பிரிக்ஸ் அமைப்பால் இந்தியாவுக்கு என்ன பலன்? நிபுணர்களின் பார்வை

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நான்காவது முறையாக நடைபெறுகிறது. இந்த முறை இந்தக் கூட்டமைப்புக்குத் தலைமை வகிப்பது இந்தியாவுக்கு ராஜ்ஜீய ரீதியாக சிக்கலானதாக உள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்ற இரண்டு மாதங்களிலேயே, பிரிக்ஸ் உறுப்பு நாடான இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின.
இதையடுத்து, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியா மீது இரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியது. இப்போது இந்த மூன்று நாடுகளையும் ஒரே தளத்துக்குக் கொண்டுவரும் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது.
அமெரிக்கா-இரான் மோதல், பிரிக்ஸ் அமைப்புக்குள் நிலவும் தீவிரமான வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் இந்தியா நடத்திய பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், எந்தவொரு கூட்டு அறிக்கையும் இல்லாமல் முடிவடைந்தது.
இது இந்தியாவுக்கு ராஜ்ஜீய ரீதியான பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. மத்திய கிழக்கு நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.
இந்த பிரிக்ஸ் உச்சி மாநாடும் கூட்டு அறிக்கை எதுவும் இல்லாமல் முடிவடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அவ்வாறு நடந்தால், அது மீண்டும் மாநாட்டை நடத்தும் நாடான இந்தியாவின் ராஜ்ஜீய தோல்வியாகப் பார்க்கப்படும். இதை எந்த விலை கொடுத்தாவது இந்தியா தவிர்க்க விரும்பும்.
கடைசியாக 2021ஆம் ஆண்டு இந்தியா பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தியபோது, இந்தக் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன.
இந்த நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு பிரிக்ஸ் என்ற பெயர் உருவாக்கப்பட்டது.
இன்று இது 11 நாடுகளைக் கொண்ட சிக்கலான கூட்டமைப்பாக வளர்ந்துள்ளது. இருப்பினும், சௌதி அரேபியாவின் முறையான உறுப்பினர் நிலை குறித்து தெளிவு இல்லாததால், இது 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட அமைப்பாகவும் கருதப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவும் சீனாவும் இருந்தபோதும், ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினமாகவே இருந்தது. இப்போது, ஒன்றுக்கொன்று எதிராக நேரடி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், ஒருமித்த கருத்தை எட்டுவது மிகவும் கடினமாக இருக்கும் ஒரு கூட்டமைப்பில் இந்தியாவுக்கு என்ன கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பிரிக்ஸ் சீனாவின் நலன்களுக்கு துணை புரியுமா?
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் ராஜேஷ் ராஜகோபால், உலக அரசியலில் இந்தியா இன்னும் ஒரு நடுநிலையான பாதையைக் கண்டறிய முயற்சித்து வருவதாகக் கருதுகிறார். இருப்பினும், அந்தப் பாதை பெருமளவில் இந்தியாவின் காலடியில் இருந்து நழுவிச் சென்றுவிட்டது.
செப்டம்பர் 11ஆம் தேதி 'தி பிரிண்ட்'-ல் வெளியான கட்டுரையில், பேராசிரியர் ராஜகோபால், "இந்த யதார்த்தத்தை அங்கீகரிக்கத் தவறுவதும் பிரச்னையின் ஒரு பகுதியாகும். பிரிக்ஸ் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பிரிக்ஸ் எப்போதாவது ஒரு திறமையான கூட்டமைப்பாக மாறினால், சீனா தனது சொந்த நலன்களை முன்னெடுத்துச் செல்லவும், இந்தியாவைத் தனிமைப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய கூட்டாளிகளைப் பலவீனப்படுத்தவும் அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்த முயற்சியில் இந்தியாவுக்கு அதிக ஆர்வம் இருக்கக் கூடாது. குறிப்பாக, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பலவீனமான நிலை காரணமாக, இதே கூட்டாளிகளின் ஆதரவு இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.
எனவே, பிரிக்ஸ் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக மாறி இந்தியாவின் நலன்களை மிதித்துச் செல்லாத வகையில், முடிந்தவரை அதை பலவீனப்படுத்துவது இந்தியாவின் நலனுக்கானது. இந்தப் பிரச்னையிலிருந்து இப்போது தப்பிக்க வழியில்லை."
"இவை அனைத்தும் முன்கூட்டியே கணிக்கக்கூடியவை. பெரிய வல்லரசுகள் எப்போதுமே செய்து வந்ததைத்தான் சீனா செய்ய முயற்சிக்கிறது. சர்வதேசக் குழுக்கள் மற்றும் அமைப்புகளைப் பயன்படுத்தி தங்களது சொந்த நலன்களை முன்னெடுத்துச் செல்வது."
"சர்வதேச அமைப்புகளுக்கு அவற்றின் உறுப்பு நாடுகளின் நலன்களைவிட உயர்ந்த நலன்கள் ஏதேனும் உள்ளன என்று நினைப்பது முட்டாள்தனமானது. மாறுபட்ட மற்றும் முரண்பட்ட தேசிய நலன்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் எந்தவொரு அரசியல் சமரசத்தின் விளைவாகவும் அவற்றின் முடிவுகளும் நடவடிக்கைகளும் அமைவதில்லை. மாறாக, இந்த செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையிலான உண்மையான அதிகார வேறுபாடுகள், இந்த முடிவுகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தக் குழுக்களை அதிக சக்திவாய்ந்த நாடுகளே கட்டுப்படுத்துகின்றன."
"கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்ஸ் நிறுவப்பட்டபோது, இந்த பொருளாதார மற்றும் ராணுவ வலிமையில் இடைவெளி இவ்வளவு பெரிதாக இல்லை" என்கிறார் ராஜகோபால்.
"அமெரிக்காவின் கைகளில் அதிகாரம் அதிகமாகக் குவிவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்த அச்சம், பிரிக்ஸ் அமைப்புக்குள் நிலவும் அதிகாரச் சமநிலையின்மையின் மீது இருந்த கவனத்தைத் திசைதிருப்பியிருக்கலாம்".
"ஆனால், வெளிப்படையாகத் தெரியும் இந்த யதார்த்தத்தைப் புறக்கணிப்பதற்கு இது எந்தவிதத்திலும் காரணமாகாது. இந்த யதார்த்தத்தை இந்தியா மிகவும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இது இந்தியாவை நேரடியாகப் பாதிக்கிறது"என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிற்கான சவால்கள்
ஆனால், ராஜேஷ் ராஜகோபால் போல, பிரான்சுக்கான முன்னாள் இந்திய தூதர் மோகன் குமார் அவ்வாறு கருதவில்லை.
செப்டம்பர் 12 அன்று தி இந்து நாளிதழில் எழுதிய மோகன் குமார், பிரிக்ஸ் தொடர்ந்து நீடிக்கும் என்றும், அதன் உறுப்பு நாடுகள் இரண்டு முக்கிய இலக்குகளை அடைய அது மெதுவாகவும், ஆனால் உறுதியாகவும் உதவும் என்றும் கூறுகிறார். அவை, தங்களது ராஜ்ஜீய ரீதியான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், உலக அரசியலை உண்மையான பலதுருவ உலகை நோக்கி நகர்த்துவதும் ஆகும்.
"இந்த இரண்டும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளாகவும் உள்ளன. உலக அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவும் உலகில், இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் மற்ற நாடுகளும் பெரும் சாத்தியக்கூறுகளைக் காண்கின்றன. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் வகையில் பிரிக்ஸ் அமைப்பிடம் நிறைய உள்ளது. எளிமையாகச் சொல்வதானால், பிரிக்ஸ் இப்போது புறக்கணிக்க முடியாத அளவுக்கு பெரிதாக மாறியுள்ளது"என மோகன் குமார் கூறுகிறார்.
"பிரிக்ஸ் அமைப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் இருக்குமானால், அது தானாக உருவாக்காததும், அதன் உறுப்பு நாடுகளுக்கு நிச்சயமாக எந்தவொரு ராஜ்ஜீய முக்கியத்துவமும் இல்லாததுமான புவிசார் அரசியல் குழப்பத்தில் சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பதாகும்.
சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோதி போன்ற தலைவர்கள் இதன் மீது முழுக் கவனத்தையும் செலுத்தலாம்; செலுத்த வேண்டும். ஆனால், பிரிக்ஸ் கூட்டமைப்பு தனது முழுத் திறனுடன் செயல்பட வேண்டும் என்பதே பெரிய நோக்கமாகும். டெல்லி உச்சி மாநாடு இந்தத் திசையில் உறுதியான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்."
கஜகஸ்தானின் அல்மாட்டியில் உள்ள சுலைமான் டெமிரல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ராஜ் குமார் சர்மா, இந்தியா வலுவான பிரிக்ஸ் அமைப்பை விரும்புகிறது என்றும், ஆனால் அந்தக் குழு சீனாவின் ராஜதந்திர செல்வாக்கிற்கான ஒரு கருவியாக மாறுவதை அது விரும்பவில்லை என்றும் நிக்கேய் ஏசியாவிடம் தெரிவித்தார்.
"இது இந்தியாவுக்கு ஒரு கடினமான சமநிலைப் பணியாக உள்ளது" என்கிறார் அவர்.
நான்காவது முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியாவின் வெற்றி, பல்வேறு மட்டங்களில் இந்தியா தன்னை ஒரு "பாலமாக" எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறினார்.
சீனாவின் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஆட்சி முன்னெடுப்புடன் பிரிக்ஸ் விரிவாக்கம் ஒரே காலகட்டத்தில் நடைபெறுகிறது. இந்த முன்னெடுப்பு பல்முனை உலக ஒழுங்கை ஊக்குவிக்கிறது.
சீனத் தலைவர்கள், இந்த முன்னெடுப்பை "மேலாதிக்க அரசியலுக்கு" எதிரான ஒரு நடவடிக்கையாகவும், வளரும் நாடுகளுக்கு இடையே அதிகாரத்தை மேலும் சமமான முறையில் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சியாகவும் முன்வைக்கின்றனர்.
பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பாக மாற்றுவது இந்தியாவின் முக்கிய நோக்கம் அல்ல என்றும், மாறாக, அதிக பிரதிநிதித்துவம் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கான நம்பகமான தளமாக அதை வலுப்படுத்துவதும், உலகளவில் முன்னணி குரலாக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுமே அதன் நோக்கம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தபோதிலும் இந்தியா மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல என்று கூறினார். பல்வேறு துறைகளில் மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு முக்கியமான கூட்டாளியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய நலன்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா சம அளவில் வலுவான உறவுகளை கொண்டிருக்க முடியும் என்று ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிரிக்ஸ் மற்றும் அமெரிக்கா
பிரிக்ஸ் அமைப்பு 2006ஆம் ஆண்டு பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவால் தொடங்கப்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்காவும் இதில் இணைந்தது.
தற்போது 10 நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரம், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன. இரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகளாவிய செயல்திட்டத்தை நீண்ட காலமாக நிர்ணயித்து வரும் மேற்கத்திய நாடுகள் தலைமையிலான குழுக்களுக்கு எதிரான சமநிலை சக்தியாக பிரிக்ஸ் அமைப்பு தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்ஃ) போன்ற அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும், அமெரிக்க டாலரைத் தவிர பிற நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தி வருகிறது.
இந்த பிரிக்ஸ் முன்னெடுப்புகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அடிக்கடி கோபப்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு, பிரிக்ஸ் நாடுகள் மீது வரிகளை உயர்த்தப் போவதாக அவர் எச்சரித்தார்.
இந்த உச்சி மாநாட்டை நடத்துவது குறித்து இந்தியா அதிக அளவில் விளம்பரப்படுத்தவில்லை.
பிரிக்ஸ் அமைப்பு தனது உள்நாட்டு வேறுபாடுகளைக் கடந்து, உலகளாவிய ஒழுங்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பதற்கான சோதனையாக இந்தக் கூட்டம் அமையும்.
தற்போது பிரிக்ஸ் அமைப்புக்குத் தலைமை வகிக்கும் இந்தியா, உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதிலும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, விநியோகச் சங்கிலி இடையூறுகள், பருவநிலை அபாயங்கள் மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் அவற்றின் திறனை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேனில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்கள் உலகளாவிய வர்த்தகத்தை பாதித்து வருகின்றன. இதனால் எரிசக்தி, உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவின் (AI) வேகமான வளர்ச்சியும், அதன் காரணமாக மிகப்பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படக்கூடிய சாத்தியமும் மற்றொரு முக்கிய சவாலாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவை ஆதரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அமெரிக்காவும் சீனாவும் முன்னிலை வகிக்கின்றன. அதே நேரத்தில், பல வளரும் பொருளாதாரங்கள் மேலும் பின்தங்கும் அபாயத்தில் உள்ளன. அதிகரித்து வரும் காலநிலை நெருக்கடியும் மிகப்பெரிய கவலையாக இருக்கும்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. சில நேரங்களில் இந்த நலன்கள் ஒன்றுக்கொன்று முரண்படவும் செய்கின்றன.
அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளும் மிகவும் வேறுபட்டவையாக உள்ளன. இதனால், பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அவை ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































