'மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டார்'- பிரிட்டனில் 2 பேர் தங்களை தாங்களே தபாலில் அனுப்பிய சுவாரஸ்யம்

'தபாலாகப் பயணித்த இருவர்' - தபால் விதிகளை மீறி இவர்கள் பயணித்தது எப்படி?

பட மூலாதாரம், Guernsey Post

படக்குறிப்பு, தபால் தலைகளில் இடம்பெறவுள்ள ஒரு கேலிச் சித்திரத்தில், ஹாரி டர்னரின் சார்க் தீவுப் பயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
    • எழுதியவர், ஜோனதன் மோரிஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தபால் விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பற்றி செய்தித்தாளில் படித்துத் தெரிந்துகொண்ட ஒருவர் அதனைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இன்னொருவர் ஐரோப்பா முழுவதும் போர் பரவியதால் தன் குடும்பத்தினரிடம் சேரத் துடித்துக் கொண்டிருந்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் ஹாரி டர்னர் மற்றும் மேஜர் "பீபாட்" பாமர் ஆகிய இருவர் பிரிட்டனுக்கு அருகே உள்ள சேனல் தீவுகள் இடையே தபால் மூலம் பயணித்துள்ளனர்.

படகில் இடமில்லை என்பதால் மேஜர் பால்மர் தபால் மூலம் பயணிக்கப் பதிவு செய்து கொண்டார்.

பட மூலாதாரம், Guernsey Press/Priaulx Library

படக்குறிப்பு, படகில் இடமில்லை என்பதால் மேஜர் பால்மர் தபால் மூலம் பயணிக்கப் பதிவு செய்து கொண்டார்.

சேனல் தீவுகள் பிரான்ஸின் நார்மண்டி கடற்கரைக்கு அப்பால், ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.

இந்தத் தீவுகள் பிரிட்டன் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதிகள் அல்ல. மாறாக, இவை சுதந்திரமான நிர்வாகங்களைக் கொண்ட பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உட்பட்டவைம். இவற்றில் வசிப்பவர்கள் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆவர்.

1905-இல் கெர்ன்சி தீவைச் சேர்ந்த டர்னர், தபால் சேவையைப் பயன்படுத்தி ஒரு மனிதரை உண்மையில் கொண்டு செல்ல முடியுமா என்று கண்டறிய முடிவு செய்தார். முன்னதாக 1900-இல் லண்டனில் ஒருவர் இதைச் செய்திருந்தார்.

தபால் விதிகளைப் பற்றி செய்தித்தாள் கட்டுரை ஒன்றில் படித்த பிறகு, கெர்ன்சி தீவிலிருந்து சார்க் தீவிற்கு ஒரு தபால் பொருளாகத் தன்னைக் கொண்டு செல்ல பதிவு செய்து கொண்டார் டர்னர். தன்னைத்தானே தபாலில் அனுப்பிக் கொண்ட முதல் நபர் அவர்தான் என்று நம்பப்படுகிறது.

செப்டம்பர் 1-ஆம் தேதி 'கெர்ன்சி போஸ்ட்' வெளியிடும் நான்கு அஞ்சல் தலைகள் கொண்ட தொகுப்பின் மூலம் அந்த இரண்டு பயணங்களும் நினைவுகூரப்படுகின்றன.

பட மூலாதாரம், Guernsey Post

படக்குறிப்பு, செப்டம்பர் 1-ஆம் தேதி 'கெர்ன்சி போஸ்ட்' வெளியிடும் நான்கு அஞ்சல் தலைகள் கொண்ட தொகுப்பின் மூலம் அந்த இரண்டு பயணங்களும் நினைவுகூரப்படுகின்றன.

"அவர் ஒரு குறும்புத்தனமான மனிதர்" என்று டர்னரைக் குறிப்பிடுகிறார் கெர்ன்சி போஸ்டின் அஞ்சல் தலைப் பிரிவு தலைவர் பிரிட்ஜெட் யாப்ஸ்லி

"சரி, நான் இதைப் பரிசோதித்து பார்க்கப் போகிறேன்," என்று அவர் கூறிக் கொண்டார் என நினைக்கிறேன். கூறியதோடு மட்டுமல்லாமல் அவர் அதைச் செய்தார். அவர் தன்னை தபால் மூலம் சார்க் அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் மேஜர் பால்மரின் சூழ்நிலை முற்றிலும் வேறானது. 1940-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஐரோப்பா முழுவதும் போர் பரவியபோது அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்காக கெர்ன்சியிலிருந்து ஆல்டெர்னி என்கிற இடத்திற்குச் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அந்தப் படகில் பயணிகளுக்கான அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆனால் தபால் விதிமுறைகளைப் படித்த பிறகு, தான் தபால் பொருளாகப் பயணிப்பதைத் தடுப்பதற்கு எதுவும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தார்.

இந்தப் புகைப்படத்தில் நடுவில் இருக்கும் ஹாரி டர்னர் சார்க் தீவிற்கு தபால் பொருளாகப் பயணிக்க பதிவு செய்து கொண்டார்.

பட மூலாதாரம், Priaulx Library

படக்குறிப்பு, இந்தப் புகைப்படத்தில் நடுவில் இருக்கும் ஹாரி டர்னர் சார்க் தீவிற்கு தபால் பொருளாகப் பயணிக்க பதிவு செய்து கொண்டார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதாலும் அவர் சரக்குப் பொருளாகவும் தபால் பொருளாகவும் இல்லை என்பதால் படகின் கேப்டன் முதலில் அவரைப் படகில் ஏற்ற மறுத்துவிட்டார். ஆனால் முன்பதிவு செய்த பயணிகள் சிலர் வராதபோது சூழ்நிலை மாறியது. ஆனால் அவர் சரக்கு வைப்பறையிலே பயணிக்க வேண்டியிருந்தது.

பால்மர் ஆல்டெர்னி அடைந்தபோது அவர் தபால்களைப் பிரிக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளூர் தபால்காரரால் ஒருவரால் "நேரடியாக அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டார்" என யாப்ஸ்லி தெரிவித்தார்.

கெர்ன்சி போஸ்டின் வரலாற்று ஆவணங்களில் இந்த நிகழ்வுகள் தொடர்பான செய்தித்தாள் கட்டுரைகளைக் கண்டுபிடித்த யாப்ஸ்லி, இவை "சொல்வதற்கு மிகவும் இனிமையான, ஒருவிதமான கலகலப்பான கதையாக இருக்கும்" என நினைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் தீவுகளில் தபால் மூலம் பயணித்த முதல் நபர் ஹாரி டர்னர் மற்றும் கடைசி நபர் மேஜர் பால்மர். இருவருமே வெவ்வேறு ஆண்டுகளில் பயணித்திருந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரு மிகச் சிறந்த 'முதல் மற்றும் கடைசி' கதையாக இது இருக்கும் என்று நாங்கள் கருதினோம்." என்று தெரிவித்தார்.

தபால் விதிகள் பின்னர் மாற்றப்பட்டன. அதன் மூலம் அதிலிருந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டு மனித தபால்களின் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு