You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கு எவ்வளவு? தமிழ்நாடு அரசு அறிவிப்பு முழு விவரம்
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திங்கட்கிழமை (மே 25) தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி,
- கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- இந்தத் கடன் தள்ளுபடி திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை (10 மாதம் மட்டும்) கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கு எவ்வளவு?
- கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால் குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி செய்யப்படும்.
- ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும்.
- ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை இருந்தால் ரூ.30,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
- ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.20,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
- ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
- ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று இருந்தால் ரூ.5,000 தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகள்
குறு விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகைக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதோ அதில் 50%, அதாவது பாதித் தொகை மட்டுமே சிறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்படும்.
பெரு விவசாயிகள்
இதர பெரு விவசாயிகளுக்கும் சிறப்பு உதவி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதாவது பெரு விவசாயிகளுக்கு, கடன் தொகை எவ்வளவு இருந்தாலும் ரூ.5,000 மட்டும் தள்ளுபடி வழங்கப்படும்.
"இந்தத் தள்ளுபடி எதிர்வரும் சாகுபடி பருவத்தில் விவசாயிகள் மீண்டும் கடன் பெற உதவும். இதனால் அவர்கள் புதிய பயிர் சாகுபடிக்கு எளிதாக நிதி பெற முடியும்" என்று அரசு தெரிவித்துள்ளது.
யாருக்கு பொருந்தாது?
இந்தத் திட்டம் கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு மட்டும் பொருந்தும். தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு இது பொருந்தாது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மே 1 (01.05.2025) முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி (28.02.2026) வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14 லட்சத்து 22 ஆயிரத்து 555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
விவசாயிகள் வரவேற்பும் எதிர்பார்ப்பும்
"விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. ஆனால், எங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை." என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளருமான தஞ்சாவூர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் கூறியுள்ளார்.
"நிதிச்சுமை காரணமாக தமிழ்நாடு அரசால் இதை முழுமையாக செய்ய முடியாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பை நல்ல தொடக்கமாகவே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடனை விரைவில் தள்ளுபடி செய்வார் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
விவசாயிகளில் ஒரு தரப்பினர் அதிருப்தி
தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல் நாதன் தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். தவெக தேர்தல் அறிக்கையிலேயே வேளாண் கடன் தொடர்பான பாரபட்சம் இருந்தது பற்றி ஏற்கெனவே சுட்டிக்காட்டி இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
"இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் உழவர் கடன் குறித்த சரியான புரிதல் இல்லாமலும் செய்யப்பட்டு இருக்கிறது. தேர்தல் காலத்தில் தஞ்சைக்கு பரப்புரைக்கு வந்த விஜய், 'நான் விவசாயி அல்ல என்றாலும் விவசாயிகளின் வலியை நன்கு உணர்ந்தவன்' என்று கூறினார். ஆனால் இந்த அறிவிப்பு முற்றிலும் தவறானது, திரும்ப பெற வேண்டும். 2026 மார்ச் 31ஆம் தேதி வரை பெற்றிருக்கின்ற அனைத்து வித வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த இதர கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்வது தான் மிக நியாயமாக இருக்கும்" என்கிறார் விமல் நாதன்.
தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கோவிந்தராஜூம் இதேபோன்ற கருத்தை தெரிவித்தார்.
முந்தைய பயிர்க்கடன் தள்ளுபடிகள்
தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- 2006-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதும் 7,000 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
- 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சுமார் 5,318 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடனை தள்ளுபடி செய்யப்பட்டது.
- 2021-ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு