சச்சினை முன்மாதிரியாக வைத்து சிறந்த இன்னிங்ஸை டெம்பா பவுமா கட்டமைத்தது எப்படி?

 தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா
படக்குறிப்பு, தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா
    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை பல்லாயிரக்கணக்கான சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சில நூறு சதங்கள் மட்டுமே வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. அப்படிப்பட்ட ஒன்றுதான், கெபெர்ஹா டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா அடித்த சதம்.

டெம்பா பவுமா, 546 நிமிடங்கள் தாக்குப் பிடித்து 334 பந்துகளை எதிர்கொண்டு 179 ரன்களை குவித்தார். இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எப்படித் திணற வைத்தார் என்பதற்கான சான்றுகள். பவுமாவின் சதம் கொண்டாடப்படுவது ஏன்?

பவுமா களமிறங்கியபோது, தென்னாப்பிரிக்கா 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மழைக் குறுக்கீடும் மேகமூட்டமான வானிலையும் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தன. அது போதாதென ஸ்காட் போலண்டின் ஸ்விங்கும் சேர்ந்துகொள்ள, தென்னாப்பிரிக்க அணி பரிதாபமாகக் காட்சியளித்தது.

கேப்டன் பவுமாவும் சரியான ஃபார்மில் இல்லை. டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் அவர் மொத்தமாக எடுத்த ரன்கள் 4.

கிரிக்கெட், பவுமா, சச்சின் டெண்டுல்கர், பேட்டிங் டெக்னிக், தென்னாப்பிரிக்க அணி

ஹாட்ரிக் பந்தை எதிர்கொண்ட கேப்டன் பவுமா

போலண்டின் ஹாட்ரிக் பந்திலேயே பவுமா ஆட்டமும் முடிந்திருக்கக்கூடும், பந்து இன்சைட் எட்ஜ் ஆன பின்பு கால்காப்பில் பட்டதால் தப்பித்தார். அதன் பிறகு அவர் அவசரப்படவே இல்லை. தேவையற்ற ஷாட்களை தவிர்த்து பந்துவீச்சாளர்களின் தவறுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.

ஸ்டார்க்கின் 450வது டெஸ்ட் விக்கெட்டாக வியான் முல்டர் விழுந்ததும், தென்னாப்பிரிக்கா 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ரிக்கெல்டன் ஆட்டமிழந்ததும் கீழ்வரிசையை வழிநடத்தி இன்னிங்ஸை கட்டமைக்கும் முழு பொறுப்பும் பவுமா தோளில் இறங்கியது. முதல் 50 ஓவர்களில் ஆமை வேகத்தில் நகர்ந்த ரன் ரேட், யான்சன் களமிறங்கியது சூடு பிடிக்கத் தொடங்கியது. டர்பனில் காட்டிய அதே அச்சமற்ற ஆட்டத்தை அவர் இங்கும் வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்த டெஸ்டில் சிறந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரான போலண்டை அவர் கருணையின்றிப் பந்தாடினார்.

யான்சன் அதிரடியாக ரன்களை குவித்தபோதும், பவுமா தனது இயல்பான ஆட்டத்தைக் கைவிடவில்லை. அதேநேரம் ஆஸ்திரேலிய வீரர்களின் பவுன்சர் பொறியையும் திறம்படச் சமாளித்தார். பேட் கம்மின்ஸ் பந்தில் அவர் அடித்த ஹூக் ஷாட், மைதானத்திற்கு வெளியே பறந்தது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சு சொதப்பியது ஏன்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

யான்சன் 85 ரன்களில் ஆட்டமிழந்தபோது, பவுமா 213 பந்துகளை எதிர்கொண்டு 88 ரன்களில் இருந்தார். பவுமா - மார்கோ ஜோடி, ஆஸ்திரேலியர்களின் பந்துவீச்சு திட்டங்களைக் குலைத்தது. 5 அடி 4 அங்குல பவுமாவுக்கு வீசும் அதே லெந்த்தில் 6 அடி 9 அங்குல யான்சனுக்கு பந்துவீச முடியாது. இரண்டு பேட்டர்களின் உடல்வாகுக்கு ஏற்றபடி அடிக்கடி லெந்த்தை மாற்றியதால், பந்துவீச்சாளர்களின் ரிதம் பாதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை என்று சொல்லிவிட முடியாது. மழையால் முதல் இரண்டு நாட்களில் 130 ஓவர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டது. அந்தச் சூழலிலும், தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டரை போலண்ட் துவம்சம் செய்தார்.

ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹேசில்வுட்டால் அதிக ஓவர்கள் வீச முடியாமல் போனது பின்னடைவாக அமைந்தது. இதனால், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமை அதிகரித்தது.

ஷார்ட் பிட்ச் வியூகம் கைகொடுக்காத போதும், ஆஸ்திரேலிய வீரர்கள் அதில் விடாப்பிடியாக இருந்தது சரியான வியூகமாகத் தெரியவில்லை. 90களில் நீண்ட நேரம் இருந்தபோதுகூட, பவுமா சதத்துக்காக அவசரப்படவில்லை. அவர் 99 ரன்களில் இருந்தபோது மைதானத்தில் பதற்றம் நிலவியது. பாட் கம்மின்ஸ் வீசிய ஷார்ட் பந்தில் புல் ஷாட் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

மைதானத்தில் இருந்த பவுமாவின் மனைவி பிலா லோபி, மகனைத் தூக்கிக் கொஞ்சியபடி ஆனந்தக் கண்ணீர்விட்டார்.

கிரிக்கெட், பவுமா, சச்சின் டெண்டுல்கர், பேட்டிங் டெக்னிக், தென்னாப்பிரிக்க அணி

அணியைக் கரைசேர்த்த கேப்டன் இன்னிங்ஸ்

யான்சன் ஆட்டமிழந்த பிறகு, தென்னாப்பிரிக்காவின் கீழ் வரிசை விரைவில் சரியுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 8வது விக்கெட்டுக்கு பவுமா - ஹார்மர் கூட்டணி 183 ரன்களை குவித்தது. 179 ரன்களில் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்த பவுமா, இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். இப்படியாக, 110 -6 என்று தத்தளித்த தென்னாப்பிரிக்கா, 425-9 என்ற வலுவான நிலையை எட்டியது.

முதல் டெஸ்டில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த பவுமா, ஃபார்மை மீட்டெடுக்க கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனிமையில் 6-7 மணிநேரம் வரை வலைப் பயிற்சியில் செலவிட்டுள்ளார்.

முதல் நாள் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டபோது, பர்ஃபாமன்ஸ் அனலிஸ்ட் பாக்கியர் ஆப்ரஹாம்ஸுடன் இணைந்து உட்புறப் பயிற்சிக் கூடத்தில் பேட்டிங் செய்ததாக இஎஸ்பிஎன் தளத்தில் செய்தி வெளியானது.

இன்னிங்ஸ் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பவுமா, "இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே சரியான ஃபார்மின்றி தவிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாடியதும், ஆஸ்திரேலியா போன்ற தரமான பந்துவீச்சை எதிர்கொண்டதும் காரணமாக இருக்கலாம். அதனால், வலைப் பயிற்சியில் கடுமையாக உழைத்தேன். அது இன்னிங்ஸின்போது கைகொடுத்தது" என்று கூறினார்.

சச்சின் டெக்னிக்கை பின்பற்றிய பவுமா

தனது ஆதர்ச நாயகனான சச்சினின் பேட்டிங் டெக்னிக்கை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டதாக பவுமா தெரிவித்துள்ளார்.

"நான் சச்சினின் டெக்னிக்கை பின்பற்ற முயல்கிறேன். நான் உயரமான ஆள் கிடையாது. என்னால் நீளமான காலடிகளை எடுத்து வைக்க முடியாது. எனது நகர்வுகளில் நான் கவனமாக இருக்க முயல்கிறேன். சில நேரங்களில் அது எனக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆனால், பெரும்பாலும் பலனளிக்கிறது. பந்தை முடிந்தவரை என் உடலுக்கு அருகில் விளையாட முயல்கிறேன்" என்று அவர் பேசினார்.

"புதிய லிட்டில் மாஸ்டர்" என்று பவுமாவுக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கவாஸ்கர், சச்சின் ஆகியோர் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டனர்.

சச்சினின் பேட்டிங் டெக்னிக், கிரிக்கெட், பவுமா, சச்சின் டெண்டுல்கர், பேட்டிங் டெக்னிக், தென்னாப்பிரிக்க அணி

பவுமாவின் எழுச்சியைத் தொடர்ந்து பேட்டர்களின் உயரம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. உலகின் தலைசிறந்த பேட்டரான பிரேட்மேன், சச்சின், லாரா போன்றவர்கள் சராசரி உயரம் கொண்டவர்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

"உயரம் குறைவாக இருப்பவர்களின் உடலில் பொதுவாக தாழ்வான ஈர்ப்பு மையம் அமைவது திடீரெனத் திசைமாறுதல், உடலைக் கட்டுப்படுத்துதல் போன்ற செயல்களில் உதவக்கூடும்" என்கிறார் கிரிக்கெட் அனலிஸ்ட் சைமன் ஹியூஸ்.

கேப்டனான பிறகு 54.36 என்ற சராசரியில் 4 சதங்களை பவுமா குவித்துள்ளார். கேப்டனாக பொறுப்பேற்பதற்கு முன்னதாக 34.53 சராசரில் வெறுமனே ஒரு சதம் மட்டுமே எடுத்திருந்தார். இந்தத் தரவுகள், நெருக்கடியின்போது அவர் எப்படி நேர்மறையாகச் செயல்படுகிறார் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் தனது சிறந்த ஆட்டம் வெளிப்படுவதாகவும் பவுமா தெரிவித்துள்ளார்.

"ஆஸ்திரேலியர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள். போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. இப்போது எங்களிடம் இருக்கும் உத்வேகத்தை அடுத்த இரண்டு நாட்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இங்கு செய்த நல்ல விஷயங்களை அடுத்த டெஸ்டிலும் தொடர வேண்டும்" என்றார் அவர்.

தென்னாப்பிரிக்க அணியின் உண்மையான போராளி பவுமா என தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

"தென்னாப்பிரிக்க அணி கடினமான சூழலில் தத்தளிக்கும் போதெல்லாம் அவர் முன்னின்று வழிநடத்துகிறார். சோதனையான நேரங்களில், அந்தக் கடினமான ரன்களை அணிக்காகக் குவிக்கிறார். அவரிடம் எப்போதும் இருக்கும் அந்தப் போராட்ட குணத்தை நான் மிகவும் விரும்புகிறேன். பவுமா, இந்த அணியின் ஒரு பெரும் சொத்து. அவர்தான் இந்த அணியின் உண்மையான போராளி" என்று பாராட்டுகிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு