ஏமனில் மின்னல் வேகத்தில் முன்னேறிய ஹூத்திகள் - இரான் போர் புதிய பரிமாணத்தை பெறுகிறதா?

சமீப காலம் வரை, ஹவுதிகளுக்கு எதிரான கூட்டணியான ‘நேஷனல் ரெசிஸ்டன்ஸ்’, யேமனின் செங்கடல் கடற்கரையில் கணிசமான பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், சில நாட்களுக்குள் அந்தப் பகுதிகளில் பெரும்பாலானவை ஹவுதிகளின் வசம் சென்றுவிட்டன.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சௌதி ஆதரவு ஏமன் படைகள், முன்னேறி வரும் ஹூத்திகளை தடுக்கப் போராடி வருகின்றன
    • எழுதியவர், பால் ஆடம்ஸ்
    • பதவி, தூதரக செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திஹாமாவின் தெற்குப் பகுதிகள் முழுவதும் ஹூத்திகள் கிளர்ச்சியாளர்கள் மின்னல் வேகத்தில் முன்னேறியிருப்பது பெரும்பாலான பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

திஹாமா என்பது ஏமனின் வறண்ட கடலோர சமவெளி. சமீப காலம் வரை, ஹூத்திகளுக்கு எதிரான கூட்டணியான 'நேஷனல் ரெசிஸ்டன்ஸ்', ஏமனின் செங்கடல் கடற்கரையில் கணிசமான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், சில நாட்களுக்குள் அந்தப் பகுதிகளில் பெரும்பாலானவை ஹூத்திகளின் வசம் சென்றுவிட்டன.

சில மதிப்பீடுகளின்படி, இரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள், அந்த நாட்டின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரையில் 130 கி.மீ. (81 மைல்) வரையிலான பகுதியைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் ஹூத்திகள் நிகழ்த்தியுள்ள மிகச் சிறப்பான ராணுவ வெற்றியாக இது கருதப்படுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர், சௌதி அரேபியாவின் பேரழிவை ஏற்படுத்திய வான்வழித் தாக்குதல்கள், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் படைகளின் தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்கொண்ட போதிலும், ஹூத்திகள் இன்னும் கணக்கில் கொள்ள வேண்டிய ஒரு சக்தியாகவே உள்ளனர் என்பதை இது நிரூபிக்கிறது.

அவர்களின் எதிரிகள் அதிர்ச்சியடைந்து, மன உறுதியை இழந்துள்ள நிலையில், ஹூத்திகளை அங்கிருந்து எளிதில் வெளியேற்றுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

"இப்போது அவர்கள் அங்கு இருக்கிறார்கள். அங்கு அவர்கள் வலுவாக நிலைபெறப் போகிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது மிகவும் அதிக செலவுமிக்கதாக இருக்கும்" என்று பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட ஐரோப்பிய அமைதிக்கான நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஹிஷாம் அல்-ஒமைசி பிபிசியிடம் தெரிவித்தார்.

நிச்சயமாக, ஹூத்திகள் தனித்துச் செயல்படவில்லை. அவர்களுக்கு இரானின் ஆதரவு உள்ளது. இரானின் 'எதிர்ப்பு அச்சு' எனப்படும் கூட்டணியின் பிற பகுதிகளான லெபனானின் ஹெஸ்பொலா, காஸாவில் உள்ள ஹமாஸ், சிரியாவில் உள்ள அசாத் ஆட்சி ஆகியவை சந்தித்த பின்னடைவுகள் மற்றும் தோல்விகளுக்குப் பின்னர், இந்த ஆதரவு இரானுக்கு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

"எனவே, அவர்கள் தங்கள் ஆதரவை ஹூத்திகளுக்கு திருப்பிவிட்டனர். நிச்சயமாக, ஹூத்திகளுக்கும் அந்த ஆதரவு தேவைப்படுகிறது" என்று அல்-ஒமைசி கூறினார். ஹூத்திகளை இரானின் கைப்பாவைகள் என்று மட்டும் குறிப்பிடுவது தவறு என்பதில் பெரும்பாலான ஆய்வாளர்கள் உடன்படுகின்றனர். இருப்பினும், கடந்த சில நாட்களில் நடந்துள்ள நிகழ்வுகள் ஒரு புதிய, சங்கடமான எதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்கி ஏழு மாதங்களுக்குப் பிறகு, இரானில் உள்ள ஆட்சி, உலகின் மிக முக்கியமான இரண்டு கடல்வழிப் பாதைகளின் மீது தற்போது அதிகாரம் செலுத்துகிறது.

பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில் உள்ள ஹோர்மூஸ் நீரிணையும், செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் அல்-மந்தப் நீரிணையும் இதில் அடங்கும். பாப் அல்-மந்தப் வழியாகத்தான் சூயஸ் கால்வாய்க்கும் செல்ல முடியும்.

"இப்போது இரான், நேரடியாகவும் தனது பிரதிநிதிகள் மூலமாகவும், மத்திய கிழக்கிலும் உலக அளவிலும் உள்ள மிக முக்கியமான இரண்டு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நெருக்கடிப் புள்ளிகளைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உலகளாவிய எரிபொருள் மற்றும் எண்ணெய் வர்த்தகத்தில் 35 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதியைக் கட்டுப்படுத்துகிறது" என்கிறார் லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் ஆய்வாளரான ஃபரியா அல்-முஸ்லிமி.

"இது அணுகுண்டுக்கு இணையான அளவிலான பேரம் பேசும் சக்தியாகும்" என்று அவர் கூறுகிறார்.

ஏமனில் மின்னல் வேகத்தில் முன்னேறிய ஹூத்திகள்- இரான் போர் புதிய பரிமாணத்தைப் பெறுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

செங்கடலில் உள்ள பெரிம் உள்பட, பல முக்கியத் தீவுகளையும் ஹூத்திகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், பாப் அல்-மந்தப்பின் மிகவும் குறுகலான பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவு உள்பட, சர்வதேச கப்பல் போக்குவரத்தில் தலையிடும் அந்தக் குழுவின் திறன் பெருமளவில் அதிகரிக்கும்.

இஸ்ரேல்-காஸா போரைத் தொடர்ந்து ஹூத்திகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிரூபித்ததைப் போல, செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் ஹூத்திகளின் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறிய தாக்குதல் படகுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன.

"பாப் அல்-மந்தப் வழியாகவும், சூயஸ் நோக்கியும் உள்ளே சென்று வெளியே வரும் போக்குவரத்தை, இந்தப் பிராந்தியங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமலேயே அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், இப்போது பாப் அல்-மந்தப்பை நேரடியாகக் கண்காணிக்கும் பகுதியை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது அவர்களுக்கு மிக அதிகமான செல்வாக்கை வழங்குகிறது" என்று ஏமன் நிபுணர் அயோனா கிரேக் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) பிபிசி ரேடியோ 4-இன் 'டுடே' நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் ஹூத்தி ராணுவம் வெளியிட்ட அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து கப்பல் நிறுவனங்கள் சந்தேகம் கொள்ள வாய்ப்புள்ளது. அந்த அறிக்கையில், "ஏற்கெனவே முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சௌதி கப்பல்களைத் தவிர, அனைத்து நிறுவனங்களுக்கும் கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்பானது" என்று ஹூத்தி ராணுவம் தெரிவித்திருந்தது.

முந்தைய தாக்குதல்களின்போது, இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாங்கள் குறிவைப்பதாக ஹூத்திகள் கூறியிருந்தனர். ஆனால், உண்மையில் அத்தகைய தொடர்பு எதுவும் இல்லாத கப்பல்களையும் அவர்கள் தாக்கினர். அவற்றில் நார்வே கொடியுடன் சென்ற எண்ணெய்க் கப்பலும் அடங்கும். இருப்பினும், ஹூத்திகள் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தவிர்க்கக்கூடும் என்றும், 2025ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஆறு வாரங்கள் நடைபெற்ற 'ஆபரேஷன் ரஃப் ரைடர்' நடவடிக்கையைப் போன்ற அமெரிக்காவின் மிகப்பெரிய வான்வழி மற்றும் கடற்படைத் தாக்குதல்கள் மீண்டும் நடைபெறும் என்ற அச்சம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கிரெய்க் கூறினார்.

"அவர்கள் ஏற்கெனவே அமெரிக்காவின் கோபத்தை எதிர்கொண்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.

ஆனால், அமெரிக்கா இதில் தலையிட விரும்புமா?

இரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் ஏற்கெனவே மக்களிடையே செல்வாக்கு அற்றதாக உள்ளது. எண்ணெய் விலைகள் மீண்டும் மெதுவாக உயர்ந்து வரும் நிலையில், புதிய போர்முனை ஒன்று அவரது விகிதத்தை உயர்த்தவோ அல்லது நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அவரது குடியரசுக் கட்சியின் வாய்ப்புகளை மேம்படுத்தவோ பெரிதாக உதவும் என்பது சந்தேகமே.

ஹூதிகள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஹூத்திகள், சனா எனும் முக்கிய நகரம் உள்பட ஏமனின் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஆக்சியோஸ் இணையதளத்தின் தகவல்படி, அமெரிக்கா தலையிட வேண்டுமென்ற சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஏமனில் அதிகரித்து வரும் மோதல் குறித்து அமெரிக்கா "மேலும் மேலும் கவலை கொண்டுள்ளது. அதே நேரத்தில் நேரடி ராணுவத் தலையீட்டைத் தவிர்க்க முயன்றபடி, அந்த ராஜ்ஜியத்துக்கான தனது ஆதரவைத் தீவிரப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது" என்று ஆக்சியோஸ் குறிப்பிடுகிறது.

ஆனால், பாப் அல்-மந்தப் மீதான சாத்தியமான அச்சுறுத்தல் மட்டுமே சௌதி அரேபியாவில் அச்சத்தை ஏற்படுத்தவில்லை. இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரால் உருவாகியுள்ள பொருளாதார அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில், ஏமனில் உள்ள இரானின் கூட்டாளிகள் செயல்பட்டிருப்பதைக் காட்டுவதாக, சௌதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய்க் குழாயின் மீது ஹூத்திகள் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் சம்பவத்தின் செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கியமான மாற்று வழியாக இது உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இரான் நேரடியாக உத்தரவிடவில்லை என்றாலும், அதனால் இரானுக்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கும்.

லண்டனை தளமாகக் கொண்ட ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் ஆய்வாளரும் நிபுணருமான பரா ஷைபான் கூறுகையில், 2022ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்திய போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான இந்த சமீபத்திய மோதல் அதிகரிப்பின் தொடக்கத்தை ஜூலை மாதத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்கிறார்.

அப்போது, இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் அரசு இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஹூத்தி குழு ஏமனுக்கு திரும்பியது.

"அதற்குப் பிறகு உடனடியாக மோதல் தீவிரமடையத் தொடங்கியது. செங்கடல் பகுதியில் இப்போது மிகப்பெரிய அளவில் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் [இரான்] உறுதியாக இருந்தது என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது" என்று அவர் கூறுகிறார்.

ஏமன் மீண்டும் முழு அளவிலான போரின் விளிம்பில் தள்ளாடி வரும் நிலையில், செங்கடலுக்கான தனது பொருளாதார உயிர்நாடியைப் பாதுகாப்பதில் சௌதி அரேபியா கவலையுடன் இருக்கும் சூழலில், டொனால்ட் டிரம்ப் இதில் தலையிடத் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. இதற்கிடையே, இரானுடனான அமெரிக்காவின் மோதல் தற்போது புதியதும், ஆபத்தானதாக மாறக் கூடியதுமான ஒரு பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

பன்னிரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்து, குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகி, பட்டினியாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் மக்களைப் பொறுத்தவரை, சமீபத்திய நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்குவதை மட்டுமே செய்யும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு