காதல் முறிந்ததால் காதலிக்காக கோடிக்கணக்கில் செலவழித்த பணத்தை திருப்பிக் கேட்டு வழக்கு - சிங்கப்பூரில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கெல்லி யங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது காதலியை பிரிவதற்கு முன்பு அவருக்காகச் செலவழித்த லட்சக்கணக்கான டாலரை திரும்பப் பெறத் தொடர்ந்த வழக்கில் தோல்வியடைந்தார்.
சந்தர் அகர்வால் என்பவர், தனது காதலி ஃபெலிசியா லீ-உடனான உறவு முறிவதற்கு முன்பு அவருக்காகச் செலவழித்த 4,68,000 சிங்கப்பூர் டாலரை திரும்பக் கோரி நீதிமன்றத்தை அணுகினார்.
அந்தப் பணம் அகர்வாலால் லீக்காகத் தானாக முன்வந்து செலவழிக்கப்பட்டது என்று சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவர்கள் காதலிக்கத் தொடங்குவதற்கு முன்பே, விலையுயர்ந்த பரிசுகளை வழங்குவதன் மூலம் லீ மீதான தனது அன்பை அகர்வால் வெளிப்படுத்தியிருந்ததாக மூத்த நீதிபதி லீ சியூ கின் (Lee Siew Kin) குறிப்பிட்டார்.
அவை அனைத்தையும் லீ திரும்பத் தர வேண்டும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அகர்வால் அவரிடம் கூறியிருந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
காதல் முறிவு
லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அகர்வால், முன்னாள் விமானப் பணிப்பெண்ணான ஃபெலிசியா லீயை 2019-ல் ஒரு விமானப் பயணத்தின் போது சந்தித்தார். இவர்கள் இருவரும் செப்டம்பர் 2022 முதல் டிசம்பர் 2023 வரை காதலித்து வந்தனர்.
லீ வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக அகர்வால் சந்தேகித்ததால் அவர்கள் பிரிந்தனர்.
மார்ச் 2024-ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தங்கள் உறவின் போது லீ பலமுறை வட்டி இல்லாத கடன்களைக் கேட்டதாக அகர்வால் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
'கடன் அல்ல... அன்பினால் செய்யப்பட்ட செலவு'
லீயின் கிரெடிட் கார்டு செலவுகளுக்காக 2,06,000 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 1.50 கோடிக்கும் மேல்), வெளிநாட்டுப் பயணச் செலவுகளுக்காக 1,29,000 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 96 லட்சத்திற்கும் மேல்), அவரது வீட்டிற்கு 'ஃபெங் சுய்' (Feng Shui) நிபுணரை அமர்த்துவதற்காக 17,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.2 லட்சத்திற்கும் மேல்) மற்றும் அவரது ஆயுள் காப்பீட்டு பிரீமியத்திற்காக 20,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.4 லட்சத்திற்கும் மேல்) எனத் தான் செலவழித்ததாக அகர்வால் கூறினார்.
ஆனால், "அவை கடன்கள் அல்ல, மாறாக அன்பு மற்றும் பாசத்தின் காரணமாக வழங்கப்பட்ட பரிசுகள்" என்று லீ வாதிட்டார்.
நீதிபதி லீயின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். அகர்வாலின் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் கூறினார். உதாரணமாக, லீ தன்னிடம் கடன் கேட்டதாக அகர்வால் கூறியிருந்தாலும், அந்தப் பணத்தை வாங்கியதை லீ ஒப்புக்கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் அகர்வாலால் சமர்ப்பிக்க முடியவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
"அகர்வால் மற்றும் லீ இடையிலான உறவின்போது, அகர்வால் அவருக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து தனது அன்பை வெளிப்படுத்தினார் என்பதை எனக்கு முன் உள்ள ஆதாரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன," என்று நீதிபதி கூறினார்.
"துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்கிடையிலான உறவு முறிந்ததால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக, அந்த பணத்தை அவரிடமிருந்து திரும்பப் பெற அகர்வால் முடிவு செய்தார்."
"அகர்வால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவர்; அதற்கான நிதி வசதியும் அவரிடம் உள்ளது. ஆனால் லீக்கு அத்தகைய நிதி வசதி இல்லை," என்று நீதிபதி கூறினார்.
"அகர்வால் விலையுயர்ந்த பரிசுகளை வழங்க முன்வந்தபோது லீ பல குறுஞ்செய்திகளில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதையும், சில சமயங்களில் அவற்றை ஏற்க மறுத்ததையும் நாங்கள் கண்டறிந்தோம்," என்று நீதிபதி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
காதல் வெறுப்பாக மாறினால்...
தனது தீர்ப்பின் இறுதியில், ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் காங்ரீவ் எழுதிய 'தி மோர்னிங் பிரைட்' (The Mourning Bride) என்ற சோகம் கலந்த நையாண்டி நாடகத்திலிருந்த ஒரு வரியை நீதிபதி மேற்கோள் காட்டினார். நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்படும் கோபமானது, காதல் வெறுப்பாக மாறும்போது ஏற்படும் கோபத்தைப் போலவே தீவிரமானது என்பதே அதன் பொருளாகும்.
அத்தகைய உணர்வு ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே உரியது அல்ல என்பதை இந்த வழக்கு காட்டுகிறது என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது காதலை நிராகரித்த ஒரு பெண்ணுக்கு எதிராக, சிங்கப்பூரைச் சேர்ந்த மற்றொரு நபர் இழப்பீடாக 3 மில்லியன் சிங்கப்பூர் டாலர் கேட்டு இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தார்.
நோரா டான் தனது காதலை நிராகரித்தது தனக்குக் கடுமையான மன உளைச்சலையும், தனது நற்பெயருக்குக் களங்கத்தையும் ஏற்படுத்தியதாக கே காவ்ஷிகன் என்ற நபர் குற்றம் சாட்டினார். சிங்கப்பூர் நீதிமன்றங்கள் அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































