கவுண்டமணி உடனான பயணம் - மறக்க முடியாத தருணங்களை பகிரும் செந்தில், பி. வாசு

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி நடித்த காலத்தை பொற்காலம் என்பார்கள்.

அரசியல்வாதி, போலீஸ்காரர், விவசாயி, பாத்திரத்துக்கு ஈயம் பூசுபவர், வைத்தியர், கண் பார்வையற்றவர், சமையல்காரர், தொழிலாளி, தவில் வித்வான், சலவை தொழிலாளி, எமதர்மராஜா, புரோக்கர், திருடன், பாட்டு வாத்தியார் என அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும் ஏராளம்.

1980, 90களில் ஹீரோக்களுக்கு இணையாக ஏகப்பட்ட படங்களில் நடித்தார் கவுண்டமணி. அவர் காமெடிக்காக படங்கள் ஓடின. கவுண்டமணி, செந்தில் காமெடி இருந்தால் அந்த படத்தின் பிஸினஸ் கூடியது. பல முன்னணி ஹீரோக்கள் கூட இவர்கள் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர்.

பல படங்களில் கதாநாயகனாக, சில படங்களில் வில்லத்தனமான ரோலில் நடித்து இருக்கிறார். இன்று கவுண்டமணியின் பிறந்தநாள்.

'2வது ஹீரோ கவுண்டமணி'

கவுண்டமணியை வைத்து மன்னன், சின்னத்தம்பி, மலபார் போலீஸ் உட்பட பல படங்களை இயக்கிய பி.வாசுவிடம் கவுண்டமணி குறித்து பிபிசி சார்பில் பேசினோம்

''கவுண்டமணியை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என நான் பெருமையாக சொல்வேன். நாங்கள் 20க்கும் அதிகமான படங்களில் இணைந்து இருக்கிறோம். அதில் பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட். அந்த படங்களின் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. என் படங்களில் அவர் நடிப்பு, காமெடி பலம் என்பேன். நான் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கினாலும், கவுண்டமணி நடிப்பு, காமெடி மீதான நம்பிக்கையில் அவரை 2வது ஹீரோ மாதிரியே பயன்படுத்துவேன். என் வெற்றிக்கு அவரும் ஒரு காரணம் என்றால் மிகை அல்ல. பெரும்பாலும் என் படங்களில் கவுண்டமணியை தனியே அதிகம் பயன்படுத்தி இருக்கிறேன். செந்தில் கூட்டணி குறைவுதான்''. என்றார் பி.வாசு.

''கவுண்டமணி வெற்றிக்கு நடிப்பு, காமெடி சென்ஸ், திறமை மட்டுமல்ல, அவர் தனிப்பட்ட விஷயங்களும் காரணம். அவருக்கு அந்த காலத்திலும், இந்த காலத்திலும் மேனேஜர், டிரைவர் கிடையாது, பர்சனல் பிஏ கிடையாது. அனைத்து வேலைகளையும் அவரே கவனிப்பார். எந்த பிஸியான காலத்திலும் எனக்கு கால்ஷீட் மறக்கமாட்டார். பல படங்களுக்கு 10 நாட்கள் கேட்பேன். அவரோ, 'பி.வாசு படத்தில் காமெடி, சீன் நல்லா இருக்கும். நான் 15 நாட்கள் கால்ஷீட் தருகிறேன். என்னை அவர் நன்றாக பயன்படுத்துவார்' என மனம் திறந்து சொல்வார். பல சீன்களில் அவர் நடிப்பும், ஸ்பாட்டில் அவர் கூடுதலாக சேர்க்கிற விஷயமும் படத்தை எங்கேயோ கொண்டு செல்லும்'' என்றார் பி.வாசு.

''குறிப்பாக, மன்னன் படத்தில் ரஜினிகாந்த், கவுண்டமணி, விஜயசாந்தி சம்பந்தப்பட்ட காமெடி சீன் இன்றும் பேசப்படுகிறது. அதை பார்த்து சிரிக்காதவர்கள் இல்லை. அந்த சீன் எடுத்த போது பல டயலாக்குகளை கவுண்டமணி அவரே ஸ்பாட்டில் கூடுதலாக சேர்த்தது. அதேபோல், சத்யராஜ், கவுண்டமணி சேர்ந்துவிட்டால் கலக்கிவிடுவார்கள். எதை சேர்ப்பது, எதை நீக்குவது என்றகுழப்பம் வரும் அளவுக்கு நடிப்பு கூட்டணியில் மிரட்டுவார்கள்'' என கூறுகிறார் பி. வாசு.

'முழு சம்பளம் வாங்கமாட்டார்'

''தொழில் ரீதியாக சில தர்மங்களை அவர் கடைபிடித்தார். ஒரு படத்துக்கு முழு சம்பளம் வாங்கமாட்டார். குறிப்பிட்ட வீதம் அளவுக்கு முதலில் வாங்கிவிட்டு, டப்பிங் பேசி முடிக்கும்போதுதான் மீதி சம்பளத்தை வாங்குவார். 'ஒரு படப்பிடிப்பு சில மாதம் போகும், தயாரிப்பாளருக்கு வட்டி அதிகமாகும். என்னால் பிரச்னை வரக்கூடாது. அதனால், படம் முடியும் நேரத்தில் சம்பளம் வாங்குகிறேன்' என்பார். இந்த குணம் யாருக்கும் வராது.

அவரின் நடிப்புக்கு, அவரின் தனித்திறமைக்கு சினிமா மீதான ஆர்வம் காரணம். ஏகப்பட்ட ஹாலிவுட் படம் பார்ப்பார். எனக்கும் பல படங்களை பரிந்துரை செய்து இருக்கிறார். அதெல்லாம் காமெடி படங்கள் மட்டுமல்ல திரில்லர், பேமிலி என மாறுபட்ட படங்கள். அவருக்கு ஆங்கிலம் சரளமாக வருமா என தெரியாது. ஆனால், இந்த படங்களை ரசித்து பார்ப்பார்.

என்னை பொறுத்தவரையில் அவர் காமெடியில் மிகவும் ரசிப்பது, கரகாட்டக்காரன்தான். 'என்னை பார்த்து அந்த கேள்வியை ஏன்டா கேட்டே' என்ற காட்சி பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது. அதேபோல் உதயகீதம் தேங்காய் வெடிகுண்டு காமெடிக்கும் நான் ரசிகன்'' என்கிறார் பி.வாசு.

'பல வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தார்' - செந்தில்

கவுண்டமணியுடன் ஏகப்பட்ட படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் செந்தில்.

அவர் பிபிசி தமிழிடம், '' எனக்கும், அவருக்கும் நாடக காலத்தில் இருந்தே நட்பு. 50 ஆண்டுகளை தாண்டி அது தொடர்கிறது. அவர் பற்றி பேசிக்கொண்டே போகலாம். அவர் காமெடியன் மட்டுமல்ல, நல்ல நடிகர். அதிலும் டைமிங்கில் அவரை அடிக்க ஆள் கிடையாது. அந்த காலம் தொடங்கி, இன்றைய காலம் அவரை அவர் மாறவே இல்லை.அப்படியே என்னுடன் பழகுகிறார்.

அவர் காமெடியை பார்த்தவர்கள் அவர் நடத்தையை பார்த்தால், கொஞ்சம் வேறு மாதிரி அவர் கறாராக இருப்பது போல தோன்றும். உண்மையில் அவ்வளவு இனிமையானவர். தனிப்பட்டமுறையில், சினிமாவில் எனக்கு பக்க பலமாக இருந்தார். நாடக காலம் தொடங்கி, சினிமாவரை பல வாய்ப்புகளை எனக்காக சொல்லியிருக்கிறார். எந்த காலத்திலும் ஈகோ பார்த்தது இல்லை. மக்களுக்கு, சினிமாவுக்கு எங்கள் கூட்டணி பிடித்ததால் பல ஆண்டுகளாக நாங்கள் இணைந்து நடித்து மக்களை சிரிக்க வைத்தோம்.'' என்கிறார்.

கவுண்டமணி வெற்றிக்கு காரணம்

கவுண்டமணி நடித்த பல படங்களுக்கு டிராக்,வசனங்கள் எழுதியவர் இயக்குனர் ராஜகோபால்.

அவர் பிபிசி தமிழிடம்,''ஆரம்பத்தில் கவுண்டமணி அண்ணன் படங்களுக்கு வீரப்பன் என்பவர் காமெடி டிராக் எழுதினார். பின்னர் நானும் எழுத ஆரம்பித்தேன். இதுவரை 70க்கும் அதிகமான படங்களுக்கு காமெடி காட்சிகளை எழுதிக்கொடுத்திருக்கிறேன். அவருடன் இணைந்து நடித்து இருக்கிறேன். அவரை வைத்து ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தை இயக்கி இருக்கிறேன்'' என்றார்

''குறிப்பாக, ஜெய்ஹிந்த், கர்ணா, பெரிய கவுண்டர் பொண்ணு, ஜல்லிகட்டு காளை போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. அவர் கதாசிரியர்கள், வசனகர்த்தாவை பெரிதும் மதிப்பார். அவருக்கு டிராக் எழுதிக்கொடுத்தால் அப்படியே நடிப்பார்.

கதை, டிராக்தான் பெரிய பலம். அதில் சிறப்பாக நடிப்பது நடிகனின் வேலை என்பார். அதேசமயம், செட்டில் புலி மாதிரி வேகமாக இருப்பார். அவர் படங்களில் டப்பிங் முக்கியம். ஆனால், அதை விரைவாக முடித்துகொடுத்துவிடுவார். ஒரு முழு படத்துக்கான டப்பிங்கை சில நாட்களில் முடித்துவிடுவார். ஆனாலும், அது அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

அதேபோல், நேர விஷயத்தில் சரியாக இருப்பார். சரியான நேரத்தில் படத்தை முடித்துகொடுப்பார். ஏதாவது பிரச்னை, சூழ்நிலை காரணமாக ஒரு படப்பிடிப்பு ரத்தானால் ஓய்வெடுக்கமாட்டார். அடுத்த படங்களுக்கு போன் போட்டு, 'நான் இப்ப ப்ரீ. நடிக்க வரட்டுமா' என கேட்பார். அவரால் எந்த படப்பிடிப்பும் ரத்தாகாது.'' என்கிறார்

'கவுண்டமணிக்கு சிறந்த நண்பர் சத்யராஜ்'

கவுண்டமணியுடன் பல ஆண்டுகளாக நெருங்கி பழகியவரும், அவர் நண்பரும், தயாரிப்பாளருமான மதுரை செல்வம் பிபிசி தமிழிடம், ''கவுண்டமணியின் வெற்றிக்கு அவரின் தனிப்பட்ட பல விஷயங்களும் காரணமாக இருக்கிறது. அதி காலையில் எழுந்து மறக்காமல் வாக்கிங் போவார். முன்பு பீச்சில் சென்று கொண்டிருந்தார். இப்போது வீட்டு மாடியில், ஆபீஸ் மாடியில் செல்கிறார். காலையில் தியானம் செய்வார், சில ஆசனங்களை பண்ணுவார். அதேபோல் மாலையிலும் வாக்கிங் போவார்.

முன்பு அசைவம் சாப்பிட்டவர், பல ஆண்டுகளுக்குமுன்பு சைவத்துக்கு மாறிவிட்டார். அவருக்கு கத்திரிக்காய் ரொம்ப பிடிக்கும். அவருக்கு தமிழ் தவிர, மற்ற மொழி அதிகம் தெரியாது. மற்ற மொழி படங்களில் நடித்தது இல்லை. ஆனால், அவர் பார்த்த ஹாலிவுட் படங்கள் அதிகம். வீட்டில் பெரிய டிவியில் அவ்வளவு படங்களை ரசித்து பார்த்து இருக்கிறார். அவருக்கு கடவுள் பக்தி உண்டு. பெருமாளை தினமும் கும்பிடுவார்.

தமிழக முதல்வர் விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் காமெடிக்கு விஜய் ரசிகர். திரையுலகில் கவுண்டமணிக்கு சிறந்த நண்பர் சத்யராஜ்.'' என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு