ரன் குவிப்பில் முதலிடம்: சாய் சுதர்ஷன் தனது தனித்துவமான பேட்டிங்கால் ஆர்சிபி சவாலை முறியடிப்பாரா?

    • எழுதியவர், பாபா அபராஜித்
    • பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் குவாலிஃபயர் 1 போட்டி இன்று (மே 26) தரம்சாலாவில் நடக்கிறது. புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களைப் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

விராட் கோலி, ஷுப்மன் கில், புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், ரஷீத் கான் என பல உலக நட்சத்திரங்கள் இந்தப் போட்டியில் களம் காண்கிறார்கள். இவர்களில் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியின் முடிவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடும். இந்த நட்சத்திர வீரர்களுக்கு மத்தியில் நான் அதிகம் எதிர்பார்ப்பது சாய் சுதர்ஷன் இந்தப் போட்டியில் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்க்கத்தான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த 24 வயது இளம் பேட்டர் இந்த சீசனில் இதுவரை 638 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 1 சதமும், 7 அரைசதங்களும் அடித்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் சாய். தன் அணியின் நம்பிக்கை நாயகனாய் உருவெடுத்திருக்கிறார்.

தொடர்ந்து மூன்றாவது சீசனாக 500 ரன்களைக் கடந்திருக்கும் சாய் சுதர்ஷன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மைல்கல்லைக் கடந்துகொண்டிருக்கிறார். ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் அதிவேகமாக 2000 ரன்கள் கடந்தவர் என்ற சாதனை படைப்பது சாதாரண விஷயம் இல்லை.

தன் முன் என்ன மாதிரியான சவால் வைக்கப்பட்டாலும், அதை சாய் சுதர்ஷன் சிறப்பாகக் கையாள்கிறார். சுழலுக்கு ஏற்ற ஆடுகளம், பவுன்ஸ் ஆகும் ஆடுகளம் என எந்த மாதிரியான ஆடுகளம் கொடுத்தாலும், என்ன மாதிரியான சூழ்நிலையில் விளையாடினாலும் அவர் தொடர்ச்சியாக ரன்கள் அடித்துக் கொண்டே இருக்கிறார்.

அவருக்கு ஐபிஎல் அணியுமே சிறப்பாக அமைந்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் நல்லதொரு சூழலை உணர்கிறார். அதை என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா, கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் தனக்குப் பெருமளவு உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவை மட்டுமே அவரது செயல்பாட்டுக்கான காரணம் இல்லை.

அப்படியெனில் சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்துவதற்கான காரணம் என்ன? மாறிக் கொண்டிருக்கும் டி20 அரங்கில் எப்படி அவர் தன்னுடைய அணுகுமுறை கொண்டும் சோபிக்கிறார்?

சிக்ஸர் இல்லை... பவுண்டரி ஹிட்டர்

இந்த சீசனைப் பொறுத்தவரை சாய் சுதர்ஷன் தன் பேட்டிங்கில் குறிப்பிடத்தகுந்த சில மாற்றங்களை செய்திருக்கிறார். இப்போது அதிகமாக அவர் நடந்து வந்து விளையாடுகிறார். அதேபோல், ஆஃப் சைட் முன்பை விட அதிகமாக விளையாடுகிறார். குறிப்பாக 'ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட்' நிறைய ஆடுகிறார். நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் வந்தாலும் கூட நன்கு தனக்கென்று ஒரு வெளியை ஏற்படுத்திக் கொண்டு கல்லி மற்றும் பாயின்ட் திசைகளில் நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவரது உடல் பளு, ஆஃப் சைட் இறங்கியது. அதனால், இங்கிலாந்து பௌலர்கள் அவருக்கு ஸ்டம்ப் லைனில் பந்துவீசி அட்டாக் செய்தனர். ஆனால், தற்போது அதை சரிசெய்து ஆஃப் சைடில் நன்றாக ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார் சாய் சுதர்ஷன்.

அவரைப் பலரும் ஒரு கிளாசிகல் டெஸ்ட் பேட்டராகப் பார்க்கும்போது, தொடர்ச்சியாக தன்னால், தன்னுடைய அணுகுமுறையால் ஒருநாள், டி20 போன்ற ஃபார்மட்களிலும் ஜொலிக்கமுடியும் என்று சாய் சுதர்ஷன் தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

அவர் சிக்ஸ் ஹிட்டர் இல்லை. பவுண்டரிகள் அடிக்கும் வீரர். அப்படியிருந்தும் அவர் சீராகவும், பெருமளவும் ரன் எடுத்திருக்கிறார். இங்கு சிக்ஸர்கள் போகும்போது, எவ்வளவு தூரம் அந்த சிக்ஸர் அடிக்கப்பட்டிருக்கிறது என்று கணக்கிடுகிறோம். ஆனால், ஒரு வீரர் அடிக்கும் பவுண்டரி எவ்வளவு வேகமாக எல்லையை அடைகிறது என்று கணக்கிட்டால் அந்தப் பட்டியலில் சாய் சுதர்ஷன் முதலிடத்தில் இருப்பார். அவருடைய இலக்குகள் பவுண்டரிகள் தான்.

ஓய்வற்ற உழைப்பும் மன உறுதியும்

கடந்த சில ஆண்டுகளில் சாய் சுதர்ஷனின் வளர்ச்சி என்பது அசாத்தியமானது. அவர் தென்னாப்பிரிக்காவில் இந்திய ஒருநாள் அணிக்காக அறிமுகம் ஆனபோதும் சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் இரு அரைசதங்கள் விளாசினார். துருதிருஷ்டவசமாக இந்திய அணியில் இருக்கும் தீவிர போட்டியின் காரணமாக அதற்குப் பின் அவருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சீரான செயல்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து மூன்றாவது சீசனாக 500+ ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த சீசனில் ஆரஞ்ச் கேப்பை வென்ற சாய் சுதர்ஷன், இந்த சீசனிலும் தற்போது அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இன்னும் சில போட்டிகளில் அந்த நிலை மாறலாம். ஆனாலும், அவரது செயல்பாட்டின் மதிப்பு மாறப்போவதில்லை.

அவர் இந்த இடத்துக்கு வந்திருப்பதற்கான காரணம் அவரது கடின உழைப்பு மற்றும் அவருடைய நெறிமுறை ஆகியவை தான்.

அவரோடு நான் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். முதன் முதலாக அவரை நான் தமிழ் நாடு முதல் டிவிஷன் தொடரின்போது தான் பார்த்தேன். அப்போதே அவரிடம் திறமை இருந்தது தெரிந்தது. ஆனால், அந்தத் திறமையை சரியாகப் பயன்படுத்தி இந்த உயரத்துக்கு அவர் வந்திருப்பதற்கான காரணம் அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு.

காலை முதல் மாலை வரை ஒரு பள்ளிக்கூட மாணவனைப் போல் அட்டவணை அமைத்து அதை தவறாமல் கடைபிடிப்பார் சாய் சுதர்ஷன். அவருடைய கிரிக்கெட் ஸ்கில் பயிற்சி, ஓட்டப் பயற்சி, ஜிம், உணவு என அனைத்துமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கும். அவருடைய அந்த அட்டவணையில் ஓய்வு என்பதற்கே இடமிருக்காது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை உழைத்துக்கொண்டே இருப்பார். உடற்பயிற்சி, தியானம், யோகா என்று ஏதேனும் இருந்துகொண்டே இருக்கும். தூக்கம் மட்டுமே அவருக்கு ஓய்வு. வேறு வகையிலான ஓய்வே கிடையாது.

அவருடைய இந்த அணுகுமுறைக்கு அவருடைய பயிற்சியாளர்கள் மற்றும் அவருடைய பெற்றோர்களின் பங்களிப்பும் அதீதமானது. அவர்களையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அவருடைய பெற்றோர்களும் விளையாட்டுத் துறையில் இருப்பது அவருக்கு சாதகமான ஒரு விஷயம். ஒருவர் தடகள வீரர், மற்றொருவர் 'வலிமை மற்றும் உடற்தகுதிப் பயிற்சியாளர்' (strength & conditioning) கோச்சாக இருப்பது சாய் சுதர்ஷனுக்கு உதவிகரமானதாக இருக்கிறது.

சாய் சுதர்ஷனின் இன்னொரு மிகப் பெரிய பலம், அவர் கடினமான சூழ்நிலைகளிலும் மனம் தளரமாட்டார். ரன்னே வராதபோதும் கூட அவர் முகம் சுளிக்கவோ, சோர்ந்துவிடவோ மாட்டார். ஒருசிலர் அப்படி எளிதில் உடைந்துவிடுவார்கள், அந்த நெருக்கடியை உணரத் தொடங்குவார்கள். ஆனால், சாய் சுதர்ஷனை நான் அப்படிப் பார்த்ததே இல்லை. இரண்டு சீசன்கள் நான் அவருடைய ரூம் மேட்டாகக் கூட இருந்திருக்கிறேன். பக்கத்தில் இருந்து அவருடைய அந்த உழைப்பையும், மன உறுதியையும் பார்த்தபோது எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.

பதற்றமோ குழப்பமோ இல்லை

அவருடைய பேட்டிங் அணுகுமுறை என்று பார்க்கும் போது, இன்றைய காலகட்ட டி20 பேட்டிங்குக்கு நேர்மாறாகவே அது இருக்கும். இன்றெல்லாம் பேட்டர்கள் ஆரம்பத்திலேயே ஒரு 'டிரிகர் மூவ்மென்ட்' கொடுத்து ஒரு பொசிஷனுக்கு வருகிறார்கள். அவர்களுடைய கை, பேட் நன்கு மேலே தூக்கியிருக்கிறது. பேஸ்பால் வீரர்கள் போன்றுதான் நிற்கிறார்கள். ஆனால், சாய் சுதர்ஷன் அப்படியே இன்னொரு துருவத்தில் இருப்பார். 1980களிலும், 90களிலும் பார்த்ததுபோன்ற ஒரு பேட்டரின் வழக்கமான அணுகுமுறைதான் அவருடையதாக இருக்கும். பேட்டைக் கீழே தட்டிக்கொண்டு நிற்பார்.

இன்றைய காலகட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா போன்று மட்டும்தான் பேட்டிங் செய்ய முடியும் என்றில்லை, வேறு விதமாக பேட்டிங் செய்தும் டி20 போட்டிகளில் ரன் குவிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் சாய் சுதர்ஷன்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம், மாறிவரும் ஆட்டமுறை சாய் சுதர்ஷனை பதற்றமடையவோ குழப்பவோ செய்வதில்லை. சூர்யவன்ஷி, பிரியான்ஷ் போன்ற வீரர்கள் முதல் பந்தில் இருந்தே அடிப்பதைப் பார்த்து தானும் அப்படித்தான் ஆடவேண்டுமோ என்று அவர் நினைப்பதில்லை. அந்த அணுகுமுறையைக் கடைபிடிக்க நினைப்பதில்லை. தன்னுடைய பாணியிலேயே ரன் குவிக்க வேண்டும் என்பது தன அவர் நோக்கமாக இருந்தது. அதில் வெற்றி பெற்று இன்று நல்ல முடிவையும் அவர் காட்டியிருக்கிறார்.

இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். வெற்றிகரமாக ரன் குவிக்க இனி அந்த ஒரு பாணியில் தான் ஆடவேண்டும் என்று சொல்லவேண்டியதில்லை. சாய் சுதர்ஷன் போல் ஆடியும் ரன் குவிக்க முடியும் என்று அடுத்த தலைமுறை நம்பும். ஏனெனில், அவர் இந்த சீசனில் சுமார் 160 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியிருக்கிறார். அது மிகவும் அற்புதமான விஷயம்.

முழுமையான கிரிக்கெட்டர்

சாய் சுதர்ஷன் எனும்போது எல்லோரும் பேட்டிங், பேட்டிங் என்று அவருடைய ஒரு முகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். அவருடைய ஃபீல்டிங் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.

சாய் சுதர்ஷன் ஒரு மிகச் சிறந்த ஃபீல்டர். அவரால் எல்லா இடத்திலும் ஃபீல்டிங் செய்ய முடியும். பவுண்டரி எல்லைகளில் சிறப்பாக செயல்படுவார், அதிக தூரத்தை அவரால் வேகமாகக் கடந்து பந்தைத் தடுக்க முடியும், வேகமாக த்ரோ செய்து ரன் அவுட் வாய்ப்புகளை உருவாக்க முடியும். 30 யார்ட் வட்டத்துக்குள்ளும் சிறப்பாக செயல்படுவார். ஏன், சில்லி பாயின்ட், லெக் கல்லி போன்ற பொசிஷன்களிலும் அவர் ஃபீல்டிங் செய்வார்.

அதுமட்டுமல்ல பந்துவீச்சிலும் பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்று அதில் கவனம் செலுத்துகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் தன்னுடைய லெக் ஸ்பின்னை மேம்படுத்த பயிற்சிகள் மேற்கொண்டார். அவர் ஒரு முழுமையான ஸ்பின்னர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர் ஒரு பந்துவீச்சாளராக முயற்சி செய்கிறார். தன் லெக் ஸ்பின்னை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார். அது நன்றாக வந்தால், அதன் மூலமும் தன்னால் அணிக்குப் பங்களிக்க முடியும் என்று சாய் சுதர்ஷன் கருதுகிறார்.

தற்போது அவருடைய முதல் இலக்கு தன் அணியை இறுதிப் போட்டிக்கு எடுத்துச் செல்வதாகத்தான் இருக்கும். இதுவரை 3 ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 219 ரன்கள் குவித்திருக்கிறார். அந்த அசத்தலான ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்து புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் போன்றவர்களுக்கு பெரும் சவாலாக அவர் விளங்குவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

(கட்டுரையாளர் பாபா அபராஜித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர். 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது கேரளா அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு