அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தால் உறவாகும் ரஜினி - ஸ்டாலின்; சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பட மூலாதாரம், PTI
தமிழ்நாட்டில் சன் குழுமத்தைச் சேர்ந்த காவ்யா மாறன் - திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் திருமணம் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.
இதன் திருமண உறவின் மூலம் மு.க.ஸ்டாலின் - மாறன் குடும்ப வட்டமும் தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமான ரஜினிகாந்தின் குடும்பமும் இணையும்.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் இருவரும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கியதை தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கும் மாறன் தம்பதியர் நேரில் அழைப்பிதழ்களை வழங்கியுள்ளனர்.
காவ்யா மாறனுக்கு மு.க.ஸ்டாலினுடன் என்ன உறவு?

பட மூலாதாரம், Getty Images
காவ்யா கலாநிதி மாறன், சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளராகவும் அறியப்படுகிறார்.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதியின் மகளான காவ்யா, 2016ஆம் ஆண்டில் சன் டிவி நிறுவனத்தில் இணைந்தார். 2019ஆம் ஆண்டில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
கலாநிதி மாறனின் தந்தை, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆவார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சகோதரியின் மகன் முரசொலி மாறன் ஆவார். அந்த வகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் உறவினர்கள். எனவே, காவ்யா மாறன் மு.க.ஸ்டாலினுக்கு பேத்தி முறை ஆவார்.

அனிருத்துக்கு ரஜினியுடன் என்ன உறவு?
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர், 2012ஆம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது இசையில் ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து விக்ரம், லியோ, ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பட மூலாதாரம், Instagram/lycaproductions
அனிருத், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் சகோதரரின் மகன் ஆவார். அனிருத் ரவிச்சந்தரின் தந்தை ரவி ராகவேந்திரா ஒரு திரைப்பட நடிகராவார். குடும்ப உறவோடு மட்டுமல்லாமல், அனிருத் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் தொழில் ரீதியிலும் இணைந்து பணியாற்றியுள்ளனர். பேட்ட, தர்பார், ஜெயிலர் உள்ளிட்ட ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

உறவினர்களாகும் ஸ்டாலின் - ரஜினிகாந்த்
தமிழ்நாட்டின் இரண்டு பரிச்சயமான குடும்ப வட்டங்கள் இந்த திருமண உறவின் மூலம் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஒருபுறம், மணமகள் காவ்யா மாறன் கருணாநிதி - முரசொலி மாறன் குடும்ப மரபுடன் தொடர்புடையவர். மறுபுறம், அனிருத் ரவிச்சந்தர் ரஜினிகாந்தின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்.
இதன் மூலம், ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் குடும்பங்கள் விரிவடைந்த குடும்ப உறவுகளின் வழியாக ஒரே குடும்ப வட்டத்தில் இணைகின்றன.

பட மூலாதாரம், Getty Images & @anirudhofficial
சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சன் டிவி நெட்வொர்க் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். தொலைக்காட்சி, வானொலி, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், அச்சு ஊடகங்கள் மற்றும் விளையாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல துறைகளில் அதன் செயல்பாடுகள் பரவியுள்ளன.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஏழு மொழிகளில் 37 தொலைக்காட்சி சேனல்கள், 69 எஃப்எம் வானொலி நிலையங்கள் மற்றும் 14 கோடிக்கும் அதிகமான வீடுகளை எட்டும் பார்வையாளர் வலையமைப்பை அது கொண்டுள்ளது. சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஓடிடி தளம் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியும் அதன் வணிகப் பிரிவுகளாகும்.
சன் டிவி நெட்வொர்க் மொத்த மதிப்பு (அக்டோபர் 19ம் தேதி நிலவரப்படி) ரூ.25,219.45 கோடி ஆகும்.
நிறுவனத்தின் 2024–25 நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கையின்படி, அதன் மொத்த வருவாய் ₹4,543.96 கோடியாகவும், வரி செலுத்திய பிறகான நிகர லாபம் ₹1,654.46 கோடியாகவும் இருந்தது. இந்தப் புள்ளிவிவரங்கள் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளின் அளவை உணர்த்துகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























