You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய பணக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவது ஏன்?
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஏப்ரல் மாத இறுதியில், இந்தியாவின் சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், பெண்கள் சுகாதார பொருட்கள் மற்றும் பயோசிமிலர் தயாரிக்கும் ஆர்கனான் அண்ட் கோ நிறுவனத்தை 11.75 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது
இது கடந்த இரு தசாப்தங்களில் ஓர் இந்திய நிறுவனம் செய்த மிகப்பெரிய வெளிநாட்டு கையகப்படுத்தல் ஆகும். சமீபத்திய மாதங்களில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களின் வரிசையில் இது இணைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இத்தாலியை சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஐவெகோவை 4.4 பில்லியன் டாலருக்கு வாங்கியது.
ஐடி நிறுவனமான கோஃபோர்ஜ், சிலிக்கான் வேலி சார்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான என்கோராவை 2.35 பில்லியன் டாலருக்கு வாங்கியது மற்றும் பஜாஜ் குழுமம் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்.இ-யின் 23 சதவீத பங்குகளை வாங்கியது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
கிராண்ட் தோர்ன்டன் ஆலோசனை நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் 162 இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு கையகப்படுத்தல்களுக்காக 18 பில்லியன் டாலருக்கும் மேல் செலவிட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 34 சதவீத வளர்ச்சியாகும்.
"இந்த ஆண்டின் முதல் பாதியிலேயே ஒப்பந்த மதிப்பில் நாம் 15 பில்லியன் டாலர்களைக் கடக்கக்கூடும்" என்று கிராண்ட் தோர்ன்டன் நிறுவனத்தின் பங்குதாரரும் தேசியத் தலைவருமான சுமீத் அப்ரோல் பிபிசியிடம் தெரிவித்தார்.
பலருக்கு, இந்திய நிறுவனங்களின் இந்த புதிய வெளிநாட்டு கையகப்படுத்தல் அலை, இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு டாடா குழுமம் போன்ற நிறுவனங்கள் முன்னெடுத்த உலகளாவிய கையகப்படுத்தலை நினைவூட்டுகிறது.
அப்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோருஸ் ஸ்டீல் போன்ற உலகளாவிய மதிப்புமிக்க நிறுவனங்களை பெரும் துணிச்சலுடம் டாடா வாங்கியது.
இருப்பினும், இம்முறை இதற்கான காரணங்கள் சற்று மாறுபட்டவை என்று பல ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இந்திய நிறுவனங்கள் மேற்கத்திய சொத்துகளை வெறும் உலகளாவிய லட்சியத்தின் அடையாளங்களாக மட்டும் பார்க்காமல், உத்தி மற்றும் செயல்பாட்டு காரணங்களுக்காகவே தொடர்ந்து வாங்குகின்றன.
பிரச்னை என்ன?
2000-களின் தொடக்கத்திலிருந்தே பொருளாதாரச் சூழல் பெருமளவு மாறியுள்ளது. முந்தைய கையகப்படுத்தலின் போது, இந்தியா வலுவான சந்தை ஏற்றத்தில் இருந்தது.
ஆனால் இன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து வேகமாக வெளியேறி வருகிறார்கள். நேரடி வெளிநாட்டு முதலீடு குறைந்து வருகிறது. மேலும் அரசு வரி குறைப்பு மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டங்கள் வழங்கினாலும், தனியார் துறையின் முதலீடுகள் இன்னும் பலவீனமாகவே உள்ளன.
"கோவிட் காலத்திற்குப் பிறகு இந்தியாவின் டாப் 500 நிறுவனங்களின் கார்ப்பரேட் லாபம் ஆண்டுக்கு 30.8% வளர்ந்தது. ஆனால், தனியார் துறையிலிருந்து ஒட்டுமொத்த மூலதன உருவாக்க விகிதம் இன்னும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது," என்று இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் சமீபத்தில் ஒரு கொள்கை மாநாட்டில் கூறினார்.
இந்தியாவிற்குள் அதிக முதலீடு செய்யுமாறு அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாலும், வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது, உள்நாட்டு வணிகச் சூழல் மீதான அதிருப்தியையும், வெளிநாடுகளில் கிடைக்கும் சிறந்த பன்முகத்தன்மை மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இந்தியாவிலிருந்து பெருமளவு பணம் வெளிநாடுகளுக்குச் செல்கிறது. எங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள நிறுவனங்களில் கூட, பல நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் பிற இடங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுகின்றன. அங்கு தொழிற்துறை நிலங்கள் கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைப்பதோடு, செயல்பாட்டு மூலதனத்தைப் பெறுவதும் இந்தியாவை விட மிக எளிதாக உள்ளது," என்று மார்செலஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் சௌரப் முகர்ஜி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தத் போக்கைத் தீர்மானிப்பது பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல.
சன் பார்மா ஒப்பந்தம் அல்லது டொனால்ட் டிரம்ப் அறிவித்த பிரவுன்வில்லி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்திற்கு முகேஷ் அம்பானி ஆதரவளிப்பதாகக் கூறப்படும் செய்தி போன்றவை மிக முக்கியமான உதாரணங்களாக இருக்கலாம் (இருப்பினும் அம்பானி தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை).
பல சிறிய இந்திய நிறுவனங்களும் இதேபோன்ற புதிய வெளிநாட்டு முதலீடுகளை அல்லது சிறிய அளவிலான கையகப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றன என்றார் முகர்ஜி .
தரவு நுண்ணறிவு நிறுவனமான ட்ராக்ஸன் இணை நிறுவனர் நேஹா சிங்கின் கூற்றுப்படி, நிறுவனங்களின் வலுவான நிதி நிலை மற்றும் உலகளாவிய நிதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்த மாற்றத்தை ஆதரிக்கின்றன.
"சந்தைகள், பிராண்டுகள், தொழில்நுட்பத் திறன்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிபுணத்துவம் மற்றும் ஏற்கனவே நிறுவப்பட்ட விநியோக வலைப்பின்னல்களை அணுக இந்திய நிறுவனங்கள் அதிகளவில் வெளிநாடுகளை நோக்குகின்றன. இவற்றைச் சுயமாகக் கட்டமைக்க பல ஆண்டுகள் ஆகலாம்," என்று சிங் கூறினார்.
வணிகச் சங்கிலிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், உலகளவில் முக்கிய வர்த்தக வழிகள் மற்றும் வரி விதிப்புகள் அதிகமாக அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாலும், நிறுவனங்கள் வெளிநாட்டு கையகப்படுத்தல்களை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கும் நடவடிக்கைகள் எப்போதும் வெற்றியாக இருக்காது.
உதாரணத்திற்கு, டாடா ஸ்டீல் நிறுவனம் கோருஸ் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கியது, பல தசாப்தங்களாக அந்த நிறுவனத்திற்கு ஒரு "சுமையாகவே" இருந்தது என்று முகர்ஜி கூறுகிறார்.
மேலும், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் இந்திய நிறுவனங்கள் இத்தகைய பெரிய ஒப்பந்தங்களுக்கு பங்குகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் அளவுக்கு இன்னும் வளரவில்லை.
சன் பார்மா ஒப்பந்தம் போன்ற பெரிய ஒப்பந்தம் கூட முழுக்க முழுக்க ரொக்கப் பரிவர்த்தனையாகவே இருந்தது, இது நிதி ரீதியாக ஆபத்தானது.
ஆனாலும், இது போன்ற கையகப்படுத்தல்கள் இதோடு முடிந்துவிடாது.
இந்தியாவுக்கும் பிரிட்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தத் போக்கை வேகப்படுத்தக்கூடும்.
மேலும், பல அடுத்த தலைமுறை தொழிலதிபர்களின் வாரிசுகள் வெளிநாடுகளில் கல்வி கற்று அங்கேயே வாழ்வதைக் தேர்வு செய்கிறார்கள். இதனால், அவர்கள் தங்களின் சொத்துகளை வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருப்பது இயல்பானதாக இருக்கும் என்றும், "குறிப்பாக ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக சுமார் 40% வரை குறைகிறது" என்றும் முகர்ஜி கூறுகிறார்.
ஆனால், வெளிநாட்டு விரிவாக்கம் அதிகரிக்கும் போதும், உள்ளூர் சந்தையில் பெரிய அளவிலான முதலீடுகளில் "தேர்ந்தெடுக்கப்பட்ட எச்சரிக்கை" தொடரும் என சிங் கூறுகிறார்.
இந்தியா பலவீனமான தேவை மற்றும் தனியார் முதலீட்டு மந்தநிலை சுழற்சியில் சிக்கியுள்ளது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் ஏற்கனவே பலவீனமாக உள்ள வேலைவாய்ப்புச் சந்தையில் ஏஜென்டிக் ஏஐ ஏற்படுத்தும் அபாயங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
இந்தியா கடந்த ஆண்டின் 18 பில்லியன் டாலர் இலக்கைத் தாண்டுமா என்பது தற்போதைய "புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலால்" இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று கிராண்ட் தோர்ன்டனின் அப்ரோல் கூறுகிறார்.
ஆனால் நீண்டகாலப் போக்கு தெளிவாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற நிலைகளுக்கு எதிராக இந்திய நிறுவனங்கள் மேலும் மேலும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில், அரசாங்கம் டாலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு வளர்ச்சி இயந்திரத்தைத் தொடங்க அந்நிய மூலதனத்தை ஈர்க்கவும் கடுமையாகப் போராடி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு