பாரதியார் பல்கலைக் கழகத்தின் 196 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை: திமுக அரசின் அரசாணைக்கு எதிர்ப்பு ஏன்?

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான நிலத்தில் 196 ஏக்கர் நிலத்தை, தொழிற்சாலை தொடங்குவதற்கு டிட்கோவிடம் ஒப்படைக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புதல் அளித்து, முந்தைய திமுக அரசின் இறுதிக் காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த நிலம் தரப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஏற்கெனவே இந்த வளாகத்தில் 321 ஏக்கர் பரப்பளவில் டெக்சிட்டி அமைக்க திமுக ஆட்சியின்போது எடுத்த நடவடிக்கை, யானை வழித்தடம் அருகில் இருப்பதாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாகக் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் தொழிற்சாலை அமைக்க இடத்தை ஒதுக்குவதைக் கண்டிக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுப்பதற்காகவே 196 ஏக்கர் நிலம், டிட்கோவிடம் ஒப்படைக்க பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் அளித்ததாக பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் பிபிசியிடம் கூறினார். ஒருவேளை அந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டால், அதையும் எதிர்த்து மீண்டும் வழக்கு தொடுக்கப் போவதாக சூழல் ஆர்வலர் முரளீதரன் தெரிவித்தார்.
திமுக ஆட்சியின் இறுதியில் வெளியான அரசாணை
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகவுள்ள கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது, 1978ஆம் ஆண்டில் இருந்து 1984 வரை, இந்த பல்கலைக் கழகத்திற்காக கட்டாய நிலமெடுப்புச் சட்டத்தின் கீழ் 925.84 ஏக்கர் பட்டா நிலம் உள்பட 1072 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நீதிமன்றத்தில் அரசால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, அப்போது 799.67 ஏக்கர் நிலம் விவசாய நிலமாக இருந்துள்ளது. அப்போது பட்டா நிலத்திற்கான இழப்பீடாக ரூ.86 லட்சம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இழப்பீடு தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடந்து, தற்போது மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.164.28 கோடியாக உயர்ந்துள்ளது.

பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்தபோது 300 என்ற எண்ணிக்கையில் இருந்த குடும்பங்கள், தற்போது ஆயிரத்திற்கும் அதிகமாகிவிட்டதாக பிபிசியிடம் கூறினார் பல்கலைக் கழகத்திற்காக நிலம் இழந்தோர் கூட்டமைப்பின் தலைவர் கணேசன். முந்தைய திமுக அரசு, இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுச் சென்ற பிறகும் இப்போது வரை தங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்றார் அவர்.
பிபிசியிடம் பேசிய கணேசன், ''கடந்த திமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஏப்ரல் மாதத்தில், ரூ.164.28 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதுவே வழங்க வேண்டிய தொகையைவிட குறைவானதுதான். ஆனால் ஆறேழு மாதங்களாகியும் இப்போது வரை அந்தத் தொகையே விடுவிக்கப்படவில்லை. அரசு ஒதுக்கிய தொகையையாவது முதலில் வழங்க வேண்டுமென்றுதான் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம்'' என்றார்.
கடந்த அக்டோபர் 12 அன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில், அமைப்புகளின் சார்பாக இல்லாமல் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் வழங்கியோர் பலரும் இணைந்து ஆட்சியரிடம் இதற்காக மனு கொடுத்துள்ளனர்.
மனு வழங்கியது குறித்து பிபிசியிடம் பேசிய நிலம் வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பிரபு, ''நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்களாகியும் எங்களுக்குப் பணம் வழங்கப்படாதது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டோம். அதற்கு நிதி விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார். இழப்பீடு இன்னும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் செயலாக்க மனு தாக்கல் செய்த பிறகுதான், இந்த அரசாணை வெளியிட்டது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. விரைவில் கிடைக்குமென நம்புகிறோம்'' என்றார்.

நிலம் வழங்கியோர் சார்பில் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தபோது, 164 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 272 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது தொடர்பாக, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாணை, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழக அரசின் உயர்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தொகை இப்போது வரை விடுவிக்கப்படவில்லை.
இந்தப் பிரச்னை ஒரு புறமிருக்க, இதே அரசாணையில் 196 ஏக்கர் நிலத்தை சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் அமைத்துக் கொள்ள டிட்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு கூறப்பட்டுள்ளது. அத்துடன் மருதமலை அடிவாரத்திலுள்ள 77 ஏக்கர் இடத்தை யானை வழித்தடத்திற்காக பாரதியார் பல்கலைக்கழகத்திடம் இருந்து அரசு எடுத்துக் கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டுவிட்டாலும் அப்போது இது வெளியாகாத நிலையில், சமீபத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் வாயிலாக 196 ஏக்கர் இடம், டிட்கோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது வெளியில் தெரிய வந்துள்ளது.
டிட்கோ நிறுவனம் இந்த நிலத்திற்குக் கொடுத்த தொகையை வைத்து, பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக, கடந்த ஜனவரி 31 அன்று நடந்த சிண்டிகேட் கூட்டம் மற்றும் பிப்ரவரி 2 அன்று நடந்த அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட 'டெக்சிட்டி' திட்டம்
டிட்கோவுக்கு வழங்கப்படும் 196 ஏக்கர் நிலம், பாரதியார் பல்கலைக் கழகத்தின் வடக்குப் பகுதியில், பிரதான கட்டடம் அமைந்துள்ள பகுதியின் பின்புறம், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி இந்த நிலம் அமைந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் பகிர்கின்றனர். அங்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலை அமைக்க வேண்டுமென்று அரசாணையில் கூறப்பட்டு இருந்தாலும், இதற்கு சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக சங்க நிர்வாகிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சூழலியல் ஆர்வலரும், வழக்கறிஞருமான மலரவன், ''அங்கே டெக்சிட்டி அமைக்கவே கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அங்கு தொழிற்சாலை அமைக்க டிட்கோவிடம் 196 ஏக்கர் நிலத்தை வழங்குவது நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் முரணான நடவடிக்கை. யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள வனப்பகுதிக்கு அருகில் உயர்கல்வித் துறைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை தொழிற்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்வதை ஏற்கவே முடியாது'' என்றார்.
''இதை எதிர்த்து மாணவர் அமைப்புகள் போராடுவதற்குத் தயாராகி வருகின்றன. நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்பது முக்கியம். அந்த நிதியை உயர்கல்வித் துறையே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுதான் நியாயமான நடவடிக்கை. முந்தைய அரசால் போடப்பட்ட இந்த அரசாணையை இப்போதுள்ள அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது. மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார் வழக்கறிஞர் மலரவன்.
கடந்த 2021–2026 இடையிலான திமுக ஆட்சியில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில், 321 ஏக்கர் பரப்பளவில், 'டெக்சிட்டி' அமைக்க தமிழக அரசு முயன்றது. 2022–2023 பட்ஜெட்டில், சென்னை, கோவை, ஓசூர் ஆகிய நகரங்களில், 'டெக்சிட்டி' அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரே பகுதியில் வாழ்விடம், பணியிடம், பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பகுதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப நகரம்தான், இந்த 'டெக்சிட்டி' என்று தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
இதற்கான விரிவான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கு, தமிழக அரசின் 'எல்காட்' நிறுவனம், 2024ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று இ–டெண்டர் வெளியிட்டது. ஏப்ரல் 2 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. வீட்டு வசதி, ஷாப்பிங் மால், ஹோட்டல், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், சில்லரை வணிகப் பகுதி, உரிய அணுகுசாலைகள் ஆகியவற்றுடன், தங்கு தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC) போன்ற உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் கொண்ட நகரமாக இருக்கும் வகையில் விரிவான மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டுமென்றும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அப்போது இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சோமையம்பாளையம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள இந்த நிலம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால், வனப்பகுதியில் இருந்து யானை, சிறுத்தை, காட்டுப் பன்றி ஆகியவற்றின் நடமாட்டம் அதிகமாகவுள்ளது. இதே பகுதியில் மனித–காட்டுயிர் மோதலும் நடப்பது குறித்து, அடிக்கடி செய்திகளும் வெளியாகி வருகின்றன. சில உயிரிழப்புகளும் அதே பகுதியில் நடந்துள்ளன.

அதனால் பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப நகரம் அமையும்பட்சத்தில், அங்கு மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து ஆகியவை அதிகமாகி, இந்தப் பிரச்னை மேலும் அதிகரிக்குமென சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக சூழல் ஆர்வலர் எஸ்.முரளீதரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
யானைகள் வழித்தடத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவில் இந்த டெக்சிட்டிக்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் அதை அமைக்கும்பட்சத்தில் மனித–காட்டுயிர் மோதல் அதிகரிக்குமென்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதனால் அந்தத் திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். முரளீதரன், யானைகள் வழித்தடம், ரிசார்ட்ஸ் போன்றவை தொடர்பாக வேறு பல மனுக்களையும் தாக்கல் செய்து, அவையும் விசாரணையில் இருக்கின்றன.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2024 ஜூன் 28 அன்று இந்தத் திட்டத்திற்குத் தடை விதித்தது. பிறகு அது நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 321.74 ஏக்கர் பரப்பளவில் 'டெக் சிட்டி' (Tech City) அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் டெண்டரை தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (ELCOT) ரத்து செய்தது. அதன் பின்பு, எல்காட் (ELCOT) குழுவினர் அப்பகுதியை மீண்டும் ஆய்வு செய்தனர்.
இது பற்றி அப்போதைய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்ட அறிக்கையில், திட்டத்தின் வரைபடத்தில் மாற்றங்களைச் செய்து, புதிய டெண்டரை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார். யானை வழித்தடத்தில் இருந்து 150 மீட்டர் எல்லைக்குள் வரும் நிலப் பகுதியைத் திட்டத்தில் இருந்து நீக்கினால், முன்மொழியப்பட்ட திட்டத்தின் பரப்பளவு குறையும். எனவே, இது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது, இதுதொடர்பாக மாநில அரசு இறுதி முடிவை எடுக்கும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் 'டெக்சிட்டி' அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட அதே பகுதியில் 196 ஏக்கர் நிலத்தை, தற்போது டிட்கோ நிறுவனத்திற்கு, தொழிற்சாலை அமைக்க ஒதுக்கியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. டெக்சிட்டி என்பது படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தரும் மையமாக இருந்ததற்கே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதே பகுதியில் தொழிற்சாலை அமைக்க அரசு எப்படி அனுமதித்தது என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
மனித-காட்டுயிர் மோதல், கைநழுவும் கல்விக்கான இடம்: ஓர் அரசாணை, 2 பிரச்னை
பல்கலைக் கழகத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கு இத்தகைய நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 925 ஏக்கர் பரப்பளவில் ஏற்கெனவே 2016ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக கோவை வளாகத்திற்கு 130 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது கல்வி சார்ந்த பயன்பாடு என்பதால் அப்போது அதற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால், "இப்போது தொழிற்சாலை பயன்பாட்டுக்குத் தருவது, இது கையகப்படுத்தப்பட்ட நோக்கத்தை பாழ்படுத்தும்" என்கின்றனர் இவர்கள்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 134 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கலை அறிவியல் கல்லுாரிகள் இணைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க புள்ளிவிவரங்களின்படி, இங்கு 41 துறைகளில் 240 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மூவாயிரத்துக்கும் அதிகமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கின்றனர்.
அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஆவணக் குழு நிர்வாகியுமான திருநாவுக்கரசு, ''இது அபத்தமான அரசாணை. கடந்த ஆட்சியின் கடைசியில், நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு தரவேண்டும் என்பதற்காக அவசரகதியில் இந்த அரசாணை போடப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் போடப்பட்ட எத்தனையோ அரசாணைகளை இந்த அரசு ரத்து செய்துள்ளது. உதாரணமாக மக்களைப் பாதிக்கும் என்ற காரணத்திற்காக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்தது. அதேபோன்று மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதையும் ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.
''பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்தே சட்டக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக கோவை வளாகம், டைசல் பார்க் ஆகியவற்றுக்கு இடம் தரப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவை. அதனால் மாணவர்கள் பயன் பெறுவர். ஆனால் கல்விக்காக எடுத்த இடத்தை தொழிற்சாலை பயன்பாட்டுக்குத் தருவதை ஏற்கவே முடியாது'' என்றார் திருநாவுக்கரசு.
இந்த அரசாணையை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் அதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் டெக்சிட்டிக்கு எதிராக மனு தாக்கல் செய்த சூழலியல் ஆர்வலர் எஸ்.முரளீதரன்.
பிபிசியிடம் பேசிய எஸ்.முரளீதரன், ''யானை வழித்தடத்திற்கு மிக அருகில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது. பல முறை வளாகத்துக்கு உள்ளேயே வந்துள்ளது. குறிப்பிட்ட இந்த நிலப்பகுதி, வன எல்லைக்கும் பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக கோவை வளாகத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. சிலர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். அதனால்தான் டெக்சிட்டி அமைப்பதற்கே எதிர்ப்பு தெரிவித்து, இந்த பாதிப்பைச் சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்து, அதை ரத்து செய்ய வைத்தோம்'' என்றார்.
''அப்படியிருக்கும்போது அதே பகுதியில் தொழிற்சாலையை அமைக்க முந்தைய அரசு முடிவெடுத்தது, சுற்றுச்சூழல் மீது அப்போதிருந்த அரசு வைத்திருந்த அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளது. அத்துடன் அந்தப் பகுதி, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழுள்ள பகுதி. அதனால் அங்கு தொழிற்சாலை அமைப்பதே சட்டவிதிமீறல்தான். முந்தைய அரசின் பல அரசாணைகளை மக்கள் நலன் கருதி ரத்து செய்தது போலவே இதையும் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அதற்கு எதிராகவும் நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்'' என்றார் சூழலியல் ஆர்வலர் எஸ்.முரளீதரன்.

ஆனால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி சார்ந்த எதிர்கால விரிவாக்கத்திற்குத் தேவையான அளவு நிலம் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இப்போது டிட்கோவிடம் ஒப்படைக்கப்படும் நிலம், பல்கலைக்கழகத்தின் உட்புறத்தில் தரிசு நிலமாக இருப்பதாகவும் பயன்பாட்டில் இல்லாத அந்தப் பகுதி, சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட வழிவகுக்கும் என்கின்றனர் நிர்வாகிகள்.
பிபிசியிடம் பேசிய பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜவேல், ''மொத்தமுள்ள 925.84 ஏக்கர் நிலத்தில் தற்போது 415.98 ஏக்கர் பரப்பளவில்தான் பரவலாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் அதிலேயே நிறைய இடம் உள்ளது. இந்த நிலப்பகுதி, நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை, அதற்காக முதலீடு செய்யப்பட்ட அரசு நிதியும் முடங்கியுள்ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயத்தில் டிட்கோவிடம் இந்த நிலம் தரப்பட்டு, அதற்கு உரிய மதிப்பில் தொகை பெறப்பட்டு, அது நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த நிபந்தனையுடன்தான் நிலம் ஒதுக்க சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது'' என்றார்.
மேலும் இதுபற்றி விளக்கிய அவர், ''அந்தப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எந்தத் தொழிற்சாலையும் அமைக்கக்கூடாது என்ற அடிப்படையில்தான் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கும் தொழிற்சாலைகள், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சிக்கும் பயன்படும். படித்த பலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கவும் உதவும்'' என்றார்.
நிலம் வழங்கியோருக்கு விரைவில் இழப்பீடு தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ள நிலையில், டிட்கோவிடம் நிலத்துக்கான தொகை பெறப்பட்டுவிட்டதா, நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்ப்பு காரணமாக இந்த அரசாணை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா, அப்படி ரத்து செய்யப்பட்டால் அந்தத் தொகை நில உரிமையாளர்களுக்கு கிடைக்காதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுபற்றி கருத்து கேட்பதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரிடம் பதில் பெறுவதற்கு முயன்றும் இயலவில்லை. ஆனால் இப்போது வரையிலும் அந்த நிலம், வேறு எந்தத் துறையிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்று பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜவேல் தெரிவித்தார். அதனால் 196 ஏக்கர் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது குறித்து, தற்போதுள்ள தவெக அரசு வேறு முடிவை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































