ஔரங்கசீப்பிடம் தோற்று 1.5 லட்சம் ரூபாய் அபராதம் கட்டிய ஜோசையா சைல்ட் - கிழக்கிந்திய நிறுவன சாம்ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைத்தது எப்படி?

பட மூலாதாரம், The History of Economic Thought
- எழுதியவர், கா.அ. மணிக்குமார்
- பதவி, வரலாற்றுப் பேராசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது தற்செயலாக நடந்தது என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜான் சீலியின் கருத்திற்கு மாறாக 1600-களின் பிற்பகுதியிலிருந்தே கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் தீவிர கவனம் செலுத்தியது. அதைத் திட்டமிட்டு முன்னெடுத்தவர் ஜோசையா சைல்ட்.
1600-ஆம் ஆண்டு டிசம்பர் 31அன்று வெளியிடப்பட்ட அரச சாசனத்தின் மூலம் கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்காக, ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் உருவாக்கப்பட்டது.
வர்த்தகம் எப்போதும் வன்முறையை உள்ளடக்கியதாகவே இருந்ததால் 1600களின் பிற்பகுதியிலிருந்து கிழக்கிந்திய நிறுவனம் படைகளைத் திரட்டியதுடன் கோட்டைகளையும் கட்டியது.
சூரத் அருகில் ஸ்வாலி கடற்போரில் (1612) ஆங்கிலேயர்கள் போர்த்துகீசியர்களைத் தோற்கடித்து பெற்ற வெற்றி அவர்களுக்கு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.
முகலாய அரசவைக்குத் தூதுவராகச் சென்ற (1616) சர் தாமஸ் ரோ ஆங்கிலேயர் வர்த்தகம் செய்யவும், அதற்கான வர்த்தக நிலையங்களை அமைக்கவும் அனுமதிக்கும் அரச ஆணையைப் பெற்றார். லண்டனில் இருந்து இயக்குநர்களால் உத்தரவிடப்பட்ட சரக்குகளுக்கான பரிமாற்ற மையங்களாகச் செயல்படுவதே வர்த்தக நிலையங்ககளின் பணியாகும்.
1620 மற்றும் 1630-க்கு இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக பிரெஞ்சுச் சந்தைக்காக, இந்தியாவின் 'காலிகோ' பருத்தித் துணிகளுக்கான தேவை அதிகரித்தது.
எனவே, இந்தியாவில் ஒரு சரக்கு பரிமாற்ற மையத்தை அமைப்பது வசதியாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இதன் விளைவாக, 1638இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் சுங்க வருவாயில் பாதியை ஆண்டுதோறும் செலுத்தும் அடிப்படையில் சென்னையில் (மதராஸ் பட்டினம்) குத்தகைக்கு எடுத்து, அங்கு புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர்.
சென்னை முகலாயப் பேரரசின் எல்லைக்கு வெளியே அமைந்திருந்ததால், அதைப் பாதுகாப்பான அரணாக மாற்ற வேண்டிய தேவை இருந்ததோடு, குத்தகை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, மேற்கொள்ள வேண்டிய நிர்வாகக் கடமையும் நிறுவனத்திற்கு இருந்தது.
மேலும் கோரமண்டல் கடற்கரைப் பகுதியில் கோல்கொண்டா, பிஜப்பூர் அரசுகளின் நிலைப்பாடுகள், அவற்றுக்கு இடையிலான உறவுகளை மட்டுமல்லாமல், அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபடும் அந்த அரசுகளின் அதிகாரிகள் மற்றும் முழுமையாக அடக்கப்படாத குறுநில மன்னர்கள்/பாளையக்காரர்கள் ஆகியோரையும் நிர்வாகத்தினர் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது.
டச்சு மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களும் அதே கடற்கரைப் பகுதியில் நிறுவப்பட்டிருந்ததால், சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் சூழலில் வர்த்தகப் போட்டிகள் மிகவும் சிக்கலானதாக மாறின.

பட மூலாதாரம், Getty Images
எதிர்கொண்ட பிரச்னைகள்
பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் மூன்று முக்கிய பிரச்னைகளை எதிர்கொண்டது:
1. இந்தியாவில் பெருகி வந்த அரசியல் கொந்தளிப்பாலும் குழப்பத்தாலும் அதன் வர்த்தக மையங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாயின. இத்துடன் இந்தியாவில் முகலாயப் பேரரசரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு வெளியே சென்னை போன்ற இடங்களிலிருந்த நிறுவனங்களைப் பாதுகாத்து பராமரிப்பதற்கான செலவு மிக அதிகமாக இருந்ததால் நிறுவனங்களின் லாபம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
2. 1668-1675க்கு இடைப்பட்ட காலத்தில், ஜவுளி வர்த்தகத்தால் சோழமண்டலம் மற்றும் வங்காள விரிகுடா பிராந்தியத்திலான வர்த்தகத்தின் மதிப்பு 34,000 பவுண்டுகளிலிருந்து 85,000 பவுண்டுகளாக உயர்ந்தது. இத்தகைய சூழலில், பிற வணிகர்களும் இத்துறையில் அனுமதியின்றி நுழைந்து கிழக்கிந்திய நிறுவனத்தின் ஏகபோக உரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை.
3. இரண்டாம் சார்லஸும் (1660-1685) இரண்டாம் ஜேம்ஸும் (1685-1688) பிரான்சில் பதினான்காம் லூயி உருவாக்கியதைப் போன்றதொரு வலிமையான அரசை நிறுவ விரும்பினர். அதற்குத் தடையாக செயல்பட்ட நாடாளுமன்றம் அரசருக்குத் தேவையான நிதியை அனுமதிக்க நாடாளுமன்றம் மறுத்ததன் விளைவாக அரசர் தனது கடன் தேவைகளுக்காக பெரு நிறுவனங்களையும் தனிப்பட்ட பெரும் முதலாளிகளையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நிறுவனங்கள் நடத்திய பெரும் செல்வந்தர்கள் கடன்களை வழங்குவதன் மூலமோ அல்லது மறுப்பதன் மூலமோ ஒரு தரப்பை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மேலும் வணிகப் போட்டியாளர்களாலும் எதிரிகளாலும் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஆதாரமாக விளங்கிய அரசரின் பட்டயம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் அதிகாரப் போராட்டத்தில் இரண்டாம் சார்லஸிற்கு ஆதரவாக கம்பெனி செயல்பட்டது. அதற்குக் கைமாறாக, தனது எதிரிகளை எதிர்கொள்ள உதவும் வகையில் கம்பெனி நிர்வாகம் கூடுதல் அதிகாரத்தை அரசரிடமிருந்து பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
ஜோசையா சைல்ட் - ஆரம்பகால வாழ்க்கை
கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரக் கட்டமைப்பு மற்றும் செயல் பாட்டுத் தன்மையை வடிவமைப்பதில் பின்னர் முக்கிய பங்காற்றிய ஜோசையா சைல்ட் முதன்முதலில் 1654இல் போர்ட்ஸ்மத்தில் ஒரு வணிகராக இருந்தார்.
கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க 'சக்சஸ்' என்ற கப்பலில் அவர் மாட்டிறைச்சி, பட்டாணி, பிஸ்கட்டுகள், வெண்ணெய், சீஸ், பிரெஞ்சு பிராந்தி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வாங்கி அனுப்ப வேண்டியிருந்தது என்பது தெரியவருகிறது.
1655இல் போர்ட்ஸ்மத்தின் குடிமகனாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அவர், அங்கு ஈட்டிய பெரும் செல்வத்தின் மூலம் அடுத்த ஆண்டில் நகர்மன்ற உறுப்பினராகவும், 1658இல் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1659இல் பீட்டர்ஸ்ஃபீல்ட் நகரின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் சைல்ட் நுழைந்தார்.
கடற்படையே அவரது மிகப்பெரிய அரசியல் வாடிக்கையாளராக இருந்ததால், கப்பல்களுக்கான பொருட்களை விநியோகிக்கும் ஒருவர் என்ற முறையில், அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவது அவருக்கு அவசியமாக இருந்தது.
நிரந்தரக் கூட்டு மூலதன முறையும் அரச சாசனங்களும்
1657இல் மேற்கொள்ளப்பட்ட நிரந்தரக் கூட்டு மூலதன முறை 1661, 1668-ஆம் ஆண்டுகளின் அரச சாசனங்களை சாத்தியமாக்கியது. 1661-ஆம் ஆண்டின் அரச சாசனம், ஒவ்வொரு குடியேற்றப் பகுதியிலும் உள்ள ஆளுநர் மற்றும் அவரது ஆலோசனை சபைக்கு, 'தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து நபர்களையும்... உரிமையியல் அல்லது குற்றவியல் என அனைத்து வழக்குகளிலும், பிரிட்டன் நாட்டின் சட்டங்களின்படி விசாரித்து நீதி வழங்கும்' அதிகாரத்தை வழங்கியிருந்தது.
அந்த சாசனங்கள் வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடிய நிரந்தர பங்குதாரர்கள் அப்போது இருந்த நிலையில் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் திருப்தியுற்றிருந்தது. ஆனால், புதிய சிக்கல்கள் தோன்றியபோது, நிறுவனம் தனது அமைப்பைச் சார்ந்த தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக, அதிகாரத்தைப் பெருக்குவதன் மூலம் தீர்வுகளைக் காண முயன்றது; அதாவது, வணிக அமைப்பு சார்ந்த பிரச்னையாகக் கருதப்பட்ட ஒன்றிற்கு, உண்மையில் ஓர் அரசியல் ரீதியான தீர்வைக் காண அது முற்பட்டது.
1665இல் லண்டனுக்குக் குடிபெயர்ந்த சைல்ட், ஜான் ஷார்ட்டர் என்பவருடன் கூட்டாக அரச கடற்படைக்கு பாய்மரங்களை வழங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, அவர் கடற்படை வாரியத்தில் ஓர் ஆணையராக நியமிக்கப்பட்டார். சைல்ட் ஒரு கட்சி சார்ந்த அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும், அவருக்கு அரசியல் சார்ந்த சிந்தனை இருந்தது. அந்த ஆணையத்தில் இருந்த அவரது கூட்டாளிகள் அரசியலிலும் வணிகத்திலும் தீவிரமாகச் செயல்பட்டனர். இது சைல்ட் அரசியலில் ஈடுபட முக்கிய காரணியாக அமைந்தது.
சென்னை முகவரின் கிளர்ச்சி
சென்னையில் கம்பெனியின் முகவராக இருந்த சர் எட்வர்ட் வின்டர் (1665-1668), (சென்னையில் முதல் பிரிட்டிஷ் மருத்துவமனையை நிறுவியவர்), லண்டனில் கம்பெனியால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தனது பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த ஜார்ஜ் ஃபாக்ஸ்கிராஃப்டிடம் அதிகாரத்தை ஒப்படைக்க மறுத்து ஃபாக்ஸ்கிராஃப்டையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்து, தன்னை ஆளுநராக அறிவித்து அடுத்த மூன்று ஆண்டுகள் புனித ஜார்ஜ் கோட்டையை சர் எட்வர்ட் வின்டர் கட்டுப்படுத்தினார்.
அப்போதிலிருந்து வணிக நோக்கங்களுக்காக நிறுவனம் நேரடியாக அரசியல் அதிகாரத்தைக் கையாள்வதன் அவசியத்தை சைல்ட் வெளிப்படுத்தத் தொடங்கினார்.
டச்சு நிறுவனம் நாட்டின் அரசியல் கட்டமைப்போடு கொண்டிருந்த நெருங்கிய பிணைப்பு, அரசியல்வாதிகள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து வரும் விமர்சனங்களைப் பாதிக்காதவாறு அந்நிறுவனத்தைப் பாதுகாத்ததாக சைல்ட் கருதினார். டச்சு மக்களின் செழிப்புக்குக் குறைந்த வட்டி விகிதக் கொள்கையே காரணம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் காரணமாக, பிரிட்டனின் அதிகபட்ச வட்டி விகிதத்தை ஆறு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதிக மக்கள் தொகை இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த சைல்ட், ஏழைகள் மற்றும் வேலையற்றோருக்கான அரசு உதவிகளையும் ஆதரித்தார்.

பட மூலாதாரம், Thomas and William Daniell/Fore Museum
கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தில் முதலீடு
கம்பெனி நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திறமையின் மீது நம்பிக்கையற்றவராயிருந்த சைல்ட் 1671ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை.
'பிரிட்டன் சட்டங்கள் சில அறிவற்ற கண்ணியவான்களால் தொகுக்கப்பட்ட அபத்தங்களின் குவியல்…. தங்கள் சொந்தக் குடும்பங்களின் நல்லாட்சிக்கானச் சட்டங்களையே இயற்றத் தெரியாதவர்கள் நிறுவனங்களையும் வெளிநாட்டு வர்த்தகத்தையும் ஒழுங்கு படுத்துவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.' என எள்ளி நகையாடினார்.
பிரிட்டனில் பிளேக் நோயைத் (1665-1666) தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தத்தைப் பயன்படுத்தி சைல்ட் அதிகமான பங்குகளை மலிவு விலையில் வாங்கினார்.
ஒரு நிர்வாகக்குழு உறுப்பினராகவோ, இயக்குனராகவோ அல்லது பங்குதாரராகவோ தகுதிபெற, 1,000 பவுண்டு மதிப்புள்ள பங்குகளை ஒருவர் வைத்திருக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு 500 பவுண்டு மதிப்புள்ள பங்குகளுக்கும் ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு இருந்தது. மற்றவர்கள் 2,500 பவுண்டுக்கும் குறைவான மதிப்பிலான பங்குகளையே வைத்திருந்த நிலையில், சைல்ட் 12,000 பவுண்டு மதிப்புள்ள பங்குகளை வைத்திருந்தார். 1673இல் சைல்ட் கிழக்கிந்திய நிறுவனத்தின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரரானார். அந்த ஆண்டு சைல்ட் வான்ஸ்டெட் அபேயை வாங்கினார், இரண்டாம் சார்லஸ் இன் நாடாளுமன்றத்தில் (1661-1679) டார்ட் மவுத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1673இலிருந்து உறுப்பினரானார்.
1677இல் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநரான சைல்ட் பின்னர் 1681இல் கம்பெனியின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பதவியில் ஏறக்குறைய அடுத்தப் பத்தாண்டுகள் பணியாற்றினார். ஒரு கால கட்டத்தில், கம்பெனி வணிகத்தைத் தனது சொந்த நிறுவனத்தைப்போல் வழிநடத்தி, நடைமுறையில் அவரே அதன் முடிவுகளை எடுக்கும் ஒரே அதிகாரியாகத் திகழ்ந்தார்.
தனது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலையை உயர்த்திக்கொள்ளும் நோக்கத்திற்காக அவர் கம்பெனியைப் பயன்படுத்திக்கொண்டதாகப் பலமுறை அவர் மீது வெளிப்படையாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் நிறுவனத்தில் தனது பதவியைத் தனக்கும் தன் உறவினர்களுக்கும் உதவப் பயன்படுத்தினார் என்றும், தனது கொள்கைக்கு எதிரான எதிர்ப்பை லஞ்சம் மூலம் சமாளித்தார் என்றும், அவர் மீது குற்றம் சாட்டினர்.
தனது பெரும் வருடாந்திரப் பரிசுகளால், அரசவையிலும் நாடாளுமன்றத்திலும் அவர் விரும்பியதைப் பெற அவரால் கட்டளையிட முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் வருவாய் விவகாரங்கள் சைல்ட் இன் சிந்தனையில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததால், வருவாய்க்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பை அவர் உணர்ந்திருந்தார்.
டச்சு அரசாங்கம் தங்கள் முகவர்களுக்கு அனுப்பிய பொதுக் கடிதங்களில், வர்த்தகம் தொடர்பான ஒவ்வொரு பத்திக்கும் ஈடாக, அரசியல் அமைப்பு, அரசியல், அரசாங்கம் மற்றும் வருவாய் ஆகியவை குறித்து சைல்டின் வழிகாட்டுதலில் எழுதப்பட்ட கடிதங்களில் பத்து பத்திகள் இடம்பெற்றிருந்தன என்று கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாகக் குழு குறிப்பிட்டது.
சென்னையின் வளர்ச்சிக்கான திட்டம்- ஆளுநர் ஸ்ட்ரெய்ன்ஷாம் மாஸ்டர்
1675-இல் கடற்கரை மற்றும் வங்காள விரிகுடாப் பகுதி வர்த்தகத்தை கண்காணிக்கவும், சென்னையின் ஆளுநர் பொறுப்பை ஏற்கவும் அனுப்பப்பட்ட 'ஸ்ட்ரெய்ன்ஷாம் மாஸ்டர்' என்பவருக்கான பணி நியமன ஆணை, ஒரு கொள்கை அறிக்கையாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
ஒரு நகர நிர்வாக அமைப்பின் மூலம் சென்னையின் வர்த்தகத்தை மேம்படுத்த மாஸ்டர் பணிக்கப்பட்டார். 'மக்கள் பிரிட்டிஷ் நகரத்தில் குடியேறத் தூண்டும் வகையில்', நீதி பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 'சுதந்திரமான சந்தை மற்றும் கண்ணியமான அணுகுமுறை' ஆகியவற்றை அனுமதிப்பதன் மூலம் வணிகர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கருதப்பட்டது.
நகரத்தின் வர்த்தகத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது குறித்தும், மிதமான கலால் வரி அல்லது மனை/வீட்டு வாடகை மூலம் சுங்க மற்றும் வருவாய் வரிகளை எவ்வாறு பராமரிக்கலாம் அல்லது மேம்படுத்தலாம் என்பது குறித்தும் மாஸ்டர் அங்கேயே பரிசீலிக்க வேண்டியிருந்தது.
திறமையற்ற அல்லது குறைபாடுள்ள முகவர் யாரேனும் தென்பட்டால், பாரபட்சமோ அல்லது அச்சமோ இன்றி அவர்களை விரைவாகவும் உறுதியாகவும் பணிநீக்கம் செய்யுமாறு சைல்ட் அவருக்குத் தனிப்பட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தியதுடன், அதற்கான முழு ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்தார்.
நிறுவனத்தின் பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நிர்வாகக்குழுவிற்குத் தகவல் தெரிவிக்கும் வகையிலான ஒரு அமைப்பு உருவாக்கப்பட இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில், டச்சு கிழக்கிந்திய நிறுவனம் அதே வகையான அமைப்பு மற்றும் அதிகாரங்களை கிழக்கிந்திய நிறுவனமும் பெறத் தொடங்கியது.

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images
தாமஸ் ரோவின் கொள்கை கைவிடப்படல்
1682இல் டச்சுக்காரர்களால் பாண்டம் (இந்தோனீசியா) பகுதியிலிருந்து ஆங்கில வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பெருநிலப்பரப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்த கிழக்கிந்திய நிறுவனம் முடிவு செய்தது.
பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவை எடுக்குமாறு நிர்வாகக் குழுவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் 1688-ஆம் ஆண்டின் புரட்சிக்குள் அரச அதிகாரம் நேரடியாகச் செயல்படுத்தப்படாமல், கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் நிலைக்கு மாறியிருந்தது.
எடுத்துக்காட்டாக, சென்னைக்கான எழுத்தர் நியமனம் பிரிட்டிஷ் அரசால் அல்லாமல், கம்பெனியாலேயே மேற்கொள்ளப்பட்டது. இம்மாற்றத்திற்குக் சைல்ட் முக்கியக் காரணமாக இருந்தார். நிறுவனம் சைல்ட் இன் 'டொமினியன்' கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்ததுடன், 1680களில் அது நிறைவேற்றப்பட்ட தாகவும் நம்பியது.
சைல்ட் ஆளுநராகப் பொறுப்பேற்றது, அங்கீகரிக்கப்படாத வணிகர்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளின் தொடக்கமாக அமைந்தது. ஒரு போர்க்கப்பல் வாங்கப்பட்டு இந்தியக் கடற்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது; அதேவேளையில், சரக்குக் கப்பல்களின் தளபதிகளுக்கு மன்னரின் அதிகாரப்பூர்வ நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அங்கீகரிக்கப்படாத வணிகர்களின் கப்பல்களையும் சரக்குகளையும் பறிமுதல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கப்பட்டது; அவ்வாறு கைப்பற்றப் பட்டவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை 'பரிசுத் தொகையாக' நிறுவனம் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விரிவாக்கக் கொள்கைகளால் உந்தப்பட்ட கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுநராக இருந்த ஜோசையா சைல்ட், அக்காலத்தில் வெடிமருந்தின் முக்கிய மூலப்பொருளாக பெரிதும் தேவைப்பட்ட 'சால்ட்பீட்டர்' அங்கு ஏராளமாகக் கிடைப்பதாகக் கருதினார். எனவே, அதுவரை வங்காள வணிகப்பகுதி விவகாரங்களை நிர்வகித்து வந்த சென்னை ஆளுநர், பின்னாள் முதல் வங்காள ஆளுநராகப்பொறுப்பேற்ற வில்லியம் ஹெட்ஜஸ் (1681-83), வங்காளத்தின் முகலாய ஆளுநரும் பேரரசர் ஔரங்கசீப்பின் மாமனாருமான செயிஸ்டகானைச் சந்தித்து ஒரு உடன்பாட்டை எட்ட அனுப்பப்பட்டார். பிரிட்டனின் நடவடிக்கைகளும் ஆணவமும் பேரரசருக்கு அதிருப்தியை ஏற்படுத்தின, இதனால் பேச்சுவார்த்தைகள் முறிந்தன.
கம்பெனிக்குப் பாடம் கற்பிக்கும் விதமாக, வங்காள ஆளுநர் கிழக்கிந்திய நிறுவனம் செலுத்த வேண்டிய வரிகளை உயர்த்தினார். ஆளுநர் ஜோசியா சைல்ட் அதை ஏற்க மறுத்து, முகலாயப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில், சிட்டகாங் துறைமுகத்தில் ஒரு தளத்தை அமைக்கும் தனது திட்டத்தைச் செயல்படுத்தினார்.
இத்திட்டத்திற்கு இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் ஆதரவளித்தார். அவர் சுமார் 600 வீரர்கள் மற்றும் 200 பீரங்கிகளுடன் 12 போர்க்கப்பல்களை அனுப்ப அனுமதி அளித்தார். இக்கப்பற்படைக்கு அட்மிரல் நிக்கல்சன் தலைமை தாங்கினார். துறைமுகத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மீது படையெடுப்பை மேற்கொள்ள, மதராஸில் இருந்து மேலும் 400 வீரர்களும் இணைய இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஔரங்கசீப்பின் பதிலடி
ஜாப் சார்னக் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுக்க பேரரசர் ஔரங்கசீப் தீர்மானித்தார்.
முற்றுகையிடப்பட்ட வணிக நிலையங்கள் உட்பட அனைத்து ஆங்கிலேயர் சொத்துகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். சிதி யாகூப் தலைமையிலான முகலாயக் கடற்படை, பம்பாயில் அமைந்திருந்த நிறுவனத்தின் முக்கியத் தளமான வில்லியம் கோட்டையை முற்றுகையிட்டது. ஏறக்குறைய ஓராண்டு காலம் நீடித்த கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு, பஞ்சம் மற்றும் உணவுத் தட்டுப்பாட்டின் விளைவாக அந்தக்கோட்டை இறுதியில் வீழ்ந்தது. இதனால் தோல்வியை ஒப்புக்கொள்வதைத் தவிர ஆங்கிலேயர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது. 1,50,000 ரூபாய் அபராதம் செலுத்தியதுடன், இனிவரும் காலங்களில் முறையாக நடந்துகொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, பேரரசர் பம்பாய் மீதான முற்றுகையை விலக்கிக்கொண்டார்.
முகலாயர்களுடனான போரில் தோல்வியுற்றிருந்தாலும் இத்தோல்வி கிழக் கிந்திய நிறுவனத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கையைத் தடுத்து நிறுத்தவில்லை. ஸ்டூவர்ட் மன்னர்களுடன் தங்களை இன்னும் தீவிரமாக அடையாளப்படுத்தி இணைத்துக்கொண்டதன் மூலம் உலகம் முழுவதும் துணிச்சலான ஏகாதிபத்தியக் கொள்கையை அது தொடர்ந்து பின்பற்றியது.
ஏகாதிபத்திய பேரரசை நோக்கி
அரசாளும் உரிமையைக்கோரும் ஒரு முக்கிய அம்சமான மக்கள் தொகை மீது கவனம் செலுத்தப்பட்டது. வணிகர்களையும் கைவினைஞர்களையும் ஈர்த்து, நகரின் மக்கள் தொகையை பெருக்குவதற்கான சூழல் உருவாக்கப்பட்டது.
மசூலிப்பட்டினத்தில் டச்சுக்காரர்கள் செய்தது போல, பஞ்ச காலத்தில் திறமையான தொழிலாளர்களை கொண்டுவராதற்காக புனித ஜார்ஜ் கோட்டை நிர்வாகம் விமர்சிக்கப்பட்டது.
"மெட்ராஸை வலிமையாக வைத்திருங்கள்; வருவாயை மேம்படுத்துவது குறித்த நமது முந்தைய உத்தரவுகள் அனைத்தையும் முழுமையாகவும் திறம்படவும் செயல்படுத்துங்கள்" என கோட்டை நிர்வாகத்திற்கு லண்டனில் உள்ள நிர்வாகக் குழு உத்தரவிட்டது. மேலும், எழுத்தர்கள் மற்றும் ஆங்கிலேய ஊழியர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நகரின் குடிமைசார் பணிகளை நிர்வகிக்கும் அமைப்பில் அனைத்துச் சமூகத்தினருக்கும் இடமளிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
செப்டம்பர் 29, 1688 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கப்பட்ட மாநகராட்சி, சைல்ட் இன் நிர்வாக தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். லண்டனுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப் பழமையான இந்த மாநகராட்சி, ஒரு மேயர் மற்றும் எட்டு நகராட்சி உறுப்பினர்களுடன் செயல்படத் தொடங்கியது. இவர்களில் மூவர் இந்தியர்களாவர்.
1689இல் நிறுவனம் அடைந்ததாக சைல்ட் கருதிய 'அரச அதிகாரம்' பம்பாய் மற்றும் சென்னை (பின்னர் கல்கத்தா) ஆகிய இடங்களை ஆளும் உரிமையைக் கொண்டிருந்தது.
இவ்விடங்களில் நிறுவனமே இறையாண்மை கொண்ட அதிகார மையமாகத் திகழ்ந்தது, அது ராணுவ வலிமையைப் பராமரித்ததுடன், சட்டமியற்றும் மற்றும் நீதித்துறை சார்ந்த பணிகளையும் மேற்கொண்டது. நிறுவனத்தின் சரக்குகளைப் பாதுகாப்பது ராணுவ வலிமையின் நோக்கமாகவும் நகரத்தைச் சுயசார்பு கொண்டதாக மாற்றுவதும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதும் சட்டமியற்றும் மற்றும் நீதித்துறை அதிகாரங்களின் நோக்கமாகவும் வலியுறுத்தப்பட்டன.
முடிந்தவரை நிறுவனத்தின் சரக்குகள் முகலாயப் பேரரசின் கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையைத் தக்கவைக்க, இந்தியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தகர்கள் ஆகிய இரு தரப்பினருடனும் ஏற்படக்கூடிய வன்முறை மோதல்களில் ஈடுபடத் தயாராக இருக்க வேண்டும் என்பதை நிறுவனம் இப்போது உணர்ந்திருந்தது.
1688இன் 'மாண்புறு புரட்சி' சைல்டுக்குச் சாதகமாக அமையவில்லை. ஏனெனில், பதவியிறக்கப்பட்ட ஸ்டூவர்ட் வம்சத்தினருடன் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். 1693இல் ஏகபோக உரிமையைப் பாதுகாக்கும் முயற்சியாக, தனக்கு ஆதரவான அரசியல்வாதிகளுக்கு ஏறக்குறைய 90,000 பவுண்டுகள் வரை லஞ்சமாக வழங்க நிறுவனத்தை ஏற்பாடு செய்த சைல்டின் முயற்சிகள் ஒரு பெரும் சர்ச்சையையும் நாடாளுமன்ற விசாரணையையும் தூண்டின. இது இறுதியில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஏகபோக உரிமையை ரத்து செய்வதற்கும், 1698இல் ஒரு போட்டி நிறுவனம் நிறுவப்படுவதற்கும் வழிவகுத்தது. 1699இல் சைல்ட் இறந்தபிறகு 1709இல் இரு போட்டி நிறுவனங்களும் இணைக்கப்பட்டு சைல்ட் வகுத்த பாதையிலேயே கிழக்கிந்திய நிறுவனம் அடுத்த நூற்றாண்டில் பயணித்தது.
வர்த்தகம் 'தேசிய' முக்கியத்துவம் வாய்ந்தது - அதாவது நாட்டின் நலன் சார்ந்தது - என்று சைல்ட் வலியுறுத்தி வந்த கருத்து இந்தியாவில் இருந்த முகவர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தொழிற்புரட்சி ஆகியவற்றால் கிடைத்த சாதகமான சூழல் ஆக்கிரமிப்புக் கொள்கையைத் தீவிரமாக மேற்கொள்ள அந்த நிறுவனத்தைத் தூண்டியது. எவ்வித தடையுமற்ற உறுதியான ஏகாதிபத்திய விரிவாக்க நோக்கம் அந்நூற்றாண்டின் இறுதியில் வெட்ட வெளிச்சமாகியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































