவோ அல்லது டிக்கெட்டோ தேவையில்லை. ஆனால், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் அறிக்கை மற்றும் பெற்றோர் இருவரின் ஆதார் அட்டைகளையும் காண்பிக்க வேண்டும்.

இந்த தரிசனம் முற்றிலும் இலவசம். பெற்றோர்கள் பாரம்பரிய உடையில் வர வேண்டும்.

சுபதம் நுழைவாயிலில் முன்கூட்டியே ஆன்லைன் முன்பதிவோ அல்லது டிக்கெட்டோ தேவையில்லை. ஆனால், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் சுருக்கம் மற்றும் பெற்றோர் இருவரின் ஆதார் அட்டைகளையும் காண்பிக்க வேண்டும்.

பட மூலாதாரம், TTD

படக்குறிப்பு, திருமலை ஸ்ரீவாரி கோயில் வளாகத்தில் உள்ள அடலா மண்டபத்தில் டோலோத்சவ சேவை நடைபெறும்.

திருமலையில் ஸ்ரீவாரிக்கு தினமும் பல்வேறு அர்ஜித சேவைகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, ஏகாந்த சேவை, கல்யாணோத்ஸவம், அர்ஜித பிரம்மோத்ஸவம், டோலோத்ஸவம், வசந்தோத்ஸவம் மற்றும் சகஸ்ரதீப அலங்காரம் ஆகியவை அடங்கும்.

இந்த சேவைகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்களுக்கும் ஸ்ரீவாரி தரிசனம் வழங்கப்படும்.

இந்த தினசரி சேவைகளுக்கு கூடுதலாக, வாராந்திர சேவைகளும் சிறப்பு வாய்ந்தவை.

செவ்வாய்க்கிழமை அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும், வியாழக்கிழமை திருப்பாவாடை சேவையும், வெள்ளிக்கிழமை அபிஷேகம் மற்றும் வஸ்த்ராலங்கார சேவையும் நடைபெறும்.

இந்த சேவைகளில், கல்யாணோத்ஸவம், அர்ஜித பிரம்மோத்ஸவம், டோலோத்ஸவம் மற்றும் வசந்தோத்ஸவம் போன்ற சேவைகள் மூல பெருமாளுக்கு நடத்தப்படுவதில்லை. மாறாக, உற்சவர் மூர்த்தியான மலையப்பசுவாமிக்கு நடத்தப்படுகின்றன.

இவை கோயில் வளாகத்திற்குள் நடைபெறுகின்றன.

இருப்பினும், இந்த சேவைகளுக்கு முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கருவறையில் உள்ள மூலவர் சிலையையும் தரிசிக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த அனைத்து சேவைகளுக்கான டிக்கெட்டுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிடுகிறது.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் திருமலையில் திருமணம் செய்து கொள்வதாக வேண்டிக்கொள்வது வழக்கமாக உள்ளது. இதனால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதற்காக அந்த மலையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மலையில் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியினருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி தரிசனம் வழங்கி வருகிறது.

புதுமணத் தம்பதியர் மற்றும் இரு தரப்பினரின் பெற்றோர் என மொத்தம் 6 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

'ஸ்ரீ சீனிவாச திவ்யானுக்ரஹ ஹோமம்' என்ற பெயரிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி தரிசனத்தை வழங்குகிறது. இதற்காக ஆன்லைனில் ரூ.1,000 செலுத்த வேண்டும்.

இந்த சேவை திருப்பதி அலிபிரி அடிவாரத்தில் உள்ள கோசாலையில் நடத்தப்படுகிறது. இந்த சேவையில் பங்கேற்ற பிறகே பக்தர்கள் மலைக்குச் செல்ல வேண்டும்.

இந்த ஹோமத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்களுக்கு மாலை 3 மணிக்கு ரூ.300 செலுத்தி சிறப்பு நுழைவு தரிசனம் வழங்கப்படும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகளைப் பெற்று, விஐபி பிரேக் தரிசனம் முதல் விரைவு தரிசனம் வரை பக்தர்களுக்கு பல்வேறு தரிசன வசதிகளை வழங்கி வருகிறது.

இதுதவிர, நன்கொடையாளர்களுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளை, ஸ்ரீ பாலாஜி ஆரோக்கியவரபிரசாதினி திட்டம், பேர்ட் அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ ஷ்ரேயாஸ் அறக்கட்டளை, பிராணதானம் அறக்கட்டளை, கோசம்ரக்ஷண அறக்கட்டளை, வித்யாதானம் அறக்கட்டளை, வேதபரிரக்ஷணம் அறக்கட்டளை, ஸ்விம்ஸ் (SWIMS), ஸ்ரீ வெங்கடேஸ்வர கோயில் கட்டுமான அறக்கட்டளை (ஸ்ரீவாணி) உள்ளிட்ட அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு தரிசனம் மற்றும் பிற வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்குகிறது.

தரிசன அனுமதி பெறுவதற்கான தொகை, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையில் இருந்து தொடங்குகிறது.

தரிசனம் வழங்கும் தொகை ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையில் இருந்து தொடங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருமலையில் பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர்

இதனுடன், இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கும் ரூ.300 டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேரடியாக வழங்குகிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் சிறப்பு நுழைவு தரிசனம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து அவர்கள் திரும்பிச் செல்லும் பயணத் தேதிக்கு ஒரு மாதத்திற்குள் இருப்பவர்கள், தங்களது பாஸ்போர்ட்டில் உள்ள பயணத் தேதி மற்றும் குடியேற்ற முத்திரையை காண்பிக்க வேண்டும்.

அவர்களுக்கும் ரூ.300 சிறப்பு நுழைவு கட்டணத்தில் தரிசனம் வழங்கப்படுகிறது.

சர்ச்சைகளும் விமர்சனங்களும்

திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பின்பற்றி வரும் நடைமுறைகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் உள்ளன.

குறிப்பாக, நாளுக்கு நாள் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறுவது சரியல்ல என திருப்பதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பி.வி. ரவிக்குமார் கூறுகிறார்.

"80,000 அல்லது 90,000 பேருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசனம் வழங்குகிறது என்று கூறுவது சரியல்ல. உண்மையில், அதிகபட்ச எண்ணிக்கையைத் தாண்டி தரிசனம் வழங்குவதாகக் கூறினால், அது பக்தர்களை நெருக்கித் தள்ளுவதைப் போன்றதாகும். மலையில் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு தரிசனம் வழங்க முடியாத சூழ்நிலைகளும் உள்ளன" என்று அவர் கூறினார்.

பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசினார்.

"நாங்கள் அதிகபட்ச அளவில் தரிசனம் வழங்குகிறோம். ஆனால், அதற்காக பக்தர்களை நெருக்கித் தள்ளுகிறோம் என்று அர்த்தமில்லை. ஊடகங்களில் மட்டுமே தரிசனம் தொடர்பாக பக்தர்களிடமிருந்து விமர்சனங்கள் வருகின்றன. பக்தர்களின் தரிசனத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. இதற்காக செயற்கை நுண்ணறிவின் உதவியையும் பெற்று வருகிறது. மலையில் தரிசனத்திற்காக எத்தனை பக்தர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை எங்கள் கட்டுப்பாட்டு மையம் கணக்கிடுகிறது. ஒவ்வொரு பக்தருக்கும் தரிசனம் வழங்குவதே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நோக்கம்" என்று அவர் கூறினார்.

"பக்தர்கள் வருவதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், எத்தனை பேர் தரிசனம் செய்ய முடியும் என்பதை முடிவு செய்வது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கைகளில் தான் உள்ளது. அதற்கேற்ப அதிகபட்ச எண்ணிக்கையை முடிவு செய்து, அதன்படி குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், தரிசனம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்ளும்" என்று ரவிக்குமார் கூறினார்.

"திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் தரவுகள் உள்ளன. எந்த நாளில் எத்தனை பேர் தரிசனம் செய்வார்கள் என்பது குறித்த கணக்கீடுகள் உள்ளன. இதன் அடிப்படையில், எங்களால் முடிந்த அளவுக்கு அனைவருக்கும் தரிசனம் வழங்குகிறோம்" என்று மூத்த அதிகாரி கூறினார்.

"கடவுளின் முன் அனைவரும் சமம் என்று கூறப்படும் நிலையில், இந்த விஐபி கலாசாரம் எதற்கு?" என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அமஞ்சர்லா சதீஷ்பாபு கேள்வி எழுப்பினார். "விஐபி அனுமதி குறிப்பிட்ட நெறிமுறை அடிப்படையிலான நபர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

"விஐபி டிக்கெட்டாக இருந்தாலும், ஸ்ரீவாணி டிக்கெட்டாக இருந்தாலும், சாமானிய பக்தருக்கு ஒதுக்கப்படும் தரிசன நேரம் மிகவும் குறைவாக உள்ளது" என்று அந்த அதிகாரி கூறினார்.

"பக்தர்கள் வெவ்வேறு வகையானவர்கள். சிலர் வந்தவுடன் தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிலர் பணம் செலுத்தினால் தரிசனம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள்... திருமலை திருப்பதி தேவஸ்தானம் இப்படிப்பட்டவர்களுக்கு ஏற்றவாறு செயல்படக்கூடாது. மாறாக, அனைத்து பக்தர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

திருப்பதி உள்ளூர் மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆதார் அடிப்படையிலான திருமலை ஸ்ரீவாரி தரிசனம் வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு பக்தர் தனது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஒருமுறை தரிசனம் செய்துவிட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்கு மீண்டும் தரிசனம் செய்ய வாய்ப்பு இருக்காது. இதே நடைமுறையை அனைத்து தரிசனங்களுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தினால், மலை உச்சியில் நடைபெறும் அனைத்து தரிசனங்களும் சுமுகமாக நடைபெறும். இல்லையெனில், அரசு அழுத்தம், பத்திரிகையாளர்களின் அழுத்தம், அரசியல்வாதிகளின் அழுத்தம் என பல்வேறு அழுத்தங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளாகும் நிலையில், இது ஒரு நிலை அல்ல, ஒரு அமைப்பாக மாறிவிடும்" என்று திருப்பதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தினேஷ் குமார் கூறினார்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசனங்கள் மற்றும் அவற்றுக்கான நேரங்களில், பிரம்மோற்சவம், பிற முக்கியத் திருவிழாக்கள் மற்றும் பக்தர்களின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாற்றங்களையும் கூடுதல் ஏற்பாடுகளையும் செய்யக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு