You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நான் கண்ணீர் விட்டு அழுதேன்': மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் கூறியது என்ன?
- எழுதியவர், ரேச்சல் ஃப்ளின்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தனது 11-ஆவது வயதில் ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் தன்னை நோக்கி கிண்டல் செய்து விசில் அடித்ததை இன்னும் ரன்வியாவால் மறக்க முடியவில்லை.
அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு மாதவிடாய் தொடங்குகையில் மார்பகங்களின் அளவு காரணமாக, பிறர் தன்னை நோக்கும் பார்வையும் தன்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை பாதிக்கத் தொடங்கியதாக அவர் நினைவுகூர்கிறார்.
பள்ளியில், ரன்வியாவின் மார்பகங்களைக் கிண்டல் செய்த சிறுவர்கள் மார்பகங்களுக்கு பட்டப்பெயர்களை வைத்ததோடு, சில நேரங்களில் அனுமதியின்றி அவற்றைத் தொடவும் செய்துள்ளனர்.
"நான் அப்போது விவரமறியா குழந்தையாகவே இருந்தேன்" என்கிறார் ரன்வியா. "திடீரென்று என்னுடைய உடலில் பெரிதாகத் தொடங்கிய பாகம், பிறரின் கவனத்தை என் மீது திருப்பியது, அதை எதிர்கொள்ள நான் உணர்வுப்பூர்வமாக தயாராக இருக்கவில்லை."
லெஸ்டர் நகரில் உள்ள தெற்காசியக் குடும்பம் ஒன்றில் வளர்ந்த ரன்வியா, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, தனது சக மாணவிகளைப் போல தன்னால் ஆடை அணிய முடியாததால் ஏற்பட்ட சங்கடத்தை நினைவுகூர்கிறார்.
"என்னால் சில குறிப்பிட்ட ஆடைகளை அணிய முடியவில்லை, ஏனென்றால் என்னுடைய மார்பகங்கள் பெரிதாக துருத்திக்கொண்டு தெரிந்தன. நான் ஆடை அணியும் விதத்தை என் அம்மாவும் கட்டுப்படுத்துவார்" என்று அவர் சொல்கிறார்.
பெரிய மார்பகங்கள் காரணமாக ரன்வியாவுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும் இருந்தன. முதுகுவலி இருந்தது, அவரது பிரா பட்டைகள் தோலில் அழுத்தித் தழும்புகளை ஏற்படுத்தின, உடற்பயிற்சி செய்வதும் கடினமாக இருந்தது. அவருக்கு இருந்த ஏடிஹெச்டி எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகைசெயல்பாட்டு குறைபாடு பாதிப்பினால், "தன்னுடைய உடலைப் பற்றிய உணர்வும், அது சார்ந்த மன அழுத்தமும் தொடர்ந்து நீடித்தது தாங்க முடியாத ஒன்றாக இருந்தது".
25 வயதானபோது, 50 கிலோ எடையும் பெரிய மார்பகங்களுடனும் இருந்த ரன்வியா, இதற்கு மேல் தாங்க முடியாது என்ற எல்லைக்கே வந்துவிட்டார்.
மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை தொடர்பான ஒரு குழுவை ஃபேஸ்புக்கில் கண்டறிந்ததுதான் தனக்குக் கிடைத்த வரம் என்று அவர் கூறுகிறார். கிட்டத்தட்ட 6,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவின் மூலமாகவே அவர் இந்த அறுவை சிகிச்சை முறை பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டார். அதே நேரத்தில், அரசு மருத்துவமனையில் தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதி குறித்து தனது பொது மருத்துவரிடமிருந்து பதில் வருவதற்காகவும் காத்திருந்தார்.
"இதை நான் இன்னும் முன்பே செய்திருக்கலாம் என்ற ஒரே விஷயத்தையே அங்குள்ள பெண்கள் மீண்டும் மீண்டும் கூறுவதை நான் பார்த்தேன்" என்று ரன்வியா கூறுகிறார்.
மருத்துவரைச் சந்தித்து ஆறு மாதங்கள் ஆகியும், தேசிய சுகாதார சேவையில் இருந்து எந்த பதிலும் வராததால், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நாட முடிவு செய்தார்.
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து சில மாதங்களுக்குப் பிறகு, ரன்வியாவின் பிஎம்ஐ (உடல் நிறை குறியீட்டெண்) குறைவாக இருந்ததால் தேசிய சுகாதார சேவை மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய தகுதியானவர் என்று தெரிவிக்கப்பட்டது. இது போன்ற விஷயங்கள் "மிகவும் அரிதான சூழ்நிலைகளில்" மட்டுமே நடக்கும் என்று மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் லிண்ட்சே ஹைட்டன் கூறுகிறார்.
பிரிட்டிஷ் அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, பிரிட்டனில் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு தங்களின் சொந்தப் பணத்தில் தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொண்ட ஆயிரக்கணக்கான பெண்களில் ரன்வியாவும் ஒருவர்.
"அறுவை சிகிச்சைக்குப் பின் நான் கண் விழித்துக் கீழே பார்த்தபோது, என் வாழ்க்கையிலேயே முதல்முறையாக என் வயிறு எனக்குத் தெரிந்தது" என்று கூறும் அவர், "நான் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுதேன். இத்தனை வருடங்களாக நான் சுமந்துகொண்டிருந்த உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாரம் திடீரென்று நீங்கிவிட்டது. என்னை என்னால் பார்க்க முடிந்தது" என்கிறார்.
பிரிட்டிஷ் அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (BAAPS) ஏப்ரல் மாதத் தரவுகளின்படி, வரலாற்றிலேயே முதல்முறையாக, மார்பகங்களைச் சிறிதாக்குபவர்கள் மற்றும் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களை அகற்றுபவர்களின் மொத்த எண்ணிக்கை, மார்பகங்களைப் பெரிதாக்கிக்கொள்ள விரும்புபவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.
இது பற்றிக் கூறும் அந்த அமைப்பின் தலைவர் நோரா நுஜென்ட், இந்தத் தரவுகள் "உடலுக்குப் பொருத்தமான இயல்பான தோற்றத்தை நோக்கிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தத் தோற்றம் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும், தற்போது பிரபலமாகி வரும் விளையாட்டு மற்றும் ஓய்வு நேர ஆடைகளுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கிறது" என நம்புகிறார். பிரிட்டனில் 2025 ஆம் ஆண்டில், மார்பகங்களைப் பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 8 சதவிகிதம் குறைந்துள்ளது.
'தி பியூட்டி குரோனிகல்ஸ்' பாட்காஸ்டின் தொகுப்பாளர் பேராசிரியர் மெரிடித் ஜோன்ஸ் கூற்றுப்படி, உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளின் புழக்கம் அதிகரித்திருப்பதும் "மிகவும் மெலிந்த உடலமைப்பை நோக்கிய போக்கை" ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டரில் தேசிய சுகாதார சேவையில் மார்பக ஆலோசனை நிபுணராகப் பணியாற்றுவதோடு, தனியார் மார்பக அறுவை சிகிச்சைகளையும் செய்துவரும் ஹைடன் கூறுகையில், தற்காலப் போக்கினால் இந்த மாற்றம் ஓரளவுக்கு ஏற்பட்டிருந்தாலும், இக்காலத்தில் பெரும்பாலான பெண்களின் முன்னுரிமை உடலின் செயல்பாட்டுத் திறனுக்கே அதாவது சுலபமாக நடமாடுவதற்கும், தன்னம்பிக்கையுடன் உணர்வதற்குமே ஆகும் என்கிறார்.
கிரேட்டர் மான்செஸ்டரைச் சேர்ந்த 54 வயதான சூ, பல வருடங்கள் தாய்ப்பால் ஊட்டிய பிறகு, தான் பொருத்திக்கொண்ட செயற்கை மார்பகங்கள் இப்போது தனக்கு தேவையில்லை என உணர்ந்தார்.
"அவை எனக்கு மிகவும் கனமாகத் தெரிந்தன" எனக் கூறும் சூ, "நான் மீண்டும் என்னுடைய வழக்கமான உடற்தகுதிக்கு மாற விரும்பினேன், செயற்கை மார்பகங்கள் என்னுடைய உடலில் தேவையில்லாமல் ஒட்டப்பட்டிருப்பது போல் உணர்ந்தேன்" என்கிறார்.
ஆனால், தனியார் மார்பக அறுவை சிகிச்சை செய்வதற்கான செலவுகள் மிகவும் அதிகம். இடத்துக்கு இடம் கட்டணங்கள் மாறுபடுகின்றன.
2025-ஆம் ஆண்டில், மான்செஸ்டரில் தனது செயற்கை மார்பகங்களை அகற்றுவதற்காக சூ சுமார் 9,500 பவுண்டுகள் செலுத்தினார். அதே சமயம், ரன்வியாவின் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சைக்கு தோராயமாக 8,000 பவுண்டுகள் செலவானது இதனை அவர் மூன்று வருடங்களுக்கு மாதாந்திர தவணைகளாகச் செலுத்தினார்.
மருத்துவ ஆலோசனை அல்லது அதற்குப் பிந்தைய பராமரிப்புக் கட்டணங்கள் சேர்க்கப்படாமல், ஒரு தனியார் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சைக்கு சுமார் 6,500 பவுண்டுகள் செலவாகும் என்று தேசிய சுகாதார சேவை கூறுகிறது. தேசிய சுகாதார சேவையில் மார்பகக் குறைப்பு என்பது ஒரு அழகியல் சிகிச்சையாகவே கருதப்படுகிறது. இது அங்குப் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இந்த சிகிச்சையைப் பெறுவது "கிட்டத்தட்ட சாத்தியமற்றது" என்று ஹைடன் கூறுகிறார்.
மார்பகங்களால் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு, அதற்காகப் பரிந்துரைக்கப்படும் பிற வழிகள் அதாவது சரியான அளவில் பிரா அணிவது போன்றவை பலன் அளிக்காத பட்சத்தில், ஒருவர் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சைக்குத் தகுதி பெறலாம் என்று தேசிய சுகாதார சேவைகளின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. அத்துடன் கூடுதல் காரணியாக உங்களுடைய மார்பக அளவு, உடல் எடை மற்றும் பொதுவான ஆரோக்கியம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படலாம்.
"இந்த செயல்முறை, தகுதியானவர்கள் மட்டுமே தப்பிப்பிழைப்பார்கள் என்ற தத்துவத்தைப் போன்றது" என்கிறார் ஹைடன்.
"இந்த ஒட்டுமொத்த நடைமுறையையும் சளைக்காமல் பின்தொடரக் கூடிய அளவுக்கு யார் துணிச்சலாகவும், விவரம் தெரிந்தவராகவும் இருக்கிறார்களோ அவர்களுக்கே இது சாத்தியம். ஆனாலும், இறுதியில் இதற்கான பதில் பொதுவாக 'இல்லை' என்றுதான் வரும்."
"நிச்சயமாக தேசிய சுகாதார சேவையில் நிதிப் பற்றாக்குறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால் மறுப்பதற்கு மிகவும் எளிதான ஒரு விஷயமாக இது பார்க்கப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
பெண்கள் பெரிய மார்பகங்களால் உடல் ரீதியான உபாதைகளுக்கு ஆளாகும்போது, மார்பகத்தின் அளவைக் குறைக்கும் அறுவை சிகிச்சையை ஒரு செயல்பாட்டுத் திறனுக்கான அறுவை சிகிச்சையாக அங்கீகரிக்க வேண்டுமே தவிர, அதை வெறும் "அழகியல் சிகிச்சை என்று ஒதுக்கிவிடக் கூடாது" என்று அவர் நினைக்கிறார்.
இது குறித்து பிபிசி, தேசிய சுகாதார சேவையை தொடர்பு கொண்டபோது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளில் தனியார் மருத்துவமனைகளில் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பெண்களை பிபிசி தொடர்புகொண்டு பேசியது.
அறுவை சிகிச்சைக்கு முன்பான தனது வாழ்க்கை "மார்பகங்களின் அளவாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது" என்று ஸ்டாக்போர்ட்டைச் சேர்ந்த கேட்டி கூறுகிறார். தேசிய சுகாதார சேவையால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு, அவர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் மூலம் அவரது மார்பகங்களிலிருந்து 3 கிலோ எடை அகற்றப்பட்டது.
நார்விக்கை சேர்ந்த சிண்டி, தனக்கு 16 வயதாக இருந்தபோதே ஒரு மருத்துவர் தன்னிடம், "அறுவை சிகிச்சைக்குப் பணம் சேர்க்கத் தொடங்குங்கள், ஏனென்றால் தேசிய சுகாதார சேவை உங்களுக்கு உதவாது" என்று கூறியதை நினைவுகூர்கிறார். இப்போது உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தவறாமல் செல்லும் அவர், "என் வாழ்க்கையின் அன்றாட முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக என்னுடைய மார்பகங்கள் இனி இருக்காது" என்கிறார்.
36 வயதான ரியான், 2025-இல் தனது அறுவை சிகிச்சைக்கான பணத்தைச் செலுத்த, 21-வது வயதிலிருந்தே சேமிப்புக்கணக்கு ஒன்றில் வாரந்தோறும் 10 பவுண்டுகள் சேர்த்து வந்தார். அவர் இப்போது வாரத்துக்கு நான்கு முறை பளு தூக்கும் உடற்பயிற்சிகளையும் ஓட்டப் பயிற்சிகளையும் செய்கிறார்.
கவுண்டி டர்ஹாமைச் சேர்ந்த சாரா, ஆட்டிசம் குறைபாடுடையவர் மற்றும் தன்னை ஆண்-பெண் என்ற இருபாலின அடையாளங்களுக்குள் அடங்காதவராக அடையாளப்படுத்துபவர். பெரிய மார்பகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் இவருக்கு உணர்வு ரீதியான அசௌகரியங்களை ஏற்படுத்தியதோடு, அவை தனக்குச் சொந்தமானவை அல்ல, ஏதோ "பொதுச் சொத்து" போன்ற ஒரு உணர்வையும் அவருக்குக் கொடுத்தன.
அர்ம்ஸ்டனைச் சேர்ந்த மிஷெல், தனது 28-வது பிறந்தநாளின்போது தனது மார்பகங்கள் தவறான முறையில் தொடப்பட்டதை நினைவுகூர்கிறார். "அந்த சம்பவத்துக்குப் பிறகு நான் சில காலம் வெளியில் எங்கும் செல்லவில்லை" என்று கூறும் அவர், "மார்பகக் குறைப்பு என்பது ஒருபோதும் ஆடம்பரத்துக்கோ அல்லது வெளித்தோற்றத்துக்காகவோ செய்யப்பட்டது அல்ல, அது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கானது" என்கிறார்.
தேசிய சுகாதார சேவை மூலம் மார்பக அளவைக் குறைக்கும் அறுவை சிகிச்சையைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அதிகப்படியான கட்டணங்களால், மலிவான கட்டணத்தில் இந்தச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஹைடன் கூறுகிறார்.
அலெக்ஸ் (இது அவரது உண்மையான பெயர் அல்ல) கடந்த ஆண்டின் இறுதியில் மத்திய லண்டனில் தனது அறுவை சிகிச்சைக்காக 16,500 பவுண்டுகள் செலுத்தினார்; அவரது மார்பகங்களிலிருந்து 4.2 கிலோ எடை அகற்றப்பட்டது. தனது மார்பக அளவு பெரிதாக இருந்ததாலும், தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மிகச் சிறந்த நிபுணர் என்பதாலும் தான் தனது அறுவை சிகிச்சைக்கு இவ்வளவு அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருந்தது என்று அவர் சொல்கிறார்.
இந்த அறுவை சிகிச்சைக்காக ஐரோப்பா முழுவதும் பயணம் செய்வது குறித்து ஆயிரக்கணக்கான பெண்கள் விவாதிக்கும் ஒரு ஃபேஸ்புக் குழுவில் அலெக்ஸ் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார் என்பதும், அதற்காக அவர் வெளிநாடு செல்வது குறித்தும் யோசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிதுவேனியாவில் மார்பக அளவு குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்ய சுமார் 4,000 பவுண்டு தொகை மட்டுமே ஆகும் என்ற மதிப்பீடு அவரை ஈர்த்த போதிலும், மீண்டும் விமானத்தில் வீட்டுக்குத் திரும்பும்போது ஏதேனும் மருத்துவச் சிக்கல்கள் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் அவரை அச்சுறுத்தியது.
வெளிநாடுகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்புபவர்களுக்கு ஏதேனும் உடல்நலச் சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்கள் பிரிட்டனுக்கு வந்தபிறகு, இறுதியாக அந்தப் பொறுப்பு பெரும்பாலும் தேசிய சுகாதார சேவை மீதே விழுகிறது என்று ஹைடன் கூறுகிறார்.
தேசிய சுகாதார சேவை, தனியார் மருத்துவமனை அல்லது வெளிநாடுகள் என எங்கு வேண்டுமானாலும் மார்பக அளவைக் குறைக்கும் அறுவை சிகிச்சையை செய்துகொள்வதற்கான பல்வேறு வழிகள் சமூக ஊடகங்கள் முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தங்களுக்குத் தெரிந்தவர்களின் நண்பர்கள் மற்றும் டிக்டாக்கில் வைரலாகும் காணொளிகளில் பார்த்தவர்கள் என இந்த அறுவை சிகிச்சைக்காக ஏங்கித் தவிக்கும் பல பெண்களைத் தனக்குத் தெரியும் என்று அலெக்ஸ் கூறுகிறார். அவர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியில்லை. அதே சமயம், தேசிய சுகாதார சேவையிலும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.
"இந்த அறுவை சிகிச்சை எவ்வளவு முக்கியமானது என்றும், இது ஒரு அழகியல் சிகிச்சை அல்ல என்றும் புரிய வைக்க முயற்சிப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று கூறும் அலெக்ஸ், "உதாரணமாக, உங்களுக்கு கணுக்காலிலோ அல்லது கையிலோ கடுமையான வலி ஏற்பட்டு, அது உங்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால், அதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை தேவைதானே அதைப் போலத்தான் இதுவும்" என்கிறார்.
தனது மார்பக அளவைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்கு முன்பு ஒருபோதும் செய்யாத ஒன்றான, திங்கள் இரவு உடற்பயிற்சிக் கூடப் பயிற்சிக்குப் பிறகு என்னிடம் பேசும் ரன்வியாவைப் பொறுத்தவரை, இது ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை அடைவதை விட ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
"இது வெறும் தற்காலிக அழகியல் போக்கோ அல்லது வெறும் 'முன்பு மற்றும் பின்பு' என்று சொல்லப்படும் சாதாரண ஒரு கதையோ அல்ல" என்கிறார் ரன்வியா.
"பல பெண்களுக்கு, மார்பக அளவைக் குறைப்பது என்பது தங்கள் உடலின் மீதான சுகாதாரம், பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் சுய உரிமையை மீண்டும் மீட்டெடுப்பதாகும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு