சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என்று அமெரிக்கா நினைக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜனீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சீனாவுக்கு வழங்கியது போன்ற பொருளாதாரச் சலுகைகளை அமெரிக்கா இனி இந்தியாவுக்கு வழங்காது என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டோ நடப்பாண்டு மார்ச் மாதம் தெரிவித்தார்; முன்னதாக சீனாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் காரணமாகவே அது ஒரு பெரும் வல்லரசாக உருவெடுத்தது என்றும் அவர் கூறினார்.
புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாகப் புதுதில்லியில் நடைபெற்ற 'ரைசினாவில் உரையாடிய லாண்டோ, "இருபது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிடம் நாங்கள் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்ட் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மீண்டும் 'அமெரிக்க பசிபிக் கமாண்ட்' என்று மாற்றிக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த முடிவைக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான சசி தரூர், 'குவாட்' (Quad) கூட்டமைப்பின் பேழையில் அடிக்கப்பட்ட மற்றொரு ஆணி போன்றது என்று வர்ணித்தார்.
சீனாவுக்கு எதிரான ஒரு முக்கியக் கூட்டணியாகவே 'குவாட்' அமைப்பு பார்க்கப்பட்டது; ஆனால், டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இந்த அமைப்பை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறார்.
இந்தியாவின் மீது கடுமையான வரிகளையும் டிரம்ப் விதித்துள்ளார்; சீனாவை எதிர்கொள்ள இந்தியா அவசியமானது என்ற முந்தைய அரசாங்கங்களின் வாதங்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
புதுடெல்லியைச் சேர்ந்த 'அனந்தா சென்டர்' சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி கூறுகையில், அமெரிக்காவுடனான உறவில் இந்தியாவின் முக்கியமான ஈர்க்கும் அம்சமே "சீனாவை எதிர்கொள்ள இந்தியா அவசியம் என்பதுதான்" என்றார்.
டிரம்ப் இந்த வாதத்தை வலுவிழக்கச் செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட இந்திராணி பாக்சி, சீனாவுடன் நேரடியாக மோதுவதைத் தவிர்ப்பது அல்லது சீனாவுடன் மோத நேர்ந்தாலும் இந்தியாவால் பெரிதாக உதவ முடியாது என்ற எண்ணம் டிரம்பிற்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
சீனாவும் இந்தியாவும்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன், டிரம்பின் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் தூர விலகிச் செல்வதாகக் கருதுகிறார்.
இது தொடர்பாக ஜூலை 10 அன்று எக்ஸ் தளத்தில் பிளிங்கன் எழுதிய பதிவில், "கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்கா மீது நம்பிக்கை குறையும் போது, வாஷிங்டன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை அவை காத்திருப்பதில்லை. மாறாக, அவையே தங்களை மாற்றிக்கொள்கின்றன. புதிய கூட்டணிகளை உருவாக்குகின்றன. தலைமைத்துவத்திற்கு வேறு மாற்றுகளைத் தேடுகின்றன. ஒருமுறை எடுக்கப்படும் இதுபோன்ற முடிவுகளை எளிதில் மாற்றிவிட முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
பிளிங்கன் மேலும் எழுதுகையில், "எங்கள் எதிரிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் இந்த யதார்த்தம் நன்றாகத் தெரியும். டிரான்ஸ்-அட்லாண்டிக் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்த ரஷ்யா நீண்டகாலமாக முயன்று வருகிறது. ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும் திறன் குறையும் போது, அது சீனாவுக்குச் சாதகமாக அமைகிறது. அமெரிக்காவின் நம்பகத்தன்மை மீது எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்வியும், பலவீனமான மற்றும் பிளவுபட்ட மேற்கத்திய உலகைக் காண விரும்பும் சக்திகளுக்குக் கிடைத்த வாய்ப்பாக மாறுகிறது" என்றார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தை இந்தியாவின் மாறிவரும் வியூகத்தின் வெளிப்பாடாகப் பல நிபுணர்கள் பார்க்கின்றனர்.
புதுடெல்லியில் செப்டம்பர் 12-13ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்க ஷி ஜின்பிங் வருகை தருகிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை இக்கூட்டமைப்பின் நிறுவன நாடுகளாகும். பின்னர் இதில் தென்னாப்பிரிக்காவும் இணைந்தது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷி ஜின்பிங் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். 2019 ஆம் ஆண்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சென்னையில் சந்தித்துப் பேசினர். அதற்கு அடுத்த ஆண்டு எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றத்தை அதிகரித்தன.
இந்நிலையில், ஷி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான டைலன் லோ, அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க்கிடம் கூறுகையில், "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத் தணிப்பை ஒரு பெரிய வியூக மாற்றமாகக் கருதாமல், நடைமுறை சார்ந்த 'ஆபத்து மேலாண்மையாகவே' பார்க்க வேண்டும். நிலையற்ற எல்லை எவருக்கும் பலனளிக்காது என்பதை இரு தரப்பினரும் புரிந்துகொண்டுள்ளனர்; இருப்பினும், வியூக அளவில் ஆழமான அவநம்பிக்கை இப்போதும் தொடர்கிறது, அது உரிய காலத்தில் முடிவுக்கு வரக்கூடியது அல்ல" என்றார்.
டிரம்ப் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டாரா?

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2023 ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசியதும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் மறுசீரமைப்பு தொடங்கியது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கைகள் மீது இந்தியா அதிருப்தியில் இருப்பதாகவும், இத்தகையதொரு சூழலில் மற்றொரு வல்லரசான சீனாவின் அதிருப்தியை இந்தியாவால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
எல்லைப் பதற்றங்கள் முடிவுக்கு வரும் வரை சீனாவுடனான உறவுகளில் நிலவும் அவநம்பிக்கை குறையாது என்றே இந்தியா முன்பு வாதிட்டு வந்தது. ஆனால், அந்த நிபந்தனையில் இந்தியா இப்போது உறுதியாக இல்லை என்றே தெரிகிறது.
சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், சீனாவுடனான இந்தியாவின் உறவுகளை எல்லைத் தகராறுடன் மட்டுமே சுருக்கிவிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து இந்திராணி பாக்சி கூறுகையில், "அமெரிக்காவுடனான உறவில் இந்தியாவுக்கு இருந்த முக்கியத்துவமே, சீனாவுடன் மோதுவதற்கு இந்தியா அவசியமானது என்பதுதான். இந்தியாவை வலுப்படுத்துவதன் மூலம் சீனாவின் வளர்ந்துவரும் அதிகாரத்தைச் சமன்செய்ய முடியும் என்று முந்தைய அமெரிக்க அரசாங்கங்கள் நம்பின. ஆனால், சீனாவுடன் தனியாகவே பேசி சமாளித்துக்கொள்ள முடியும் என்று டிரம்ப் கருதுவதால், அவருக்கு இந்தியா முக்கியமானதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, அமெரிக்கா மீது இந்தியா செய்துள்ள அதீத முதலீடுகளையும் அது குறைக்கத் தொடங்கியுள்ளது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "அமெரிக்கா - சீனா இடையேயான போட்டியில் இந்தியா எந்தவொரு லாபத்தையும் பெற்றுள்ளது என்று நான் நம்பவில்லை. அமெரிக்காவிடமிருந்து இந்தியா எதைப் பெற்றிருந்தாலும், அதை விலை கொடுத்து வாங்கியதே தவிர இலவசமாகப் பெறவில்லை. சீனாவுடன் இயற்கையாகவே இணக்கமான ஒரு சமநிலையைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த யதார்த்தத்தைத் டிரம்ப் மறுப்பது வேறு விஷயம், ஆனால் சீனாவுடன் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் எப்போதும் குறையாது" என்றார்.
வாஷிங்டன் தனது உலகளாவிய பங்கை எத்தகைய கோணத்தில் பார்க்கிறது மற்றும் மற்றவர்களிடம் இருந்து அது என்ன எதிர்பார்க்கிறது என்பதில் 2025 ஆம் ஆண்டின் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு வியூகம் ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறிக்கிறது.
இந்த விவரிப்பில் இந்தியா நிச்சயமாக இடம்பெறுகிறது, இருப்பினும் நாம் எதிர்பார்க்கும் விதத்தில் அது இல்லை. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வழிகாட்டும் ஒளியாகவோ அல்லது ஆசியாவில் புதிய சக்திச் சமநிலையின் மைய அச்சாணியாகவோ இந்தியா சித்தரிக்கப்படவில்லை.
இந்தியாவை ஒரு போட்டியாளராகப் பார்க்கிறதா அமெரிக்கா?

பட மூலாதாரம், Getty Images
புதுதில்டெயை இந்தோ-பசிபிக் திட்டத்துடன் மேலும் ஆழமாக இணைப்பதற்கும், ஒற்றைப் போட்டியாளர் ஒருவரால் ஆதிக்கம் செலுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் "இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த" வாஷிங்டன் விரும்புவதாக அந்த ஆவணம் கூறுகிறது.
சீனாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதன் பரந்த முயற்சிகளுக்குத் தன் கூட்டாளிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், மின்னணுவியல் மற்றும் மருந்துகள் முதல் மின்கலங்கள் மற்றும் சூரிய ஒளி மின்சாதனங்கள் வரையிலான இந்தியாவின் உற்பத்தித் துறை, சீன இறக்குமதியையே பெருமளவில் நம்பியுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு வியூகமானது இந்த கட்டமைப்பு சார்ந்த சார்புநிலையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜிண்டால் சர்வதேச விவகாரப் பள்ளியின் பேராசிரியரும், 'நண்பர்கள்: இந்தியாவின் நெருங்கிய வியூகக் கூட்டாளிகள்' என்ற நூலின் ஆசிரியருமான ஸ்ரீராம் சௌலியா கூறுகையில், அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவால் ஒரு பகுத்தறிவற்ற கருவியாக மாற முடியாது என்றார்.
பிபிசி இந்தியிடம் பேசிய சௌலியா, "ஆசியாவில் அமெரிக்காவால் தனியாகச் சீனாவுடன் போராட முடியாது. அதற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் உதவி தேவைப்படும். இரண்டாவதாக, ஷி ஜின்பிங் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டாலும், இந்தியாவுடன் சீனாவுக்குள்ள வேறுபாடுகள் முடிவுக்கு வரப்போவதில்லை. சீனா ராணுவ ரீதியாகப் பாகிஸ்தானை வெளிப்படையாக வலுப்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் சீன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறது. ஆசியாவை பன்முனைத் தன்மையைக் கொண்டதாக மாற்ற அமெரிக்க விரும்பினால், அது இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை" என்றார்.
"அமெரிக்கா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தொலைதூரச் சமநிலைக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும்" என்று கூறும் சௌலியா, "இதன் பொருள் என்னவென்றால், அது எல்லா இடங்களிலும் முழுப் பலத்துடன் நேரடியாக இருக்காது, மாறாகப் பின்னணியில் இருந்து பிராந்திய சக்திகளுக்கு ஆதரவளிக்கும்" என்றார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டோவின் அறிக்கையானது, அமெரிக்கா இந்தியாவை வெறும் வியூகக் கூட்டாளியாக மட்டும் பார்க்கவில்லை என்பதைக் காட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது. மாறாக, இந்தியாவை ஒரு பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் போட்டியாளராகவும் அது பார்க்கத் தொடங்கியுள்ளது என்றும், இந்தியாவின் வளர்ச்சியை முழுமையாக அனுமதிப்பதற்குப் பதிலாக அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கருதுவதாகவும் நம்பப்படுகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற வியூக விவகார நிபுணர் பிரம்ம செலானி நடப்பாண்டு ஜூலை 13 அன்று 'ஜப்பான் டைம்ஸ்' இதழில் எழுதிய கட்டுரையில், ஆசியாவில் சீனாவைச் சமன் செய்ய வலிமையான இந்தியா அவசியமாகக் கருதப்பட்டதால், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க கொள்கையானது இந்தியாவின் பொருளாதார, ராணுவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கொள்கையில் ஆழமான பாதுகாப்பு உறவுகள், சிவில் அணுசக்தி ஒப்பந்தங்கள், தொழில்நுட்பக் கூட்டாண்மைகள் மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவை அடங்கியிருந்தன.
ஆனால், இந்த ஒருமித்த கருத்து இப்போது ஒரு பரிவர்த்தனை மற்றும் வணிக அடிப்படையிலான அணுகுமுறையால் மாற்றப்பட்டு வருவதாக செலானி வாதிடுகிறார். சீனாவைச் சமன் செய்யும் பணியில் இந்தியா தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது, ஆனால் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது உலகளாவிய சந்தைகளில் இந்தியா மிகவும் சக்திவாய்ந்த நாடாக மாறுவதற்கோ உதவ அது தயாராக இல்லை என்றே தெரிகிறது.
அமெரிக்காவின் பரந்த வியூகத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து வருவதாக செலானி நம்புகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்தியா வியூக ரீதியாகப் பயனுள்ள நாடாகத் தோன்றினாலும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியில் அது எல்லைக்குட்பட்ட ஒரு கூட்டாளியாகவே பார்க்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























